Saturday, July 30, 2011

AK 47

னக்கு மிக நன்றாக தெரியும் எல்லாத் துப்பாக்கிகளையும் விட அதனைப் பற்றி. உலக யுத்தத்தில் காயமடைந்த மிக்கெய்ல் கலாஸ்நிக்கோவ் படுக்கையிலிருந்த போது மனதில் தோன்றிய ஐடியாக்களை வைத்து உருவாக்கிய துப்பாக்கியது. ஏதோ ஒரு 'டுபாக்கூர்' துப்பாக்கி ரவையினால் அவனது கால் உடைந்ததென்றும், ஒரு ரவையெனப்படுவது காலை உடைப்பதுடன் நின்றுவிடாது கொல்லவல்லதாக இருக்க வேண்டுமென அவன் விரும்பியதும். அது அவ்வளவு பெரிய துப்பாக்கியாக இல்லாமல் வெறும் ஐந்து கிலோகிராம் எடையானதென்றும். அது ஆடுதண்டு வாயுத் தொழிற்பாட்டினால் இயங்குவதென்றும்.
     எனக்கு மிக நன்றாகவே தெரியும் ஒரு AK.47 துப்பாக்கி அழகானதென்று.   வீட்டு வரவேற்பறைகளில் விதம்விதமாக அடுக்கி வைக்க அதன் ரவைகள் அழகாகயிருக்குமென்று. ரவைப் பெட்டியை உடைக்கும் போது பொன் வண்டுகளை போல ரவைகள் அதனுள் மின்னிக் கொண்டிருக்குமென்றும். அந்த பொன்வண்டுகளின் அளவு வெறும் 7.62*39mm அளவென்றும். ஒரு ரவைக் கூட்டினுள் முப்பது சொச்ச பொன்வண்டுகளை யிடலாமென்றும். சன்னம் இல்லாமல் கரிமருந்து மட்டும் நிரப்பப்பட்ட பின் கோது;காஸ்ரவுண்ஸ்', சன்னத்தின் முனையில் பச்சை வர்ணம் பூசப்பட்டது 'ஆமட் ரவுண்ஸ்', சிவப்பு வர்ணம் பூசப்பட்டது 'ரேசர் ரவுண்ஸ்', வெட்டியாக இருப்பது 'நோமல் ரவுண்ஸ்' என்றும்.
     எனக்கு மிக நன்றாகவே தெரியும் - இந்த துப்பாக்கியினால் ஒரு நிமிடத்தில் அறுநூறு ரவைகளைச் சுட முடியுமென்று. அந்த ரவைகளின் வேகம் 710 m/s என்றும். அதன் கொல்லும் தூரம் 300m என்பதும். அந்த ரவையிலிருந்து விஜயகாந்தோ அர்ஜூனோ தலைசாய்த்துத் தப்ப முடியாதென்றும்.
     எனக்கு மிக நன்றாகவே தெரியும் இந்தத் துப்பாக்கியினால் சூட்டு பயிற்சி பெறும்போது, ஆளுயர இலக்கின் நடு நெஞ்சிலிருக்கும் சிறு வட்டத்தில் சுட்டால் பத்து புள்ளியென்று. .அதைவிட சற்று ஆரை பெருத்த வட்டத்தில் அடித்தால் ஒன்பது புள்ளியென்றும். இப்படி சிறிதுசிறிதாக கீழ் நோக்கி பெருத்து சென்ற வட்டங்களில் கடைசி வட்டத்தின் பெறுமதி ஐந்தென்றும். பத்து மற்றும் ஒன்பதாமிலக்க இடங்களே ஒருவனை கொல்லுமிடங்களென்றும்.
     எனக்கு மிக நன்றாகவே தெரியும் பயிற்சியின் போது கற்றது போலவே ஒருவனது அல்லது ஒருத்தியினது நடு நெஞ்சை குறி வைத்து சுடுவதன் மூலம் கொல்லலாமென்று. அல்லது ஐந்து கிலோ எடையுள்ள அந்தத் துப்பாக்கியினால் அடித்தே கொல்லலாமென்றும்.                            ரு நல்லூர் திருவிழா மூட்டந்தான் இயக்கத்திற்கு போனனான். நானும் கொற்றாவத்தை பொடியள் ஐஞ்சு பேரும்தான் அன்று வடமராட்சி கணக்கு. இருபாலை 'டொச்சன் பேசு'க்கு கொண்டு போய் நூற்றியைம்பது பேராக்கி மணலாற்று காட்டுக்க ரெயினிங்கிற்கு அனுப்பிச்சினம்.
     மனிச நடமாட்டமில்லாத இடமது. அதுக்குள்ள இரண்டு நாளிருக்க எனக்கெண்டால் எங்கட ஆச்சியின்ர முகம் தான் நினைவுக்கு வருது. என்னை மாதிரியே இன்னும் கொஞ்ச வட்டுக்காயளுக்கும் தங்கட இனசனங்களின்ர நினைப்பு வந்திருக்க வேணும். 'ஐயோ நாங்கள் வீட்டை போகப் போறம்..வீட்டை போகப் போறம்' என்று அழத் தொடங்கிய ஆக்கள் பத்துப் பன்னிரண்டு பேரிருக்கும்.
     வெடிமருந்து ரெயினிங் தாற சுதா மாஸ்ரர் வந்து உறுக்கினார். 'டொச்சனில வைச்சு திருப்பி திருப்பி சொன்னனாங்கள் தானே. விருப்பமில்லாட்டில் வீட்ட போகச் சொல்லி.. இஞ்ச வந்தால் போகேலாது. ஆரும் அழுதால் அஞ்சு காம்புக்குள்ள கொண்டு போய் விட்டிடுவன்..'
     நான் அடங்கிவிட்டன். அந்த வெருட்டுக்கும் இரண்டொன்று அடங்கயில்லை. செத்த வீட்டில அழுத கணக்காக அழுது கொண்டிருக்குதுகள். பிரச்சனை பொறுப்பாளர் மாறண்ணையிட்ட போகுது. ரெயினிங் காம்பை விட்டு கொஞ்சம் தள்ளியிருந்தது அவரின்ர ஒப்பிஸ். அழுகுணியள் எல்லாம் வரிவையாக போனம். வலு கூலாக சிரிச்சு வரவேற்றார். சாப்பிடுறதுக்கு பொரிவிளாங்காய் உருண்டையும் தந்தார். கொஞ்ச நேரம் பம்பலாக கதைச்சார். பிறகு தன்ர துவக்கை எடுத்துக் காட்டி இதின்ர பேர் தெரியுமோ என்றார்.
ஓருத்தன் 'Ak 47' என்றான்.
அவர் சிரிச்சுப் போட்டு 'இதுவும் Ak குடும்பந்தான். ஆனால் இதின்ர பேர் T.56' என்றார்.
      ஒரு பொடிக்கும் விளங்கயில்லைப் போல. என்னை மாதிரியே முழுசிக் கொண்டிருந்தினம். பிறகு துவக்கை எப்பிடிப் பிடிக்கிறது, எப்பிடி சுடுறது என்று காட்டித் தந்தார்.
     எங்களுக்கு இன்னும் பொறுத்த ரெயினிங் தொடங்கயில்லை. ஓடுறது, முள்ளுக் கம்பிக்குள்ளால தவளுறது, மதிலேறுறது போன்ற ஐயிற்றங்கள்தான் நடக்குது. ஒரு ஐஞ்சு கிலோ வெயிற் உள்ள மரக்கொட்டன் ஒன்று தந்திருக்கினம். அதுதான் எங்கட துவக்கு. அதை கொட்டன் என்று சொல்லவும் கூடாது. சொன்னால் பனிஸ்மன்ற். மற்றும்படி ஒரிஜினல் துவக்கைக்  காணவும், அதை வைச்சு ரெயினிங் எடுக்கவும் இன்னும் நாளிருக்குது. அழுகுணியளுக்கு மட்டும் அட்வான்சாக அறிமுகப்படுத்திச்சினம்.
     நான் கன சினிமாவில துவக்கை பார்த்திருக்கிறன். துவக்கை மாறண்ணை என்னட்டத் தந்ததும் சினிமாவில பிடிக்கிற மாதிரி 'கிற் பொசிசனில' பிடிச்சன். மாறண்ணை விழுந்து விழுந்து சிரிச்சார். நல்லா சினிமாப்படம் பார்ப்பனோ என்று கேட்டார். எனக்கு பெரிய வெக்கமாக போயிற்றுது. துவக்கு பிடிக்கிறதை சொல்லித் தந்தார்.
     இப்ப நான் வலது கைப் பழக்கமுள்ள ஆளின்ட படியால், என்ர இடது உள்ளங்கை துவக்கின்ர 'போவேட் காட்'டில நல்லாப் பொருந்தத் தக்கதாக அமத்தி பிடிக்கச் சொன்னார். 'பிஸ்ரகிறிப்'பை வலது கையால பிடிச்சு, வலது தோள் மூட்டில நல்ல 'கிறிப்'பாக பிடிக்க சொன்னார். துவக்கின்ர 'பட்'டில கன்னத்தை வைச்சு, இடது கண்ணை மூடி வலது கண்ணால குறி பார்க்க சொன்னார். துவக்கு மேலும் கீழமாக அசைஞ்சுது. மனசை ஒருநிலைப்படுத்தி மூச்சை அடக்க சொன்னார். நிதானமாக ரிகரை அழுத்தச் சொன்னார். வெடி அதிர்வில துவக்கு ஒருக்கால் உதறிச்சுது. எனக்கு சரியான பயமாக போயிற்றுது.
     அழுகுணியள் எல்லாம் ஆளுக்கு ஒரு ரவுண்ஸ் அடிச்சம். துவக்கின்ர பாரம்தான் சிலருக்கு பிரச்சனையாக இருந்தது. வேறொரு பிரச்சனையும் ஒருத்தருக்குமிருக்கயில்லை.
     நாங்கள் துவக்கு தூக்கின கதையை மற்றப் பொடியளால நம்ப ஏலாமல் கிடந்தது. இரவு படுக்கையில இராகுலன் கேட்டான்- 'சுடேக்க எப்பிடியடா இருந்தது?' என்று. நான் யோசிச்சுப் போட்டு சொன்னன்- 'நான் நல்லா எய்ம் பண்ணி அமத்தின்னான். ரவுண்ஸ் போனது தெரியேல்லை. ஒருக்கால் உதறிச்சுது. அவ்வளவுதான்.'
     இதுக்கு பிறகு இரண்டு மாதம் கழியத்தான் ஒரிஜினல் துவக்கு ரெயினிங் தொடங்கிச்சுது. ஆயுதப் பயிற்சி மாஸ்ரர் புலிவேங்கை துவக்கை தூக்கி காட்டி –' இதின்ர பேர் ஆருக்கும் தெரியுமோ?' என்று வகுப்பை ஆரம்பித்தார்.
     நான் 'டக்'கென எழும்பி –' உது Ak குடும்பத்தை சேர்ந்தது. பேர் T.56' என்றன்.


                                     வர்கள் தனியார் துப்பறியும் நிறுவனமொன்றின் தகவல் மூலத்திலிருந்தே இந்த தகவலைப் பெற்றதாக தெரிகிறது. மிக இரகசியமாகவும், நேர்த்தியாகவும் திட்டமிட்டு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் ஆரம்பத்தில், அந்த பாதாள அறையிருந்த பகுதியை அமெரிக்க சிறப்புப் படையினர் சூழ்ந்து கொண்டனர். மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாதாள அறையின் வாசலை கண்டுபிடித்து அமெரிக்க படையினர் உள்நுழைந்தனர். மனிதனைச் செயலிழக்கச் செய்யும் ஒரு வகையான போதையூட்டும் வாயுவை உட்செலுத்திய பின்பே அவர்கள் உள்நுழைந்ததாகவும் தகவலொன்று உண்டு. எவ்வாறாயினும் அமெரிக்கப் படையினர் உள்நுழைந்த போது சதாம் உசைன் எதிர்ப்பெதனையும் காட்டவில்லை. நினைத்ததையும் விட வெகு சுலபமாகவே அமெரிக்கர்கள் அவரைக் கைது செய்தனர். அவரைக் கைது செய்த பின் அந்தப் பாதாள அறையை சோதனையிட்ட போது பெருமளவான பொருட்களைக் கண்டெடுத்தனர்.
     ஒரு தொகை அமெரிக்க டொலர்கள், ஒரு சிறிய கத்தி, கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தொகை ரவைகளும் ஒரு Ak 47 துப்பாக்கியும்.
('துப்பாக்கிகளும் கைவிட்ட சதாம் உசைன்' எனும் தலைப்பில் புதினப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரையிலிருந்து)
  ++++++++++++++++++++++++++++


                     'பாசத்திற்குரிய தமிழீழ மக்களே! நான் பேரினவாதத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நாங்கள் ஆண்டாண்டு காலமாக கத்தியின்றி ரத்தமின்றி செய்த போராட்டங்களை நீங்கள் இரத்தக் களரியாக்கினீர்கள். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் சந்ததியின் கைகள் இனியும் பூமாலை தொடுத்துக் கொண்டிருக்காது. இன்று நாங்கள் நீட்டிய கைகளை நீங்கள் உதாசினம் செய்தீர்கள்.
     நாளை எங்கள் பிள்ளைகள் பூக்கள் கொண்டு சமாதானம் பேச வரப்  போவதில்லை. உயர்த்திய அவர்களின் கரங்களிலொன்றில் எங்கள் சுதந்திர கொடியும், மற்றையதில் Ak 47 உம் தானிருக்கும். அவற்றின் வேட்டோசைகளின் வழி ஐ.நா முன்றலில் எங்கள் கோரிக்கை எதிரொலிக்கும்'
            என கந்தசாமியண்ணை பேசி முடிச்சதும் பொடியள் கோஸ்டி ஒன்று மேடைக்குத் தாவியது. கந்தசாமியண்ணை அவ்வளவு பெரிய அரசியல்வாதியொன்றுமில்லை. ஒரு உள்ளுர் பிரமுகர். அவ்வளவுதான். ஆனால் கரவெட்டியில தமிழரசுக் கட்சியென்றால் அது அண்கு;. அந்தந்த காலத்தில சூடாக இருக்கிற விசயத்தை எடுத்துக் கொள்ளுவார்.
     இரண்டு பேர் ஆளைத் தூக்க, அவர் இரண்டு கையையும் தூக்கிச் சனத்தக்கு கையசைத்தார். மிச்ச பொடியள் பிளேட் எடுத்து விரலைப் பிளக்கிறாங்கள். கமலமும் ஒரு பிளேட் தேடிப் பார்த்தான். இருக்கிற ஒரு பிளேட்டும் படு பிசியாக இருக்குது. தாமதிக்க ஏலாது. . பிறகு கந்தசாமியண்ணை மேடையால இறங்கிவிடுவார். இடுப்புக்குள்ள கை வைச்சு, வில்லுக் கத்தியை எடுத்தான். பெருவிரலை கத்தியில வைச்சு இலேசாக அமத்தினான். இரத்தம் சீறியது. கட்டை விரலை கந்தசாமியண்ணையின்ர ஏறிய நெற்றியில வைத்தான். அவரின்ர மூக்கு மட்டும் இரத்தம் வடிந்தது.
     அப்பதான் இவனை அடையாளம் பிடிச்சு ' ஆர் தம்பி நீ.. என்ர மகன் சுந்தரியோட படிச்ச பொடியன்தானே நீ.'
' ஓமண்ணை..'
'ஓஓ.. அதுதானே பார்த்தன். இவ்வளவு ஆர்வமா இருக்கேக்க..'
கமலம் கைகட்டி தலையாட்டினான்.
'போனகிழமைதான் சுந்தரி லண்டன் போனவன்.. கடிதமெழுதேக்க உன்னைப் பற்றியும் எழுதி விடுறன்' என்றார்.

மரபுவழி அடிப்படை இராணுவ பயிற்சி நூலிலிருந்து (பக்கம் 8-9):
     மனித அறிவுக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப, பல்வேறு வடிவங்களில் பல்வேறு தொழில்நுட்பங்களில் துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆயினும் இவற்றுள் Ak ரக துப்பாக்கிகளே பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இவற்றிற்கான கேள்வி அதிகமாகவுள்ளதது.  இதற்கான பிரதான காரணங்களாக அதன் செயற்திறன், இலகுவான தொழில் நுட்பம், பாவனைக்கு இலகுவான தன்மை, தூரவீச்சு, குறைந்த நிறை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
     பயிற்சியின் போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பழைய துப்பாக்கிகளிற்குப் பதிலாக, பயிற்சி நிறைவின் போது புதிய துப்பாக்கிகளும் அதற்கான ரவைகளும் வழங்கப்படும்.
     ஒரு துப்பாக்கியை வைத்திருப்பவர் கீழ் வரும் இரண்டு விடயங்களிலும் கவனமுடையவராக இருக்க வேண்டும்.
1.   பராமரிப்பு- யுத்த களத்திற்கு வெளியில் இருக்கும் போது உங்களது துப்பாக்கியை வாரமொருமுறை முழுச் சுத்தமும், வாரமிருமுறை அரைச் சுத்தமும் செய்தல் வேண்டும். விசேட சந்தர்ப்பங்களில் - யுத்த களத்தில், சூட்டுப் பயிற்சி காலத்தில்- பாவனைக்கு பின் உடனடியாகவே சுத்தம் செய்தல் வேண்டும். குறிப்பாக சுடுகுழலை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சுத்திகரிக்கப்படாத துப்பாக்கிகளினால் தொடர்ச்சியாக இயங்க முடியாது. ரவையறையிலும், சுடுகுழலிலும் எற்படும் காபன்படிவுகள் ரவையை இறுகச் செய்து, சுடுகுழலில் வெடிப்பை எற்படுத்தலாம். யுத்த முனையில் ஏற்படும் இவ்வாறான கோளாறுகள் உங்கள் உயிரையும் போக்க வல்லது.
2.   பாதுகாப்பு - உங்களிற்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளிற்குச் சகல சந்தர்ப்பங்களிலும் நீங்களே பொறுப்பாளியாவீர்கள். வரையறுக்கப்பட்ட வளங்களையுடைய அமைப்புக்களில் இருப்பவர்கள், துப்பாக்கிகளை தங்கள் உயிரினும் மேலானதாக பேணிப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவற்றை கொள்முதல் செய்து தளத்திற்கு கொண்டு வருவதற்கு அல்லது எதிரிகளிடமிருந்து அவற்றை மீட்பதற்கு ஏராளமானவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். உங்களிடமிருக்கும் துப்பாக்கியை, உங்கள் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டும். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தங்கள் உயிரை தியாகம் செய்தாவது துப்பாக்கிகளை பாதுகாப்பது ஒரு வீரமரபாக இருந்த வருகிறது.
                            இந்த சண்டைக்கு ஆமிக்காரர் என்ன பெயர் வைச்சிருக்கினம் என்று அப்ப எனக்கு தெரியாது. இப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் முன்னால ஆமிக்காரனின்ர அஞ்சு ராங் அடிச்சுக் கொண்டு வருது என்றதுதான். நாலைஞ்சு நாள் கழிய பால்ராஜ் அண்ணை மீற்றிங்கில சொல்லித்தான் தெரியும் சத்ஜெய-2 என்று.
     உருத்திரபுர றோட்டுக் கரையோட இருக்கிற தண்ணீர் வாய்க்கால் தான் எங்கட பொசிசன். எங்களுக்கு முன்னுக்கு எம்.ஜி.ஆர் ஓடியாடி பாட்டுப்படிக்க கூடிய நல்ல வயல்வெளி. என்னயிருந்தாலும் மோட்டுச் சிங்களவன் மோட்டுச் சிங்களவன்தான். அதுதான் இந்த வெட்டைக்குள்ளால மூவ் பண்ண வெளிக்கிடுறான் என அபிப்பிராயப் பட்டான் நரேந்திரன். அவன் மட்டக்களப்பு சைற் பொடியன். அவனை மாதிரிதான் எங்கட பொறுப்பாளர் ராஜேஸ் அண்ணையும் அபிப்பிராயப் பட்டிருக்க வேணும். வோக்கியில அந்த ரைப்பிலேயே கதைச்சுக் கொண்டிருந்தார்.
     வாய்க்காலுக்கு மேலால தலையைத் தூக்கி பார்த்தன். ராங்குகள் மெல்ல மெல்ல அசையுது. இடைக்கிடை குழலிலயிருந்து தீப் பிளம்பை கக்குது. அந்த செல்லுகள் சத்தத்தோட எங்களைக் கடந்து போய் வெடிக்குது.
     என்னட்டயிருக்கிற Ak-யால ராங்கிற்கு சுட்டு பிரியோசனமிருக்க போறதில்லை. அதால சுடயில்லை. ராங்கிற்கு பின்னால ஆமிக்காரர் நடந்து வருகினமோ என்றதை கவனிக்க தொடங்கினன்.
     முன்னுக்கு மூன்று ராங் வந்திட்டுது. நாங்கள் பேசாமலிருக்கிறதால எங்கட பொசிசனுகளை ராங் காரனால கண்டுபிடிக்க முடியயில்லை. வலது பக்கமாக நிலையெடுத்திருந்த கடல்வேந்தன் தன்ர R.P.G-யால குறிபார்த்துக் கொண்டேயிருந்தான். அடிக்கிறானில்லை. ராங் நல்லா கிட்ட வந்திட்டுது. 'அடியடா கடல்.. அடியடா' என்று நான் கத்தினன். அவன் ஆள் விண்ணன். நல்லா எய்ம் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறான். அவனின்ர R.P.G-க்கு பின்னால சிவப்பு தீப்பிளம்பு சீறத்தான் முன்னுக்கு பார்த்தன். நடுவில நின்ற ராங்கின் வலதுபக்க செயினில பட்டு வெடிச்சிருக்குது. செயின் அறுந்து விட்டது. ஒரு பக்க கால் உடைந்த கரப்பான் பூச்சியை போல, ராங் வட்டமடிச்சுக் கொண்டிருந்தது. அவன் அடுத்த செல்லை 'லோட்' பண்ணுறதுக்கிடையில பக்கத்து ராங்காரன், R.P.G-யின் தீப்பிளம்பை வைச்சு அவனை கண்டிருக்க வேணும். வேற பக்கம் திரும்பி நின்ற அந்த ராங்கின்ர குழல் கடல்வேந்தனிருந்த தென்னையை நோக்கி திரும்பியது. அவன் அதை கவனிச்சானோ தெரியயில்லை. செல்லை 'லோட்' பண்ணி எய்ம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆர் முந்தப் போயினம் என ரஜனி படம் பார்க்கிற திரில்லோட பார்த்துக் கொண்டிருந்தன். கடல்வேந்தன் ரிகரை அழுத்துவதற்கு முதல் செக்கன் ராங் காரன் அழுத்திப் போட்டான். ராங்கின்ர குழலிலயிருந்து தீப்பிளம்பு வெளிக்கிட நான் விழுந்து படுத்தன். வெடியோசை அடங்க தலையை தூக்கிப் பார்த்தன். கடலுக்கு முன்னால நின்ற தென்னை அடியோட சரிஞ்சு கிடக்குது.
     எங்கட லைனிலயிருந்த ஒரே R.P.G-யும் சரி. சுழன்றபடி நின்ற ராங்கை இன்னொரு ராங் கட்டியிழுத்துக் கொண்டு போனது. பின்னுக்கு நின்ற இரண்டு ராங்கும் அந்த இடத்திற்கு வந்து விட்டன. வோக்கி வைச்சிருக்கிற எல்லா லீடர்மாரும் 'R.P.G அனுப்புங்கோ.. R.P.G அனுப்புங்கோ' என்று மெயினுக்கு சொல்லிக் கொண்டிருந்தினம். இதுக்குள்ள, நாங்கள் இந்த வாய்க்கால் நீட்டுக்கும் தானிருக்கிறம் என்றதை தெரிஞ்சு செல்லடிக்க தொடங்கி விட்டான். செல்லடிக்கு தப்ப, வாய்க்கால் மண்ணை கையால கிளறி இரண்டு பக்கமும் சின்ன அணை கட்டிப் போட்டு படுத்தம். செல் பக்கத்தில விழ விழ, 'என்ட சிவனே.. என்ட சிவனே..' என்றபடியிருந்தான் நரேந்திரன். எனக்கு பத்திக் கொண்டு வந்தது. 'சிவனும் மசிரும்.. பேசாமல் படடா..' என்று பேசிவிட்டு,  செல்லடியில்லாத இடைவெளியில் முன்னுக்குக் கவனிக்கத் தொடங்கினன்.
     கொஞ்ச நேரத்தில R.P.G யோட ஒரு அக்கா ஓடி வந்தா. ஆள் கொஞ்சம் கட்டை. வாய்க்காலுக்குள்ளால குனிஞ்சு ஓடி வந்ததில அவவுக்கு ஒன்றும் தெரியேல்லை போல. 'எங்க ராங்.. எங்க ராங்' என்றபடி வந்தா. எங்களுக்கு முன்னால நிற்குதென்று சொன்னன். அவ கொஞ்சத்தூரம் தள்ளிப்போய் ஒரு தென்னையோட கவரெடுத்தா. அடுத்தடுத்து வேகமாக இரண்டு செல்லடிச்சா. ஒரு ராங் பத்தியெரிஞ்சுது. ஆள் நல்ல சண்டைக்காரி போல. அடிச்ச உடனேயே அந்த இடத்திலயிருந்து எழும்பி ஓடிப்போய் இன்னொரு தென்னையோட கவரெடுத்தா. அவ முதல் படுத்திருந்த இடத்திற்கு ராங்காரன் செல்லடிச்சான். புது இடத்திலயிருந்து அடுத்த ராங்கிற்கும் அடிச்சா. ஓரேயொரு செல்தான். ஏதோ படக்கூடாத இடத்தில பட்டிட்டுது போல. 'டப்'பென தீப்பிடிச்சிட்டுது. அவ அடுத்த செல்லை 'லோட்' பண்ணி அடிச்சா. செல் மிஸ். சீறுவானத்தை போல 'உஸ்ஸ்' என்ற சத்தத்துடன் வெள்ளைப்புகையை கக்கிக் கொண்டு அவவுக்கு முன்னாலேயே விழுந்தது. அந்த புகை அவவை காட்டிக் குடுத்திட்டுது. அவவும் ரென்சனாகி விட்டா போல. எழும்பியிருந்து கொண்டு அவசரஅவசரமாக அடுத்த செல்லை 'லோட்' பண்ணினா. அவசரத்தில பதற்றப் பட்டிருப்பா போல. கொஞ்சம் லேற். 'படுங்கோ அக்கா' என்று கத்திக் கொண்டு நான் விழுந்து படுத்திட்டன். புகையடங்க எழும்பிப் பார்த்தன். ஒரு ஆளிருந்ததற்கான எந்த தடயமுமிருக்கவில்லை. R.P.G-யின் சிறு துண்டொன்று தான் கிடந்தது.
     மிஞ்சி நின்ற ஒரு ராங் மெல்ல மெல்ல முன்னுக்கு வருது. கொஞ்சப் பொடியள் Ak யால சுடத் தொடங்கிச்சினம். சூடு வாற இடங்களிற்கு ஒவ்வொரு செல் அனுப்பியபடி ராங் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு செல்லுக்கும் AK சத்தங்கள் அடங்கத் தொடங்கிச்சுது. நான் சுடயில்லை. யானைக்கு நுளம்பு கடிக்கிறது மாதிரியிருக்கும். எனக்கு சரி நேராக வந்து கொண்டிருக்கும் ராங்கையே பார்த்துக் கொண்டிருந்தன்.
     கொஞ்ச நேரத்தில AK சத்தமெல்லாம் ஒய்ந்து விட்டது. ராங்கின்ர உறுமலும், செல் சத்தமும்தான் கேட்குது. ராங் எனக்கு சரி முன்னால இருபது மீற்றரில வர, நான் வாய்க்காலுக்குள்ள படுத்திட்டன். சத்தம் பெரிதாகி வரவர, நிலம் அதிர்ந்தது. வாய்க்கால் மண் எனக்கு மேல உதிரத் தொடங்கியது. நான் அண்ணாந்து பார்த்தன். வாய்க்காலுக்கு மேலயிருந்த வானத்திற்கும் எனக்குமிடையில் 'ஸ்லோமோசனில' ராங்குழல் நீண்டு வந்தது. வாய்க்கால்கரை மட்டும் வந்த ராங் அத்துடன் நின்று விட்டது. கையெட்டுற தூரத்தில ஒரு கரும் பிசாசு போல ராங் நிற்குது. AK என்ர கையை விட்டு நழுவியது. கன காலத்திற்கு பிறகு கண்ணை மூடி 'என்ர சிவனே' என்றேன்.


'உங்களில் யாருக்கேனும் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லும் துணிவிருக்கிறதா?...
இந்த கூட்டத்தில் ஒருவருமில்லையா?..'
'நானிருக்கிறேன் சேர்..'
'ஓ...நல்லது முன்னே வா..'
'இங்கே உட்கார்ந்திருக்கும் மூன்று பெண்களும் பயங்கரவாதிகள்.. இவர்களை உன்னால் கொல்ல முடியுமா?'
'ஓம் சேர்'
'நல்லது.. முதலில் உன் துப்பாக்கியை தயார் செய்து கொள்... பயங்கரவாதிகளை கொல்லும் போது அவர்களது உச்சந்தலையில் சுட வேண்டும். நன்றாக குறிபார்த்து சுட வேண்டும் புரிகிறதா?'
'ம்'
'ரெடி.. எய்ம்...பயர்'

கைகள் பின்னால் கட்டப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்த அந்த மூன்று பெண்களும் வரிசையாக விழுந்தனர். அவர்களது தலைகள் பிளந்திருந்தன. நீளமாக வடிந்தோடிய இரத்தம் தரையில் சிவப்பு பாளமாக படர்ந்திருந்தது.
     என்னையே முழுமையாக சுட்டெரிக்கவல்லதான கோபத் தீ எனக்குள் கிளர்ந்து கொண்டிருந்தது. அந்த காட்சிகள் என்னை நிலை கொள்ளாதவனாக்கின. பேயறைந்தது போல உட்கார்ந்திருந்தேன். அம்மா எவ்வளவோ கேட்டும் சாப்பிடப் போகவில்லை. அணைக்கப்பட்டிருந்த கணனியின் கறுத்த திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
     ஒரு காட்சிக்கூடமாக அது மாறிக்கொண்டிருந்தது. புதிய புதிய காட்சிகள் அதில் விரிந்தபடியிருந்தன. நான் கதிரையை விட்டு எழுந்து தப்பியோட முயன்றேன். முடியவில்லை. என்னை யாரோ கதிரையுடன் பிணைத்து வைத்திருக்க வேண்டும். அணைக்கப்பட்டிருந்த அதன் திரையில் உலகமிதுவரை கண்டிராத காட்சிகளும் ஓடத் தொடங்கின.
     நீண்ட வெட்டைவெளி. நிர்வாணமாக ஒரு மனிதன் கொண்டுவரப்படுகிறான். நன்றாக வெளிறிய மனிதன். அவனது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. பழுப்பு நிறத்திலான அவனது தலைமுடி பயத்தில் குத்திட்டு நின்றது. நான் நன்றாக பார்த்தேன். அது மிக்கெய்ல் கலாஸ்நிக்கோவ் தான். அவனது பூனைக் கண்களிலிருந்து மரணத்தின் கசப்பான எச்சில் வழிந்து கொண்டிருந்தது. அவனது பார்வை நிலைகுத்தியிருந்தது. உலகையே மாற்றிய அரிய கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்திய பெருமிதத்துடன் உலாவி வந்தவன், யார் என்பதே தெரியாதவர்கள் முன்பாக குறுகிப் போய் நின்றான். அவர்களும் அதற்காகவே அவனை நிர்வாணப்படுத்தியிருப்பதாக எனக்குப் பட்டது.
     ஒருவன் அவரது கண்களை கட்டினான். சதுப்பு நிலமொன்றில் அவனை முழங்காலில் உட்கார வைத்தனர். பிறகு,


            'ஐயோ...என்ன கொடுமை. என்னத்தால சுடுறாங்கள் பார்' என அம்மா கண்களை மூடிக்கொண்டா. தன்ணுணர்வின்றியிருந்த என்வாய் தானே சொல்லிக் கொண்டது-
'உது AK குடும்பத்தை சேர்ந்தது. பெயர் T.56'
                                   ◄
Image

2 comments:

  1. >>மனிச நடமாட்டமில்லாத இடமது. அதுக்குள்ள இரண்டு நாளிருக்க எனக்கெண்டால் எங்கட ஆச்சியின்ர முகம் தான் நினைவுக்கு வருது. என்னை மாதிரியே இன்னும் கொஞ்ச வட்டுக்காயளுக்கும் தங்கட இனசனங்களின்ர நினைப்பு வந்திருக்க வேணும். 'ஐயோ நாங்கள் வீட்டை போகப் போறம்..வீட்டை போகப் போறம்' என்று அழத் தொடங்கிய ஆக்கள் பத்துப் பன்னிரண்டு பேரிருக்கும்.
    -----
    ஹீ ஹீ என்னை மாதிரிப் பயந்தாங்கொள்ளிகளும் இருந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. பின்ன இருப்பினம்தானே. அந்த நேரம் ஆட்களை சமாதனப்படுத்தி விட்டால் சரி. பிறகு ஒரு பிடிப்பு வந்திடும். அந்த நேரம் அழாமல் இருந்த நான் எப்பவோ வந்திட்டன். அழுத சிலர் கடைசி மட்டும் வரமாட்டமென்று அங்கயே செத்தும் இருக்கினம். அங்க ஒரு பேய் வதந்தி உலவியது. அந்த நேரம்தான் எனக்கு தேவாரங்கள் தண்ணி பட்ட பாடமாயின.

    ReplyDelete