Saturday, February 26, 2011

றூட்


வன் அப்ப சின்னப் பொடியன். முக்கால் சைக்கிள் ஒன்றில பள்ளிக்கூடம், ரியூசன் போய் வந்து கொண்டிருந்தான். கூடப் படிச்ச தர்சினியில கொஞ்சம் விருப்பமிருந்தது. பள்ளிக்கூடம் போனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
அந்த நேரம் சாமான் எல்லாம் ஆனை விலை குதிரை விலை. அரசாங்கம் கன சாமானுக்கு தடை போட்டிருந்தது. பற்றி, சோப் கண்ணுக்குத் தெரியாது. இவன் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டான் என்றால் அப்பு வளர்க்கிற மாடு மூசி மூசி மோப்பம் பிடிச்சுவந்து நக்கும்.. சோப் தட்டுப்பாடென்பதால பனங்காயிலதான் அப்ப உடுப்புத் தோய்க்கிறது. கலியாணவீடு, திருவிழாக்களுக்கு போடுறதெண்டு ஆசை ஆசையாக ஒரு நல்ல மஞ்சள் சேட் வைத்திருந்தான். ஒருநாள் தோய்த்துக் காயப் போட அதை மாடு சப்பிப் போட்டுது. அந்த சேட்டில்லாமல் போனது இவனுக்கு சரியான கவலை. அதுக்குப் பிறகு அப்பு மாட்டை அவிட்டு விடுறதில்லை.
அந்த ரைமிலதான் இவன்ற தகப்பன் வவுனியா வியாபாரம் செய்யத் தொடங்கினார். யாழ்ப்பாண மைப் தெரிந்தவைக்கு யாழ்ப்பாணத்தை விட்டு போறதெண்டால் ஆனையிறவை விட்டால் வேற தரைப் பாதை இல்லையெண்டது தெரியும். அந்த ஸ்பொட்டில ஆமிக்காரர் காம்ப் அடிச்சினம். அதோட பாதை கட். சாமான் சக்கட்டு ஒண்டும் கொண்டு போகேலாது.
தமிழன்ர மூளை சும்மா இருக்குமோ? சோப் இல்லையெண்டதும் பனங்காயை யூஸ் பண்ணினவன் புது றூட் ஒன்று கண்டு பிடிச்சான். சனம் எல்லாம் முழங்காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு தண்ணிக்குள்ளால ஆமிக்குத் தெரியாமல் போய் சாமான் கட்டிவரத் தொடங்கிச்சுதுகள். கொம்படி, ஊரியான், கிளாலி எண்ட பேரெல்லாம் எல்லாருக்கும் இன்ரடியுஸ் ஆனது. இவன்ர தகப்பன்காரனும் இந்தப் பாதையளெல்லாம் பாவிச்சார். கொம்படியால வந்த சாமானிலதான் இவன் முதல்முதலாக போட்ட சான்ரில்ஸ்சும் சஸ்பென்ரரும் வந்தன. இரண்டையும் வலு புதினமாகவும் ஆவலாகவும் போட்டுக் கொண்டு திரிந்தான்.
ஆமிக்காரரும் விடாயினம். இடைக்கிடை அருட்டுவினம். கொம்படி, ஊரியானில ஷெல்லடி. இத்தனைபேர் உடல் சிதறிப் பலி. கிளாலியில கடற்படை வெறியாட்டம். இத்தனை பேர் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை. என்றமாதியான கெட் நியூசோட அடிக்கடி உதயனும் ஈழநாதமும் வரும். அப்ப யாழ்ப்பாணத்தில இந்த இரண்டு பேப்பரும் தான் பேமஸ்.
தகப்பன்காரனுக்கு இவனில நல்ல பட்சம். வீட்டில இருக்கிற நாளில முற்றத்தில தகப்பனிருக்க இவன் மடியில படுத்திருப்பான். இவன்ர தலையைத் தடவி விட்டபடி பயணக் கதைகள் சொல்லுவார். ஆமி வெளிச்சம் அடிச்சுப் பார்க்க தண்ணீருக்குள் ஒளிந்தது, கிளாலியில நேவி துரத்த வலிச்சுத் தப்பி ஓடி வந்தது என்ற கணக்காக நிறையக் கதைகள் சொல்லுவார். அந்த நேரம் பக்கத்து வீடுகளில படம் போட்டால் இவன் முன்னுக்குப் படுத்திருப்பான். ஏற்கனவே தமயன்காரனிட்ட சொல்லியும் வைத்திருப்பான் – சண்டைக் கட்டம் வந்தால் எழுப்பு என. அப்பிடிப் பார்த்த நிறையச் சண்டைக் கட்டம் ஞாபகம் வைத்திருந்தான். இவனுக்கு விஜயகாந் என்றால் ஒரு பிரியம். அந்தாளின்ர அக்சனுகளில ஒரு திறிலிங்கைக் கண்டான். தகப்பன்ர கட்டங்களையும் அதுகளையும் அடிக்கடி யொயின்ற் பண்ணிப் பார்ப்பான். தகப்பன்காரனும் ஒரு விஜயகாந் மாதிரித்தான் இவனுக்குப் பட்டார்.
வீடும் பள்ளிக்கூடமுமாக இருந்த பொடியன் தகப்பன்காரனோட கதைச்சுக் கதைச்சு உந்த றூட்டுகளையெல்லாம் விரல்நுனியில வைத்திருந்தான். கொம்படியில எதால இறங்கி ஊரியானில எப்படி மிதக்கிறதெண்டதையும் கேடியின்ர றூட்டைப் பற்றியும் இவன் விலாவாரியாகச் சொல்ல எல்லாப் பொடியளும் வாய்மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த உற்சாக மிகுதியிலோ என்னவோ ஒருநாள் சொல்லிவிட்டான் - எங்கட அப்பா போற வோட் கிளாலியில வேகமாக ஓடி பிறேக் அடிக்க, புழுதி கிளப்பி மற்றப் பக்கம் திரும்பி நிற்குமென. இவன் சொன்ன எல்லாத்தயும் நம்பின பொடியள் இதை மட்டும் நம்ப மாட்டன் எண்டிட்டுதுகள்.
இவன்ர பள்ளிக்கூடத்தில விளையாட்டுப் போட்டி வந்திட்டுது. ஓட்டப் போட்டியென்றதும் கன பொடியள் முள்ளுச் சப்பாத்து வாங்கிச்சுதுகள் இவனுக்கும் இதில ஆசை. தகப்பனிட்ட எப்பிடி கேக்கிறதென்ற பயத்தில இருந்தான். அன்றிரவு தகப்பன் இவனைக் கூப்பிட்டு மடியில கிடத்தினார். இதுதான் ரைம் என்று பவ்வியமாகக் கேட்டான். தகப்பனும் நாளைக்குப் போய் வரும் போது வாங்கி வருவதாக சொன்னார். இவனுக்கு பிடிபடேல. அடுத்த நாள் வகுப்பு முழுக்க இவன் போடப் போகும் முள்ளுச் சப்பாத்துப் பற்றி கதைக்க வைத்தான். கடவுளே என்று அது வெள்ளையும் சிவப்பும் கலந்த கலரில இருக்கவேண்டும் என வேண்டினான்.
அன்று பின்னேரம் வீட்டுக்கு வர வாசலிலேயே கூட்டம். ஒரு பரபரப்புடன் உள்ளுக்குப்போக அம்மா தரையில உருண்டு ஒப்பாரி வைக்கிறா. இவனுக்கு எல்லாம் விளங்கிட்டுது. “ஐயோ அப்பா “என்று கத்திக்கொண்டு உள்ளுக்கு ஓடினான்.
அடுத்த நாள் உதயனும் ஈழநாதமும் இவன்ர வீட்டில எடுத்தினம். கிளாலியில போனவையை நேவி வெட்டினது என்ற தலைப்பு இரண்டிலயும் இருந்தது. ஒன்றில இருபத்தைந்து பேர் எண்டும் ஒன்றில இருபத்தெட்டுப் பேரெண்டும் இருந்தது.
கடைசிவரை இவன்ர தகப்பன்காரனின்ர உடலை யாரும் காணவேயில்லை.


                                                                                                  0
இவன் இயக்கத்துக்கு வந்து ஒரு வருசமாகுது. ஆள் முல்லைத்தீவு அடிபாட்டுக்கெல்லாம் போய் சின்னனாக ஒரு காயமும் பட்டு வந்து நிக்கிறான். இவன் இருந்த காம்புக்குப் பக்கத்தில இருந்த அன்ரியை சோஸ் பிடித்துவிட்டான். அன்ரிக்கு இரண்டு குமர்ப் பெட்டையள் வேற. பெட்டையள் இருக்கிற ரைமில இவன் போனால் தான்தான் முல்லைத்தீவு அற்ராக்குக்கு முழுக் கொமாண்ட் பண்ணின ஆள் மாதிரிக் கதைப்பான். அதுகளும் வாசல் துணியைப் பிடித்துக் கொண்டு நின்று கேக்குங்கள்.
இப்பிடி அன்ரியை சோஸ் பிடிச்சு அன்ரியின்ர விலாசத்துக்கு வீட்டயிருந்து கடிதம்போட வைச்சான்.
ஒருநாள் தமயனிட்டயிருந்து ஒரு கடிதம் வந்தது. கண்ணீரும் கம்பலையுமாக வந்த அந்த கடிதத்தின் சுருக்கம் வெளிநாடு போவதற்காக தான்படும் இன்னல்களை விபரித்ததாக அமைந்திருந்தது.
வெறும் போஸ்டல் ஐடென்ரிக்காட்டுடன் இருந்த பொடியனை கப்பலில கொண்டுபோய் கொழும்பிலை ஒரு ஆமிபொலிசிட்ட மாட்டாமல் கொண்டு திரிந்து பாஸ்போட் எடுத்து பிளைட் ஏத்தின பெருமை ராஜா மாமாவைச் சேரும். போகவேண்டிய றூட்டில ஆமிபொலிஸ் நிக்குதெண்டால் அந்த ஒழுங்கைக்குள்ளால விட்டு இந்த ஒழுங்கைக்குள்ளால விட்டு எங்கேயோ மிதித்தி ஸ்பொட்டில ராஜா மாமா நிற்பாராம். அது எல்லாம் சரி. ஏஜென்சிக் காரன் காலை வாரினானோ என்ன மண்ணோ தெரியாது. லண்டன் போன பொடியன் மலேசியாவில மாட்டி. மலேசியா ஜெயிலுக்க பொடியன். கூட ஆர் இருக்கிறது, குடுப்பாட்டியும் கொலைக் கேஸ்களும். பொடியன் வெருண்டு போய் இந்தா சாகப்போறன் என்ற கணக்காக கத்திக் கொண்டிருக்குது. தாய்க்காரிதான் மாமனை மச்சானைப்பிடிச்சு காசடிச்சு பொடியனை வெளியால எடுத்தது.
இனி வாழ்க்கையில வெளிநாட்டுச் சீவியமே வேண்டாம் என்ற மாதிரி ஒரு கடிதத்தை தமயன்காரன் போட்டான். இவன் ஆறஅமர இருந்து யோசித்து குலத்தை மீட்க வீட்டுக்கொரு தமிழன் கட்டாயம் வெளிநாடு போகவேணும். நீ போயே தீரவேணும். நாட்டுக் கடமை குறுக்கே இல்லையெனில் நான் போய் விடுவேன் என்ற கணக்கில் ஒரு றிப்பிளை அனுப்பினான்.
ஏஜென்சிக்காரனும் "ஐயோ அக்கா போனமுறை போன றூட்டில சின்னச் சிக்கல். இந்த முறை ஒரு சிக்கலுமில்லாத றூட். பொடியனை ராஜா மாதிரி கொண்டுபோய் இறக்கிற பொறுப்பு என்ர" எனக் கதைச்சு எல்லாரையும் சம்மதிக்க வைச்சிட்டான்.
அடுத்த பயணம் வெளிக்கிட்ட பொடியன் ஜேர்மன் போறதுக்கிடயில செத்துப் பிழைச்சுப் போனான். ராஜா மாதிரிப் போகலாம் எண்டு போனவன் இரண்டு மாதம் ஆபிரிக்காவில கிடந்து காய்ந்து போனான். ஆபிரிக்கச் சாப்பாடு இவனுக்கு ஒத்துவரவேயில்லை. மெலிந்து நூலாய்ப் போனான். கடைசியில கொண்டையினர் பெட்டியில இரண்டு நாளாக சாப்பிடாமலிருந்து தான்  ஜேர்மனி போய்ச் சேர்ந்தான்.

                                                                                        0
இவன் கிளிநொச்சி பஸ் ஸ்ராண்டுக்க உள்ளட்டு முகமாலை போற பஸ் எங்க நிக்குது என்று பார்த்து சீற் பிடிச்சு இருந்திட்டான். அந்தக் காலத்தில் வன்னி பஸ் எண்டால் சனமெல்லாம் ஏறி தலை, கால், கைகள், ஜன்னலுக்கால வெளிக்கிட்டு இனிமேல் ஏற ஏலாது என்னும் நிலமை வரேக்கதான் வெளிக்கிடும். அப்பிடி ஒரு ரைம் வர இன்னும் பத்தோ பதினைஞ்சோ நிமிசமாகும். இவன் வெளியால ஒருமுறை பார்த்தான். பஸ் ஸ்ராண்ட் தகரத்தில "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என எழுதி கொஞ்சப் பேர் சிவப்பு மஞ்சள் உடுப்போட முகத்தை மூர்க்கமாக வைச்சிருக்கிற படங்களோட போஸ்டர்கள் ஒட்டப் பட்டன. சுற்றிவர இதுமாதிரி வேற வேற வசனங்கள், படங்கள் போட்ட நிறையப் போஸ்டர்கள் இருந்தன. 'யாமார்க்கும் குடியல்லோம். யமனை அஞ்சோம், பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு' என்பது மாதிரியான வசனங்கள்.
இவனுக்கு யோசிக்க யோசிக்க இயக்கத்தில இருந்து விலத்தினது பிழையோ என்பது மாதிரியான யோசனைகள் வரத் தொடங்கின. இந்தப் போஸ்டர்கள், பொங்குதமிழுகளைப் பார்க்க இவனுக்கும் நரம்பு புடைச்சதுதான்.
பத்மினி அக்காவின்ரயும் சிதம்பரநாதன் அண்ணையின்ரயும் பொடியளும் பெட்டையளும் சிவப்பு மஞ்சள் உடுப்புப் போட்டு அதே கலரில தலைக்கு றிபன் கட்டி 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்' என கத்திக் கத்தி ஆடுறதைப் பார்க்க நல்லாத்தானிருக்கும். இப்பிடியாக எல்லாமே சரிவரும்போது விலத்திறனோ எண்ட பயம் இரண்டு நாளாக இவனுக்குள்ள இருக்குது. இவன் விலத்தப் போறன் என்று கடிதம் குடுக்க கலைக்கோன் மாஸ்டர் சொன்ன வசனம் ஒன்று திரும்பத் திரும்ப வந்துபோனது - "வெண்ணை திரளேக்க தாளியை உடைக்காதையுங்கோ." இதைவிட "எல்லா இடமும் சனம் பொங்குது. அரசுக்கும் உலகத்துக்கும் எங்களுக்கான தீர்வை தாறதைத் தவிர வேற வழியில்லை" என்று பாப்பா சொன்னது வேற அன்று தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. மூளைக்குள் ஆயிரம் யோசனை. தலையை ஒரு முறை சிலுப்பினான். முடிவெடுத்தால் மாறக் கூடாது.
பஸ் வெளிக்கிட்டது. மனசுக்குள் தேவாரம் சொன்னான். கடவுளே முகமாலைப் பொயின்ரில ஆமி பிரச்சனை தரக் கூடாது. தேவாரத்தோடையும் நேர்த்தியோடையும் பொழுது போனதில முகமாலை வந்ததே தெரியவில்லை.
ஆமிக்காரர் பாதையை மறித்து பெரிய கிடுகு வேலி அடைத்திருந்தினம். அதைக் கண்டதும் தான் முகமாலை என்றதை உறுதிப் படுத்தினான். பஸ் அதில ஸ்லோ பண்ணி இடதுபக்கம் திரும்ப நிறைய ஆமிக்காரர் நிக்கினம். இவன் தன்ர சீவிய காலத்தில முதல்முதலா சிறிலங்கன் ஆமியை உயிரோடை காணுறான்.
ஏழுவருசமாக இயக்கத்தில இருந்திருக்கிறான். முல்லைத்தீவு அடிபாடு உட்பட இரண்டொரு அடிபாடுகளுக்கும் போயிருக்கிறான். ஆனால் ஆமிக்காரனை உயிரோடை கண்டதில்லை. முல்லைத்தீவு அடிபாட்டில நல்ல பனையாய் பார்த்து கவர் எடுத்திருந்தான். முன்னுக்கு இருக்கிற பத்தைக்குள் இருந்து அடிவருது. இவன் பார்த்தான் ஏன் சோலியை எண்டிட்டு அந்தத் திசையைப் பார்த்து நாலைஞ்சு றவுண்ஸ் அடிச்சிட்டு இருந்தான். லீடர் பொடியன் விடுறான் இல்லை. "விடாதை அடி… விடாதை.. விடாதை.. ஓடுறான் ஒருத்தனையும் விடக்கூடாது. மூவ்..." என்று அருச்சுணன் மாதிரி கத்துறான். இவனுக்கெண்டால் பத்தைதான் தெரியுது. கிளி தெரியேல. அதில காயம் பட்டவன் பின்னுக்கு வந்திட்டான்.
இப்பதான் முதன்முதலாக ஆமியைக் காணுறான். இவனிட்ட ஐ.சியும் இல்லை. விதானை கையெழுத்துப் போட்ட போட்டோ ஒட்டின துண்டு மட்டும் தான் இருக்குது. மெல்ல பம்மிப் பம்மிப் போய் நீட்டினான். ஆமிக்காரரும் வெய்யில் கடுப்பில நிண்டினம்.
“எங்க போறது…”
“வீட்டை…”
“வன்னியில என்ன செய்தது.”
“ தோட்டம்”
“வன்னியில தனிய இருந்து தோட்டம் செய்தனி... ம்… இப்ப எங்க குண்டு வைக்கவா?”
“ இல்லை… இல்லை. ஐயா.”
அவன் ஒரு மாதிரிப் பார்த்து விட்டு வெயில் கடுப்பில போ என்று அனுப்பி விட்டான். கடவுளே என்றபடி ஓடிவந்து பஸ்ஸில ஏறினான்.
நெல்லியடி பஸ் ஸ்ராண்டில இறங்க குலம் கோத்திரம் முழுக்க நிக்கினம். இவனை வரவேற்கினமாம். நல்லகாலம் ஒருதரும் மாலை கொண்டு வரேல. அந்த ஆரவாரத்துக்கயும் நெல்லியடி மெயின் ரோட்டில |'எங்கள் நிலம் எமக்குவேண்டும்' என்ற பெரிய பனரைக் கவனித்தான்.


                                                                                                                                                 0

சாத்திரியார் சொன்னதுதான் இவனுக்கு திரும்பத் திரும்ப படம் மாதிரி மனசுக்குள்ள ஓடுது. இதை என்னெண்டு சோல் பண்ணுறது எண்டதும் விளங்குதில்ல. ஒன்றில் விபத்து. அல்லது மறியல். இதை நான் சொல்லயில்ல தம்பி உன்ர குறிப்புத்தான் சொல்லுது எண்டு அவர்முடிச்ச வசனம் பராசக்தியில் சிவாஜி பேசின வசனங்கள் மாதிரி இப்பவும் இவன்ர மனசுக்குள்ள ஓடுது.
இவனுக்கு இப்ப கொஞ்ச நாளாகவே பலன் சரியல்லை. இல்லயெண்டால் இயக்கத்தால விலத்தி வீட்டில இருந்து பிஸ்னஸ் செய்துகொண்டிருந்த பொடியன் ஏன் வன்னிக்குள்ள மாட்டுவான். இதைத்தான் பலன் எண்டிறதென நேற்றும் ராசன் சொன்னான்.
இவனொரு வாகனத்தைப் பார்க்க வந்தது உண்மை. விலைப் பிரச்சனையால கொஞ்சம் இழுபறிப் பட்டதும் உண்மை. இவன் யாழ்ப்பாணத்துக்கு வீட்டை போயிட்டு நாளைக்கு வாறன் எண்டு வெளிக்கிட்டதும் உண்மை. அந்த ரைம் பார்த்து ராசன் நந்தினியைப் பற்றிக் கதைத்ததுதான் பிசகினது.
இவன் ஐந்து நிமிசம் யோசித்தான். இப்பிடி இருந்து என்னத்தைக் கண்டம். அவன் இவன் சின்ன வயதிலேயே எல்லாத்தையும் கண்டிட்டான். அந்த ரைமை இயக்கத்துக்க கழிச்சிட்டன். இப்பவும் வீட்டுக்கடங்கின பொடியனாய் இருந்து என்ன செய்யிறது. நாளைக்கு கலியாணம் கிலியாணம் கட்டிப் போட்டு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாமல் என்ன செய்யிறது. ஐநூறு ரூபா போதும் எண்டுறான். பலதையும் யோசித்திட்டு ராசனோடு நந்தினியிடம் போனான். இவன் நந்தினியைக் காணேக்க மத்தியானம் ஒன்று பதினெட்டு. இதன் பிறகு ஒரு அரை மணித்தியாலமோ ஒருமணித்தியாலத்தில முகமாலை பொயின்ரில சண்டை தொடங்கி பாதைபூட்டுது.
கையில இருந்த காசெல்லாம் நந்தினியோட முடியுது என்ற நிலமை வரேக்க தான் பொடியன் வெருண்டு போனான். ஏதாவது செய்ய வேணுமே என்று அங்கலாய்த்துத் திரியேக்க தான் மொட்டைக் காந்தன் ஒருதனை இன்ரடியூஸ் பண்ணுறான்.
கிளிநொச்சி ரவுணில இருக்கிற 1.9 றெஸ்ரோரன்டிலதான் அந்தச் சந்திப்பு நடந்தது. எதேச்சையாக காந்தனைச் சந்தித்து சாப்பிட வந்தாச்சு. பேச்சுவாக்கில இவன் தன்ர வெப்பியாரங்களைச் சொன்னான். வன்னிக்குள்ள தனியாக இருந்து மாளுற நேரம் அங்கால போனால் சோலியில்லை எண்டது இவன்ர வாதம். இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லையெண்டது மாதிரியாக காந்தன் ஒரு சிரிப்புச் சிரித்தான்.
அப்ப அவளவு லேசில யாரும் வன்னியை விட்டிட்டு போகேலாது - போறதெண்டால் இரண்டு தகுதிவேணும். ஒன்று சாகக் கிடக்கிற அறப் பழசான வயசாயிருக்க வேணும். இல்லையெண்டால் பதினைந்தோ இருபது இலட்சம் பெறுமதியான வீடிருந்து அதை இயக்கத்துக்குக் குடுக்க வேணும். இந்த இரண்டு குவாலிக்கேசனுமில்லாமலே இவன்ர பிரச்சினையை சோல் பண்ணக்கூடியவன் என்று கூட வந்தவனை இன்ரடியூஸ் பண்ண அவன் வலு பவ்வியமாக சிரித்து தன்ர பேர் அஜித் எண்டான். பேர் நல்ல மொடோனாகத் தானிருந்தது.
அஜித்துக்கும் இவனுக்கும் நாற்பத்தொன்பது நாள் பிறன்ஸ்சிப் நீடித்தது. இந்த நாளில ஆறாயிரத்து முன்னூற்றி எண்பத்தி ஒன்பது ரூபாவை அவனுக்காகச் செலவழித்தான். காரணமில்லாமல் தோரணம் ஆடாது. எல்லாம் காரணத்தோடதான். அஜித் தானொரு படகோட்டி எண்டும் நிறைய படகோட்டிகளை தெரியும் எண்டு சொன்னதுதான் இந்தளவிற்கும் காரணம். அந்த ரைமில நிறையச் சனம் உந்த விடத்தல்தீவு, நாச்சிக்குடாப் பக்கம் இருந்து இந்தியாவுக்கு ஓடிச்சுதுகள். இயக்கம் பாத்தது இது சரிப்பட்டு வராது என்று இந்தப் பக்கம் இறுக்கமாக்கியது. இந்தியா போ வெளிக்கிட்டு யாரும் பிடிபட்டால் ஆறுமாதம் ஜெயில். படகோட்டிக்கு ஒரு வருசம் ஜெயில். இதைவிட ஆயிரத்தெட்டுப் பேரை இயக்கம் செற் பண்ணி விட்டிருந்தினம். அவையளும் நல்லாக் கதைத்து இந்தியா கொண்டுபோய் விடுறம் எண்டு கதைச்சுப் பேசி காசு வாங்கிக் கொண்டு ஆக்களை பிடிச்சுக் குடுத்திடுவினம்.
இவ்வளவு பிரச்சனைக்குள்ளும் சரியான ஆளைப் பிடிச்சு இவனை இந்தியா அனுப்பும் மாபெரும் பொறுப்பை அஜித் ஏற்றான். இவன் தனியாக போக முடியாதென்றும் இரண்டொரு குடும்பங்களையும் செற் பண்ணும்படி அஜித் சொன்னான். இவனும் ஓடியாடித் திரிந்து செல்வராசன்ணையின் குடும்பத்தையும் லிங்கன்ணை குடும்பத்தையும் செற் பண்ணினான். இரண்டு குடும்பமும் ஆளுக்கு ஐந்து லட்சம் கட்ட வேணும்.
செல்வராசன்ணையின் இரண்டாவது பெட்டைக்கு இவனொரு ஹீரோ மாதிரி தெரிந்திருக்க வேணும். ஏனெனில், அப்ப ஒரு நாளில் இரண்டு தரம் அந்த வீட்டுக்கு போனான். எப்பிடி எப்பிடி போக வேணும், இயக்ககாரர் சந்தேகப்பட்டால் எப்பிடி எப்பிடி கதைக்க வேணும் எண்டது மாதிரியான நிறைய றெயினிங்குகளைப் பெட்டையளுக்குக் குடுத்தான். ஆகவே, இவனொரு ஹீரோ மாதிரி தெரிந்ததில் ஒரு பிழையும் சொல்ல ஏலாது. அவள் ஒரு ஹீரோயின் மாதிரி இவனுக்கும் தெரிந்தாள்.
அவளையும் அந்த குடும்பங்களையும் கிளிநொச்சியிலிருந்து வலு பத்திரமாக விடத்தல்தீவுக்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கு இவர்களை ஒரு பற்றைக்குள் ஒளிச்சு வைத்துவிட்டு, ஒரு படகுடன் வருவதாக சொல்லி அஜித் போனான். இவன் செல்வராசன்ணையின் பெட்டையுடன் மெல்லிய குரலில் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான். இந்தியா போனதும் வீட்டுக்குச் சொல்லி இருவரும் கலியாணம் செய்யலாமென அவள் சொன்னாள்.
அடுத்த நாள் விடிய இந்தியாவில நிற்கலாமென வெளிக்கிட்ட எல்லாரும் அடுத்த நாள் விடிய வள்ளிபுனத்தில் இருந்த இயக்கத்தின்ர ஜெயிலில நின்டினம். பிறகுதான் தெரியும், அஜித் இயக்கத்தின்ர புலனாய்வுத்துறைக் காரன் என.
இவனுக்கு ஒன்றும் கவலையில்லை, செல்வராசன்ணையின்ர பெட்டையை மிஸ் பண்ணினதுதான் கவலை.

                                                                                                                  0
இவன் தாய்காரியின் முகத்தை மனசுக்குள் வைத்துக் கொண்டு, வலு சோட் அன்ட் சுவீட்டாக ஒரு கடிதம் எழுதினான். அது பின்வருமாறு அமைந்திருந்தது.
அன்பும் பண்பும் பாசமம் நிறைந்த என்னைப் பெற்றெடுத்த தாயே!
என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் நலமே முக்கியம். நான் இப்போது மாத்தளனில் இருக்கிறன். இதுவும் பாதுகாப்பு வலயம் தான். ஆனால் ஒவ்வொரு நாளும் நிறையச் சனம் சாகுது. யாருக்கு எப்ப என்ன நடக்குமென்டது தெரியாது. ஆனால் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. எப்பிடியும் வந்திடுவன். உள்ளுக்கு வாறதுக்குத் தான் இப்பவும் ஒரு றூட் பார்த்துக் கொண்டிருக்கிறன். சரி வந்தால் விரைவில் சந்திக்கலாம்.
                                        இப்படிக்கு
                                     பாசமள்ள மகன்.
   அந்தத் ரைமில காயம்பட்ட ஆக்களை ஏத்திறதுக்கு கப்பல் வந்து போகும். காயம் பட்ட ஆக்களுடன் கொஞ்சம் சனமும் போவினம். இவனுக்கு தெரிந்த வயசாளி ஒருவரும் போறார். அவரிடம் கடிதத்தை கொடுத்தனுப்பினான். கடற்கரை மட்டும் போனான். சின்னச் சின்ன வள்ளங்களில் ஆட்களை ஏற்றி கப்ப்லுக்கு கொண்டு போவினம். கரையில நின்று பார்க்க இவனுக்கு கடும் யோசினை பிறந்தது. இந்த பாதுகாப்பு வலயத்துக்க இருக்க ஏலாது. இருந்தால் சாவுதான் எப்பிடியாவது வெளியில் போகவேணும். போறதென்டால் ஒன்றில் கப்பலில் போகவேணும். அதுக்கு ஒன்றில் மரணப் படுக்கையில் இருக்க வேணும். அல்லது இயக்க பெரியாக்களின்ர மனுசிமாராக இருக்க வேணும். இரண்டும் இல்லை. மற்றது இயக்கத்துக்குத் தெரியாமல் நீரேரிக்குள்ளால் நடந்து ஆமியிடம் போக வேணும். அதுவும் ஆபத்துத் தான். போற ஆட்களை இயக்கம் சுடுகுதெண்டு பிரிகேடியர் உதய நாணயக்காரவும் ஆமி சுடுதென்று தவபாலனும் மாறிமாறி சொல்லிக் கொண்டிருந்தினம்.  என்ன செய்யிறதெண்டு யோசித்தபடி மாத்தளன் ஆசுப்பத்திரிக்கு வந்தான். ஆசுபத்திரிக்கு முன்னால பெரிய வெட்டை. அதுக்குள்ள இயக்கக்காரர் பெரிய 'பண்ட்' அடிச்சு சனம் போகாதபடி சென்றி நிற்கினம். வெட்டை கழிய நீரேரி. ஒரு 300 மீற்றர், 400மீற்றர் அகலம் வரும். அது கழிய மறுகரையில ஆமி. இஞ்ச நின்று பார்க்க ஆமிப் பொயின்ற் தெரியுது. கண்ணுக்குத் தெரியும் அந்த இடத்தை அடையத் தான் இந்த வாழ்வா சாவா போராட்டம்.
நிரேரியைக் கடந்து ஆமியிடம் கொண்டுபோய் விடவும் நிறையப் பேர் இருந்தினம். ஐயாயிரம் பத்தாயிரம் என்று வாங்கிக் கொண்டு இயக்க பொயின்றக் கடக்க வழிகாட்டுவினம். இயக்கத்தை கடந்து நீரேரிக்குள் இறங்கினாலும் நேரே போக ஏலாது. அதுக்கும் றூட் இருந்தது. நேராக இருந்த ஆமி சனத்தை உள்ளுக்கு எடுக்க மாட்டான். மற்றது அந்தப் பாதையில ஷெல் விழுந்து நிறையப் பள்ளம் இருந்தது. மாத்தளன் ஆசுப்பத்திரியில இருந்து நீங்கள் ஆமியைப் பார்த்து நிரேரிக்குள் இறங்கி வலது பக்கம் நாற்பத்தைந்துபாகை திரும்பிப் பர்க்க வேணும். ஆமிக் காரர் வெள்ளைக் கூடாரம் ஒன்று அடிச்சிருப்பினம். அந்த ஸ்பொட்டிலதான் நீங்கள் ஏறவேணும்.
            இவன் நிறையப் பேருடன் கதைத்து உந்த றூட்டெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் நிரேரிக்குள் இறங்க ஒரு பயமிருந்தது. இதைவிட ஏதாவது மாற்றம் வரும் என்ற மாதிரி பாலண்ணையும் சொல்லியிருந்தார். அந்தாள் கனகாலமாக இயக்கத்தில் இருக்குது. பிறகு ஒரு வெற்றி வந்தால் நீங்கள் எல்லாம் தப்பி ஓடின துரோகிகள் தானே என்ற பழி வரலாற்று ஏடுகளில் பதியப் பட்டு விடலாம் என்ற மாதிரியும் யோசித்தான்.
அந்தக் காலத்தில் இவன் காலையில எழும்பினான் என்றால் முதல் இலங்கை நியூஸ் கேட்பான். அதில இயக்கம் செத்தது என்ற புள்ளி விபரம் ஒன்று போகும். பிறகு அப்பிடியே புலிகளின் குரலுக்கு மாத்துவான். தவபாலனும் அம்பத்தெட்டாவது டிவிசன் அழியும் நிலையில் உள்ளது என்றமாதிரியான புள்ளி விபரம் ஒன்றைத் தருவார். அதைக் கேட்டுக்கொண்டிருக்க ஷெல்லடி தொடங்கும். பிறகென்ன அந்தப் பிரச்சனையுடனும் சாப்பாட்டுப் பிரச்சனை பாக்கிறதோடயும் பொழுது இருளும். முதல் என்றால் இவன் தனியாள். போற இடத்தில சாப்பிட்டு படுத்து சமாளிச்சிடுவான். இப்ப இன்னொரு சீவன் இவனை நம்பியிருக்குது. சுமதியைச் சந்தித்ததைம் கல்யாணம் செய்தததையும் கடவுளின்ர செயல் என்றே நம்பினான்.
            இரண்டுமாதம் முதல் சுதந்திரபுரத்தில இவன் போய்க் கொண்டிருக்க திடீரென்று ஆமி ஷெல்லடிக்கத் தொடங்கினான். அடியென்றால் மரணஅடி. இவன் சைக்கிளைப் போட்டிட்டு தவண்டு தவண்டு போய் ஒரு வீட்டு பங்கருக்குள் இறங்க அது முழுக்க சனம். திரும்பி தவண்டு தவண்டு வீட்டுக்குப் பின்னுக்குப் போனான். மாமரம் ஒன்றுடன் இருந்த வைக்கற்போருக்கு பக்கத்தில் ஒரு பங்கர். சிவனே என்றபடி பாய்ந்தான். சினிமாப் படங்களில சில சீனுகள் வரும். கதாநாயகன் தெரியாமல் ஒரு இடத்தில நுழைய இதை எதிர்பாராத நாயகி வீலென அலறுவது மாதிரி. இந்த சீனுக்கு அடுத்த சீனிலயிருந்து இரண்டு பேரும் லவ் பண்ணத் தொடங்கிடுவினம். அப்பிடித் தான் இங்கும் நடந்தது. ஒரு பெட்டை மட்டும் உள்ளுக்கு பம்மிக் கொண்டிருக்குது. இவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு "பிளீஸ் அண்ணா.. என்னைத் தங்கச்சி மாதிரி நினையுங்கோ ப்ளீஸ் என்னைப் பிடிக்காதையுங்கோ" என்றாள். இவனுக்கு எல்லாம் விளங்கியது. அப்ப இயக்கத்துக்கு ஆட்களைப் பிடிக்கிற சீசன் என்பதால் இவள் அதுக்குப் பயந்து ஒளிந்திருந்தவள் இவன் தன்னை பிடிக்க வந்தவன் என்று நினைத்திட்டாள். இவன் தன்னைப் பற்றி விளங்கப்படுத்தி தான் அப்படிப்பட்டவனில்லை என்று நிறுவினான். அன்று கொஞ்சம் கூடநேரம் ஆமிக்காரனும் ஷெல்லடிச்சு விட்டான். எவ்வளவு நேரம் உள்ளுக்க இருந்ததெண்ட கணக்கு இவனிட்ட இருக்கயில்ல. ஷெல்லடிமுடிய அவளின்ர மடியில இருந்து எழும்பி வெளியில் வந்தான்.
அந்த ரண களத்துக்குள்ளும் இரண்டு நாள் அவளைக் கண்டு கதைச்சு தன்ர லவ்வை டெவலப் பண்ணினான். வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு என்ற மாதிரியான கவிதைகள் எழுதிய கடிதமும் குடுத்தான். உன்னை கண்கலங்க விடாமல் பத்திரமாகப் பார்ப்பன் என்ற புறமிசை இந்த இரண்டு நாளுக்குள்ளும் எண்பத்திமூன்று முறை கொடுத்தான். இதிலிருந்து அவன் கொண்டது தெய்வீகக் காதல் என்பதை புரிந்தவள் வீட்டுக்குச் சொன்னாள். பெட்டையை எப்ப இயக்கம் பிடிக்கும் என்று கலங்கிக் கொண்டிருந்ததுகள் அடுத்த நிமிடமே இரண்டு பேரையும் ஒரு பங்கருக்குள்ள இறக்கி வாசலை மூடிவிட்டுதுகள். அதுக்குப் பிறகு இண்டைவரை பங்கருக்குள்ளேயே இரண்டு பேரின் பொழுதும் கழிந்தன.
பலத்த யோசனையோடு இவன் வீட்டுக்குப் போய்ச் சேர சுமதி ஓடி வந்தாள். “இஞ்சாரப்பா. அண்ணா ஒராளைப் பிடிச்சிருக்கிறார். குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூபா.. எல்லாரும் போயினம். நாங்களும் போவம். இண்டைக்கு வெளிக்கிட வேணும்.”
மேற்கொண்டு கதைப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. சுமதியின் அண்ணன்தான் எல்லா ஏற்பாடும் செய்தான். அவர்களில் ஒருவனாக போவது மட்டும்தான் இவனின் வேலை.
நகைகளையும் காசையும் எடுத்துக் கொண்டு இவன், சுமதி, அவளின்ர குடும்பம், இன்னும் இரண்டொரு குடும்பம் தான் போற ஆட்கள். இருளத் தொடங்கவே எல்லாரும் மாத்தளன் ஆசுப்பத்திரிக்கு பக்கத்திலயிருக்கிற  தேத்தண்ணிக் கடைக்கு பின்னுக்குப் போயிருந்தினம். கூட்டிக் கொண்டு போறவன், இயக்கத்தின்ர லைனுக்கு போறதும் வாறதுமாக இருந்தான். ஒவ்வொரு முறை வரும் போதும் “கொஞ்சம் பொறுங்கோ. றூட் கொஞ்சம் இளகட்டும்.. சென்ரிக்கு நிக்கிற பொடியன் மாறட்டும்” என சொன்னபடி இருந்தான். இதுக்குள்ள தமயன்காரன் பெரிய பிளான் போட்டிருந்தான். தான் முதலாவதாக பண்ட் ஏறிக் கடந்து போய் நின்று தங்கட குடும்பக்காரரை ஒவ்வொருவராக பெயர் சொல்லிக் கூப்பிடுவாராம். ஓம் என்றபடி தன்னைக் கடந்து போய் நீரேரிக்க இறங்கட்டாம். இது ஏன் என்றாலாம் இருட்டுக்க ஆரும் விடுபடக் கூடாதாம். தண்ணி கடந்த மறுகரையில ஏறும்போதும் இதே நடைமுறைதானாம்.
நேரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தேத்ததண்ணிக் கடைகாரன் ரேடியோ மீற்றரை புலிகளின் குரலிலிருந்து பீ.பி.சிக்கு மாற்றினான். எங்கட பிரச்சனையைத்தான் அதில கதைச்சினம். இவன் சுமதியை சுரண்டிவிட்டு வலு ஆவலாகக் கேட்டான். முதல்நாள் ஷெல்லடிச்சு நிறையச் சனம் செத்தது பற்றித்தான் பீ.பீ.சீக்காரன் கதைச்சுக் கொண்டிருந்தான். ஆமிக்காரனிட்ட கேட்டான். அவையள் சொல்லிச்சினம் - தாங்கள் ஷெல்லடிக்கவில்லை. ஆனால் தங்கட ஆட்கள் சத்தத்தைக்கேட்டவைதான். அது புதுக்குடியிருப்புக்கு கிழக்குப் பக்கமாகக் கேட்டதாகவும். ஆகவே புலிகளே அடிச்சிருக்கவேணும் எண்டினம். பீ.பீ.சீக்காரரும் விடவில்லை. விடுத்து விடுத்துக் கேட்க கதைச்ச ஆமிக்காரர் கொஞ்சம் நழுவினார். பிறகு இயக்ககாரரோட கதைக்க றை பண்ணினம் கிடைக்கயில்ல என்றுவிட்டு மாத்தளன் ஆசுப்பத்திரி டொக்டர் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டினம். அந்தாள் அடிச்சுச் சொல்லுது. இல்லை. அந்தச் ஷெல்லுகள் மேற்கு, வடமேற்காலதான் (ஆமிப் பிரதேசம்) வந்தது என்று. என்னெண்டாலும் அந்தாளின்ர துணிவை மெச்சவேணும் என்று மனதுக்குள் நினைச்சுக் கொண்டிருக்க வழிகாட்டி வந்தான். எல்லாரும் வெளிக்கிட்டு சத்தம் போடாமல் எனக்குப் பின்னால ஓடிவா என்று விட்டு ஓடத் தொடங்கினான். ஒரு கையில சுமதியைப் பிடிச்சுக் கொண்டு குனிஞ்சபடி ஓடினான். இயக்கத்தின்ர |பண்ட்|டை ஏறிக் கடக்க வேணும். சுமதி கஸ்டப் பட்டாள். கல்யாணம் கட்டிய இரண்டு மாதத்தில் முதல் முதலாக அவளை தூக்கினான்.
அவளின்ர தமயன் பண்டுக்கு மற்றப் பக்கம் நின்று கீழ்குரலில அம்மா வந்தாச்சுதா.. தம்பி வந்தாச்சுதா… சுமதி வந்தாச்சுதா என்று இடாப்பு கூப்பிடத் தொடங்கினான். எல்லாரும் சரியெண்டதும் இவங்கட குடும்பகாரர் ஓடிப் போய் தண்ணீருக்குள் இறங்க சுமதி கிடங்கொண்றில் காலை விட்டு விழுந்தாள். அவளை தூக்கி தனக்கு முன்னுக்கு நடக்கவிட்டபடி இவன் நடக்க…
எங்கிருந்தென தெரியவில்லை. கிழக்கிலிருந்தா மேற்கிலிருந்தா, வானத்திலிருந்தா பூமியிலிருந்தா என்பது தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் எங்கோ தொலைவில் துப்பாக்கி ஒன்று ஒரு சுற்று சடசடத்து ஓய்ந்தது. அதன் ஒரு ரவை 7.62க்கு 52 mm அளவு கொண்ட சின்னி விரலளவு ரவை, இவன் நெஞ்சைத் துளைத்துப் போனது.
யாருக்கும் தெரியாமல் அந்த நீரேரிக்குள் இவன் இறங்கத் தொடங்கினான்..

2 comments:

  1. >7.62க்கு 52 mm ரவை

    இது NATO ரவையல்லோ? அப்பா ஆமிதான் அடிச்சதோ? அல்லது ஒரு சஸ்பென்ஸ் ஆக ஆர் அடிச்சது எண்டு தெரியாதமாதிரிக் கதை போகுதே?

    ReplyDelete
  2. >7.62க்கு 52 mm ரவை

    இது NATO ரவையல்லோ? அப்ப ஆமிதான் அடிச்சதோ? அல்லது ஒரு சஸ்பென்ஸ் ஆக ஆர் அடிச்சது எண்டு தெரியாதமாதிரிக் கதை போகுதே?

    ReplyDelete