Friday, July 8, 2011

யோ.கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி (விமர்சனம்)- by: தமிழ்செல்வன்


லங்கையிலிருந்து வரும் எந்த ஒரு படைப்பும் எம்மை முதலில் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எத்தனை சௌகரியமான –அமைதியான-ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிற்க நிழலில்லாமல் ஓடித் திரியும் ஒரு வாழ்வைப் பற்றிய கதைகளை-கவிதைகளை- நாங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற மனம். முன்பு ஷோபா ஷக்தியின் ம்.. நாவல் குறித்து ஓரிரு பக்கங்கள் எழுதினேன். ஆனால் அன்று இருந்த மனம் இன்று எனக்கில்லை. அன்று புலிகளும் இருந்தார்கள். அவர்கள் மீதான எம் காட்டமான விமர்சனங்களும் சண்டைகளும் இருந்தன. இலங்கைப் பிரச்னையை அன்று நான் பார்த்த விதமும் வேறு. ஏதோ ஒரு நம்பிக்கை அன்று எல்லா வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு மிச்சமாக இருந்துகொண்டேயிருந்தது.

 யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் இன்றைய என் மனநிலை முற்றிலும் வேறாக இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் கதறிய வார்த்தைகள் எம் செவிகளில் விழுந்தும் ஏதும் செய்ய இயலாதவர்களாக-ஏதும் செய்யாதவர்களாக-ஏதேதோ வார்த்தைகளில் அல்லது வாதங்களில் முகம் புதைத்துக் கிடந்தோம். எப்போதுமே தமிழ்நாட்டில் நாங்கள் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்னைகளை எங்களின் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தோமே ஒழிய ஆழப் புரிந்து கொண்டு அக்கறையான முயற்சிகளைச் செய்தோமில்லை என்கிற கசப்பே என் அடி நாவில் படிந்து கிடக்கிறது. இன்றும்கூட அப்படித்தான் இருக்கிறோம். ஐந்தாம் கட்டப் போரை கொழும்புவில் நடாத்துவோம் என்று வீர உரைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். அல்லது இன்னும் தனி ஈழத்துக் குறைவாக எதையும் ஏற்க மாட்டோம் என்று அதே குரலில் இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

 எங்கள் முகத்தில் அறைகின்றன யோ.கர்ணனின் இக் கதைகள்.
 “சேர்.. நான் ஒரே பிள்ளை. அம்மாக்கும் ஏலாது. நாந்தான் பாக்க வேணும். நான் இயக்கத்தில இருக்கயில்லை. கொஞ்ச நாள் சம்பளத்துக்கு வேலை செய்தனான்” இந்த ஒரு வரிக்குள் உறைந்து கிடக்கிறது 30 ஆண்டுகளுக்கு மேலான ரத்தக் களறியின் வரலாறு. மீண்டும் மீண்டும் இந்த ஒற்றை வரி என் மனதைக் குத்திக் கிழிக்கிறதாக இருக்கிறது. இந்த மனநிலைக்கு அங்கு இளைஞர்கள் வந்து சேர்ந்த நெடும் பயணம் குறித்த நினைவில் பெருமூச்செரிகிறது. என் மகன் வயதையொத்த இளம் பிள்ளைகள் என்னவிதமான ஒரு மனவெளியில் வந்து நிற்கிறார்கள். இந்த மனதின் இடிபாடுகளிலிருந்து என்னவிதமாக அவர்கள் மீண்டுவரப் போகிறார்கள்? பரீஸ் வசீலியெவ்வின் அதிகாலையின் அமைதியில் நாவலைப் படித்து நாங்கள் செஞ்சேனையின் வீரத்தை எமதாக்கிப் புளகித்திருந்த நாட்கள் உண்டு. ஆதிரையின் கதை அதையெல்லாம் தாண்டி நிற்பதோடு இன்னும் இதுபோல சொல்லப்படாத வீரகாவியங்கள் எத்தனை எத்தனையோ என்கிற ஏக்கப் பெருமூச்சும் வருகிறது. ”பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ... நாங்கள் வந்திட்டம்” என்று வோக்கியில் குரல் வந்தும் அவசரப்பட்டு அநாவசியமாகத் தியாகியாகும் ஆதிரையின் கதை ஒரு ஆதிரையின் கதை மட்டுமா? ஒட்டுமொத்த இயக்கத்தின் கதையுமா என்கிற கேள்வியும் ஒரு வறண்ட துக்கச் சிரிப்பும் வாசித்த கணத்தில் நமக்குள் விரிகிறதுதான்.

 அப்பண்ணா என்கிற மனிதனைப் போன்ற எத்தனை பேரை இலங்கையின் வரலாறு உருவாக்கி உலவ விட்டிருக்கும்.எவ்விதப் பூச்சும் மினுக்கும் இல்லாத அசலான மனிதனாக பெருமிதங்களோடும் சிதைவுகளோடும் அப்படியே அப்பண்ணா நம்முன்னே விழுந்து கிடக்கிறார். அவரது தொலைபேசி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இங்கும் காலம் தப்பி.

 மேனன் ஸ்டூடியோ சதுரங்கனி சாப்பாட்டுக்கடையாக மாறிய சோகத்தை எள்ளலோடு சொல்லும் "பெயர்" கதை வெறும் அந்தப் பொடியனின் பெயர்ப் பிரச்னைக் கதை அல்ல. அந்தப் பொடியனுக்கு வில்லனைப் போல வாழ்ந்த செந்தமிழண்ணன் கடைசியில் முள்ளி வாய்க்காலில் அவனிடமே ”ஒரு தந்தையாக அவர்களை (மனைவி,  மக்களை) பாதுகாப்பாக அனுப்பி விட்டால் களத்தில் நிம்மதியாக வீரச்சாவு அடைவேன்” என்று அவர் நாத் தழுதழுக்கும் இடத்தில்.... என்ன என்ன மாதிரியான மனப் பிறழ்வுகளுக்கெல்லாம் நம் சனங்கள் ஆளாகி இந்த முப்பது ஆண்டுகளைக் கடந்தார்கள் என்று நினைக்க மனம் விம்முகிறது. அவர்கள் எங்கெங்கோ நின்றும் நடந்தும் ஒளிந்து திரிந்தும் கானக வெளிகளில் விட்ட பெருமூச்சுகளில் புத்தகங்களின் பக்கங்களைப்போல காலங்கள் வேகமாக ஓடிவிட்டன. முப்பதாண்டுகள் அசையாமல் நின்றிருந்த காலம் கடைசியில் இத்தனை வேகமாக ஓடிவிட்டது. துப்பாக்கிகளின் பிரகாசத்தில் இதுவரை பாடிய பாடல்களெல்லாம் கருகிப்போக, தப்பிய மக்கள் ஈழமென்னும் கனவுகள் அழிந்த மண்ணில் அலைந்து திரிகிறார்கள் இன்னும் விடாத கொடிய சாபத்தைப்போல அவர்களின் பாடல்கள் பின் தொடர.

 ஒவ்வொரு கதையும் சிதைவுறும் ஒரு மனநிலையைச் சொல்லும் கதையாகவே நகர்கிறது. நம்முடைய இயக்கம் உங்கடை இயக்கமாக மாறியதை சுதந்திரம் கதை வலியுடன் சொல்கிறது. பாதுகாப்பு வலயம் என்று சொன்னதை நம்பி மோசம் போன மக்களைப்பற்றிய கதையின் முடிவில் பக்கத்து வீட்டுக்காரர் ஓடிக்கொண்டே ”புதுசா முள்ளி வாய்க்காலில் பாதுகாப்பு வலயம் அறிவிச்சிருக்கிறானாம். எல்லோரையும் கூட்டிக் கொண்டு கெதியாப் போ” என்று சொல்லிச் செல்லும்போது என் மனம் அதிர்ந்தது. போக வேண்டாம் என்று என்னையறியாமல் என் தலை அசைந்தது. "திருவிளையாடல்" கதையை சர்வதேச மனித சமூகத்துக்கு முதுகு காட்டிக் கடவுளிடம் பேசும் கதையாக வதைமிகு பகடியாக நான் உணர்ந்தேன் –உங்களை நம்பி என்னப்பா ஆகப் போறது என்கிற வாதையின் வெளிப்பாடு. இனியும் ரஜினிகாந்த் மாதிரி வெயிற் பண்றது சரியில்லே...நம்பிய யாருமே வன்னி மக்களைக் காப்பாற்ற வரவில்லை. றூட் கதையும் சடகோபனின் விசாரணைக்குறிப்பும் இன்னும் பிரபாகரன் சாகவில்லை என்று நம்பி நிற்கும் எம் சகோதரர்கள் வாசிக்க வேண்டும். இயக்கத்தின் வெற்றுக் கூடான போக்குகளைப் போகிற போக்கில் தூக்கியடிக்கும் வரிகள் பல உண்டு. ”இந்தப் போஸ்டர்கள்,பொங்கு தமிழுகளைப் பார்க்க இவனுக்கும் நரம்பு புடைச்சதுதான்”

 ”கொடுமையைச் சிரிச்சுத் தான் கழிக்கணும்” என்றொரு சொலவடை எம்பக்கம் உண்டு. சிரிச்சுத்தான் கழிக்க முயன்றிருகிறார் யோ.கர்ணன். நம்மால் சிரிக்க முடியவில்லை. உயிர் அதிர வாசித்த கதைகள் இவை. கதைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத ஆழமும் துயரும் ததும்பும் கருணாகரனின் முன்னுரை நம்மை அலைக்கழிக்கிறது. ஈழத் தமிழர்கள் யோ.கர்ணனின் இக் கதைகளின் வழியாக இந்த உலகத்தோடு மீண்டும் பேசத் துவங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சு எவருடைய நிலைபாடு சரியென்பதை நிரூபிக்கப்போகிறது என்கிற நாசமாப்போன நம்முடைய வாதப் பிரதிவாதங்களைக் குப்பையில் தள்ளி விடுவோம். உலகம் கண்விழித்துப் பார்த்திருக்க –வேடிக்கை பார்த்திருக்க- கதறிக் கதறி ஓடிச் செத்து மடிந்த ஒரு இனத்தின் குரலை இப்போதேனும் நிதானமாக முன் முடிவுகளின்றிக் கேட்போம்.

 பி.கு.: 
நான் இத் தொகுப்பைப் படித்து விட்டேன் என்று ஃபேஸ் புக்கில் எழுதியதைப் பார்த்து விட்டு யோ.கர்ணன் எழுதியிருந்த வரிகள்:
"வணக்கம் அண்ணை, நீங்கள் அனுப்பிய தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் நீண்ட நாட்களாக- வாசிக்க ஆரம்பித்த காலம் முதல் உங்கள் எழுத்தை படித்து வந்திருக்கிறேன். உங்களது வெய்யிலோடு போய் இப்போதும் வீட்டில் உள்ளது. இதை ஏன் சொல்ல வந்தேன் எனில், இடப்பெயர்வின் போது நிறைய புத்தகங்கள் விடுபட்டுப் போயிற்று. எஞ்சிய சிலவற்றுள் உங்களதும் ஒன்று. உங்கள் தம்பியினது எழுத்துக்கள்தான் மிக அதிகமாக என்னை ஒரு காலத்தில் அலைக்கழித்திருந்தன. வேறென்ன. கட்டுரையை பார்த்திருக்கிறேன்.
மிக்க அன்புடன் யோ.கர்ணன்."
கம்பராமாயணத்தில் ”தோழன் என்றவர் சொல்லிய சொல்லன்றோ” என்று குகனை அலைக்கழிக்கும் ராமனின் வார்த்தை போல கடந்த ஒரு வாரமாக யோ.கர்ணனின் அண்ணை.. என்கிற ஒரு வார்த்தை என்னை அலைக்கழிக்கிறது. எத்தனையோ தம்பிகள் எனக்கு. அண்ணே என்றவர்கள் அழைக்கும்போது நெகிழ்வேன். ஆனால் தம்பி யோ.கர்ணன் போரில் ஒரு காலை இழந்து தடுமாறி நின்றபோது ஓடிச்சென்று தோள் கொடுக்காத எம்மையெல்லாம் அண்ணை.. என்றழைக்கையில் என் உடல் கூசுகிறது. எனினும் அந்தக் குற்ற மனத்தோடே தம்பியை இருகரம் நீட்டி ஆவிசேரக் கட்டியணைக்கிறேன். இந்த அணைப்பில் எல்லாம் கரைந்து போகட்டும் -இதோ வழியும் என் கண்ணீரோடு சேர்ந்து....

 ◄
Facebook

No comments:

Post a Comment