Sunday, February 27, 2011

தேவதைகளின் தீட்டுத்துணி


காணிக்கை மலரின்ர புருசன்காரன் விட்டுட்டு போய் மூன்றாவது வருசம் பிறந்தவனான றொக்கட் அல்லது போர்ப்புலி என அழைக்கப்படுகின்ற கிறிஸ்துதாசன் ஒரு சிகப்பு கலர் லேலன்ட் பஸ்சில வந்து செட்டிகுளம் முகாமில இறங்கி வரிசையில போய் ஒரு சோத்துப்பாசல் வாங்கி ஒதுக்குப்புறமாக மர நிழலொன்று பார்த்துக் குந்தி சோத்துப் பாசலை விரிச்சு கழுவாத கையை வைக்கிறதோட இந்தக் கதைக்குள்ள என்ரராகிறான்.
நாலைந்து நாளாக அன்னந் தண்ணியை கண்டிராத பொடியன் அவக் அவக்கென்டு குனிந்த தலை நிமிராமல் பூசணிக்காயயும் சோத்தயும் திண்டு முடிச்சிட்டு அரை வயிறு கால்வயிற்றோட நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சத் தூரம் தள்ளி ஒரு வாகனத்தைச் சுற்றி சனம் நின்று முண்டியடிக்குது. இவன்ர மூளைக்குள்ள மின்னல் வெட்டி மறையுது. அடுத்த பார்சல் ரெடி. பாய்ந்து போனான். முப்பத்து சொச்ச தாவலில ஆள் கூட்டத்தில என்ரர் . இப்பிடி கூட்டங்களுக்க நுழையிறது வேலி தாவிறது பிரிக்கிறதில இவனுக்கு ஊரிலயே நல்ல எக்ஸ் பீரியன்ஸ் இருந்தது. அதனால தான் றொக்கட் என்ற பெயர் ஊரில அடிபட்டது.
இதை விட ஆள் இயக்கத்தில பதினொரு நாள் றெயினிங் வேற எடுத்திருக்கிறான். நாற்பது சொச்ச பேருக்கு கீழாலையும் முப்பது சொச்ச பேருக்கு மேலாலையும் போய் வாகனத்துக்கு முன்னால நின்று இரண்டு கையையும் நீட்டி ‘சேர்… சேர்… நாலு நாளா சாப்பிடல… அம்மா அப்பாக்கும் ஏலாது சேர் மூன்று பாசல் தாங்கோ சேர் …’ என்று முகத்தயும் ஒரு மாதிரியா வைத்து கொண்டு கத்தினான். இவன் மட்டுமா கத்திறான்! செட்டிக்குளம் முகாமே கத்துது. இதுக்குள்ள இவன்ர முக அக்சனை ஆரும் கணக்கெடுத்த மாதிரி தெரியல. இயக்ககாரர் போட்ட பெரிய பெரிய பண்டுகளை எல்லாம் ஏறி கடந்து வந்த சனம் ஒரு லொறியை என்ன செய்யும்? சனத்தின்ட மூர்க்கத்துக்கு முன்னால லொறியில நிண்டு சாப்பாடு குடுத்தவை திணறிப் போச்சினம். லொறிய சுத்தி நின்று கத்துறதும் லொறிக்கு அடிக்கிறதுமாக சனமும் ஒரு மார்க்கமாத்தான் நிண்டினம். சாப்பாடு குடுக்கிறவை சிங்களத்தால ஏதோ பேசிப் போட்டு சாப்பாடு குடுக்கிறதை நிப்பாட்டிப் போட்டினம். சீன் இப்படி ஏறுக்கு மாறாக போய்க்கொன்டிருக்க ஆரோ ஓடிப்போய் ஆமிக்குச் சொல்லிப் போட்டினம். கொஞ்ச ஆமிக்காரர் பாய்ந்தோடி வந்திச்சினம். ஊரில முயல் பிடிக்கிற ஆட்கள் கொண்டு திரியிற சைஸ் பொல்லுகளோட வந்த வேகத்தில கொஞ்சப் பேருக்கு அடி. பிறகென்ன நிலமை சீர். எல்லாரையும் நிலத்தில இருக்க வைச்சாச்சு. சத்தம் போடமல் இருந்தால்தான் சாப்பாடாம். இதுக்குள்ள கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைக்கிற ஆமிக்காறன் ஒருத்தன் பேசினான் ‘ஏ ஒங்கள எல்லாம் பிரபாகரன் எப்படிட கொன்றோல் பண்ணினான்?"
முக ரியக்சனுகளை வைச்சுப் பார்க்கேக்க தங்கட வீரத்த நினைச்சு கொஞ்சத் தமிழர்கள் புளகாங்கிதப்பட்ட மாதிரித்தானிருந்தது. இவனுக்கு உதிலயெல்லாம் கவனமில்லை. எப்படியும் ஒன்றிரண்டு சோத்துப் பாசல் வாங்கிட வேணும். ஒன்றை தாய்க்காரிக்கு தின்ன குடுத்துட்டு மிச்சத்த வைக்க வேணும். இரவுப் பாடு என்ன மாதிரியோ தெரியாது எண்ட லைன்ல இவன்ர மூளை ஓடிக் கொண்டிருந்தது. கடுமையாக திங் பண்ணிப் பார்த்தான். ஒன்றும் சரியாகப் படவில்லை. கொஞ்சம் பொறுத்துத் தான் பார்ப்பமே எண்டிட்டு வடிவா நிலத்தில குந்தியிருந்து கொண்டு தலைய சுத்தி கூட்டத்தைப் பார்த்தான். எல்லா முகத்திலயும் சோத்துக் களை. ஒவ்வொரு முகமாக பார்த்து கொண்டு போனான். வலது பக்க தொங்கலில் பாலை மரத்தோட இருந்த முகம் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. கண்ணை ஒரு முறை சுருக்கி யோசிச்சுப் பார்க்க… பாலன் எண்டது பிடிபட்டது.
பிறகென்ன இரண்டு பேரும் கட்டிப் புடிச்சு மாறி மாறி கொஞ்சிறது மாதிரியான சென்டிமென்ட் சீனை மனசுக்க ஓடவிட்டுப் பாருங்கோ .
பாலன் மன்னார்ப் பக்கத்துப் பொடியன். பிரச்சினை தொடங்க இடம் பெயர்ந்து வந்து இவனிருந்த வட்டககச்சிக்கு வந்திட்டான். ஆனால் அப்ப இவனுக்குப் பாலனை தெரியாது. பாலன் எங்கேயோ உடுப்புக் கடையில நிண்டிருக்கான் இவன் லாலா அண்ணயின்ர மில்லில வேலை செய்தான். சின்ன வயசில வேலைக்கு போயிற்றான். கொஞ்ச நாளில எல்லைப் படை ரெயினிங் எடுத்து லைனுக்கு போன லாலா அண்ணை செத்து போனார். பிறகு சுந்தரி அக்கா வந்து மில்லில நின்றா. இவன்தான் முழு வேலையும். சுந்தரியக்காவுக்கு இவனைப் பிடிக்கும். இவனுக்கு சுந்தரியக்காவைப் பிடிக்கும்.
அந்த ரைமிலதான் இவனுக்கு லவ் வந்தது. வசந்தி பெரிய எழுப்பமான ஐற்றம் என்றில்லாவிட்டாலும் ஓரளவு அம்சமான பெட்டை தான். இவன்ர லவ் ஸ்ரோரி இப்பிடி அமைஞ்சுது. அந்தப் பெட்டை கிளிநொச்சியில ஒரு கொமினிகேசன் சென்ரரில வேலை பார்த்தது. இவனுக்கு வட்டக்கச்சியை விட்டால் வேறு ஒரு இடமும் ஆக்கள் இல்லை. ஆனாலும் 077 என்றோ 021 என்றோ தொடங்கி பத்து நம்பர் வரத் தக்கதாக எழுதிக்கொண்டு போவான். கடைக்குப் போய் அதுட்ட குடுத்துட்டு நிப்பான். அதுவும் நம்பரை குத்தி குத்தி அடிச்சுக் கொண்டிருக்கும். பிறகு களைச்சுப் போய் துண்டத் திருப்பிக் குடுக்கும். கொஞ்ச நாளில அதுக்கு எல்லாம் விளங்கீற்றுது. பிறகென்ன, கிளிநொச்சியில இருக்கிற கடை முழுக்க ஐஸ்கிறிம் குடிச்சு லவ் பண்ணிச்சுதுகள்.
அப்பதான் வீட்டுக் கொராள் இயக்கத்துக்கு வரவேணும் எண்டது மாதிரியான றூள்ஸ் வந்துது. காணிக்கை மலருக்கு இவனும் மரியசீலியும்தான் பிள்ளையள். அவள் ஆறு மாசம் முதல் எங்கேயோ மண்ணெண்ணைக் கடை வைச்சிருக்கிற ஒருத்தனை லவ் பண்ணுறன் என்டும், கட்டினால் அவனைத்தான் கட்டுவன் எண்டும் ஒற்றக் காலில நிண்டு கட்டிக் கொண்டு போயிற்றாள். அவள் போனவள் போனவள்தான். பிறகு இஞ்சால் பக்கம் தலை வைச்சும் படுக்கிறதில்ல. இப்ப இவன் தான் ஒரு பொடியன். தான்தானே தாயைப் பார்க்க வேணும். தனக்கு பிரச்சனை வராது எண்ட மாதிரியான கணக்கைப் போட்டு கொண்டு திரிஞ்சான்.
ஒரு நாள் மில்லுக்குப் போகேக்க, நாலைஞ்சு இயக்கக்காரர் நிண்டு மறிச்சினம். அதில ஒரு வடிவான பொம்பிளப் பிள்ளயும் இருந்தா. கொஞசம் பெரிய மீசையோட, உடம்பாக இருந்த ஒராள் இவனோட கதைச்சார். மிச்ச ஆக்கள் எல்லாம் அந்தப் பெட்டயோடயே சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டிருந்தினம். மீசைக்காரன் கேட்டார்
‘வீட்டில எத்தனை பேர்?’
‘ஒராள்….’
“நீர் தனிப் பிள்ளயோ?’
‘இல்ல அண்ண…அக்காவும் இருந்தவா. ஆனால் அவ ஒருத்தனோட ஓடிற்றா…இப்ப எங்கேன்றே தெரியாது. நான்தான் உழைக்கிறன். அம்மாக்கும் ஏலாது.’
‘தம்பி… தம்பி நிப்பாட்டு. என்ட பேர் பாயும்புலி. எனக்கும் நிறைய குடும்பப் பொறுப்பு இருந்தது. ஆனால் அதை விடப் பெரிசு….'
என்று நீளமாக லெக்சர் ஒன்று அடிச்சுப் போட்டு, ‘இப்ப போய் வீட்டுக்குரிய ஏற்பாடுகளைச் செய்திட்டு இரண்டு நாளில சேர்ந்திடணும்’ என அனுப்பி விட்டார்.
இவனுக்கு அன்று மில்லுக்குப் போக மனம் வரவில்லை. வீட்டுக்குப் போய்ப் படுத்திட்டான். அடுத்த நாள் இவன்ர வீட்டிலயே ரவுண்டப் பண்ணி ஆக்கள் பிடிக்கேக்க, இவனையும் பிடிச்சுப் போட்டினம். பத்துப் பதினைஞ்சு பேரைச் சின்ன ஜீப்பில அடைஞ்சு கொண்டு போச்சினம். ஆரோ ஒரு பெட்டையையும் பிடிச்சு ஏத்தியிருந்தினம். அது அழுது கொண்டிருந்தது. அந்தக் கவலையிலும் அதோட ஒட்டுப் பட்டுக் கொண்டுபோனது இவனுக்குக் கிளுகிளுப்பாகயிருந்தது.
முத்தையன்கட்டுக் காட்டுக்க ரெயினிங். கிறிஸ்துதாஸன் எண்டும் ரொக்கட் எண்டும் ஊரில அடிபட்ட பேரைப் போர்ப்புலி எண்டு மாத்திச்சினம். அன்று கக்கூசுக்குள்ள போயிருந்து கொண்டு தன்ர கையிரண்டையும் புலியின் நகம் போல விரித்து, பற்களைப் பெரிதாக காட்டி, புலிமாதிரி ஒரு முறை சீறிப் பார்த்தான். இவனுக்கு இந்தப் பேர் பிடிக்கயில்லை. ஏதாவது இங்கிலிஸ் பேர் – றெக்ஸ், அலெகஸ், ஜேம்ஸ், அல்லது பண்டாரவன்னியன், சங்கிலியன், கரிகாலன், கடாபி, காமினி, லலித் எண்ட மாதிரியாவது வைச்சிருந்திருக்கலாம். ஆனால், மாஸ்ரர் வைச்ச பேரை மாற்ற முடியாது. பேசாமல் இருந்து விட்டான். ரெயினிங் காம்பிலதான் பாலன் இன்ரடியுஸ் ஆகிறான். ரெண்டு பேரும் ஒரே ரீம். பக்கத்துப் பக்கத்துப் படுக்கை. இவனும் வீட்டுக்குத் தனி ஆம்பிளைப் பிள்ளை.
இவன் பதினொரு நாள்த் தான் ரெயினிங் எடுத்தான். ஏ.கே எல்லாம் கழட்டிப் பூட்டுவான். பன்னிரண்டு ரவுண்ஸ் டச் அடிச்சிருக்கிறான். அதில ஒண்டு புள். ஒன்பது காடு. சத்தியப் பிரமாணம் தரோவான பாடம்.
இவன் ரெயினிங் காம்பில இருந்து ஓட முடிவெடுத்தான். பாலனைக் கேட்டான். அவன் பயந்தவன். மறுத்து விட்டான். அன்றிரவு இவனுக்கு இரண்டாவது சென்ரி. வெளிக்கிட்டு ‘பரலோகத்தில் இருக்கும் பிதாவே..’யும் ‘அருள் நிறைந்த மரியாவே…’ யும் சொல்லிக்கொண்டு அருவியை பிடித்து நடந்தான். பெருங்காடு. யேசுவும் மரியாளும் துணையிருக்க, பரந்தன் – புதுக்குடியிருப்பு றோட்டில ஏறி, அடுத்த நாள் வீட்டுக்கு வந்து சேர்ந்திட்டான் . தாய்காரியிட்ட சொல்லிப் போட்டு இரவோடு இரவாக புதுக்குடியிருப்பில இருக்கிற நட்சத்திரம் மாமா வீட்டுக்கு வந்திட்டான். பிறகு இவன் வட்டக்கச்சிக்கே போகவில்லை. கொஞ்ச நாளில வட்டக்கச்சி இடம் பெயர்ந்து அங்க வந்திது.
சனம் முழுக்க மாத்தளன், முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்துக்க அடைஞ்சு கிடந்த நாளில இவன் புதுக்குடியிருப்பு பக்கம் தேங்காய்க்கு வாறவன். ஒரு தேங்காய் ஐந்நூறுக்கு மேல போகும். இயக்கக்காரரின் ‘லைன்’ மட்டும் வருவான். அவ்வளவு துணிஞ்சவன். அப்படி வரேக்க ஒரு நாள் பாலனைக் கண்டிட்டான். ஒரு ஏ.கே யைக் கொழுவிக் கொண்டு ‘வோக்கி’ கதைச்சபடி வந்தான். இவனுக்கு பெருமையாய் இருந்திது. தன்னோட ‘ரெயினிங்’ எடுத்த பெடியன் ‘வோக்கி’யெல்லாம் வைச்சிருக்கிறான். பொறுப்பாளனாக வந்திட்டான் போல என்ற கணக்கில யோசிச்சு கொண்டு போய் கட்டிப் பிடிச்சுக் கதைச்சான். . அவன் நல்லா மாறியிருந்தான். நாங்கள் ஆமிக்காரனுக்கு நல்ல அடியாக ரெண்டு அடி குடுத்தால் போதும். தமிழ் நாட்டில கருணாநிதி ஆட்களும் கதைக்கினம். அவையளும் கொஞ்சம் கூட கதைக்க வேணும். ‘ஓட்டமற்றிக்’காக எல்லாம் சரியாகும். எண்ட ‘லைனில’ அவன்ர கதை இருந்திது. இவனுக்குத் தெரிஞ்ச ஒரே கருணாநிதி மூன்றாம் வகுப்பில் வகுப்பாசிரியராக இருந்த ஆள்தான். அந்த ஆள் வீட்டுப் பாடம் செய்யாவிட்டாலும் சரி பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் சரி எல்லாவற்றிற்கும் கடிதம் கொண்டு வா என்று நிற்கும்.
வீட்டில தாய்க்காரியிடம் வாய் ஓயாமல் பாலனைப்பற்றியும் அவன் சொன்ன கதைகளை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். தாய்க்காரிக்கு இதில அக்கறையில்லை.  குடுக்குற கஞ்சியை நேரம் தவறாமல் வாங்கிறதிலதான் குறியாய் இருந்திது. ஒரு நிமிசம் வீட்டில இருக்கவிடாது. ஓடிப் போய் ‘லைனில’ நில் என்று கலைக்கும். இப்பிடித்தான் ஒரு நாள் வாளியோட போய் ‘லைனில’ நிற்க வயிற்றை தள்ளிக்கொண்டு வசந்தி வந்திது. இவனைக் கண்டதும் தலையில் போட்டிருந்த துவாயின்ர தலைப்பை வாய்க்க வைச்சு மூண்டாம் ஆளுக்குத் தெரியாம அழுகுது. அழுகை எண்டால் சும்மா அழுகை இல்லை. மும்தாஐ், ஐீலியட் அழுத அழுகை. அழுகைக்கிடையில் விக்கி விக்கி அது சொன்ன விசயம் இதுதான். ‘நான் என்ன செய்யிறது நீங்க போயிற்றியள் என்னையும் பிடிக்க வந்திச்சினம். வேற வழி தெரியாமல் கட்டிற்றன். அவர் நல்லவர்.’ அது அழுகையை நிப்பாட்டுதில்லை. இவனுக்கு அது இல்லாமல் போனதால பெரிய நட்டமில்லை. வசந்தி இல்லாவிட்டால் என்ன ஒரு சுகந்தி இல்லாமலா போகும் என்ற மாதிரியான ‘ரைப்’. ஆனாலும் முன்னால் ஒரு பெட்டை அழுதுகொண்டிருக்கேக்க அது மாதிரியான ‘றியாக்ஸனை’க் காட்டுறதுதானே முறை. கண்ணைக் கசக்கிக் கொஞ்சம் கலங்க வைச்சிட்டு, சிவாஜி கணேசன் மாதிரி வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நாலு எட்டு அங்கயும் இங்கயும் எடுத்து வைச்சிட்டுச் சொன்னான்: “சரி சரி, அழாத நடந்தது நடந்திட்டுது, எல்லாம் எங்கட விதி. பிறக்கிறது ஆம்பிளைப் பிள்ளையாக இருந்தால் என்ர பேரை வை…” பிறகு அதுக்கும் கஞ்சி வாங்கிக் குடுத்திட்டு, தானும் வாங்கிக் கொண்டு வந்தான். அதுக்குப் பிறகு அவளையோ பாலனையோ காணவில்லை. இப்ப பாலனைக் காணுறான்.
பாலன், இவனைக் கட்டிப் பிடிக்க வந்தான். இவனும் விடயில்லை. கதையோட கதையாக இடையில் வானத்தைப் பார்த்துச் சொன்னான்:
“சீ… எல்லாம் அநியாயம்”
அந்த ‘ரைம்’ திரும்பவும் ‘பார்சல்’ குடுக்கத் தொடங்கிச்சினம். ரெண்டு பேரும் கூட்டத்துக்குள்ள புகுந்து உள்ள போச்சினம். இவன், ஒரு மனிசனுக்குப் பின்னால நிண்டு, ரெண்டு கையையும் நீட்டினான். ரெண்டு கையிலயும் பார்சலை வைச்சினம். ‘யேசுவே’ என்றபடி திரும்ப, பின்னுக்கு மூன்று பார்சல்களுடன் பாலன் நின்றான்.
மூன்றாம் நாள். நல்லா விடிஞ்சும் இவன் எழும்பயில்லை. ‘ரென்ற்’ வெக்கை காலையில் இதமாயிருந்திது. தாய்க்காரிதான் அடிக்காத குறையாக உலுப்பி எழுப்பிச்சுது. எரிச்சலுடன் எழும்பியிருந்தான். மனுசி  சதுரம் பதறியபடி நிக்குது.
“டேய் தம்பி, ‘ரவுண்டப்’ அட. எனக்கெண்டால் என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல…”
இவனுக்கு மின்னல் மூளைக்குள் அடித்தது. ஏற்கனவே ரெடி பண்ணி வைச்சிருந்த, ‘ஸ்ரோறியை’ மனதுக்குள் ஓடவிட்டான். “சேர்..நான் ஒரே பிள்ளை… அம்மாக்கும் ஏலாது. நான்தான் பாக்க வேணும். நான் இயக்கத்தில இருக்கயில்லை. கொஞ்ச நாள் சம்பளத்துக்கு வேலை செய்தனான்”
தியானப் பொசிசனில கண்ணை மூடிக் கொண்டிருந்தவன், எழும்பி வெளியல வந்தான். “எல்லா ஆம்பிளயளையும் ரவுண்டப்புக்கு வரட்டாம். நீ வரயில்லையா? பேயன் மாதிரி வராத… இது மாதிரி எதாவது செற் அப்போட வா” என தான் தூக்கிக் கொண்டு போன குழந்தையைக் காட்டிவிட்டுப் போனான் பரமு.
இவன் வெளிக்கிட தாய்க்காரியும் கூடவே வெளிக்கிட்டுது. இவன் அதட்டி, நிற்பாட்டிப் போட்டான். தனியாகத்தான் போனான்.
கிறவுண்டில சகல ஆம்பிளையளும் குந்தியிருக்க வைக்கப் பட்டிருந்திச்சினம்.
கிறவுண்டைச் சுத்தி நிறைய ஆமிக்காரர். இரண்டு மூன்று மேசையும் கதிரையும் போடப் பட்டிருந்தன. ஏதோ பதியிறதுக்கு ரெடியாகவும் கொஞ்ச ஆமிக்காரர் நிக்கினம். நல்ல வெள்ளையும் சுள்ளையுமாக இருந்த ஒருத்தன் – அநேகமாக முஸ்லிமாக இருக்கவேணும் – முன்னுக்கு வந்து சொன்னான்: “அங்க ஆரும் எல்.ரி.ரி.ஈ காரர் இருந்தால், எழும்பி முன்னுக்கு வாங்க. ஒரு பிரச்சினையும் இல்ல. நாங்க விசாரிச்சுப் பதிஞ்சிட்டு விடுவம்…”
பொடியள் மட்டம், வயசாளியள் என பல தரத்திலயும் எழும்பிப் போயினம். எழும்பும்போதே ஒண்டு கேட்டுது… “சேர், நான் ரெண்டு நாள்தான் இருந்தனான். சேர் … நானும் வரவேணுமே….”
“பரவாயில்ல வாங்க… ஒரு நாள் இருந்தாலும் வாங்க…”
இவனுக்குச் சதுரமெல்லாம் நடுங்கத் தொடங்கிச்சுது. பதினொரு நாள் இருந்திருக்கிறான். ஏ.கே கழற்றிப் பூட்டுவான். பன்னிரண்டு ரவுண்ஸ் அடிச்சிருக்கிறான். கண்ணை மூடிக் கொண்டு, ஒரு முறை செபம் சொன்னான்.
மெனிக் பாம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு, ஒரு பவள் வந்தது. அந்த ரென்சனான நேரத்திலயும் இவனுக்கு சினிமாக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. வில்லனின் வாகனம் எல்லாச் சினிமாவிலயும் இப்பிடித்தான் வரும். வாகனம் நின்றவுடன் கதவு திறக்கும். வில்லன் ஒற்றைக் காலை எடுத்து வைப்பார். கமெரா காலடியில இருந்து மேல போகும். கடைசியாக முகத்தைக் காட்ட, முகமே தெரியாமல் கருகருவென்ற தாடிவளர்த்த முகம் இருக்கும்.
வாகனத்திலயிருந்து ஒரு உருவம் இறங்கியது. முகமே தெரியவில்லை. அடையாளந் தெரியாத மாதிரி, கறுப்புத் துணியினால் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இரண்டு கண்ணுக்கும் மூக்குக்குமாக துணியில் மூன்று ஓட்டைகள். தமிழனுக்குத் தலையாட்டியைத் தெரியாதா என்ன? இவனுக்கு அடிவயிறு குளிர்ந்தது. அந்த உருவம் நடந்து வாறதைப் பார்க்க, எங்கோ பார்த்த மாதிரியிருந்தது.
ஒவ்வொருத்தராக எழும்பித் தலையாட்டியின் முன்னால் வந்து விட்டுப் போகலாம் என்றார்கள். ஒவ்வொருத்தராகப் போய்க் கொண்டிருக்குது சனம். இவன் கொஞ்சம் பின்னடிச்சான். கொஞ்சம் லேற்றானால், தலையாட்டி களைச்சிடுவான். தெரிஞ்ச ஆளெண்டாலும் விட்டிடுவான் என்று நினைச்சான்.
தலையாட்டியும் இடைக்கிடை தலையை ஆட்டிக் கொண்டுதானிருந்தான். தலையாட்டுப் படுகிற ஆள், அங்கால ரெடியாக நிற்கிற பஸ்ஸில ஏற்றப்படுகிறார். அந்த உருவத்தின் அக்சன், உடம்புக்கட்டு, நடை எல்லாம் எங்கயோ தெரிஞ்ச ஆள் எண்டது மட்டும், இவனுக்கு விளங்குது. ஆரெண்டது மட்டும் பிடிபடுகுதில்லை.
நடக்கிறது நடக்கட்டும் எண்டு எழும்பினான். ஒரு பிதா சுதன் போட்டிட்டு, தலையைக் குனிஞ்சு கொண்டு போனான். வரிசை மெதுவாகப் போகுது. தலையாட்டிக்கு கிட்ட வரவர கால் உதறத் தொடங்கியது. சமாளிச்சுக் கொண்டு போய் நிண்டான். முகத்தை மிக அப்பாவித்தனமாக வைச்சுக் கொண்டு, தலையாட்டியின் கண்ணுக்கு நேராக, இருந்த ரண்டு துளைகளையும் உற்றுப் பார்த்தான். சில செக்கன் மௌனத்தின் பின், அந்த உருவம் தனது தலையை மேலிருந்து கீழாக ஒரு முறை அசைத்தது,
இவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆமி விடயில்லை. காணிக்கை மலரும் வந்து நிலத்தில ஒரு பாட்டம் விழுந்து குழறிப்பாத்தது. ஆமிக்காரர் நிறையச் சமாதானம் சொல்லி, தாய்க்காரியை அனுப்பிப் போட்டு, இவனைப் பஸ்ஸில ஏத்திச்சினம். மெனிக்பாம் செம்பாட்டு மண்ணில உருண்டு அழுது, உடம்பெல்லாம் செம்பாடு பத்திப் போய் நிக்கிற தாய்க்காரியைப் பார்க்க இவனுக்கு அழுகை பொத்திக் கொண்டு வந்தது. பஸ் யன்னலில முகத்தை வைச்சுக் கொண்டு அழுதான். கொஞ்ச நேரம்தான். பிறகு, ஒரு வைராக்கியம் வந்தவனாக, இறுகிய முகத்துடன் விறைத்து உட்கார்ந்திருந்தான்.
தலையாட்டப்படுகிற ஆட்கள் பஸ்ஸில ஏறிக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவன், பஸ்ஸினுள் பின்பக்கமாக நின்று தூசணத்தால், யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தான். பாலன். இவனைக் கண்டதும் பாலனுக்குக் கண் கலங்கிவிட்டுது. பக்கத்தில் வந்திருந்தவனுக்கு, மூச்சு வாங்கியது. மூச்சை உள்ளிழுத்து ஆசுவாசப்படுத்தியவன்,
“மச்சான், தூத்தேறியாலதானே எனக்கு அங்கயும் சனியன் பிடிச்சது. வம்பில பிறந்தது. பிறகு இஞ்ச வந்தும், எங்களத்தானே பிடிக்கிது…”
அவனுக்கு மூச்சு கடுமையாக வாங்கியது. அந்த முகமூடி மனிதனைத்தான் திட்டுகிறான் என்பது புரிந்தது. யாரந்த மனிதன், என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் இவனுள் ஏற்கனவே இருந்ததுதான்.
“ஆர் மச்சான் அவன்?”
பாலன் ஒரு முறை இவனை மேலும் கீழுமாகப் பார்த்தான். பிறகு, மெல்லிய குரலில் சொன்னான் : அந்த உறண்டல்தான் பாயும்புலி. ◄ 'தேவதைகளின் தீட்டுத்துணி' தொகுப்பிலிருந்து | https://profiles.google.com/bloggergopi/posts/5uYLBnL8zEB

ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......



'

                                                                சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் 


ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது
மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ?

இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது.

இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப் பார்க்கலாம்தான். ஆனால், வலு கண்டிப்பான வீட்டில இருந்த பெட்டை படிக்கிற காலத்தில உங்கெல்லாம் ஏன் திரியுது?

முள்ளியவளைத் தெரியாதவைக்கும் வித்தியானந்தா கொலிச் எண்டதொரு பேர் காதில அடிபட்ட நினைவிருக்கலாம். அந்த ஏரியாவில் ஃபேமஸ் ஆனபள்ளிக் கூடம் அதுதான். இவளும் அதில் தான் படிச்சாள். இந்த சம்ப வத்தை விதி என்பதா... சதி என்பதா என்று தெரியாமல்தான் பெட்டையின்ற ஃபேமிலி இன்று வரை இருக்குது. அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

சுந்தரலிங்கமோ, வைத்தியலிங்கமோ என்பது மாதிரியான ஒரு பெயருடன் நல்ல பெரிய ஸ்ரேஜ் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்தது. அந்த ஏரியாவில் பட்டிமன்றம் நடந்தாலும் சரி, இயக்கத்தின்ர பிரசாரம் நடந்தாலும் சரி, அங்குதான் நடக்கும்.

ஒருநாள் இயக்கம் அங்கு தெருக்கூத்துப் போட்டது. அந்தக் காலத்தில நாலைந்து தெருக் கூத்து கோஷ்டிகள் இருந்தன. எல்லோரும் பஞ்சவர்ண கலர் களில உடுப்புப் போட்டு வருவினம். கொஞ்சப் பேர் சிவப்பு, மஞ்சள் கரை உடுப்போட வருவினம். பெட்டை முன் வரிசையில் இருந்து பார்க்குது.

அது ஜெயசிக்குறுக் காலம். வவுனியாவில இருந்து வெளிக்கிட்டு கண்டி வீதியைப் பிளக்கிறதுதான் ரத்வத்தையின்ர திட்டம். இயக்கம் விடேலை. வந்த ஆமி மாங்குளம் கடக்க மாட்டாமல் நிக்குது. தெருக்கூத்தில இதனை அருமையாகச் சித்தரிச்சினம். நிறையப் பேர் பச்சை உடுப்புக்களுடன் (சிங்களவர்) பாய்ந்து வருகினம். சிவப்பு, மஞ்சள் தரப்பு (இயக்கம்) பின்னுக்குப் பின்னுக்கு வந்து மேடையின் விளிம்பில நிக்கினம். இன்னும் கொஞ்சப் பேர் இதொண்டிலும் சம்பந்தம் இல்லாமல் சமைச்சுச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம் (வன்னிச் சனமாம்).

அந்த நேரம் மேடையில ஓராள் வந்து, அந்தக் கால ரி.ஆர்.மகாலிங்கத்தின்ர குரலில பாடத் தொடங்கும். 'பார்வையா ளரா இருக்காமல் பங்காளராகு வோம். எல்லோரும் சேர்ந்து இறுதி யுத்தத்தை வெல்வோம்' எனப் பாட்டின் சாரம் இருந்தது. பாட் டைக் கேட்டு சமைச்சுக் கொண்டு இருந்த ஆம்பிளையள், பொம்பிளையள் எல்லாம் சேர்ந்து பச்சை உடுப்புக்காரரை ஒரு தள்ளுத் தள்ளுவினம். பச்சை உடுப்புக்காரர் பிடரி அடிபட விழுகினம். ஒருவன் புலிக் கொடியுடன் அணி நடையில் வந்தான். இதுதான் அன்றைய தெருக்கூத்து.

முன் வரிசையில இருந்த பெட்டை தள்ளுறவையோட சேர்ந்து தானும் ஒரு கையினால் சின்ன புஸ் பண்ணி பச்சை உடுப்புக்காரரை விழுத்திப்போட்டு, சுதந்திர மண்ணில் படிப்பை கொன்ரினியு பண்ணுவம் என யோசித்தாள்.

அடுத்த நாள் ரியூசனுக்குப் போனவள் வீட்டுக்குத் திரும் பேல. முள்ளியவளை அரசியல் துறை பொறுப்பாளரின் ஸ்கோ ரில் ஒன்று கூடியது. அந்த நேரம் அரசியல் துறையில் ஒரு நடைமுறை இருந்தது. 10 பேரை இயக்கத்துக்குச் சேர்த்துக் குடுத்தால், சேர்க்கிறவருக்கு புது சைக்கிள் குடுப்பினம். இவளையும் சேர்த்து பத்தாக்கி யார் சைக்கிள் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவள் நாலு மாதம் றெயினிங் எடுத்து தகடு, குப்பி, ஒரு துவக்கு, 120 ரவுண்ஸ், இரண்டு ஜே.ஆர். குண்டு வாங்கினாள்.

இவளுக்குக் கிடைத்தது ரி. 56 துவக்கு. துவக்கு வகைகளுக்குள்ளயே பழைய கிழவியள் மாதிரி கொஞ்சமும் ஸ்ரைல் இல்லாத துவக்கெண்டால், இந்தியனின் எஸ்.எல்.ஆரும் சைனாக்காரனின்ட ரி 56-ம்தான். ஆனாலும் என்ன தண்ணி, சேறு, புழுதி எதுக்கை போட்டெடுத்து அடிச்சாலும் இது குழப்படிவிடாமல் சொல் பேச்சுக் கேக்கும் என்று கிடைத்ததை வைத்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள்.

றெயினிங் முடிய இவளின் ரீம் போனது அம்பகாமம் காட்டுக்கு. ஜெயசிக்குறு ஒப்பரேசன் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அந்த நேரம் அறிவிக்குது. அறிவித்த கையோட றிவிபல ஒப்பரேசன் தொடங்குது. மாங்குளத்தில இருந்து கிழக்குப் பக்கம் போகும் வீதியில, ஒட்டிசுட்டான் மட்டும் ஆமி. காட்டுக்குள்ளால முத்தையன்கட்டுப் பக்கம் ஆமியை வர விடாமல் தடுக்கும் பொறுப்பு இவளின் ரீமுக்கு.

இவளின்ர ரீம் காட்டுக்குள்ள 500 மீற்றருக்கு ஒரு பொசிசன் போட்டினம். ஆட்கள் தொகை காணாதது காரணம். ஒரு பொசி சன்ல நாலு பேர். காட்டுக்குள்ள 500 மீற்றர் இடைவெளி என்பது கொஞ்சம் ஓவர்தான். ஆமிக் காரன் புகுந்து விளையாடுவான்.

இப்படியான சிற்றிவேசனில 18 நாட்களைக் கடத்திவிட்டாள். இப்பதான் மெயின் ஸ்ரேசனில இருந்து மெசேஜ் வருது. ஆமி மூவ் பண்ணப் போறானாம். எல்லாப் பொசிசனிலயும் சண்டைக்கு ரெடியாகட்டாம். இவளும் கண்ணுக்குள் காப்போத்தில் நல்லெண்ணெய் ஊற்றின கணக்காக வலு கவனமாக வோச் பண்ணிக்கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்தில தூரத்தில் ரவுண்ஸ் சத்தம் கேக்கத் தொடங்குது. சரி, ஆமிக்காரன் ஸ்ராட் பண்ணிட்டான். நாமும் ஆரம்பிக்க வேண்டியதுதான் என இவள் துவக்கின் சேப்ரி பின்னைத் தட்டினாள். லீடர் பெட்டை சீறி விழுந்தாள். "ஆமிக்காரன் கண் காணாத இடத்தில நிக்கிறான். நீ என்ன சத்த வெடியா வைக்கப்போறாய்?" என. "சரி கிட்ட வரட்டும். நல்லா எய்ம் பண்ணி அடிப்பம்" என இருந்தாள்.

சத்தம் மெள்ள மெள்ள கிட்டவாக வருது. வோக்கியில மாறி மாறி நாலைந்து பேர் கொமாண்ட் பண்ணிக்கொண்டு இருக்கினம். எல்லோரும் ஒரு விஷயத்தைத்தான் சொல்லுகினம். "ஒருத்தரும் பயப்பிடாதயுங்கோ... ஆமிக்காரன் கிட்ட வரட்டும். நல்லாக் குடுங்கோ... ஒருத்தரும் தப்பக் கூடாது."

இப்போது இவளின் தலைக்கு மேலாக ரவுண்ஸ் சீறிக்கொண்டு போகுது. லீடர் பெட்டை, "வந்திட்டான் அடி... அடி" எனக் கத்துறாள். இவள் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆமியின் அசுமாத் தம் தெரியுது. சேப்ரியைத் தட்டி ரிகரில கைவைக்க மட்டும்தான் பெட்டைக்கு விரல் ரைப்படிச்சதும் ரென்சனும்.

பிறகு, பெட்டை வலு திறமான சண்டைக்காரி யாகினாள். சண்டை கனநேரமாக நடக்குது. இவ ளுக்கு வலது பக்கத்தில இருந்த இரண்டு பொசிசனும் ஆமியிடம் விழுந்துவிட்டதாக வோக்கியில மெயி னுக்கு அறிவிக்கினம். என்ன நடந்தாலும் பொசி சனில இருந்து பின்னுக்குப் போவது இல்லை என பெட்டையள் முடிவெடுக்கினம். இவையின் பொசி சனை அரை வட்டமாக ஆமி சுற்றிவளைத்துவிட் டான். ஆர்.பி.ஜி., பீ.கே. என சகல அஸ்திரங்களையும் ஆமிக்காரர் பயன்படுத்துகினம். பெட்டையளும் விடுகிறதா இல்லை.

போகப் போக நிலைமை இறுகத் தொடங்குது. இன்னும் இரண்டு மூண்டு பொசிசன் ஆமியிடம் போகுது. ஆபத்தான வேலைதான். இந்த ஏரியாவில இந்த நாலு பெட்டையளும்தான் நிக்கினம். மெயி னில இருந்து இவைக்கு கொமாண்ட் வந்தது. 'உந்தப் பொசிசனைவிட்டு உடனே பின்னுக்கு வாங்கோ' என. லீடர் பெட்டை இவளைப் பார்த்தாள். இவள் வோக்கியைப் பறித்தாள். "மெயின் மெயின்... என்ன நடந்தாலும் நாங்கள் பின்னுக்கு வர மாட்டம். விட்ட பொசிசன்களைப் பிடிக்க றை பண்ணுங்கோ, நன்றி."

இயலுமான வரை தாக்குப் பிடிப்பம் என நாலு பெட்டையளும் நிக்கினம். நாலு பெட்டையள முடிக்க 40 ஆம்பிளையள் சுத்தி நிக்கினம். ஆனாலும், பெட்டையள் உசும்பினமில்லை. திடீரெனப் பின்னுக்கு இருந்தும் அடி வருது. அநேகமாக அதொரு பீ.கே. ஆக இருக்க வேணும். பெட்டையளின் தலைக்குள் மின்னல் அடித்தது. நாலு பக்கமும் வளைத்து பொக்ஸ் அடித்துவிட்டானா?

இவள்தான் பின் பக்கம் கவனித் தாள். பின்னால் இருந்த பாலை மரத்துடன் இருந்து ஒருவன் பீ.கே. அடிக்கிறான். கொஞ்ச நேரம் சமாளிக்கலாம். ஆனால், தொடர்ந்து சண்டை பிடிக்க முடியாத நிலை வருது. நாலு பேரிடமும் இருந்த ரவுண்ஸை எண்ணினால் 50தான் வரும். 50 ரவுண்ஸ் என்பதுஏ.கே-யை ஓட்டோவில விட்டு, ரிகரில் விரலை வைத்து கண்ணை ஒரு முறை மூடித் திறக்க காலியாகிவிடும். இவளிடம் ஒன்று இன்னொருத்தி யிடம் ஒன்று என மொத்தம் இரண்டு குண்டுகள்தான் இருந் தன.

"சரி, நடக்கிறது நடக்கட்டும்... இயலுமான வரை முயலுவோம். கண்டபடி ரவுண்ஸை வீணாக்காமல் ஆமி பங்கருக்க உள் நுளைய முயன்றால் மட்டும் சுடுவம்" என முடிவெடுத்தனர். எதிர்ப் பக்கம் இருந்து சூடு வருவது குறைந்ததும் ஆமிக்காரரும் உற்சாகமாயிற்றினம். பெட்டையள் எண்டாலே ஆமிக்காரர் வலு எழுப்பமாகத்தான் நிற்பினம். இதுக்குள்ள சுடுறதுக்கு ரவுண்ஸும் இல்லை என்றால் கேட்கவும் வேணுமா?

மிக அண்மையில் நிலையெ டுத்திருந்த ஒருவனை நோக்கி ஒருத்தி குண்டு ஒன்றை எறிந் தாள். இப்பொது ஒரே ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருந்தது.

எல்லாப் பெட்டையளின் முகமும் இருண்டுவிட்டது. இனி செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இனியும் தாமதித்தால், தலை மயிரிலை பிடிச்சுத்தான் இழுத்துக்கொண்டு போவான். இறுகிய குரலில் லீடர் கேட்டாள், "என்ன செய்வம்?" எல்லோரும் அமைதியாக இருந்தனர். லீடர் சொன்னாள், "நான் உயிரோடு பிடிபட மாட்டன். குண்டை என்னட்ட தா. நான் குண்டடிக்கப்போறன்."

"நானும் உயிரோடு பிடிபடமாட் டன்" இவள் சொன்னாள். மற்ற இருவரும் இதே முடிவை எடுத்தனர்.

ஒரு குண்டைவைத்து நால்வரும் இறந்துபோவது எனத் தீர்மானித்தனர். இவளிடம்தான் குண்டு இருந்தது. இவள் கிளிப்பைக் கழட்டி நாலு பேருக்கும் நடுவில் போடுவாள். அது ஆறு செக்கனோ எட்டு செக்கனோ இதுகளின்ர தலையில என்ன எழுதியிருக்கோ, அந்த நேரம் வெடிக் கும். இந்த நேரம் புதிதாக வெடிச் சத்தங்கள் கேட்டன. "எங்கட ஆக்கள் வந்திட்டினம்போல" ஒருத்தி சொன்னாள். "ம்... இறங்கீட்டினம் போலத்தான் இருக்குது. ஆனால், அவயள் வாறதுக்கிடயில எங்களைப் பிடிச்சுக்கொண்டு போயிடுவான். இனியும் லேற் பண்ணக் கூடாது."

தங்களை மீட்க ஒரு அணி வருகிறது என்பது நால்வருக்கும் புரிந்தது. ஆனால், அதற்காகத் தாமதிப்பதால் பலன் கிடைக்குமா என்பதை நிச்சயம் செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தனர். "நீ கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போடு" - லீடர் இவளுக்குக் கட்டளையிட்டாள். இவள் கண்ணை மூடிக்கொண்டு குண்டை எடுக்கவும் லீடர் வோக்கியில் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" சொன்னாள்.

இவள் கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போட்ட கணத்தில், வோக்கியில் பொறுப்பாளரின் குரல் ஒலித்தது. "பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ. நாங்கள் வந்திட்டம். உங்களுக்குப் பின்னால இருந்த பீ.கே-காரனையும் போட்டிட்டம். நாங்கள் வந்திட்டம்."

மிகுதி என்ன சொல்லப்பட்டது என்பது இவளுக்கு விளங்கவில்லை. உதவி அணிகள் பக்கத்தில் வந்தும் அவசரப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் லீட ரைப் பார்க்க, அவள் பேயறைந்து போய் நின்றாள். கணம்தான். இவளது மூளைக்குள் மின்னல் வெட்டியது. பாய்ந்து குண்டின் மேல் படுத்தாள். ஆறு செக்கனோ, எட்டு செக்கனோ தெரிய வில்லை. குண்டு வெடித்தோய, இவளது உடல் சிதறல்கள் படர்ந்திருக்க... மற்ற மூவரும் விறைத்து நின்றனர்!



◄ ன்றி

"தேவதைகளின் தீட்டுத்துணி" தொகுப்பிலுள்ள கதைகள்

வடலி வெளியீடாக ஓகஸ்ட் 2010இல் வெளிவந்தது முதலாவது சிறுகதைத் தொகுதி. அதன் சில கதைகள் இணையத்திலுள்ளன.  அவற்றை இங்கே கிளிக்-செய்து படிக்கலாம்:
1. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......
 2. மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி
3.பெயர்
4. தஸ்யுக்களின் பாடல்கள்
5. சுதந்திரம்
6. பாதுகாப்பு வலயம்
7. திருவிளையாடல்
8. றூட் 
9.சடகோபனின் விசாரணைக் குறிப்பு
10. தேவதைகளின் தீட்டுத் துணி ....................................................................................................................................................................

முழுக் தொகுதியையும் படிக்க:
த் தொகுப்பினை இணையத்தில் வாங்க: வடலி-Shop

Saturday, February 26, 2011

முள்ளிவாய்க்கால் கதைகள்.



ஈழத்தமிழர்களிடம் நிறையக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். காலம் தோறும் கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன தீராமல். சிலவேளைகளில் பெருகும் கதைகளே கதை சொல்லியைத் தின்றுவிடுவதுமுண்டு. அதனால் தானோ என்னவோ சொல்லப்படாக்கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கும் சமூகம் ஈழத்தமிழர்களுடையதாகியது.  இயல்பிலேயே தமக்குள்ளான இறுகிய மனோபாவமும், சொற்கள் சாவை அழைத்து வரக்கூடியதாய்த் தொடர்ந்து வரும் அரசியற் சூழலும் சொல்லப்படாக் கதைகளைச் சமைத்தபடியிருக்கின்றன ஈழத்தமிழ்ச் சமூகத்திடம். ஆயினும் அந்தச் சூழலே புதிய கதை சொல்லிகளையும் உருவாக்கியபடியிருக்கிறது. காலம் தோறும் புதிய புதிய கதைசொல்லிகள் துயர்மிகும் பாடல்களை எழுதிபடியே செல்கிறார்கள்.
யோ.கர்ணன் ஒரு அற்புதமான கதைசொல்லி. ஈழத்தமிழின் இயல்பான பேச்சுமொழியினூடு விரியும் இவரது கதைகளில் இளையோடிக்கொண்டிருக்கும் எள்ளல் துயர் மிகுந்தது. அவரது துயரங்கள் அனைத்தையும்,  கடக்கவியலா வாழ்வின் சுமைகள் அனைத்தையும் தனது எள்ளல் மிகும் தன் மொழியினூடே இறக்கி வைக்கிறார். ஆனாலும் யோ.கர்ணனது கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது ‘மெய்’ அவரது சொற்களில் இருக்கும் உண்மையே அவரது கதைகளின் ஆதாரம். அவலத்தை அனுபவிக்க நேர்ந்த ஒரு மனிதன், தன் சுயமான வார்த்தைகள் மூலமாகவே அதை  விவரிக்க நேர்கையில்  ஏற்படுகின்ற வார்த்தைகளின் உயிர்ச்சூட்டினை கர்ணணின் கதைகள் நெடுகிலும் நாம் உணரலாம்.
யோ.கர்ணணின் கதைகளைப் போலவே அக்கதைகளின் கதைநிகழ் காலமும், அது வெளிவருகின்ற காலப்பகுதியும் முக்கியமானது. முள்ளிவாய்க்கால் தீராத துயரையும் மனக்கசப்பையும் எம்மிடையே விட்டுச்சென்றிருக்கிறது. எல்லாத் தரப்புகளாலும் வஞ்சிக்கப்பட்ட சாதாரணிகள் இன்றளவும் அநாதரவாக விடப்பட்டிருக்கிறார்கள்.
இறுதிப்போரின் காலம் என்று வர்ணிக்கப்படுகிற காலம் குறித்து போர் நிலத்திற்கு வெளியில் இருந்து நிறையப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. ஊகங்களாலும் உன்னதங்களாலும் நிறைகிற அப்பேச்சுக்களின் நேர்மை மீது நிறையக் கேள்விகளுண்டு. ஆனால் இதுவரையிலும் போர்நிலத்தின் மனிதர்கள் தம் கதைகளைத் தாமே பேசும் அல்லது பதிவு செய்யும் திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். முதல்முறையாக யுத்தத்தின் மிச்சமாக, ஜீரணிக்க முடியாத அனுபவங்களோடு நம்மிடத்தில் வருகிறார்  யோ.கர்ணன் எனும் மனித சாட்சி.  போர்நிலத்தின் வெளியில் வசிக்கும் மாந்தர்கள் பேசிப்பேசி ஓயாத முள்ளிவாய்க்கால் துயரங்களைப் பேசுவதற்கு. அங்கே நிகழ்ந்த அனைத்தினதும் மிகப்பெரும் சாட்சியாக உயிர்பிழைத்து மீண்டு வந்திருக்கிறார்  கர்ணன்.  நம்மால் போர் நிலத்திற்கு வெளியில் யூகங்கள் கொண்டு பேசப்பட்டதொரு வாழ்க்கையை நேரில் அனுபவித்தவர் என்கிற வகையில் கர்ணனுடைய கதைகள் முக்கியம் பெறுகின்றன.
நமக்கு விரும்பமில்லாத ‘உண்மைகளைக் கூட கேட்கத் தயாரற்று நிராகரிக்கிற தமிழ்ச் சூழலே இன்றிருக்கிறது. உண்மைகள் கசப்பானவைதான். ஆனாலும் அவற்றைப்  பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. அவற்றைக் கடந்து போவதற்கும் அவற்றின் மீள்  நிகழ்தலைத் தடுக்கவுமாக நாம் உண்மைகளைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் அனுபவம் தொடர்பில் வெளிவருகின்ற முதல்தொகுதி இது. இது பெரும் புனிதங்களைத் தகர்க்கவும், ஜீரணிக்க முடியாத வலியை நம் மீது இறக்கவும் வல்ல உண்மைகளைச் சுமந்திருக்கிறது.  முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற மக்களில் ஒருவரான யோ.கர்ணனின் இந்தச் சாட்சியத்தை வெளியிடுவதை நாம் வாழும் நிகழ்காலத்திற்குச் செய்யும் கடமையாகவே உணர்கிறோம்.
இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கருணாகரனுக்கும். ஆலோசனைகள் வழங்கி மெய்ப்பு நோக்கியும் உதவிய நண்பர்   பாரதிதம்பிக்கும் எமது நன்றிகள்.
த.அகிலன்
வடலி  வெளியீடான யோ.கர்ணனின் ‘ தேவதைகளின் தீட்டுத்துணி ‘ சிறுகதைத் தொகுப்பிற்கான பதிப்புரை.

சீட்டாட்டம்




ந்தியில் பஸ்சால இறங்கேக்க எனக்கு மெல்லிய டிம், மாஸ்ரருக்கு முழு டிம்.  எங்களை இறக்கிப் போட்டுப் போன இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்சைப் பாத்து இரண்டு கையையும் விரிச்சபடி நடுறோட்டில நின்று “என்னயிருந்தாலும் மகிந்த ஒரு நரியன்தான்.  இஞ்ச விட்டான் துரும்பை...  அங்க அடிச்சான் கம்மாரிஸ்...” என்று உரத்த குரலில் சொன்னார்.  போன சனம் நின்று புதினம் பாக்கினம்.  அதால வந்த இரண்டு ஆமிக்காரரும் சிரிச்சுக் கொண்டு நின்று பார்க்கினம்.  அவயளுக்கு தமிழ் தெரியாட்டிலும்,  ஒரு அங்கிள் வெறியில் நின்று புசத்திறார் என்று நினைச்சிருப்பினம். எனக்கு பெரிய அந்தரமாய் போயிற்றுது.  மாஸ்ரரின்ட கையைப் பிடிச்சு இழுத்து “பேசாமல் வாங்கோ மாஸ்ரர்'' என்று மெல்ல உறுக்கினன்.  மாஸ்ரர் பயப்பிடுறாரில்லை.  “டேய்... ஏன் பயப்பிடுகிறாய்... நினைக்கிறதைக் கதை... பயப்பிடாதை சொல்லு... என்ன பிரச்சினை....”

“மாஸ்ரர் சனம் பார்க்குது... தேவையில்லாத கதையை விட்டிட்டு வாங்கோ...”
“எது தேவையில்லாத கதை... ஓ .... மகிந்தவோ.... அடி செருப்பால...” என்றபடி என்ர பிடியிலிருந்த தனது கையை உதறி எடுத்து, கையை உயர்த்தி “மகிந்த ராசபக்ச வாழ்க... கம்மாரிசடிச்ச சிங்களவன் வாழ்க...” என்று விட்டு காறித் துப்பினார்.

எனக்குப் பெரிய அந்தரமாய்ப் போயிற்றுது. பேசாமல் தொட்டியடி றோட்டால நடக்கத் தொடங்கினன்.  எங்கட காணிக்குப் போற பாதை அதுதான்.  மாஸ்ரர் கூப்பிட்டார்.  நான் நிக்கயில்லை.  கெஞ்சினார்.  நான் நிக்கயில்லை.  ஓட்டமும் நடையுமாக ஏதோ கதைச்சுக் கொண்டு பின்னால வாறார்.
முந்தின காலமென்டால் மாஸ்ரர் இப்பிடி கோசம் போட்டதுக்கு விசுவமடுச் சந்தியில ஐஞ்சு வெடி விழுந்திருக்கும்.

சந்தியிலிருந்து ஐம்பது மீற்றர்ல இயக்கத்தின்ர அரசியல் துறையிருந்தது.  அதில கடைசியாக சீராளன், போர்ப்பிரியன் ஆக்கள் பொறுப்பாக இருந்தவை.  முதல் வெடியை அரசியல்துறை வைச்சிருக்கும். 

அரசியல்துறை கழிஞ்சு போக, புலனாய்வுத்துறைக்காரர் இருந்தவை.  அதுதான் திருமலை மாஸ்ரரின்ட மெயின்.  ஏரியாவில நடக்கிற நல்லது கெட்டது, மங்கலம் - அமங்கலம், உருட்டுப் பிரட்டு, அடி வெடி எல்லாமே அங்கதான் நடந்தது.  இரண்டாவது வெடி இவையள் வைச்சிருப்பினம்.

இவைக்கு முன் ஒழுங்கையில் காவல்துறைக்காரரும், மாலதி படையணி பெட்டையளும் இருந்தினம்.  மூன்றாவது வெடியை சந்தேகமில்லாமல் காவல்துறை வைச்சிருக்கும்.  நாலாவது வெடிதான் மிச்சமாயிருக்குது.  என்னயிருந்தாலும் அவையள் பொம்பிள்ளையள் தானே.  அவையள் இப்படி வெடி வைச்சு நான் இதுவரைக் கண்டதில்லை. ஐஞ்சாவது வெடிதான் ரிக்ஸ்சான வெடி.  கொஞ்சநாளைக்கு முதல் நீங்கள் பேப்பருகளில படிச்சிருப்பியள், மோட்டார் சைக்கிளில வந்து சுட்டவை, காரில் வந்து சுட்டவை, கூரை பிரிச்சு சுட்டவை, மதிலேறிக் குதிச்சு சுட்டவை, தின்னேக்க சுட்டவை, குடிக்கேக்க சுட்டவை என்று.  ஆர் சுட்டது, எப்படிச் சுட்டதென்பது வெடி வைச்ச ஆளுக்கும் வெடி வேண்டின ஆளுக்கும் தான் தெரியும்.
இது மாதிரித்தான் ரவுணுக்குள்ள ஐஞ்சாறு பேர் நிப்பினம்.  நல்லா இயக்கத்தோட ஊறிய ஆக்களுக்கும், சாப்பாட்டுக் கடைக்காரருக்கும் மட்டும் இவையளைத் தெரியும்.  அனேகமாக எல்லாரும் சாப்பாட்டுக் கடைக்காரரோட நல்ல பழக்கம் வைச்சிருப்பினம்.  ரவுணுக்குள்ள நடக்கிற அசுமாத்தங்களை கவனிச்சுக் கொண்டிருப்பினம்.  இவையளும் ஒரு வெடி வைச்சிருப்பினம்.
எங்கட அப்பா இருக்கிறாரே அந்தாள் ஒன்றுக்கும் உருப்படாத ஆள். அந்தாளால உருப்பட்ட தென்டால் நாலைஞ்சு கள்ளுத் தவறணை முதலாளியள்தான். அந்தாள் தன்ர வாழ்க்கையில செய்த ஒரேயொரு உருப்படியான காரியமென்டால், படிச்ச வாலிபர் திட்டமொன்று அந்த நேரம் விசுவமடுக் காட்டை பிரிச்சுக் குடுக்கேக்க, ஒரு துண்டு காணி வாங்கினதுதான்.  அப்ப கிளநொச்சியே பெரிய காடெண்டு சொல்லி கனபேர் வரவில்லையாம்.  விசுவமடுக்கு வந்த முதல் பஸ்சில அப்பரும் வந்திறங்கியிருக்கிறார்.  கனபேர் தாக்குப் பிடிக்க ஏலாமல் திரும்ப ஓடியிட்டினம்.  அப்பர் நின்றார்.  அந்த நேரம் அப்பரின்ட ‘கோழையாவாக’ சிவம் அண்ணை இருந்திருக்கிறார்.  ஆள் தோட்டக்காட்டான்.  உலகத்திலேயே தோட்டக்காட்டான் மாதிரி நன்றியுள்ளவன் இல்லையென்டு அப்பா வெறியில் புசத்துவார்.  பிறகு அப்பா யாழ்ப்பாணத்திலயிருக்கேக்க சிவமண்ணைதான் காணியைப் பார்த்தார்.

அப்பான்ட குடிவெறி எனக்குப் பிடிக்கயில்லை.  கொஞ்சநாளாக இரண்டு பேரும் முழுக்கிக் கொண்டு திரிஞ்சம். ஏமஞ் சாமத்தில வந்து புசத்திற வேலையை நிப்பாட்டச் சொல்லச் சொல்லியும், அம்மாட்டச் சொல்லியிருந்தேன்.  அண்டைக்கும் ஆளை கனநேரமாகக் காணவில்லை. நான் கேற்றைப் பூட்டியிட்டன்.  அப்பா கேற்றுக்கு வெளியில நின்று படு தூசணத்தால கத்துகிறார்.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்தன், சரிவரவில்லை.  கேற்றைத் திறந்துபோட்டு, அப்பா உள்ளுக்கு வர, விட்டன் மூஞ்சையைப் பொத்தி ஒண்டு.  மனுசன் மூச்சுப் பேச்சில்லாமல் நிலத்தில.
இதுக்குப் பிறகு அப்பர் வலு திருத்தம்.  ஆனால் நான் வீட்டிலயில்லை.  நான் இயக்கத்துக்குப் போனன்.  எனக்கு இடம் வலம் தெரியேலையோ என்ர காலமோ தெரியாது.  நான் போனது இயக்கத்தின்ர கலை பண்பாட்டுக் கழகத்துக்கு.  இதுக்கு முதல் புதுவை இரத்தினதுரை என்டொரு பேரையே நான் கேள்விப்பட்டதில்லை. துப்பாக்கி தூக்கி சமராடுவதை விடவும் சிரமமான பணி மக்களை அணிதிரட்டுவது. கலைகளின் ஊடாக அவற்றை செய்வதே எமது நோக்கம் என கலை பண்பாட்டுக்கழகம் போட்ட நாடகமொண்டில் நடிக்க அனுப்பினார் புதுவை அண்ணா.

எனக்கு கிடைச்சது ஆமி வேசம்.  ஐஞ்சு பேரில ஓராளாக வந்தன்.  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு என பல பகுதிகளில் நாடகம் நடந்தது.  எம்.ஜி.ஆர், சிவாஜி ஆக்களும் இப்பிடித்தான், ஸ்ராட்டில் சின்னச்சின்ன வேசங்களில் நாடகம் நடிச்சுத்தான் பேமசானவை என்று அதில நடிக்கிற எல்லோருமே கதைப்பினம்.  கொஞ்சநாள் போக மெல்ல மெல்ல நானும் இப்பிடி கதைக்கத் துவங்கினன்.

அப்பதான் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்து தென்மராட்சி மட்டும் சனம் ஓடி வந்து நின்று யோசிக்குது.  கிளாலிக் கடல் கடக்கிறதோ, திரும்பிப் போறதோ எண்டு. வீட்டுக் காரரையெல்லாம் திருப்பி அனுப்பிப் போட்டு, அன்ரி ஆக்களோட நான் கடல் கடந்து வன்னி போனன்.  

அன்ரியின்ர மூத்தமகன் அப்பவே இயக்கத்தில பெரும்புள்ளி. இரண்டு பொடி காட்டோடதான் வீட்டுக்கு வருவான்.  அதால அன்ரி வன்னிக்குப் போக வேண்டியிருந்தது. அவவுக்கும் வன்னி தெரியாது.  அப்பரின்ட காணியை தடவிப் பிடிச்சு விசுவமடுவில குடியேறினம்.  அந்த நேரம் இடப்பெயர்வு சம்பவங்களை வைச்சு குருத்தோலை அழுவதேன், வெள்ளைப் புறா சிவப்பானதேன், யாழ் தேவி என்றது மாதிரியான பேமசான நிறைய நாடகங்களை பலதரப்பும் போட்டினம்.  சும்மா சொல்லக்கூடாது.  நாங்களும் வலுதிறமான நாடகங்கள் சிலது போட்டம்.  அவையளோட சேர்ந்து தொடர்ந்து நாடகம் நடிக்கிறன்.  இடம்பெயரேக்கையும் சேர்ந்து வந்திட்டன் என்டது மாதிரியான காரணங்களாலோ அல்லது என்ர திறமையாலயோ தெரியாது எனக்கும் புரமோசன் கிடைச்சது.  ஆமிக் கூட்டத்தில வந்த ஆள் இப்ப தனிப் பாத்திரம் ஏற்கத் தொடங்கிற்றன்.  இப்பவும் சிவாஜி, எம்.ஜி.ஆரின்ட கதைதான் என்ர மனசுக்குள்ள ஓடிக் கொண்டிருக்குது.

ஒருநாள் இப்பிடித்தான், செவ்வானம் சிவந்ததேன்’ என்றொரு நாடகம் பழகிக் கொண்டிருக்கிறம். எனக்கும் ஒரு முக்கியப் பாத்திரம் தந்திருக்கினம். அப்ப அன்ரியிட்டயிருந்து ஒரு அவசர மெசேஜ் வருது “எங்கயிருந்தாலும் உடனே வா.  அவசரம்”.  நானும் விழுந்தடிச்சுப் போறன்.  வீடு பேயறைஞ்சு போய்க் கிடக்குது. அன்ரி சொன்னா, “உன்ர தங்கச்சி... உவள் தான் சுமி. அவளுக்கு ஆம்பிளை கேட்டிருக்குது.  ஆரோடையோ ஓடிற்றாள்....”

சுமி அன்ரியின்ர இரண்டாவது பெட்டை.  எனக்கென்டால் விசர் எழும்பிற்றுது.  இந்த தோறை பார்த்த வேலையால தெருவில தலைநிமிந்தே நடக்கேலாமல் போகப் போகுது.  ஆர் பொடியன் என்று பாத்தால், சந்தியில சலூன் வைச்சிருக்கிறவனிண்ட பொடியன்.  கடைசியில் எங்கட குடும்பத்துக்குள்ள ஒரு அம்பட்ட மாப்பிள்ளையும் வந்திட்டான்.

நான் நேரே காவல்துறைக்குப் போனேன்.  நான் ஆர், என்ன செய்யிறன், இன்ன இன்னாரைத் தெரியும் என்டதுகளை விளங்கப்படுத்திப் போட்டு, சுமியின்ர பிரச்னையைச் சொன்னேன்.  படிச்சுக் கொண்டிருந்த பெட்டையைக் கொண்டு போயிருக்கிறான்.  இன்ன இன்ன செக்சன்களில் இது குற்றம்.  இன்ன இன்ன அக்சன் எடுக்கலாமென்டு  நாலைஞ்சு பிளானும் குடுத்தன்.  அதில் ஒன்று, சந்தியில கடை வைச்சிருக்கிற தகப்பன்காரனைப் பிடித்து அடைக்கலாம்-  மகன் சரணடையுற வரை.  காவல்துறைப் பெரியவனும் வலு இன்ரஸ்டிங்காக என்ர பிரச்சினையை கேட்டிட்டு, “இப்பிடித்தானண்ணை நல்ல குடும்பங்களை சில பொம்பிளையள் தலைகுனிய வைக்கிறாளுகள்.  எதுக்கும் நீங்கள் ஒரு என்ட்ரி எழுதித் தந்திட்டுப் போங்கோ... நான் கவனிக்கிறன்...” என்றான்.  நானும் ஒரு என்ட்ரி எழுதிக் குடுத்திட்டு வந்தன்.

கொஞ்ச நாளில் ஓட்டமெற்றிக்காக இந்தப் பிரச்சினை மறைஞ்சிட்டுது.  காவல்துறையும் ஒரு அக்சனும் எடுக்கவில்லை. மல்லாவியில ஒருநாள் நாங்கள் நாடகம் போட்டம்.  கூட்டத்துக்குள்ளயிருந்து கைக்குழந்தையொட ஒரு பெட்டை எழும்பி 'அண்ணை' என்று கூப்பிடுது.  ஆர் என்னைக் கூப்பிடுறது என்டு யோசிச்சுக் கொண்டு திரும்பினன்.  சுமி. அதுவரை அவளைப் பற்றி வேசை, தோறை என்டது மாதிரியான கொமன்ட்ஸ் அடிச்சுக் கொண்டு திரிந்தாலும், அந்த ரைமில எல்லாம் மறந்து போச்சுது.  அந்தக் குடும்பத்தில என்னை மட்டும்தான் அண்ணனாக நினைக்கிறன் என்றும் சொன்னாள்.
அன்றிரவு வீட்டுக்கு போய் அன்ரியோட கதைச்சன்.  என்னயிருந்தாலும் அவள் உங்கட மகள்தானே.  எப்பிடியாவது உங்களோட சேருங்கோ என்டன்.  அன்ரிக்கு விளங்குகின்றது.  “ஏன் அவளை எங்கயாவது கண்டனியோ...” என்றா.  நான் ஓமென்டன்.  அன்ரி ஒரு வெடிச் சிரிப்பு சிரிச்சுப் போட்டு “துரும்பு அடிச்சுப் பாத்திருக்கிறாள்...” என்டா.
அன்ரி பொம்பிளைதான்.  ஆனால் நல்லா சீட்டடிப்பா. அவ ஆம்பிளையளோட இருந்து சீட்டடிக்கிறதை கண்டிருக்கிறன்.  நான் திறமையான விளையாட்டுக்காரனென்டில்லை.

சிலருக்கு சீட்டென்றால் உயிர்.  காலையில் இருந்து பின்னேரம் மட்டும் இருப்பினம்.  அவையளிட்ட ஏதேனும் அலுவலாகப் போறவைக்கும், பிரச்சினைதான். எழும்ப விடமாட்டினம்.  என்னயிருந்தாலும் உந்த மன்னார்ப் பக்கத்து கடற்றொழிலாளியள் இதில ராசாக்கள்தான்.  இப்பிடியான கொஞ்சப் பேரை பார்த்துமிருக்கிறன்.  என்ன மந்திரமோ, மாயமோ தெரியாது.  ஆர் ஆர் என்னதான் வைச்சிருக்கினமென்டதை பிசகில்லாமல் சொல்லுவினம்.  இப்ப பாருங்கோ, இதில ஓராளிட்ட ஸ்கோப்பன் ராசாவும், பெட்டையும் வருதென்டு வையுங்கோவன்.  அந்தாள் என்ன செய்யுது, அதில கம்மாரிஸ் குத்திது.  இதென்னடா இந்தாளுக்கு பைத்தியமா பிடிச்சிட்டுதென்டு யோசிப்பியள்.  அப்ப அந்தாள் ஒரு விளையாட்டுக்  காட்டும்.  துரும்பில சின்னத் தாளை இழுத்துவிடும்.  அப்படியே தாள் விழுந்து கொண்டு போக இவரின்ட பாட்னர் அடிப்பான்.  வீத்தை வீறு, மணல் எல்லாம் அவன்தான் வைச்சிருப்பான்.  இப்ப அவன் விளையாட்டை கையில எடுப்பான். இதுக்கு அடுத்தடுத்த அடியில வெட்டிக் கம்மாரிசென்டோ, எங்கட ஆள் கம்மாரிஸ் அடிக்கும்.  கம்மாரிசில ஒரு குருவி பிழை பிடிக்க ஏலாது.  இப்ப நீங்கள் அந்தாளிட்டக் கேப்பியள்... “எப்பிடியண்ணை இது....”

அந்தாள் முகம் கொள்ளாத ஒரு சிரிப்போட சொல்லுவார்.  “ம்...ம்... அது தான் விளையாட்டு... துரும்பை சரியான ரைமில அடிச்சு, அடிச்சன் பார் கம்மாரிஸ்...” சுமி துரும்பை இழுத்து கம்மாரிஸ் அடிச்சாளோ இழுக்காமல் கம்மாரிஸ் அடிச்சாளோ தெரியாது. கொஞ்ச நாளில் இரண்டு பக்கமும் வலு நெருக்கம்.  தாயும் மகளும் ஒரே வீட்டில்தான் இருந்தினம்.  எங்கட விசுவமடுக் காணியிலதான் இருக்கினம்.  முந்தின காலத்தில கடிதம் போட்டாலே அந்த இராச்சியத்துக்கு பத்து நாளைக்குப் பிறகுதான் போகும்.  இப்ப எல்லா இடமும் ரெலிபோன் வந்திட்டுது.  அவளும் இரண்டு நாளைக்கொரு கோல் அடிச்சு “அண்ணா... என்னை மறந்திட்டியோ... என்னை பாக்க வரமாட்டியோ” என்கிறாள்.

சரி போனால் போகுது என்று மாஸ்ரரையும் கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன். மாஸ்ரரும் முந்தி என்னோட நாடகம் நடிச்ச ஆள்தான்.  வவுனியாவில் இருந்து வெளிக்கிடேக்க இரண்டு பேரும் வலு நோமல்.  பிறகு கிளிநொச்சி ரவுணிலதான் கொஞ்சம் குடிச்சம்.  அதுவும் மாஸ்ரரின்ட ஆய்க்கினையாலதான் நான் குடிச்சன்.  நான் எதிலயும் வலு நிதானம்.  மாஸ்ரர் ஒரு பரதேசி நாய். கேற்றைத் திறந்து உள்ளடேக்க, மாஸ்ரர் தவண்டு வந்த மாதிரியுமிருக்குது.  வேலியைப் பிடித்துக் கொண்டு வந்த மாதிரியுமிருக்குது.  நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. 

வீட்டுக்குள்ள இருக்கேக்க மாஸ்ரர் பம்மிக் கொண்டு இருக்கிறார்.  எனக்கு ஆளைப் பார்க்க சிரிப்பாக இருக்குது.  அந்த நேரம் மாஸ்ரருக்கு ஒரு கோல் வருது.  கதைச்சார்.  கதைச்சு முடிச்சுப் போட்டு சொன்னார். “ஒரு குருவி வாலாட்டேலாமல் இருந்த ஏரியாவுக்க புகுந்ததுமில்லாமல்... டிஸ்கோ டான்சும் ஆடினானாம் என்ட கணக்கா... சீ.ரி.பி பஸ்சில வந்திறங்கி இஞ்சயிருந்து போன் கதைக்கிறம்” என்டார்.

பிறகு, “துரும்படிச்சுக் கம்மாரிஸ் அடிச்ச இடமடா இது” என்றார்.  எனக்கு ஏறிற்றுது.  “மாஸ்ரர் வெறி முறியாட்டில் போய் குளிச்சிட்டு படுங்கோ...” என்றேன்.  மாஸ்ரர் சொன்னார் “எடேய்.. சீட்டில ஒரு ரிக்ஸ் இருக்கடா,  இப்ப உன்னிட்ட துரும்பில்லையெண்டு வை.  உன்ர கூட்டாளியிட்ட இருக்கலாம்.  மெல்ல ஒரு துரும்பை இறக்க வேணும்."

நான் எழும்பினன்.  மாஸ்ரருக்கு விளங்கீற்றுது வாயை மூடிவிட்டார்.  இண்டைக்கு இஞ்ச மாஸ்ரரின்ட மூஞ்சையைப் பொத்திப் போடுவன்.  அவ்வளவு கோபம்.  எப்பப் பார்த்தாலும் துரும்பும் கம்மாரிசுமெண்டு கொண்டு.  கூட்டிக்கொண்டு வந்திட்டு அடிக்கிறது பாவம் எண்டு நான் உள்ளுக்க போனன்.  தங்கச்சியோட கொஞ்சநேரம் ஊர்க் கதையள் கதைச்சுப் போட்டு குளிச்சன்.  குளிச்சிட்டு வர ஒரு பிளேன் ரீ தந்தாள்.  வெளியில இருக்கிற மாஸ்ரருக்கு குடுத்தாச்சுதோ என்று கேட்டன். மூத்த மகன் கொண்டு போயிற்றான் என்றாள். பிளேன் ரீயை குடிச்சிட்டு வெளியில போனன்.  பிளேன் ரீ கொண்டு போன பொடியனை வைச்சு கதைச்சுக் கொண்டிருந்தார். 

“தம்பி... துரும்படிச்சு கம்மாரிஸ் அடிச்சான் மகிந்த...  இஞ்ச துரும்படிச்சான்... அங்க முள்ளி வாய்க்காலில கம்மாரிஸ் அடிச்சான்”. பொடியன் வெருண்டு போய் நிக்கிறான்.  எனக்கு ஏறிட்டுது.  “என்ர மாஸ்ரர் திரும்பத் திரும்ப புசத்திறியள்... என்ன பிரச்சினையென்டதை சொல்லுங்கோ..”

மாஸ்ரர் ஒரு நிமிசம் வடிவாச் சிரிச்சார்.  அப்பிடியெ அலகைப் பொத்திப் போட வேணும் மாதிரிக் கிடக்குது.  பிறகு சொன்னார். “எடேய் ஜனாதிபதி-எலெக்சன் நேரம் இஞ்ச வைச்சுத் தான்ரா மகிந்த, இயக்கத்துக்கு இருபது கோடி காசு கொடுத்தவன்.  தனக்கு போடச் சொல்லி” என்றார்.


நன்றி: புது விசை 

Press Clips - 2010 விகடன் விருது; சிறந்த சிறுகதைத் தொகுதி



வடலி வெளியீடாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுதி ஆனந்த விகடன் பத்திரிகையின் 2010 விகடன் விருதுகளில் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினை வென்றிருக்கிறது. யோ.கர்ணனுக்கு வாழ்த்துக்கள். விகடனுக்கு நன்றி. - தகவல்: Vadaly
========================================================================

துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.
அவற்றில் சில:
1. சிறந்த கதை - வசந்தபாலன் :: அங்காடித் தெரு
2. சிறந்த வசனம் - சற்குணம் :: களவாணி
3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்
முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்
சிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்
4. சிறந்த நாவல் - மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)
5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)
6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு  (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)
7. சிறந்த மொழிபெயர்ப்பு - ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)
உலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.
பத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.
8. சிறந்த வெளியீடு - தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)
9. சிறந்த பின்னணிப் பாடகர்பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)
நன்றி: SnapJudge

றூட்


வன் அப்ப சின்னப் பொடியன். முக்கால் சைக்கிள் ஒன்றில பள்ளிக்கூடம், ரியூசன் போய் வந்து கொண்டிருந்தான். கூடப் படிச்ச தர்சினியில கொஞ்சம் விருப்பமிருந்தது. பள்ளிக்கூடம் போனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
அந்த நேரம் சாமான் எல்லாம் ஆனை விலை குதிரை விலை. அரசாங்கம் கன சாமானுக்கு தடை போட்டிருந்தது. பற்றி, சோப் கண்ணுக்குத் தெரியாது. இவன் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டான் என்றால் அப்பு வளர்க்கிற மாடு மூசி மூசி மோப்பம் பிடிச்சுவந்து நக்கும்.. சோப் தட்டுப்பாடென்பதால பனங்காயிலதான் அப்ப உடுப்புத் தோய்க்கிறது. கலியாணவீடு, திருவிழாக்களுக்கு போடுறதெண்டு ஆசை ஆசையாக ஒரு நல்ல மஞ்சள் சேட் வைத்திருந்தான். ஒருநாள் தோய்த்துக் காயப் போட அதை மாடு சப்பிப் போட்டுது. அந்த சேட்டில்லாமல் போனது இவனுக்கு சரியான கவலை. அதுக்குப் பிறகு அப்பு மாட்டை அவிட்டு விடுறதில்லை.
அந்த ரைமிலதான் இவன்ற தகப்பன் வவுனியா வியாபாரம் செய்யத் தொடங்கினார். யாழ்ப்பாண மைப் தெரிந்தவைக்கு யாழ்ப்பாணத்தை விட்டு போறதெண்டால் ஆனையிறவை விட்டால் வேற தரைப் பாதை இல்லையெண்டது தெரியும். அந்த ஸ்பொட்டில ஆமிக்காரர் காம்ப் அடிச்சினம். அதோட பாதை கட். சாமான் சக்கட்டு ஒண்டும் கொண்டு போகேலாது.
தமிழன்ர மூளை சும்மா இருக்குமோ? சோப் இல்லையெண்டதும் பனங்காயை யூஸ் பண்ணினவன் புது றூட் ஒன்று கண்டு பிடிச்சான். சனம் எல்லாம் முழங்காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு தண்ணிக்குள்ளால ஆமிக்குத் தெரியாமல் போய் சாமான் கட்டிவரத் தொடங்கிச்சுதுகள். கொம்படி, ஊரியான், கிளாலி எண்ட பேரெல்லாம் எல்லாருக்கும் இன்ரடியுஸ் ஆனது. இவன்ர தகப்பன்காரனும் இந்தப் பாதையளெல்லாம் பாவிச்சார். கொம்படியால வந்த சாமானிலதான் இவன் முதல்முதலாக போட்ட சான்ரில்ஸ்சும் சஸ்பென்ரரும் வந்தன. இரண்டையும் வலு புதினமாகவும் ஆவலாகவும் போட்டுக் கொண்டு திரிந்தான்.
ஆமிக்காரரும் விடாயினம். இடைக்கிடை அருட்டுவினம். கொம்படி, ஊரியானில ஷெல்லடி. இத்தனைபேர் உடல் சிதறிப் பலி. கிளாலியில கடற்படை வெறியாட்டம். இத்தனை பேர் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை. என்றமாதியான கெட் நியூசோட அடிக்கடி உதயனும் ஈழநாதமும் வரும். அப்ப யாழ்ப்பாணத்தில இந்த இரண்டு பேப்பரும் தான் பேமஸ்.
தகப்பன்காரனுக்கு இவனில நல்ல பட்சம். வீட்டில இருக்கிற நாளில முற்றத்தில தகப்பனிருக்க இவன் மடியில படுத்திருப்பான். இவன்ர தலையைத் தடவி விட்டபடி பயணக் கதைகள் சொல்லுவார். ஆமி வெளிச்சம் அடிச்சுப் பார்க்க தண்ணீருக்குள் ஒளிந்தது, கிளாலியில நேவி துரத்த வலிச்சுத் தப்பி ஓடி வந்தது என்ற கணக்காக நிறையக் கதைகள் சொல்லுவார். அந்த நேரம் பக்கத்து வீடுகளில படம் போட்டால் இவன் முன்னுக்குப் படுத்திருப்பான். ஏற்கனவே தமயன்காரனிட்ட சொல்லியும் வைத்திருப்பான் – சண்டைக் கட்டம் வந்தால் எழுப்பு என. அப்பிடிப் பார்த்த நிறையச் சண்டைக் கட்டம் ஞாபகம் வைத்திருந்தான். இவனுக்கு விஜயகாந் என்றால் ஒரு பிரியம். அந்தாளின்ர அக்சனுகளில ஒரு திறிலிங்கைக் கண்டான். தகப்பன்ர கட்டங்களையும் அதுகளையும் அடிக்கடி யொயின்ற் பண்ணிப் பார்ப்பான். தகப்பன்காரனும் ஒரு விஜயகாந் மாதிரித்தான் இவனுக்குப் பட்டார்.
வீடும் பள்ளிக்கூடமுமாக இருந்த பொடியன் தகப்பன்காரனோட கதைச்சுக் கதைச்சு உந்த றூட்டுகளையெல்லாம் விரல்நுனியில வைத்திருந்தான். கொம்படியில எதால இறங்கி ஊரியானில எப்படி மிதக்கிறதெண்டதையும் கேடியின்ர றூட்டைப் பற்றியும் இவன் விலாவாரியாகச் சொல்ல எல்லாப் பொடியளும் வாய்மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த உற்சாக மிகுதியிலோ என்னவோ ஒருநாள் சொல்லிவிட்டான் - எங்கட அப்பா போற வோட் கிளாலியில வேகமாக ஓடி பிறேக் அடிக்க, புழுதி கிளப்பி மற்றப் பக்கம் திரும்பி நிற்குமென. இவன் சொன்ன எல்லாத்தயும் நம்பின பொடியள் இதை மட்டும் நம்ப மாட்டன் எண்டிட்டுதுகள்.
இவன்ர பள்ளிக்கூடத்தில விளையாட்டுப் போட்டி வந்திட்டுது. ஓட்டப் போட்டியென்றதும் கன பொடியள் முள்ளுச் சப்பாத்து வாங்கிச்சுதுகள் இவனுக்கும் இதில ஆசை. தகப்பனிட்ட எப்பிடி கேக்கிறதென்ற பயத்தில இருந்தான். அன்றிரவு தகப்பன் இவனைக் கூப்பிட்டு மடியில கிடத்தினார். இதுதான் ரைம் என்று பவ்வியமாகக் கேட்டான். தகப்பனும் நாளைக்குப் போய் வரும் போது வாங்கி வருவதாக சொன்னார். இவனுக்கு பிடிபடேல. அடுத்த நாள் வகுப்பு முழுக்க இவன் போடப் போகும் முள்ளுச் சப்பாத்துப் பற்றி கதைக்க வைத்தான். கடவுளே என்று அது வெள்ளையும் சிவப்பும் கலந்த கலரில இருக்கவேண்டும் என வேண்டினான்.
அன்று பின்னேரம் வீட்டுக்கு வர வாசலிலேயே கூட்டம். ஒரு பரபரப்புடன் உள்ளுக்குப்போக அம்மா தரையில உருண்டு ஒப்பாரி வைக்கிறா. இவனுக்கு எல்லாம் விளங்கிட்டுது. “ஐயோ அப்பா “என்று கத்திக்கொண்டு உள்ளுக்கு ஓடினான்.
அடுத்த நாள் உதயனும் ஈழநாதமும் இவன்ர வீட்டில எடுத்தினம். கிளாலியில போனவையை நேவி வெட்டினது என்ற தலைப்பு இரண்டிலயும் இருந்தது. ஒன்றில இருபத்தைந்து பேர் எண்டும் ஒன்றில இருபத்தெட்டுப் பேரெண்டும் இருந்தது.
கடைசிவரை இவன்ர தகப்பன்காரனின்ர உடலை யாரும் காணவேயில்லை.


                                                                                                  0
இவன் இயக்கத்துக்கு வந்து ஒரு வருசமாகுது. ஆள் முல்லைத்தீவு அடிபாட்டுக்கெல்லாம் போய் சின்னனாக ஒரு காயமும் பட்டு வந்து நிக்கிறான். இவன் இருந்த காம்புக்குப் பக்கத்தில இருந்த அன்ரியை சோஸ் பிடித்துவிட்டான். அன்ரிக்கு இரண்டு குமர்ப் பெட்டையள் வேற. பெட்டையள் இருக்கிற ரைமில இவன் போனால் தான்தான் முல்லைத்தீவு அற்ராக்குக்கு முழுக் கொமாண்ட் பண்ணின ஆள் மாதிரிக் கதைப்பான். அதுகளும் வாசல் துணியைப் பிடித்துக் கொண்டு நின்று கேக்குங்கள்.
இப்பிடி அன்ரியை சோஸ் பிடிச்சு அன்ரியின்ர விலாசத்துக்கு வீட்டயிருந்து கடிதம்போட வைச்சான்.
ஒருநாள் தமயனிட்டயிருந்து ஒரு கடிதம் வந்தது. கண்ணீரும் கம்பலையுமாக வந்த அந்த கடிதத்தின் சுருக்கம் வெளிநாடு போவதற்காக தான்படும் இன்னல்களை விபரித்ததாக அமைந்திருந்தது.
வெறும் போஸ்டல் ஐடென்ரிக்காட்டுடன் இருந்த பொடியனை கப்பலில கொண்டுபோய் கொழும்பிலை ஒரு ஆமிபொலிசிட்ட மாட்டாமல் கொண்டு திரிந்து பாஸ்போட் எடுத்து பிளைட் ஏத்தின பெருமை ராஜா மாமாவைச் சேரும். போகவேண்டிய றூட்டில ஆமிபொலிஸ் நிக்குதெண்டால் அந்த ஒழுங்கைக்குள்ளால விட்டு இந்த ஒழுங்கைக்குள்ளால விட்டு எங்கேயோ மிதித்தி ஸ்பொட்டில ராஜா மாமா நிற்பாராம். அது எல்லாம் சரி. ஏஜென்சிக் காரன் காலை வாரினானோ என்ன மண்ணோ தெரியாது. லண்டன் போன பொடியன் மலேசியாவில மாட்டி. மலேசியா ஜெயிலுக்க பொடியன். கூட ஆர் இருக்கிறது, குடுப்பாட்டியும் கொலைக் கேஸ்களும். பொடியன் வெருண்டு போய் இந்தா சாகப்போறன் என்ற கணக்காக கத்திக் கொண்டிருக்குது. தாய்க்காரிதான் மாமனை மச்சானைப்பிடிச்சு காசடிச்சு பொடியனை வெளியால எடுத்தது.
இனி வாழ்க்கையில வெளிநாட்டுச் சீவியமே வேண்டாம் என்ற மாதிரி ஒரு கடிதத்தை தமயன்காரன் போட்டான். இவன் ஆறஅமர இருந்து யோசித்து குலத்தை மீட்க வீட்டுக்கொரு தமிழன் கட்டாயம் வெளிநாடு போகவேணும். நீ போயே தீரவேணும். நாட்டுக் கடமை குறுக்கே இல்லையெனில் நான் போய் விடுவேன் என்ற கணக்கில் ஒரு றிப்பிளை அனுப்பினான்.
ஏஜென்சிக்காரனும் "ஐயோ அக்கா போனமுறை போன றூட்டில சின்னச் சிக்கல். இந்த முறை ஒரு சிக்கலுமில்லாத றூட். பொடியனை ராஜா மாதிரி கொண்டுபோய் இறக்கிற பொறுப்பு என்ர" எனக் கதைச்சு எல்லாரையும் சம்மதிக்க வைச்சிட்டான்.
அடுத்த பயணம் வெளிக்கிட்ட பொடியன் ஜேர்மன் போறதுக்கிடயில செத்துப் பிழைச்சுப் போனான். ராஜா மாதிரிப் போகலாம் எண்டு போனவன் இரண்டு மாதம் ஆபிரிக்காவில கிடந்து காய்ந்து போனான். ஆபிரிக்கச் சாப்பாடு இவனுக்கு ஒத்துவரவேயில்லை. மெலிந்து நூலாய்ப் போனான். கடைசியில கொண்டையினர் பெட்டியில இரண்டு நாளாக சாப்பிடாமலிருந்து தான்  ஜேர்மனி போய்ச் சேர்ந்தான்.

                                                                                        0
இவன் கிளிநொச்சி பஸ் ஸ்ராண்டுக்க உள்ளட்டு முகமாலை போற பஸ் எங்க நிக்குது என்று பார்த்து சீற் பிடிச்சு இருந்திட்டான். அந்தக் காலத்தில் வன்னி பஸ் எண்டால் சனமெல்லாம் ஏறி தலை, கால், கைகள், ஜன்னலுக்கால வெளிக்கிட்டு இனிமேல் ஏற ஏலாது என்னும் நிலமை வரேக்கதான் வெளிக்கிடும். அப்பிடி ஒரு ரைம் வர இன்னும் பத்தோ பதினைஞ்சோ நிமிசமாகும். இவன் வெளியால ஒருமுறை பார்த்தான். பஸ் ஸ்ராண்ட் தகரத்தில "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என எழுதி கொஞ்சப் பேர் சிவப்பு மஞ்சள் உடுப்போட முகத்தை மூர்க்கமாக வைச்சிருக்கிற படங்களோட போஸ்டர்கள் ஒட்டப் பட்டன. சுற்றிவர இதுமாதிரி வேற வேற வசனங்கள், படங்கள் போட்ட நிறையப் போஸ்டர்கள் இருந்தன. 'யாமார்க்கும் குடியல்லோம். யமனை அஞ்சோம், பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு' என்பது மாதிரியான வசனங்கள்.
இவனுக்கு யோசிக்க யோசிக்க இயக்கத்தில இருந்து விலத்தினது பிழையோ என்பது மாதிரியான யோசனைகள் வரத் தொடங்கின. இந்தப் போஸ்டர்கள், பொங்குதமிழுகளைப் பார்க்க இவனுக்கும் நரம்பு புடைச்சதுதான்.
பத்மினி அக்காவின்ரயும் சிதம்பரநாதன் அண்ணையின்ரயும் பொடியளும் பெட்டையளும் சிவப்பு மஞ்சள் உடுப்புப் போட்டு அதே கலரில தலைக்கு றிபன் கட்டி 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்' என கத்திக் கத்தி ஆடுறதைப் பார்க்க நல்லாத்தானிருக்கும். இப்பிடியாக எல்லாமே சரிவரும்போது விலத்திறனோ எண்ட பயம் இரண்டு நாளாக இவனுக்குள்ள இருக்குது. இவன் விலத்தப் போறன் என்று கடிதம் குடுக்க கலைக்கோன் மாஸ்டர் சொன்ன வசனம் ஒன்று திரும்பத் திரும்ப வந்துபோனது - "வெண்ணை திரளேக்க தாளியை உடைக்காதையுங்கோ." இதைவிட "எல்லா இடமும் சனம் பொங்குது. அரசுக்கும் உலகத்துக்கும் எங்களுக்கான தீர்வை தாறதைத் தவிர வேற வழியில்லை" என்று பாப்பா சொன்னது வேற அன்று தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. மூளைக்குள் ஆயிரம் யோசனை. தலையை ஒரு முறை சிலுப்பினான். முடிவெடுத்தால் மாறக் கூடாது.
பஸ் வெளிக்கிட்டது. மனசுக்குள் தேவாரம் சொன்னான். கடவுளே முகமாலைப் பொயின்ரில ஆமி பிரச்சனை தரக் கூடாது. தேவாரத்தோடையும் நேர்த்தியோடையும் பொழுது போனதில முகமாலை வந்ததே தெரியவில்லை.
ஆமிக்காரர் பாதையை மறித்து பெரிய கிடுகு வேலி அடைத்திருந்தினம். அதைக் கண்டதும் தான் முகமாலை என்றதை உறுதிப் படுத்தினான். பஸ் அதில ஸ்லோ பண்ணி இடதுபக்கம் திரும்ப நிறைய ஆமிக்காரர் நிக்கினம். இவன் தன்ர சீவிய காலத்தில முதல்முதலா சிறிலங்கன் ஆமியை உயிரோடை காணுறான்.
ஏழுவருசமாக இயக்கத்தில இருந்திருக்கிறான். முல்லைத்தீவு அடிபாடு உட்பட இரண்டொரு அடிபாடுகளுக்கும் போயிருக்கிறான். ஆனால் ஆமிக்காரனை உயிரோடை கண்டதில்லை. முல்லைத்தீவு அடிபாட்டில நல்ல பனையாய் பார்த்து கவர் எடுத்திருந்தான். முன்னுக்கு இருக்கிற பத்தைக்குள் இருந்து அடிவருது. இவன் பார்த்தான் ஏன் சோலியை எண்டிட்டு அந்தத் திசையைப் பார்த்து நாலைஞ்சு றவுண்ஸ் அடிச்சிட்டு இருந்தான். லீடர் பொடியன் விடுறான் இல்லை. "விடாதை அடி… விடாதை.. விடாதை.. ஓடுறான் ஒருத்தனையும் விடக்கூடாது. மூவ்..." என்று அருச்சுணன் மாதிரி கத்துறான். இவனுக்கெண்டால் பத்தைதான் தெரியுது. கிளி தெரியேல. அதில காயம் பட்டவன் பின்னுக்கு வந்திட்டான்.
இப்பதான் முதன்முதலாக ஆமியைக் காணுறான். இவனிட்ட ஐ.சியும் இல்லை. விதானை கையெழுத்துப் போட்ட போட்டோ ஒட்டின துண்டு மட்டும் தான் இருக்குது. மெல்ல பம்மிப் பம்மிப் போய் நீட்டினான். ஆமிக்காரரும் வெய்யில் கடுப்பில நிண்டினம்.
“எங்க போறது…”
“வீட்டை…”
“வன்னியில என்ன செய்தது.”
“ தோட்டம்”
“வன்னியில தனிய இருந்து தோட்டம் செய்தனி... ம்… இப்ப எங்க குண்டு வைக்கவா?”
“ இல்லை… இல்லை. ஐயா.”
அவன் ஒரு மாதிரிப் பார்த்து விட்டு வெயில் கடுப்பில போ என்று அனுப்பி விட்டான். கடவுளே என்றபடி ஓடிவந்து பஸ்ஸில ஏறினான்.
நெல்லியடி பஸ் ஸ்ராண்டில இறங்க குலம் கோத்திரம் முழுக்க நிக்கினம். இவனை வரவேற்கினமாம். நல்லகாலம் ஒருதரும் மாலை கொண்டு வரேல. அந்த ஆரவாரத்துக்கயும் நெல்லியடி மெயின் ரோட்டில |'எங்கள் நிலம் எமக்குவேண்டும்' என்ற பெரிய பனரைக் கவனித்தான்.


                                                                                                                                                 0

சாத்திரியார் சொன்னதுதான் இவனுக்கு திரும்பத் திரும்ப படம் மாதிரி மனசுக்குள்ள ஓடுது. இதை என்னெண்டு சோல் பண்ணுறது எண்டதும் விளங்குதில்ல. ஒன்றில் விபத்து. அல்லது மறியல். இதை நான் சொல்லயில்ல தம்பி உன்ர குறிப்புத்தான் சொல்லுது எண்டு அவர்முடிச்ச வசனம் பராசக்தியில் சிவாஜி பேசின வசனங்கள் மாதிரி இப்பவும் இவன்ர மனசுக்குள்ள ஓடுது.
இவனுக்கு இப்ப கொஞ்ச நாளாகவே பலன் சரியல்லை. இல்லயெண்டால் இயக்கத்தால விலத்தி வீட்டில இருந்து பிஸ்னஸ் செய்துகொண்டிருந்த பொடியன் ஏன் வன்னிக்குள்ள மாட்டுவான். இதைத்தான் பலன் எண்டிறதென நேற்றும் ராசன் சொன்னான்.
இவனொரு வாகனத்தைப் பார்க்க வந்தது உண்மை. விலைப் பிரச்சனையால கொஞ்சம் இழுபறிப் பட்டதும் உண்மை. இவன் யாழ்ப்பாணத்துக்கு வீட்டை போயிட்டு நாளைக்கு வாறன் எண்டு வெளிக்கிட்டதும் உண்மை. அந்த ரைம் பார்த்து ராசன் நந்தினியைப் பற்றிக் கதைத்ததுதான் பிசகினது.
இவன் ஐந்து நிமிசம் யோசித்தான். இப்பிடி இருந்து என்னத்தைக் கண்டம். அவன் இவன் சின்ன வயதிலேயே எல்லாத்தையும் கண்டிட்டான். அந்த ரைமை இயக்கத்துக்க கழிச்சிட்டன். இப்பவும் வீட்டுக்கடங்கின பொடியனாய் இருந்து என்ன செய்யிறது. நாளைக்கு கலியாணம் கிலியாணம் கட்டிப் போட்டு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமல் என்ன செய்யிறது. ஐநூறு ரூபா போதும் எண்டுறான். பலதையும் யோசித்திட்டு ராசனோடு நந்தினியிடம் போனான். இவன் நந்தினியைக் காணேக்க மத்தியானம் ஒன்று பதினெட்டு. இதன் பிறகு ஒரு அரை மணித்தியாலமோ ஒருமணித்தியாலத்தில முகமாலை பொயின்ரில சண்டை தொடங்கி பாதைபூட்டுது.
கையில இருந்த காசெல்லாம் நந்தினியோட முடியுது என்ற நிலமை வரேக்க தான் பொடியன் வெருண்டு போனான். ஏதாவது செய்ய வேணுமே என்று அங்கலாய்த்துத் திரியேக்க தான் மொட்டைக் காந்தன் ஒருதனை இன்ரடியூஸ் பண்ணுறான்.
கிளிநொச்சி ரவுணில இருக்கிற 1.9 றெஸ்ரோரன்டிலதான் அந்தச் சந்திப்பு நடந்தது. எதேச்சையாக காந்தனைச் சந்தித்து சாப்பிட வந்தாச்சு. பேச்சுவாக்கில இவன் தன்ர வெப்பியாரங்களைச் சொன்னான். வன்னிக்குள்ள தனியாக இருந்து மாளுற நேரம் அங்கால போனால் சோலியில்லை எண்டது இவன்ர வாதம். இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லையெண்டது மாதிரியாக காந்தன் ஒரு சிரிப்புச் சிரித்தான்.
அப்ப அவளவு லேசில யாரும் வன்னியை விட்டிட்டு போகேலாது - போறதெண்டால் இரண்டு தகுதிவேணும். ஒன்று சாகக் கிடக்கிற அறப் பழசான வயசாயிருக்க வேணும். இல்லையெண்டால் பதினைந்தோ இருபது இலட்சம் பெறுமதியான வீடிருந்து அதை இயக்கத்துக்குக் குடுக்க வேணும். இந்த இரண்டு குவாலிக்கேசனுமில்லாமலே இவன்ர பிரச்சினையை சோல் பண்ணக்கூடியவன் என்று கூட வந்தவனை இன்ரடியூஸ் பண்ண அவன் வலு பவ்வியமாக சிரித்து தன்ர பேர் அஜித் எண்டான். பேர் நல்ல மொடோனாகத் தானிருந்தது.
அஜித்துக்கும் இவனுக்கும் நாற்பத்தொன்பது நாள் பிறன்ஸ்சிப் நீடித்தது. இந்த நாளில ஆறாயிரத்து முன்னூற்றி எண்பத்தி ஒன்பது ரூபாவை அவனுக்காகச் செலவழித்தான். காரணமில்லாமல் தோரணம் ஆடாது. எல்லாம் காரணத்தோடதான். அஜித் தானொரு படகோட்டி எண்டும் நிறைய படகோட்டிகளை தெரியும் எண்டு சொன்னதுதான் இந்தளவிற்கும் காரணம். அந்த ரைமில நிறையச் சனம் உந்த விடத்தல்தீவு, நாச்சிக்குடாப் பக்கம் இருந்து இந்தியாவுக்கு ஓடிச்சுதுகள். இயக்கம் பாத்தது இது சரிப்பட்டு வராது என்று இந்தப் பக்கம் இறுக்கமாக்கியது. இந்தியா போ வெளிக்கிட்டு யாரும் பிடிபட்டால் ஆறுமாதம் ஜெயில். படகோட்டிக்கு ஒரு வருசம் ஜெயில். இதைவிட ஆயிரத்தெட்டுப் பேரை இயக்கம் செற் பண்ணி விட்டிருந்தினம். அவையளும் நல்லாக் கதைத்து இந்தியா கொண்டுபோய் விடுறம் எண்டு கதைச்சுப் பேசி காசு வாங்கிக் கொண்டு ஆக்களை பிடிச்சுக் குடுத்திடுவினம்.
இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் சரியான ஆளைப் பிடிச்சு இவனை இந்தியா அனுப்பும் மாபெரும் பொறுப்பை அஜித் ஏற்றான். இவன் தனியாக போக முடியாதென்றும் இரண்டொரு குடும்பங்களையும் செற் பண்ணும்படி அஜித் சொன்னான். இவனும் ஓடியாடித் திரிந்து செல்வராசன்ணையின் குடும்பத்தையும் லிங்கன்ணை குடும்பத்தையும் செற் பண்ணினான். இரண்டு குடும்பமும் ஆளுக்கு ஐந்து லட்சம் கட்ட வேணும்.
செல்வராசன்ணையின் இரண்டாவது பெட்டைக்கு இவனொரு ஹீரோ மாதிரி தெரிந்திருக்க வேணும். ஏனெனில், அப்ப ஒரு நாளில் இரண்டு தரம் அந்த வீட்டுக்கு போனான். எப்பிடி எப்பிடி போக வேணும், இயக்ககாரர் சந்தேகப்பட்டால் எப்பிடி எப்பிடி கதைக்க வேணும் எண்டது மாதிரியான நிறைய றெயினிங்குகளைப் பெட்டையளுக்குக் குடுத்தான். ஆகவே, இவனொரு ஹீரோ மாதிரி தெரிந்ததில் ஒரு பிழையும் சொல்ல ஏலாது. அவள் ஒரு ஹீரோயின் மாதிரி இவனுக்கும் தெரிந்தாள்.
அவளையும் அந்த குடும்பங்களையும் கிளிநொச்சியிலிருந்து வலு பத்திரமாக விடத்தல்தீவுக்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கு இவர்களை ஒரு பற்றைக்குள் ஒளிச்சு வைத்துவிட்டு, ஒரு படகுடன் வருவதாக சொல்லி அஜித் போனான். இவன் செல்வராசன்ணையின் பெட்டையுடன் மெல்லிய குரலில் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான். இந்தியா போனதும் வீட்டுக்குச் சொல்லி இருவரும் கலியாணம் செய்யலாமென அவள் சொன்னாள்.
அடுத்த நாள் விடிய இந்தியாவில நிற்கலாமென வெளிக்கிட்ட எல்லாரும் அடுத்த நாள் விடிய வள்ளிபுனத்தில் இருந்த இயக்கத்தின்ர ஜெயிலில நின்டினம். பிறகுதான் தெரியும், அஜித் இயக்கத்தின்ர புலனாய்வுத்துறைக் காரன் என.
இவனுக்கு ஒன்றும் கவலையில்லை, செல்வராசன்ணையின்ர பெட்டையை மிஸ் பண்ணினதுதான் கவலை.

                                                                                                                  0
இவன் தாய்காரியின் முகத்தை மனசுக்குள் வைத்துக் கொண்டு, வலு சோட் அன்ட் சுவீட்டாக ஒரு கடிதம் எழுதினான். அது பின்வருமாறு அமைந்திருந்தது.
அன்பும் பண்பும் பாசமம் நிறைந்த என்னைப் பெற்றெடுத்த தாயே!
என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் நலமே முக்கியம். நான் இப்போது மாத்தளனில் இருக்கிறன். இதுவும் பாதுகாப்பு வலயம் தான். ஆனால் ஒவ்வொரு நாளும் நிறையச் சனம் சாகுது. யாருக்கு எப்ப என்ன நடக்குமென்டது தெரியாது. ஆனால் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. எப்பிடியும் வந்திடுவன். உள்ளுக்கு வாறதுக்குத் தான் இப்பவும் ஒரு றூட் பார்த்துக் கொண்டிருக்கிறன். சரி வந்தால் விரைவில் சந்திக்கலாம்.
                                        இப்படிக்கு
                                     பாசமள்ள மகன்.
   அந்தத் ரைமில காயம்பட்ட ஆக்களை ஏத்திறதுக்கு கப்பல் வந்து போகும். காயம் பட்ட ஆக்களுடன் கொஞ்சம் சனமும் போவினம். இவனுக்கு தெரிந்த வயசாளி ஒருவரும் போறார். அவரிடம் கடிதத்தை கொடுத்தனுப்பினான். கடற்கரை மட்டும் போனான். சின்னச் சின்ன வள்ளங்களில் ஆட்களை ஏற்றி கப்ப்லுக்கு கொண்டு போவினம். கரையில நின்று பார்க்க இவனுக்கு கடும் யோசினை பிறந்தது. இந்த பாதுகாப்பு வலயத்துக்க இருக்க ஏலாது. இருந்தால் சாவுதான் எப்பிடியாவது வெளியில் போகவேணும். போறதென்டால் ஒன்றில் கப்பலில் போகவேணும். அதுக்கு ஒன்றில் மரணப் படுக்கையில் இருக்க வேணும். அல்லது இயக்க பெரியாக்களின்ர மனுசிமாராக இருக்க வேணும். இரண்டும் இல்லை. மற்றது இயக்கத்துக்குத் தெரியாமல் நீரேரிக்குள்ளால் நடந்து ஆமியிடம் போக வேணும். அதுவும் ஆபத்துத் தான். போற ஆட்களை இயக்கம் சுடுகுதெண்டு பிரிகேடியர் உதய நாணயக்காரவும் ஆமி சுடுதென்று தவபாலனும் மாறிமாறி சொல்லிக் கொண்டிருந்தினம்.  என்ன செய்யிறதெண்டு யோசித்தபடி மாத்தளன் ஆசுப்பத்திரிக்கு வந்தான். ஆசுபத்திரிக்கு முன்னால பெரிய வெட்டை. அதுக்குள்ள இயக்கக்காரர் பெரிய 'பண்ட்' அடிச்சு சனம் போகாதபடி சென்றி நிற்கினம். வெட்டை கழிய நீரேரி. ஒரு 300 மீற்றர், 400மீற்றர் அகலம் வரும். அது கழிய மறுகரையில ஆமி. இஞ்ச நின்று பார்க்க ஆமிப் பொயின்ற் தெரியுது. கண்ணுக்குத் தெரியும் அந்த இடத்தை அடையத் தான் இந்த வாழ்வா சாவா போராட்டம்.
நிரேரியைக் கடந்து ஆமியிடம் கொண்டுபோய் விடவும் நிறையப் பேர் இருந்தினம். ஐயாயிரம் பத்தாயிரம் என்று வாங்கிக் கொண்டு இயக்க பொயின்றக் கடக்க வழிகாட்டுவினம். இயக்கத்தை கடந்து நீரேரிக்குள் இறங்கினாலும் நேரே போக ஏலாது. அதுக்கும் றூட் இருந்தது. நேராக இருந்த ஆமி சனத்தை உள்ளுக்கு எடுக்க மாட்டான். மற்றது அந்தப் பாதையில ஷெல் விழுந்து நிறையப் பள்ளம் இருந்தது. மாத்தளன் ஆசுப்பத்திரியில இருந்து நீங்கள் ஆமியைப் பார்த்து நிரேரிக்குள் இறங்கி வலது பக்கம் நாற்பத்தைந்துபாகை திரும்பிப் பர்க்க வேணும். ஆமிக் காரர் வெள்ளைக் கூடாரம் ஒன்று அடிச்சிருப்பினம். அந்த ஸ்பொட்டிலதான் நீங்கள் ஏறவேணும்.
            இவன் நிறையப் பேருடன் கதைத்து உந்த றூட்டெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் நிரேரிக்குள் இறங்க ஒரு பயமிருந்தது. இதைவிட ஏதாவது மாற்றம் வரும் என்ற மாதிரி பாலண்ணையும் சொல்லியிருந்தார். அந்தாள் கனகாலமாக இயக்கத்தில் இருக்குது. பிறகு ஒரு வெற்றி வந்தால் நீங்கள் எல்லாம் தப்பி ஓடின துரோகிகள் தானே என்ற பழி வரலாற்று ஏடுகளில் பதியப் பட்டு விடலாம் என்ற மாதிரியும் யோசித்தான்.
அந்தக் காலத்தில் இவன் காலையில எழும்பினான் என்றால் முதல் இலங்கை நியூஸ் கேட்பான். அதில இயக்கம் செத்தது என்ற புள்ளி விபரம் ஒன்று போகும். பிறகு அப்பிடியே புலிகளின் குரலுக்கு மாத்துவான். தவபாலனும் அம்பத்தெட்டாவது டிவிசன் அழியும் நிலையில் உள்ளது என்றமாதிரியான புள்ளி விபரம் ஒன்றைத் தருவார். அதைக் கேட்டுக்கொண்டிருக்க ஷெல்லடி தொடங்கும். பிறகென்ன அந்தப் பிரச்சனையுடனும் சாப்பாட்டுப் பிரச்சனை பாக்கிறதோடயும் பொழுது இருளும். முதல் என்றால் இவன் தனியாள். போற இடத்தில சாப்பிட்டு படுத்து சமாளிச்சிடுவான். இப்ப இன்னொரு சீவன் இவனை நம்பியிருக்குது. சுமதியைச் சந்தித்ததைம் கல்யாணம் செய்தததையும் கடவுளின்ர செயல் என்றே நம்பினான்.
            இரண்டுமாதம் முதல் சுதந்திரபுரத்தில இவன் போய்க் கொண்டிருக்க திடீரென்று ஆமி ஷெல்லடிக்கத் தொடங்கினான். அடியென்றால் மரணஅடி. இவன் சைக்கிளைப் போட்டிட்டு தவண்டு தவண்டு போய் ஒரு வீட்டு பங்கருக்குள் இறங்க அது முழுக்க சனம். திரும்பி தவண்டு தவண்டு வீட்டுக்குப் பின்னுக்குப் போனான். மாமரம் ஒன்றுடன் இருந்த வைக்கற்போருக்கு பக்கத்தில் ஒரு பங்கர். சிவனே என்றபடி பாய்ந்தான். சினிமாப் படங்களில சில சீனுகள் வரும். கதாநாயகன் தெரியாமல் ஒரு இடத்தில நுழைய இதை எதிர்பாராத நாயகி வீலென அலறுவது மாதிரி. இந்த சீனுக்கு அடுத்த சீனிலயிருந்து இரண்டு பேரும் லவ் பண்ணத் தொடங்கிடுவினம். அப்பிடித் தான் இங்கும் நடந்தது. ஒரு பெட்டை மட்டும் உள்ளுக்கு பம்மிக் கொண்டிருக்குது. இவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு "பிளீஸ் அண்ணா.. என்னைத் தங்கச்சி மாதிரி நினையுங்கோ ப்ளீஸ் என்னைப் பிடிக்காதையுங்கோ" என்றாள். இவனுக்கு எல்லாம் விளங்கியது. அப்ப இயக்கத்துக்கு ஆட்களைப் பிடிக்கிற சீசன் என்பதால் இவள் அதுக்குப் பயந்து ஒளிந்திருந்தவள் இவன் தன்னை பிடிக்க வந்தவன் என்று நினைத்திட்டாள். இவன் தன்னைப் பற்றி விளங்கப்படுத்தி தான் அப்படிப்பட்டவனில்லை என்று நிறுவினான். அன்று கொஞ்சம் கூடநேரம் ஆமிக்காரனும் ஷெல்லடிச்சு விட்டான். எவ்வளவு நேரம் உள்ளுக்க இருந்ததெண்ட கணக்கு இவனிட்ட இருக்கயில்ல. ஷெல்லடிமுடிய அவளின்ர மடியில இருந்து எழும்பி வெளியில் வந்தான்.
அந்த ரண களத்துக்குள்ளும் இரண்டு நாள் அவளைக் கண்டு கதைச்சு தன்ர லவ்வை டெவலப் பண்ணினான். வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு என்ற மாதிரியான கவிதைகள் எழுதிய கடிதமும் குடுத்தான். உன்னை கண்கலங்க விடாமல் பத்திரமாகப் பார்ப்பன் என்ற புறமிசை இந்த இரண்டு நாளுக்குள்ளும் எண்பத்திமூன்று முறை கொடுத்தான். இதிலிருந்து அவன் கொண்டது தெய்வீகக் காதல் என்பதை புரிந்தவள் வீட்டுக்குச் சொன்னாள். பெட்டையை எப்ப இயக்கம் பிடிக்கும் என்று கலங்கிக் கொண்டிருந்ததுகள் அடுத்த நிமிடமே இரண்டு பேரையும் ஒரு பங்கருக்குள்ள இறக்கி வாசலை மூடிவிட்டுதுகள். அதுக்குப் பிறகு இண்டைவரை பங்கருக்குள்ளேயே இரண்டு பேரின் பொழுதும் கழிந்தன.
பலத்த யோசனையோடு இவன் வீட்டுக்குப் போய்ச் சேர சுமதி ஓடி வந்தாள். “இஞ்சாரப்பா. அண்ணா ஒராளைப் பிடிச்சிருக்கிறார். குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூபா.. எல்லாரும் போயினம். நாங்களும் போவம். இண்டைக்கு வெளிக்கிட வேணும்.”
மேற்கொண்டு கதைப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. சுமதியின் அண்ணன்தான் எல்லா ஏற்பாடும் செய்தான். அவர்களில் ஒருவனாக போவது மட்டும்தான் இவனின் வேலை.
நகைகளையும் காசையும் எடுத்துக் கொண்டு இவன், சுமதி, அவளின்ர குடும்பம், இன்னும் இரண்டொரு குடும்பம் தான் போற ஆட்கள். இருளத் தொடங்கவே எல்லாரும் மாத்தளன் ஆசுப்பத்திரிக்கு பக்கத்திலயிருக்கிற  தேத்தண்ணிக் கடைக்கு பின்னுக்குப் போயிருந்தினம். கூட்டிக் கொண்டு போறவன், இயக்கத்தின்ர லைனுக்கு போறதும் வாறதுமாக இருந்தான். ஒவ்வொரு முறை வரும் போதும் “கொஞ்சம் பொறுங்கோ. றூட் கொஞ்சம் இளகட்டும்.. சென்ரிக்கு நிக்கிற பொடியன் மாறட்டும்” என சொன்னபடி இருந்தான். இதுக்குள்ள தமயன்காரன் பெரிய பிளான் போட்டிருந்தான். தான் முதலாவதாக பண்ட் ஏறிக் கடந்து போய் நின்று தங்கட குடும்பக்காரரை ஒவ்வொருவராக பெயர் சொல்லிக் கூப்பிடுவாராம். ஓம் என்றபடி தன்னைக் கடந்து போய் நீரேரிக்க இறங்கட்டாம். இது ஏன் என்றாலாம் இருட்டுக்க ஆரும் விடுபடக் கூடாதாம். தண்ணி கடந்த மறுகரையில ஏறும்போதும் இதே நடைமுறைதானாம்.
நேரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தேத்ததண்ணிக் கடைகாரன் ரேடியோ மீற்றரை புலிகளின் குரலிலிருந்து பீ.பி.சிக்கு மாற்றினான். எங்கட பிரச்சனையைத்தான் அதில கதைச்சினம். இவன் சுமதியை சுரண்டிவிட்டு வலு ஆவலாகக் கேட்டான். முதல்நாள் ஷெல்லடிச்சு நிறையச் சனம் செத்தது பற்றித்தான் பீ.பீ.சீக்காரன் கதைச்சுக் கொண்டிருந்தான். ஆமிக்காரனிட்ட கேட்டான். அவையள் சொல்லிச்சினம் - தாங்கள் ஷெல்லடிக்கவில்லை. ஆனால் தங்கட ஆட்கள் சத்தத்தைக்கேட்டவைதான். அது புதுக்குடியிருப்புக்கு கிழக்குப் பக்கமாகக் கேட்டதாகவும். ஆகவே புலிகளே அடிச்சிருக்கவேணும் எண்டினம். பீ.பீ.சீக்காரரும் விடவில்லை. விடுத்து விடுத்துக் கேட்க கதைச்ச ஆமிக்காரர் கொஞ்சம் நழுவினார். பிறகு இயக்ககாரரோட கதைக்க றை பண்ணினம் கிடைக்கயில்ல என்றுவிட்டு மாத்தளன் ஆசுப்பத்திரி டொக்டர் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டினம். அந்தாள் அடிச்சுச் சொல்லுது. இல்லை. அந்தச் ஷெல்லுகள் மேற்கு, வடமேற்காலதான் (ஆமிப் பிரதேசம்) வந்தது என்று. என்னெண்டாலும் அந்தாளின்ர துணிவை மெச்சவேணும் என்று மனதுக்குள் நினைச்சுக் கொண்டிருக்க வழிகாட்டி வந்தான். எல்லாரும் வெளிக்கிட்டு சத்தம் போடாமல் எனக்குப் பின்னால ஓடிவா என்று விட்டு ஓடத் தொடங்கினான். ஒரு கையில சுமதியைப் பிடிச்சுக் கொண்டு குனிஞ்சபடி ஓடினான். இயக்கத்தின்ர |பண்ட்|டை ஏறிக் கடக்க வேணும். சுமதி கஸ்டப் பட்டாள். கல்யாணம் கட்டிய இரண்டு மாதத்தில் முதல் முதலாக அவளை தூக்கினான்.
அவளின்ர தமயன் பண்டுக்கு மற்றப் பக்கம் நின்று கீழ்குரலில அம்மா வந்தாச்சுதா.. தம்பி வந்தாச்சுதா… சுமதி வந்தாச்சுதா என்று இடாப்பு கூப்பிடத் தொடங்கினான். எல்லாரும் சரியெண்டதும் இவங்கட குடும்பகாரர் ஓடிப் போய் தண்ணீருக்குள் இறங்க சுமதி கிடங்கொண்றில் காலை விட்டு விழுந்தாள். அவளை தூக்கி தனக்கு முன்னுக்கு நடக்கவிட்டபடி இவன் நடக்க…
எங்கிருந்தென தெரியவில்லை. கிழக்கிலிருந்தா மேற்கிலிருந்தா, வானத்திலிருந்தா பூமியிலிருந்தா என்பது தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் எங்கோ தொலைவில் துப்பாக்கி ஒன்று ஒரு சுற்று சடசடத்து ஓய்ந்தது. அதன் ஒரு ரவை 7.62க்கு 52 mm அளவு கொண்ட சின்னி விரலளவு ரவை, இவன் நெஞ்சைத் துளைத்துப் போனது.
யாருக்கும் தெரியாமல் அந்த நீரேரிக்குள் இவன் இறங்கத் தொடங்கினான்..