Saturday, February 26, 2011

முள்ளிவாய்க்கால் கதைகள்.



ஈழத்தமிழர்களிடம் நிறையக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். காலம் தோறும் கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன தீராமல். சிலவேளைகளில் பெருகும் கதைகளே கதை சொல்லியைத் தின்றுவிடுவதுமுண்டு. அதனால் தானோ என்னவோ சொல்லப்படாக்கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கும் சமூகம் ஈழத்தமிழர்களுடையதாகியது.  இயல்பிலேயே தமக்குள்ளான இறுகிய மனோபாவமும், சொற்கள் சாவை அழைத்து வரக்கூடியதாய்த் தொடர்ந்து வரும் அரசியற் சூழலும் சொல்லப்படாக் கதைகளைச் சமைத்தபடியிருக்கின்றன ஈழத்தமிழ்ச் சமூகத்திடம். ஆயினும் அந்தச் சூழலே புதிய கதை சொல்லிகளையும் உருவாக்கியபடியிருக்கிறது. காலம் தோறும் புதிய புதிய கதைசொல்லிகள் துயர்மிகும் பாடல்களை எழுதிபடியே செல்கிறார்கள்.
யோ.கர்ணன் ஒரு அற்புதமான கதைசொல்லி. ஈழத்தமிழின் இயல்பான பேச்சுமொழியினூடு விரியும் இவரது கதைகளில் இளையோடிக்கொண்டிருக்கும் எள்ளல் துயர் மிகுந்தது. அவரது துயரங்கள் அனைத்தையும்,  கடக்கவியலா வாழ்வின் சுமைகள் அனைத்தையும் தனது எள்ளல் மிகும் தன் மொழியினூடே இறக்கி வைக்கிறார். ஆனாலும் யோ.கர்ணனது கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது ‘மெய்’ அவரது சொற்களில் இருக்கும் உண்மையே அவரது கதைகளின் ஆதாரம். அவலத்தை அனுபவிக்க நேர்ந்த ஒரு மனிதன், தன் சுயமான வார்த்தைகள் மூலமாகவே அதை  விவரிக்க நேர்கையில்  ஏற்படுகின்ற வார்த்தைகளின் உயிர்ச்சூட்டினை கர்ணணின் கதைகள் நெடுகிலும் நாம் உணரலாம்.
யோ.கர்ணணின் கதைகளைப் போலவே அக்கதைகளின் கதைநிகழ் காலமும், அது வெளிவருகின்ற காலப்பகுதியும் முக்கியமானது. முள்ளிவாய்க்கால் தீராத துயரையும் மனக்கசப்பையும் எம்மிடையே விட்டுச்சென்றிருக்கிறது. எல்லாத் தரப்புகளாலும் வஞ்சிக்கப்பட்ட சாதாரணிகள் இன்றளவும் அநாதரவாக விடப்பட்டிருக்கிறார்கள்.
இறுதிப்போரின் காலம் என்று வர்ணிக்கப்படுகிற காலம் குறித்து போர் நிலத்திற்கு வெளியில் இருந்து நிறையப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. ஊகங்களாலும் உன்னதங்களாலும் நிறைகிற அப்பேச்சுக்களின் நேர்மை மீது நிறையக் கேள்விகளுண்டு. ஆனால் இதுவரையிலும் போர்நிலத்தின் மனிதர்கள் தம் கதைகளைத் தாமே பேசும் அல்லது பதிவு செய்யும் திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். முதல்முறையாக யுத்தத்தின் மிச்சமாக, ஜீரணிக்க முடியாத அனுபவங்களோடு நம்மிடத்தில் வருகிறார்  யோ.கர்ணன் எனும் மனித சாட்சி.  போர்நிலத்தின் வெளியில் வசிக்கும் மாந்தர்கள் பேசிப்பேசி ஓயாத முள்ளிவாய்க்கால் துயரங்களைப் பேசுவதற்கு. அங்கே நிகழ்ந்த அனைத்தினதும் மிகப்பெரும் சாட்சியாக உயிர்பிழைத்து மீண்டு வந்திருக்கிறார்  கர்ணன்.  நம்மால் போர் நிலத்திற்கு வெளியில் யூகங்கள் கொண்டு பேசப்பட்டதொரு வாழ்க்கையை நேரில் அனுபவித்தவர் என்கிற வகையில் கர்ணனுடைய கதைகள் முக்கியம் பெறுகின்றன.
நமக்கு விரும்பமில்லாத ‘உண்மைகளைக் கூட கேட்கத் தயாரற்று நிராகரிக்கிற தமிழ்ச் சூழலே இன்றிருக்கிறது. உண்மைகள் கசப்பானவைதான். ஆனாலும் அவற்றைப்  பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. அவற்றைக் கடந்து போவதற்கும் அவற்றின் மீள்  நிகழ்தலைத் தடுக்கவுமாக நாம் உண்மைகளைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் அனுபவம் தொடர்பில் வெளிவருகின்ற முதல்தொகுதி இது. இது பெரும் புனிதங்களைத் தகர்க்கவும், ஜீரணிக்க முடியாத வலியை நம் மீது இறக்கவும் வல்ல உண்மைகளைச் சுமந்திருக்கிறது.  முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற மக்களில் ஒருவரான யோ.கர்ணனின் இந்தச் சாட்சியத்தை வெளியிடுவதை நாம் வாழும் நிகழ்காலத்திற்குச் செய்யும் கடமையாகவே உணர்கிறோம்.
இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கருணாகரனுக்கும். ஆலோசனைகள் வழங்கி மெய்ப்பு நோக்கியும் உதவிய நண்பர்   பாரதிதம்பிக்கும் எமது நன்றிகள்.
த.அகிலன்
வடலி  வெளியீடான யோ.கர்ணனின் ‘ தேவதைகளின் தீட்டுத்துணி ‘ சிறுகதைத் தொகுப்பிற்கான பதிப்புரை.

No comments:

Post a Comment