கதைகள்

பாவமன்னிப்பு
.1. வழிமாறிய ஆடுகளில் ஒன்று இதோ உங்கள் முன் வருகின்றது. தனது கூட்டத்தைவிட்டுப்பிரிந்த அந்த ஆட்டை நீங்கள் நிராகரிப்பீர்கள். எனதரும் குழந்தைகளே ….நிச்சயமாக…அதி நிச்சயமாக சொல்வேன்…வானமும் பூமியும் சாட்சியாக சொல்வேன்…ஆண்டவர்…எங்கள் ஆண்டவர் அப்படிச்செய்யமாட்டார். ‘வா குழந்தாய்’ என தன் மார்போடுஅணைத்துக்கொள்வார். ஏனெனில் ஆண்டவரின் இதயம் அளவில்லாத
மகிமையால் ஆனது. நீங்களும் உங்கள் இதயங்களை ஆண்டவரை நோக்கி….
2. எல்லாம் வல்ல ஆண்டவரேஇ உம்முடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! வல்லமையும இரக்கமுமுள்ள விண்ணுலக அதிபதியே இந்த ஏழையின் மன்றாட்டை ஏற்றருளும். எனது சகல சுகத்திலும் துக்கத்திலும் சேர்ந்திருந்து வழிநடத்தும்.முக்கியமாக இனிவரும் வசனங்களை இலங்கை புலனாய்வு குழுக்களினதோஇதீவிர தமிழ்த்தேசிய
அடிப்பொடிகளினதோ கண்களில் படாதவாறு பாதுகாத்தருளும்.ஆமென்
.3. கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தினுள் நான் நுழையும் போது காலை 6.47 நிமிடம். குhலைப்பூசை ஆரம்பித்திருந்தது. புhதிரி வெண்ணிற அங்கி குலுங்க பிரசங்கித்துக்கொண்டிருந்தான்.அவனது கண்களில் அமைதியும் தீட்சண்யமும் நிறைந்திருந்தது. முழந்தாளிட்டப் பிரார்த்தித்துக்கொண்டிருந்த அனைவரின் மீதும் பாதிரியின்
பார்வைபடர்ந்திருந்தது. நான் உள்ளே நுழைய என்னை பார்ப்பது மாதிரியுமிருந்தது. பார்க்காதது மாதிரியுமிருந்தது.         “இவ்வாறாக வழிமாறிய ஆடுகளை நீங்கள் உங்கள் கூட்டத்தினுள் சேர்த்துக்கொள்வீர்களாக.ஏனெனில் ஆண்டவரின் இராச்சியத்தில்….”             என நான தேவாலயத்தினுள் நுழையும் போது நடந்து கொண்டிருந்த வழிமாறிய ஆடுகள் பற்றி பாதிரி
பிரசங்கித்துக்கொண்டிருந்தான். நானும் ஒரு ஆட்டைப்போல பாவனை பண்ணி ஓரமாக ஒடுங்கி முழந்தாளிட்டேன். கண்களை மூடி இந்தக் கதையின் இரண்டாம் இலக்க பகுதியில் நீ படித்த வசனங்களைச் செபித்தேன்.        
                                    இன்னும் சஞ்சலமாகவேயிருந்தேன். மனதை நிலைகொள்ளச்செய்ய முடியவில்லை. தேவாலயத்தின் சூழ்நிலை ஓரளவுக்கு மனதை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எல்லாவற்றையும் விடஇ
பாதிரியின் சொற்களில் வசீகரம் நிரம்பியிருந்தது. வார்த்தைகளில் வசியம் குடியிருந்தது.           அப்பொழுது பாதிரிஇஉங்கள் தவறுகளை ஆண்டவரின் முன் வைத்து மன்றாடும்படி கேட்டான். நானும் சம்பவத்தை சுருக்கமாக பேச முயன்றேன்.           ‘மாட்டிட்டமடா    ஓடு..ஓடு’- இந்த இடத்தில் இடறியது. தலையை ஒரு முறை உதறிவிட்டு-கடந்த காலங்களை விசியெறிபவன் போல-மூச்சை நன்றாக
உள்ளிளுத்துக்கொண்டேன். மீண்டும் கண்ணை மூடி ஆரம்பித்தேன்.மீண்டும் அதே இடத்தில் உதறியது. மீண்டும் தலையுதறினேன். மூச்சிழுத்து விட்டேன். ஆரம்பித்தேன். இடறியது. மீண்டும்….            இவ்வாறாக நெடுநேரம் மன்னிப்புடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தேன். அந்தச்சம்பவத்தைக் கடப்பதற்கு நான் செய்த அத்தனை முயற்சிகளும் பலனற்றுப்போயின. ஞாபகங்களாலும் காலங்களினாலும் கடக்க
முடியாத ஒரு நினைவாக அது இருந்தது.             அது நடந்து ஒன்பதரை வருடங்கள் இருக்குமா? இருக்கலாம். அதன் பிறகு இவ்வளவு காலத்தையும் வெளிநாடொன்றில் கழித்து விட்டேன். அது நடந்த உடனேயே இங்கிருந்து வெளியேறிவிட்டேன். அந்நிய நாட்டின் இயந்திரமயமான நாள்ச்சுற்றுக்களினாலும் அந்த நினைவை அழிக்க முடியாமல் போய்விட்டது. அந்த அழகிய தேவாலயத்தினுள் ஞாபகம் ஒரு கொடிய
விலங்கினைப்போல என் முன்னே நின்றது.      
                               பலிபீடத்தின் வலது பக்கமள்ள இடத்தைப் பார்க்கிறேன். இப்பொழுது அவ்விடத்தில் யாருமில்லை. எனக்கு அந்த இடம் இப்பொழுதும் சரியாக நினைவிலுள்ளது. அவனைச்சந்தித்த நாளில் எனது காலடிகள் இருந்த இடத்தையும் அவனது காலடிகள் இருந்த இடத்தையும் என்னால் இப்பொழுதும் சரியாக சொல்ல முடியும். அவ்விடத்தில்தான் நான் அவனை முதன் முதலில்
சந்தித்தேன். இந்தத்தேவாலயத்தில் ஒன்பதரை வருடங்களின் முன்னொரு நாளில் அவனைச்சந்தித்தேன்.             செபமாலையைக் கையில் வைத்து உருட்டி உருட்டி செபம் சொல்லிக்கொண்டிருந்த போது எனது காதருகில் மிக மெதுவாக – “அருள் மிகப்பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றொரு குரல் கேட்டது. எனக்கு எல்லாமே ஏற்கனவே செல்லப்பட்டிருந்தது. இன்னும் சரியாக
சொல்லப்போனால்இ அவ்விடத்தில் மாலைப்பூசையின் போது உனது காதருகில் கிசுகிசுக்கப்படுமென்று  ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்தது. நான் அவ்விடத்தில் அந்த வசனத்துக்காகவே காத்திருந்தேன்.         “ஆண்டவரின் இதயம் எல்லையற்றது. உம்மையும் இரட்சிப்பாராக” என பதில் சொல்லப்படுமென ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்தது போலவே பதில் சொல்லப்பட்டது. இவ்வாறாக நான் அன்று
பதுவைப்பாதிரியாரான அர்ச்சிட்ட புனித அந்தோனியாரின் வல்லமையுள்ள காலடிகளில் யப்பானை கண்டடைந்தேன். யப்பான்…வழி தவறாத இடையனை பின்தொடர்ந்த ஆடு.
இவ்வாறுஇ     “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
4. இதிலென்ன வெட்கம் . வெட்கத்தை விட்டு உண்மையைச்சொல்வதென்றால்இ அதுவரை எனக்கு கொழும்பும் தெரியாது. செல்போனும் தெரியாது. இரண்டையும் ஒரே விதமான பரவசத்துடனேயே பார்த்தேன். அப்பொழுது செல்பொன் இலங்கைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகியிருக்கும். றெயினிங் முடிய தரப்பட்ட எஸ்.84 துவக்கைவிடவும் வலு கவனமாகவே எனக்கொரு செல்போன் தரப்பட்டது.          தங்கியிருந்த வீட்டில்
நான்தான் சமையல் செய்ய வெண்டும் என்றார்கள். எனக்கு சமையல் தெரியாது. உண்மையைச்சொன்னால்இ சாதரண தேனீர் வைப்பதென்றாலே விறுவிறுத்து விடுவேன். இதற்காகத்தான் றெயினிங் காம்புகளிலேயே சமையல் பழக்குகிறார்கள். நீ பழகவில்லையா என யப்பான் ஏறி விழுந்தான். அங்கெல்லாம் நான் சமைத்தது கிடையாது. தேங்காய் திருவுவதுஇ கத்தரிக்காய் வெட்டுவதுஇ மீன் வெட்டும் போது இலையான்
கலைப்பது போன்றது மாதிரியான வேலைகளுடன் நின்று விடுவேன்.இப்பொழுதுதான் பலனை அனுபவிக்கிறேன். ஆனால் யப்பான் விடுவதாக இல்லை. நான்தான் சமைக்க வேண்டுமென நிற்கிறான். இன்று காலையிலிருந்து அவன்தான் எனது புதிய வழிகாட்டி.         நான் கறாராகவே மறுத்துப் பேசினேன். நான் கொழும்பு வந்ததொன்றும் சமைக்கவல்ல. தேவையெனில் எனக்கொரு இலக்கைக்காட்டு. சக்கை நிரப்பிய வாகனத்துடன்
பாய்ந்து வெடிக்கிறன். இந்த சீவுற சிராய்க்கிற வேலையைக்காட்டாதே என சற்று உரக்கவே பேச ஆரம்பித்தேன்.          எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஆறு மாதம் அடிப்படை றெயினிங். ஆறு மாதம் புலனாய்வு றெயினிங்கென ஒரு வருசம் றெயினிங் எடுத்துப்போட்டு வாற எனக்கு படிப்பிக்கிறானோ இவன். “மரியாதையாக்கதையும்..நான் உம்மிட வேலைக்காரன் இல்லை.”          அவன் சிரித்தான்.எனக்க உச்சந்தலை
விறைத்தது. பிறகு சொன்னான் -“இப்பிடி நினைச்சுக்கொண்டு திரிஞ்சீரோ..இஞ்ச உம்மால ஒரு கல்லுக் கூட எறிய ஏலாது. என்னத்துக்கு அனுப்பப்பட்டீரோ அதை யோசிச்சுச் செய்யும்” என்றுவிட்டுப்போனவன்இ திரும்பி வந்து “ மேல் மாடியில இருக்கிற அறைக்குள்ள போயிரும்..மூன்று நேர சாப்பாடும் அங்க வரும்” என்று விட்டுப்பொனான்.     இப்படியாக வார்த்தைக்கு வார்த்தையென முதலாம் நாலாயிற்று.
5. எனக்கு இதற்கு முதல் மூன்று பேர் வழிகாட்டிகலாக இருந்துள்ளனர். அவர்கள் அவ்வளவு ஒன்றும் மோசமானவர்கள் அல்ல. எனது மனது நோகாமலேயே நடந்து கொண்டனர். அதிர்ந்து பேசியது கூட கிடையாது.             நான் இந்த நடவடிக்கைக்காக தயார் செய்யப்பட்ட நாட்களில் ஒரு வயோதிபர் எமது முகாமிற்கு வந்து போனார். எல்லாரும் அவரை அரையடி அப்பு என்று அழைத்தனர். நானும் அவ்வாறே அழைக்க
ஆரம்பித்தேன். அவர் அவ்வளவு குள்ளமானவர்.   ஒரு நாள் இருவரும் புறப்பட்டோம். அப்புவை மாதிரியே இடுப்பில் ஒரு பழைய சாரம். பெனியன். வாயில் வேப்பங்குச்சி. ஓரு பழைய சொட்கண். அப்பவின் மகனாம் நான். வவுனியா சேமமடு காட்டிற்குள் இறங்கினோம். எதிர்பாராத விதமாக ஆமியிடம் மாட்டினால் சொல்லஇ அப்புவை ‘அப்பா..அப்பா’ என மனப்பாடம் செய்து கொண்டு வந்தேன்.   அப்புதான் முன்னால் நடந்து
போய்க்கொண்டிருந்தார். ஏதேனும் சிறு அசைவுகள் தெரிந்தால்இ என்னை பாதுகாப்பாக பதுங்க வைத்து விட்டு முன்னே போனார். அந்தப்பழைய செட்கண்ணுடன். அதனால் சுட முடியுமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது.       அப்புவின் நடைக்கு ஈடு கொடுப்பது சிரமமாக இருந்தது. நான் பின் தங்கி விடுவேன். அப்போது அப்பு எனக்காக காத்திருந்தார்.        ஒரு முறை சொன்னார்- “கால் களைச்சால் இரு
தம்பி..கணக்க கஸ்ரப்படாத..இனி இனி எங்கெங்க போய் என்னென்ன செய்யப்போறியளோ..” என்றவர்இ சற்றத்தயங்கி-“பிழையாக நினைக்க மாட்டியள் என்டால் ஒன்டு கேப்பன்..”
“கேளுங்கோ பெரியவர்..”
“தம்பி கரும்புலியோ..”நான் சிரிச்சன். அப்புவும் சிரிச்சார்.
                                                                                                        0
                           வவுனியா கிராமமொன்றில வைச்சு என்னை தேவியக்கா பொறுப்பெடுத்தா. தேவியக்க நல்ல குண்டு. அவ்வளவு உடம்புக்குள்ளயும் செல்லம்தான் குடியிருந்தது. அடிக்கடி என்னைக் கொஞ்சுவா. எனக்கு அந்தரமாயிருக்கும். அவவின்ர பிடியிலயிருந்து தப்பவும் ஏலாது. ஜோன் சீனா போடுற லொக் மாதிரித்தான் அவவின்ர பிடி.                    என்னைமாதிரியே தனக்கும் இரண்டு பொடியள்
இருக்குதுகள் என்று அடிக்கடி சொல்லுவா. இப்ப வெளிநாட்டிலயாம். தேவியக்காவுக்கு என்னைப்பற்றி ஒன்டும் தெரியாது. தெரிஞ்சதெல்லாம் ‘கொம்பனிப்பொடியன்’ என்டதுதான்.                    தனக்கும் கொம்பனிக்காரரில நல்ல விருப்பம் என்டு சொல்லுவா. அந்த மனிசிதான் பிறகு “ச்சா…வாழுற வளருற வயசில…” என்டு முடிக்காமலும் விடுவா. தேவியக்கா நல்ல மனிசி. ஒரேயொரு கெட்ட குணம்தான்.
ஏமஞ்சாமம் பாராமல் எழும்பிக்கேக்கும் -    “ உங்கிட பெரியவரை எத்தனைதரம் கண்டனீர்..”
                                                                                                                                                                         0            
 தேவியக்காவோட  புத்தளம் போய் முஸ்லிமாக மாறினன். பாயிஸ் காக்கா வீட்டில நாலுநாள். அப்பதான் முதன்முதலில முஸ்லீம்களோட பழகுறன். அப்பதான் யோசிச்சன் முந்தி நடந்த யாழ்ப்பாண துன்பியல் சம்பவங்கள் நடக்காமல் விட்டிருக்கலாமென்டு. காக்கா என்னோட கணக்க கதைக்க மாட்டார்.
காக்காவின்ர பெட்டை நல்ல வாயாடி. இரண்டு பேரும் கரம்போர்ட் கூட விளையாடினம்.                காக்காவோட போய்த்தான் வேதக்காரனாக மாறி கொச்சிக்கடை அந்தோனியார் சேர்ச்சுக்குள்ள உள்ளட்டனான்.
6. விடிய நித்திரைப்பாயில யப்பான் என்னை அடிச்செழுப்பினான். என்ன ஏதென்டு பதறியடிச்சுக்கொண்டு எழம்பினன். ‘ உடனே வா..இன்னும் மூன்டு பேர் வந்து காத்துக்கொண்டு நிக்கிறாங்கள்’ என்டு என்ர கையைப்பிடிச்சிழுத்துக்கொண்டு ஓடினான். கையை உதறி எடுத்து ஜீன்சைப்போட்டுக்கொண்டு வெளியில போகஇ ஏற்கனவே வாகனத்தை ஸ்ராட் பண்ணி என்னை பார்த்துக்கொண்டிருந்தான்.  நான் ஏற வாகனம்
பறந்தது. எனக்கிப்ப மெல்ல மெல்ல யப்பானில நல்ல அபிப்பிராயம் வரத்தொடங்கியிருந்தது. கொழும்பில நின்று ஒரு பயமுமில்லாமல் என்ன திருக்கீஸ் விளையாட்டுக்காட்டுறான் என்டு யோசிச்சன். இப்ப அவனுக்கு உதவியாளன் மாதிரித்தான் போறன். என்ன பிரச்சினையென்டாலும் அவன்தான் தலைகுடுப்பான். நான் அவனை பெரிய ஆளாக பார்க்கத்தொடங்கஇ வாகனத்தை ஒரு வீட்டின் முன்னால் நிறுத்தினான்.
என்னை உள்ளே கூட்டிப்போய் உட்கார வைத்தான். ஒரு நடுத்தர வயதுக்காரி வந்தாள். “ ஆளுக்கு ரீ குடுங்கோ அன்ரி..” என்று விட்டு வெளியே ஓடிப்போனான். வாகனம் போகும் சத்தம் கேட்டது.                              நான் அங்கயிருக்கும் மட்டும் அந்த அன்ரி ஒரு வசனம் பேசயில்லை. கொஞ்ச நேரத்தில வாகனம் வந்திது. போய் ஏறினன். புதிசாக மூன்டு பொடியள் சிரிச்சுக்கொண்டிருக்கினம். ஆர்இ
எங்கயிருந்து வந்தவை ஒன்டும் தெரியேலை. யப்பான் ஒரு புன்சிரிப்புடன்  ஒரு பக்கமாக சாய்ந்து கூலாக ரைவிங் செய்யத்தொடங்கினான்.               இந்த மூன்டு பொடியளையும் சேர்த்தால்இ யப்பான் தவிர பதினொரு பேர். நான் அவனைச் சுரண்டி கீழ்க்குரலில “ பதினொரு பேர் இருக்கப்போறம்..ஆருக்கும் சந்தேகம் வராதோ..”யப்பான் சிரித்தான். “இன்னும் பத்துப் பேர் வருவினம்” என்டான்.      
இப்படியாக ஆடுகள் பட்டியை கண்டடையத் தொடங்க இரண்டாம் நாளாயிற்று.
7.            இயேசு தம் சாவை முன்னறிவித்தல்                  (மாற் 10:32-34 ; லூக் 18:31-34)  இயேசு எருசலேமை நோக்கி செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து “இப்பொழுது நாம் எருசலேமுக்கு செல்கிறோம். மானிட மகன் தலைமைக்குருக்களிடமும்இ மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்துஇ சாட்டையால்
அடித்துஇசிலுவையில் அறையும் படி பிற இனத்தாரிடம் ஒப்புவிப்பார்கள் என்றார்..
8. இருபத்தொரு பேர் கொண்ட தாக்குதல் அணி அந்த வீட்டின் அறைகளில் பதுங்கியிருந்தது.  அவர்கள் எங்கே தாக்குதல் நடத்தப்போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. யப்பானுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கொழும்பின் ஏதாவதொரு பகுதியில் நடக்கலாம். அவர்களது தேவைகளை நிறைவேற்றுபவனாக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். யப்பான் அனைத்தையும் ஒழுங்கு செய்பவனாக இருந்தான்.
தாக்குதலுக்கு புறப்படும் வரை அவர்களைப் பாதுகாப்பதுதான் அவனது வேலை. இதுவரை இருந்த வீட்டில் இருந்து நேற்றிரவு புதிய வீடொன்றிற்கு மாறியிருந்தோம். யப்பான்தான் ஒழுங்கு செய்திருந்தான். அப்பொழுது யாருக்கும் அவன் காரணம் சொல்லவில்லை. காரியமென்று வந்துவிட்டால் அவன் மிக இறுக்கமானவன். யாருடனும் சகஜமாகக் கூட உரையாட மாட்டான். காரியம் முடிந்த பின்தான் அனைத்தும்.
அனைவரையும் இடம்மாற்றிய பின் நானும் அவனும் வெறொரு இடம் சென்று தங்கினோம்.            அந்த வீட்டில் ஒரு இளம்பெண்ணும் தாயும் மட்டுமிருந்தனர். அவர்கள் யாரும் அவனுடன் பேசிக்கொள்ளவில்லை. என்னுடன் மிக அன்பாக இருந்தனர். இரவுச்சாப்பாட்டின் பின் தொலைபேசியில் உரையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்தேன். பேசி முடிந்தபின்பும் வெளியில் சற்று உலாவினேன்.       அப்பொது அந்த
இளம்பெண் வெளியில் வந்து கேட்டாள்-“ அண்ணை எனக்கொரு கெல்ப் பண்ணுவியளோ..”“ஓம்.. சொல்லுங்கோ..”“கட்டாயம்?..”“கட்டாயம்..’அவள் கீழ்க்குரலில கேட்டாள் -“அண்ணா..யப்பான் அண்ணா கரும்புலியோ..”எனக்கு தலைக்குள்ள ஏதோ வெடிச்சுது. இதெல்லாம் வெளியில கதைக்கிற விசயங்களில்லை. என்ர ஆறுமாத புலனாய்வு ரெயினிங்கிற்கு சோதனையாக ஒரு வாக்குறுதியை வாங்கிக்கொண்டு முன்னால நிக்கிறாள்.
எனக்கு தெரியுமோ தெரியாதோ அது வேற பிரச்சனை. ஆனால் செல்லக் கூடாது. உண்மையில் அவன் ஒரு கரும்புலியா முகவரா என்பது எனக்கும் தெரியாது.          நான் சிரிச்சன். எப்பிடியான சிரிப்பென்டதை சொல்லேலாமல் கிடக்குது. “ தங்கச்சி உண்மையைச்சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்.. உண்மையில எனக்கும் தெரியாதது”
        அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள். பிறகுஇ “ம்.. நீங்க சொல்லமாட்டீங்க.. சரி விடுங்க. நான் உங்கள கஸ்ரப்படுத்தல.. தான் அப்பிடியில்ல என்டு எனக்கு சொன்னவர். ஆனால் தன்ர வேலை எப்பவும் அதுமாதிரித்தான் இருக்குமாம்…” அவள் குரல் கமறியது. அந்த மெல்லிருளில் அவள் அழுகிறாளா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதிருந்ததது. பேச்சுச்சத்தத்தைக் கேட்டோ என்னவோ யப்பான்
வெளியில வந்தான். அவனைக்கண்டதும் அவள் உள்ளே போய் விட்டாள்.      யப்பான் எனது தோளில் கை போட்டான். வானத்தைப் பார்த்துக்கொண்டான். ஆழமான பெருமூச்சொன்று வந்தது. பிறகு –“ விளங்கிக் கொள்ளுறாள் இல்லையடா மச்சான்..” என்றொரு வசனம் சொன்னான். இது பற்றி என்ன கதைப்பதென்று எனக்கு தெரியவில்லை. பேசாமல் இருந்து விட்டேன்.    இரவு படுத்திருக்கும் போது எனது கையைப்பிடித்தான். எனது
பக்கம் திரும்பி “மச்சான் பயமாயிருக்குது” என்றான். எனக்கு ஒன்டும் விளங்கயில்லை.“என்னோட உதவியா நின்ட பொடியனொருத்தன் ஊஐனு யிட்ட மாட்டிட்டான். அதுதான் வீடு மாத்தின்னான். இருபத்தொரு பொடியள் என்னை நம்பி நிக்கிறாங்கள். அவங்கள் போகுமட்டுமென்டாலும் பிரச்சனையில்லாமல் இருந்தால் காணும்..”“……..”“அவன் பிடிபட்ட உடனே அவனைக் கொண்டு எனக்கு ரெலிபொன் எடுத்தாங்கள்.
பொடியன் என்னோட நல்ல மாதிரிக்கதைச்சான். எனக்கு பிடிபட்டது தெரியாது. என்னை ரெண்டாம் குறுக்கு தெருவுக்கு வரச்சொல்லிச்சொன்னான். நானும் நம்பிற்றன். ..கடைசியில முடிக்கேக்கதான் பொடியன் கத்தினான்…அண்ணை வராதேங்கோ நான் பிடிபட்டிட்டன் என்டு…அவ்வளவுதான். ஒரு வெடிச்சத்தம்கேட்டுது. ..”              இப்படியாகஇகாதலும் அச்சமும் நிரம்பி மூன்றாம் நாளும் இன்னும் சில
நாட்களுமாயின.
9. பாதிரி தனது பிரசங்கத்தை முடித்து விட்டு கூட்டத்தை ஒரு முறை சுற்றிப்பார்த்தான். தேவாலயத்தின் அமைதி இதமாயிருந்தது. பாதிரி படிகளிலிருந்து கீழே இறங்கி வந்து அப்பம் கொடுக்கத் தொடங்கினான். சனங்கள் வரிசையில் போயினர்.                  நான்; கடக்க முடியாமல் இன்னும் அந்த இடத்திலேயே நின்றேன். எனது அத்தனை பிரயத்தனங்களும் தோல்வியடைந்ததன் பின்னர்இ நிதிமன்றத்தில்
குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதியொருவனைப்போல அந்தத் தேவாலயத்தில் நின்றேன். அவமானமும் குற்ற உணர்வும் மேலிட்டது.            வரிசையின் இறுதியில் போய் அப்பம் வாங்கி ஆமென் சொல்லி ஒரு மூலையில் உட்கார்ந்தேன். பாவமன்னிப்புக் கேட்பவர்கள் ஒவ்வொருவராக பாதிரியிடம் போனார்கள். ஞாபகங்களினால் அதுவரை கடக்க முடியாமலிருக்கும் அந்த சம்பவத்தை பாவமன்னிப்புக் கேட்கும்
சமயத்திலாவது கடக்க உதவிபுரியுமாறு இறைவனை மன்றாட ஆரம்பித்தேன்.            நேரம் செல்லச்செல்ல தேவாலயம் வெறுமையாகத் தொடங்கியது. பாதிரிக்கருகில் ஒன்றிரண்டு பேர் மாத்திரமே நின்றனர். அவ்விடத்தில் போய் கண்ணை மூடி உட்கார்ந்தேன்.            யப்பான் என்னருகே வந்து “ அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருப்பாராக” என்றான். பதிலுக்கு  “ஆண்டவரின் கருணை
எல்லையற்றது..உம்மையும் இரட்சிப்பாராக..” என்றேன். தனது இடது கையினால் எனது வலது கையை இறுகப்பிடித்தான். அவனது கை குளிர்ந்தது. எனக்கு உச்சந்தலை சில்லிட்டது. அவனது கை குளிர்ந்ததினால் அல்ல. கொழும்பில் உயிரைப்பணயம் வைத்து செய்யும் காரியமொன்றை அந்தச் சந்திப்புடன் ஆரம்பிக்கிறேன் என்பதால். நான் அவனைப்பார்த்தேன். யப்பான் மிகவும் ஸ்ரைலான ஆம்பிளையாக இருந்தான்.
கண்களால் சிரித்தான். நான் பற்களைகாட்டினேன். என்னை இழுத்துக்கொண்டு மெதுமெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்கினான். அவன் வெளியில் செல்ல முயல்கிறான் என்பதை ஊகித்தேன். கையை இழுத்து எனது ஆட்சேபணையை தெரிவிக்க முயன்றேன். இன்னும் பலமாக இழுத்துக்கொண்டு வெளியேறினான். தேவாலயத்தின் வெளியில் கேட்டான்-“உம்மை என்னென்டு கூப்பிடுறது..”எனக்கு என்ன பேசுவதென்று
தெரியவில்லை.“ஐடென்டிகாட்டில என்ன பேர் இருக்குது…”“ பாலசுப்பிரமணியம் மயூரன்” என்றேன்.“ம்…சோட்டாக மைனா என்டு கூப்பிடுறன். என்ர பேர் ராஜேஸ்வரன்..எல்லாரும் யப்பான் என்டுவினம். இனி நீர் என்ர கடையில வேலைசெய்யிற ஆள்…அவ்வளவுதான்..சரியா..”              ஆரம்பத்தில் யப்பானின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதும்இ சுழட்டியெறியிறதுமாக
என்னை உண்மையிலயே ஒரு வேலைக்காரனாகத்தான் நினைக்கிறானோ என்றும் யோசிச்சதுண்டு. ஆனால் நாள் போகபோக யப்பானை விளங்கிச்சுது. என்னை என்றில்லை. தன்னை நம்பி ஆர் வந்தாலும் அவையளுக்காக தன்ர உயிரையும் குடுப்பான்.               பாதிரி என்னைக் கூப்பிட்டான். நான் மிக மெதுவாக நடந்து போனேன். இந்த அவகாசத்தில் என்னைத்தயார்படுத்திக்கொள்ள முயன்றேன்.
சம்பவங்களைக்கோர்வையாக்கினேன். அனைத்தையும் பாதிரியிடம் சொல்லலாமா விடலாமா என்று கூட குழப்பமாக இருந்தது. உறுதியான தீர்மானமொன்றுக்கு வர முடியாதவனாக பாதிரியின் முன் மண்டியிட்டேன். கண்களை இறுக மூடினேன். என்னைக்கட்டுப்படுத்தும் அனைத்திலிருந்தும் விடுபட்டேன். வார்த்தைகள்…ஆதியிலிருந்த வார்த்தைகள்…இரத்தமும் சதையுமான வார்த்தைகள்…என்னிலிருந்து வரத்
தொடங்கின. என் கடந்த காலங்கள்…பாவங்களாலும் பழிகளினாலும் நிறைந்த  வாழ்க்கைஇ வார்த்தைகளாக…துண்டு துண்டு வார்த்தைகளாக உடைந்து உடைந்து வீழ்ந்து கொண்டிருந்தது. காலங்கள் வார்த்தைகளில் உறைந்து போயிருந்தன. இந்தக் கதையின் ஆரம்பப் பகுதிகளில் நான் உனக்கு சொன்ன வசனங்கள் பாதிரியின் முன்பாக அடுக்கப்பட்டிருந்தன. பாதிரி அவற்றை வெறித்துப்பார்த்தபடியிருந்தான்.
அவனது முகம் சலனங்களிற்கு அப்பாற்பட்டிருந்தது.      இப்படியாக மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் மனம்திரும்பி கூட்டத்தை வந்தடையும் என சொல்லப்பட்டது நிறைவேறவே இது நடந்தது.
10. நான் நிலத்தில் வீழ்ந்திருந்த கண்ணீர்த்துளிகளை வெறித்துப் பார்த்தபடியிருந்தேன். பாதிரி இறுகிய முகத்துடனிருந்தான். நான் நிமிர்ந்து பாதிரியின் முகத்தைப்பார்த்தேன். எனது கண்களைச்சந்திக்காமல் பாதிரி கூரையைப்பார்த்தான். பாதிரியிடம் வார்த்தைகளிருக்கவில்லையென நினைக்கிறேன். கைகளைப்பிசைந்தான். பிறகுஇ ஆழமாக பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஒரு
குகைக்குள்ளிருந்து வருவது போலஇ மெதுவாக திறந்த பாதிரியின் வாய்க்குள்ளிருந்து வார்த்தைகள் வெளிவந்தன-      “ஸ்…ஸ்…ஆண்டவரே…”        இந்தக்கணத்தில் நான் யாருக்கும் அஞ்சவில்லை. பாவமன்னிப்புக்காக அல்லாமல் வாக்குமூலமாகக் கூட சொல்லத்தயாராக இருந்தேன். நாலாம்மாடியென்ன நாற்பதாம் மாடிக்குக்கூட போக தயாராக இருந்தேன். ஆனால் பாதிரி….அவனது கண்களில் கலவரத்தைக்
கண்டேன்.   “ஆண்டவரே..இந்த இளைஞனின் மீது உமது இரக்கத்தின் பார்வை இருக்கட்டும்..ம்..பிறகு”       இதன் பிறகு இரண்டொரு நாட்கள் எல்லாம் அமைதியாகவே இருந்தது. யப்பான் அவ்வளவாக வெளியில் திரியாமலிருந்தான். அறிமுகமான இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புக்களிற்கு மட்டுமே பதிலளித்தான். அவனது நோக்கமெல்லாம் தன்னிடமிருந்த இருபத்திரண்டுபேரையும்-என்னையும் சேர்த்து-
அவர்கள் புறப்படும்வரை பாதுகாக்க வேண்டுமென்பதே. இது பற்றித்தான் அடிக்கடி என்னிடம் பேசிக்கொண்டிருந்தான்.        அவர்கள் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள்த்தான் இருந்தது. அவர்களிற்கான ஆயுதங்களையும் யப்பான்தான் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான். ஒரு மந்திரவாதிக்குரிய நுட்பத்துடனும் லாவகத்துடனும் காரியமாற்றிக்கொண்டிருந்தான். எங்கேஇ யார் மூலம் அவற்றை
பெறுகிறான் என்பது புரியாமலிருந்தது.      நான் நினைக்கிறேன் பாதர்…ஏற்கனவே கைது செய்யப்பட்டவன் வழங்கிய தகவலின் பேரிலோ என்னவோ கொழும்பின் புறநகர்ப்பகுதியிலிருந்த இம்தியாஸ் என்பவர் இரகசியமாக கடத்தப்பட்டிருக்க வேண்டும். எங்களிற்கு அது தெரியாது. மறுநாள் இம்தியாசின் மூலமாக எங்களிற்கு கொஞ்சம் ஆயுதங்கள் வரவேண்டியிருந்தது. அவற்றை  எப்படி பெறுவதென்பது
குறித்து யப்பான் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.      எனக்கு நன்றாக நினைவிலுள்ளது பாதர். அன்று இரவு இம்தியாசின் தொலைபேசியிலிருந்து யப்பானிற்கு அழைப்பு வந்தது. எனக்கு பக்கத்திலிருந்துதான் கதைத்தான். இம்தியாஸ் வெகு இயல்பாக கதைத்திருக்க வேண்டும். ஏனெனில் யப்பான் எப்போதும் அவதானமாகவேயிருப்பவன்.       அடுத்த நாள் பின்னேரம் கொழும்பின் ஒரு இடத்தில்
வைத்து வாகனத்துடன் ஆயுதங்களை மாற்றுவது என்று பேசப்பட்டது. இரவு படுக்கும் போது சொன்னான்- “இதுதான் கடைசி சாமான்…இத எடுத்துக் குடுத்தால் சரி…”            அடுத்த நாள் பின்னேரம். தன்னுடன் வருமாறு என்னையும் கூப்பிட்டான். இதுமாதிரியான அலுவல் எனக்கு இதுதான் முதல் தரம். யப்பான் ஒரு பிஸ்டலை தந்துஇ என்னைக்கட்டிக்கொள்ளச்சொன்னான். வாகனத்திற்கு அருகில் என்னை
வரவேண்டாம் எனவும் சற்றுத் தொலைவிலேயே நிற்கும்படியும் சொன்னான்.      இரண்டு பேரும் ஒரு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். குறிப்பிட்ட இடத்திற்கு சற்று முன்னாகவே இறங்கிக்கொண்டோம். யப்பான் வலு நிதானமாக இருந்தான். நான் மெதுவாக கேட்டேன் -“ பிஸ்டல் பாவிக்கவேண்டி வருமோ..”“ச்சீ..சீ..”“பாவிக்க வேண்டி வந்தால்..”“ என் உனக்கு சுடத்தெரியாதோ…”       மூன்று
மாடிக்கட்டடம் ஒன்று தெரிந்தது. அதுதான் சந்திக்கவேண்டிய இடமென்றும்இ தான் முன்னே போவதாகவும் தன்னுடன் சம்மந்தப்படாதவன் போல என்னை சற்றுப்பின்னால் வரும்படியும் சொன்னான். நான் கொஞ்சம் நிதானித்து அவனை முன்னால் போகவிட்டேன். இருவரிடையேயும் ஐம்பது மீற்றர் இடைவெளியிருந்தது.       அந்தக்கணங்கள் இப்போதும் என் மனதிலுள்ளன பாதர். அது ஒரு மழை நாள் பாதர். நிலம் ஈரமாக
இருந்தது. தார்ச்சாலை பளபளத்தது. மெதுவான குளிராக இருந்தது. மனிதர்கள் உற்சாகமாயிருந்தனர். ஆழகிய பெண்ணொருத்தி கூட அவ்வழியே போனாள் பாதர். நான் யப்பானது காலடிகளை எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் கவனித்தேன் வீதியோரமாக ஒரு வாகனம் நின்றது. அதனுள்ளிருந்து ஒருவன் கை காட்டுகிறான். யப்பானும் கைகாட்டுகிறான். அப்பொழுது அவனது தலையில் சில மழைத்துளிகள்
விழுந்திருக்க வேண்டும். அசைத்த கையினால் தலையைத்தட்டி விடுகிறான்.      இப்பொழுது நான் தலையைக்கவிழ்ந்தபடியிருக்கிறேன். பாதிரி சில பெருமூச்சுக்களை விட்டபடியிருக்கிறான். இத்துடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். பாதிரி எனக்காக மன்றாடினானெனில் இந்தக் கதையை கைவிட்டு விடலாம் என நினைக்கிறேன். “ம்…ஆண்டவரின் அனுக்கிரகம் எப்போதும் உன்னோடிருக்கட்டும்
இளைஞனே….பிறகு..”“பிறகு எதுவும் நடக்கவில்லை பாதர்..”“ என்ன அவ்வளவுதானா..உனது நண்பன் என்ன ஆனான்…”“தெரியாது..”“இளைஞனே அந்தக்கணத்தில் என்ன நடந்தது..?”              வாகனத்தின் கதவுகளை திறந்து கொண்டு யப்பான் ஏற முயலஇ சிலர் உள்ளேயிருந்து அவனைப்பிடித்திழுத்தனர். அவன் திமிறி வெளியில் விழுந்தான். “டேய் மாட்டிட்டமடா…ஓடு..ஓடு..” என்றபடி ஓடத்தொடங்கினான். வீதியின் வலது
பக்கமிருந்த ஒடுங்கிய சந்துக்குள் ஓடினான். வாகனத்துக்குள்ளிருந்த மூவர் அவனைத்துரத்திக்கொண்டு சென்றனர்.   எனக்கு கால்கள் நடுங்கத்தொடங்கின. வீதியின் இடது பக்கமிருந்த சிறு வீதிக்குள் இறங்கினேன். அடுத்த வீதியில் ஏறினேன். அதிலிருந்து பிரிந்த சிறுவீதியால்போய் இன்னொரு முச்சந்தியை அடைந்து அங்கிருந்த கட்டணக்கழிப்பிடத்தினுள் நுழைந்து பிஸ்டலை அதனுள்
கழற்றிப்போட்டேன். அதுவரை தொடர்பு கொள்ளாமலிருந்த கொழும்பு மாமாவை தொடர்புகொண்டு மறுநாள் நீர்கொழும்பிலிருந்து மீனவர்களின் உதவியுடன் இந்தியா போய்ச்சேர்ந்தேன். “அந்த ஆபத்திலும் எனது நண்பனுக்கு உதவாமல் போன குற்றம் என் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது..எனக்காக மன்றாடுங்கள் பாதர்..”“ஓம்..ஓம் .அதுசரி. உனது நண்பனின் கதி என்ன?..”“எனக்கு தெரியாது
பாதர்..”“உண்மையாகவே சொல்லுகிறாயா..உனக்கு தெரியாதா..”“மிக மிக உண்மையாக பாதர்..நான் இங்கிருந்து வெளியேறும் வரை எனக்கு எதுவும் தெரியாது பாதர்..”“ஓ…ஓ.. பரிசுத்த ஆவியானவர் உங்கள் பாவங்களை மன்னித்தருள்வாராக..” என்று பாதிரி பிரசங்கிக்கத்தொடங்க கண்களை மூடினேன்.    பாதிரி தனது கையை என் தலையில் வைத்து ஆசீர்வதித்தான். மனச்சஞ்சலங்களற்று சென்றுவா என்றான். நான் எழுந்து
நடக்க தொடங்க-“மகனே...உனது நண்பன் எந்தப்பாதாளச்சிறைக்குள்ளிருந்தாலும் மீண்டு வர எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரியட்டும்..” என்றான்.“பாதர் அது முடியாது…ஏனெனில் அவன் ஏற்கனவே இறந்து விட்டான்.”பாதிரி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தான். “பாதர்.. இங்கிருந்து நான் தப்பி வெளிநாட்டில் இருந்த போது யப்பான் தற்கொலை செய்து கொண்டதாக நண்பனொருவன் குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தான். அந்த நண்பன் யப்பான் தப்பி ஓடிய சந்தக்குள் இருந்த தொழிற்சாலையில்தான் வேலைசெய்து கொண்டிருந்தான். அந்தச்சந்து அவனது தொழிற்கூடத்திற்குத்தான் செல்கிறதாம். வேறெங்கும் செல்ல முடியாதாம்..”“உனது நண்பன் எப்படி மரணித்தான்?..”“அந்தக்குறுஞ்செய்தியில் நேராக எங்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து தற்கொலை செய்தான் என்றுமட்டுமேயிருந்தது.
நேற்றுத்தான் அவ்விடத்திற்கு நேரே சென்று பார்த்துக் கொண்டேன்..”“…….”“அது மிக கொடுமையானது பாதர்…”“…….”“அது ஒரு பேக்கரி பாதர்...நான் அதனுள் நுழைய ஒரு ஆள் நுழையக்கூடியளவு வாயிலுடன் பெரிய போறணை அனலைக்கக்கிக்கொண்டிருந்தது பாதர்…”                                                0