Tuesday, September 20, 2011

யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி (விமர்சனம்: எஸ் சக்திவேல்)


யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி

====================================

|எஸ் சக்திவேல் | வேப்பந்தோப்பு வலைப்பதிவு|


முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும் ஆயிற்று. முள்போல் குத்திய வலியையும் தூக்கமில்லாத இரவுகளையும் புலம் பெயர் தமிழர் அநேகர் அனுபவித்திருப்பர். என்றாலும் இந்த இரண்டு வருடங்களில், "ஏன் தோத்தாங்கள்?" என்ற கேள்வி barbecue party களுக்குள் சுருங்கிவிட்டது. கேள்விப்படவே தாங்கமுடியாத வலியை அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வன்னி வாழ் மக்கள், மற்றும் முன்னால் போராளிகள் படும் துன்பங்கள் இந்த "ஏன் தோத்தாங்கள்?" வியாக்கியானங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அதைவிட முக்கியமாக எழுதப்படவில்லை என்ற ஆதங்கங்களுடன் இருந்த என் கையில் அகப்பட்ட சிறுகதைத் தொகுப்பு யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத்துணி".

யோ.கர்ணன் யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் என்று புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்புக் கூறுகின்றது. அவரின் சிறுகதைகள் முள்ளிவாய்க்கால் துயரங்களைப் பேசுகின்றன. முக்கியமாக நாம் அதிகம் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிராத பேசாப்பொருட்கள் சிலவற்றையும் பேசுகின்றன. என்பதால், தூய்மைவாதிகளிற்குப் பிடிக்காமல் போகலாம். போகட்டுமே! பிடிக்காது என்பதற்காக நடந்ததை கண்ணை மூடிக்கொண்டு 'ஒண்டும் தெரியாத பூனை' மாதிரி இருக்கவேண்டும் என்பதில்லை.

ஒரு மாபெரும் துயரத்தைக் காவும் கர்ணனின் கதைகள் ஒப்பாரி நடையில் எழுதப்படவில்லை. மிக மெலிதான அங்கத நடையில் கதைகளை எழுதியுள்ளார். இன்னொன்றையும் சொல்லவேண்டும். முழுக்கதைகளையும் உயிர்ப்பான யாழ்ப்பாண/வன்னி பேச்சுத்தமிழில் எழுதியுள்ளார்.

ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக மிக அதிகமாக இரண்டுவிதமான பார்வைகளைக் காணலாம்.

(1) புலிகளைக் கிட்டத்தட்ட தேவர்கள் அல்லது உப கடவுளர் "range" இற்கு ஏற்றுவது.
(2) புலிகளை விமர்சிக்கின்றேன் என்ற பெயரில் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது - இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் "இலங்கை அரசாங்கம் அப்படியொன்றும் தமிழர்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை. போராட்டம் என்பது சாப்பிட்டது செமிக்கக் கஷ்டமான கொஞ்சப்பேர் தொடங்கிய ஒன்று" என்கின்ற தொனி தெரியும்.

மேலேயுள்ள இரண்டுமில்லாமல் நடுநிலைப் பார்வைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு. கர்ணன் மேலேயுள்ள (1) அல்லது (2) இனை எடுக்காமல் சொல்ல வேண்டியவற்றை எதுவித மறைத்தல்களுமின்றிச் சொல்கிறார். நடுநிலை என்பது ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும் என்பதால் நீங்களே புத்தகத்தை வாசித்து முடிவு எடுங்கள்.

*************

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி வெளியீடாக ஓகஸ்ட் 2010 இல் வந்தது. சில கதைகள் இணையத்தில் (கர்ணனது blog இல்) கிடைக்கின்றன.

1. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......
2. மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி
3. பெயர்
4. தஸ்யுக்களின் பாடல்கள்
5. சுதந்திரம்
6. பாதுகாப்பு வலயம்
7. திருவிளையாடல்
8. றூட்
9. சடகோபனின் விசாரணைக் குறிப்பு
10. தேவதைகளின் தீட்டுத் துணி

முதல் கதை "எப்படி ஒரு பயந்த, கொஞ்சம் பட படப்புக் குணமுள்ள பெட்டை, ஒரு பெரிய தியாகத்தைச் செய்கிறாள்" என்று விபரிக்கிறது. தியாகந்தான் வீணாகப் போயிற்று.

"மன்னிக்கப் படாதவனின் கைத் தொலைபேசி" மறக்கமுடியாத ஒரு கதை. காலத்திற்குக் காலம் (80 களிலிருந்து) இதுமாதிரி நடந்து கொண்டிருக்கிறது. செய்பவர்களும் செய்யப்பட்டவர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். "போடுப்பட்டுக்" கொண்டிருப்பது எல்லாம் நம்மவர் என்பதுதான் ஒரு பொதுத்தன்மை. கர்ணனின் எழுத்துநடையில் ஒரு கொழும்பு லொட்ஜ், வெளிநாட்டுக்குப் பறந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆயத்தமாகும் ஒரு "முன்னாள்", சில விடலைப் பையன்கள் என்று ஒருவித "சீன்" விரிகிறது.

வெதுப்பி, குளிர்களி முதலிய சொற்களை ஒரு காலத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் "பெயர்" சிறுகதை இன்னும் சுவாரசியம் ஆகும். இதை வாசிக்கும்போது 1991- 1994 வரை லீவுகளில் யாழ்ப்பாணம் வரும்போது வவுனியா ஆமிப் பெடிச்சிகளின்(!) செக் 'பொயின்ற்' தாண்டி, ஓமந்தை வந்து புலிகளின் சோதனை நிலையத்தில் எங்கள் தமிழ்ப் புலமையைக் காட்டியது ஞாபகம் வருகிறது. கதை, "மேனன்" தமிழ்ப்பெயரா என்ற ஆராய்ச்சியில் இருந்து , "சதுரங்கனி" சாப்பாட்டுக் கடையில் முடிவுக்கு வருகிறது.

"தஸ்யுக்களின் பாடல்கள்" ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியுமுள்ளது. மீண்டும் ஒருமுறை முயற்சிக்கின்றேன்.

"சுதந்திரம்", இப்படியும் வன்னிச் சனங்கள் கஷ்டப்பட்டனர் என்று சொல்கிறது. ஆறாவது கதையான " பாதுகாப்பு வலயம்" வன்னியில் "கோரங்கள்" நடந்தபோது நின்ற ஒருவரால் மட்டுமே இப்படி எழுதமுடியும் என்பது என் கருத்து. (மற்றவர்களும் முயற்சிக்கலாம்!) .

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ஏழாவது கதையாக உள்ள "திருவிளையாடல்". முள்ளி வாய்க்காலில் இறங்கிய கடவுளை இந்தப் பக்கம்"பங்கர்" வெட்டக் கூப்பிடுது. தப்பிப் பிழைத்து அந்தப் பக்கம் போனால், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னால் மொபைல் போனால் ஒருவன் அவரைப் படம் பிடிக்கிறான். இப்படிச் சிம்பிளாகக் கதையைக் கூற முடியாது. முழுக் கதையையும் வாசியுங்கள்.

சில உண்மைகள் எப்பவும் தெரிய வரா. அதேபோல் "ரூட்" கதையில் கதையின் முடிவில் அவனின் மார்பைத் துளைத்த ரவை எங்கிருந்து வந்தது என்று தெரியவராது. தெரிய வந்துதான் என்ன ஆகப் போகிறது? "சடகோபனின் விசாரணைக் குறிப்பு" ஒரு விசாரணை இப்படியும் இருந்திருக்கலாம் என்று சொல்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அநேகமாக இப்படித்தான் விசாரணை நடந்திருக்கும் என்று யோசிக்கவைக்கிறது. "தேவதைகளின் தீட்டுத்துணி" , இதுதான் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதை, அத்தோடு கடைசிக் கதை. கதையின் ஆன்மாவும் கதையின் கடைசி வரியிற்தான் இருக்கிறது.

மொத்தத்தில் ஈழத்தமிழர் எல்லாரும் கட்டாயம் படிக்கவேண்டிய சிறுகதைத்தொகுப்பிது. வடலி இணையப்புத்தகக் கடையிற் கிடைக்கிறது. விலை US$ 7.90 மட்டுமே, அனுப்பும் செலவும் சேர்த்து.

"தேவதைகளின் தீட்டுத்துணி" வடலி இணையப்புத்தகக் கடையில்


---------
குறிப்பு:
"கதை" என்று நான் மேலே குறிப்பிடுவவை "சிறுகதை" என்றுதான் இருக்கவேண்டும். என்றாலும் "கதை" என்ற சொற்பதம் இங்கு பொருத்தமாக, இயல்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 
|

No comments:

Post a Comment