மலேசியாவிலிருந்து இயங்கும் இணைய இதழான வல்லினத்தின் ஆசிரியர் நவீன் மற்றும் மணிமொழி ஆகியோர் அண்மையில் இலங்கை வந்திருந்தனர். ஏற்கனவே இவர்களுடன் எனக்கு அறிமுகம் இருந்ததில்லை. றியாஸ்குரானாதான் தொடர்பேற்படுத்தி தந்திருந்தார். மலேசியாவில் இருந்து புறப்படும் முன் தொடர்பு கொண்ட நவீன், செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளை யாழ்ப்பாணத்தில் சந்திக்க விரும்புவதாக சொன்னார்.
எனக்கு ஓரிரண்டு பேரைத் தவிர மற்றவர்களுடன் அவ்வளவு தொடர்பில்லை. கண்ட இடத்தில் 'இன்னும் உயிரோடிருக்கிறீர்களா' என்ற அளவில் பேசிக் கொள்வோம். அவ்வளவே. இரண்டொரு நண்பர்களிடம் விடயத்தை சொல்லி எற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தேன்.
சேனா அண்ணை, கோணேஸ் அண்ணை மற்றும் நான் என 'மூவர் கொண்ட அணி' அன்று மதியம் யாழ் டில்கோ ஹோட்டலில் நவீனைச் சந்தித்தோம். அப்படியே யாழ் நூலகத்தின் அருகிலிருந்த சுப்ரமணியம் பூங்காவில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்தோம் என்பது கூட சரியான வசனமல்ல. கோணேஸ் அண்ணை பேச மற்றவர்கள் கேட்டார்கள் என்றுதான் சொல்ல வேணும். அவர் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசினார். தவிரவும், அவர்கள் இயங்கும் தேடகம் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தேவை பற்றியெல்லாம் விரிவாக பேசினார் (அவர் ஒரு சுவாரஸ்யமான பேச்சாளராக இருக்கலாம்).
பிறகு யாழ் நூலகம் சென்றோம். அண்மையில் சுற்றுலா வந்த சிங்களவர் 'கேம்' கேட்டதனால் இப்போது பார்வையிடும் நேரம் மாலை 5 தொடக்கம் 6 என மட்டுப்படுத்தியுள்ளனர். நாங்கள் போன அன்று பார்த்துத்தான் நல்ல வடிவான சிங்கள பெட்டையள் எல்லாம் வந்திருந்தனர். நவீனைச் சமாளிப்பதா அவர்களைப் பார்ப்பதா என்ற பெரும் பிரச்சினையில் நான் மாட்டுப்பட்டிருந்தேன். அன்று பார்த்து - கலாவண்ணன் வந்திருக்கவில்லை. அவன் வந்திருந்தால் வலு சீரியஸான விசயம் கதைக்கும் பாவனையில் முகத்தை வைத்து கொண்டு போய் அவர்களுடன் கட்டாயம் 'ஆட்டையை'ப் போட்டிருப்பான்.
பிறகு யாழ் கோட்டை வழியெல்லாம் பேசியதில் மலேசிய மற்றும் இலங்கை இலக்கியத்திற்கிடையில் அறிமுகத்தையும் தொடர்பையும் எற்படுத்தி விட வேண்டுமென்பதில் நவீன் கொண்டிருந்த ஆர்வம் தெரிந்தது. உண்மையில் அது முக்கியமானதும் கூட. கிட்டதட்ட இந்த இரு நாட்டுச் சூழலும் ஒன்று தான். இந்திய கலாச்சாரத் தாக்கம் இரு நாட்டிற்கும் பொதுவானது தான். எங்களைப் போலவே அவர்களாலும் இலகுவில் விடுபட முடியாத பிரச்சனையது. ஈழப் புத்தகங்கள் மலேசியாவிற்கோ, மலேசிய புத்தகங்கள் ஈழத்திற்கோ வருவதென்பது இதுவரை ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இணையவழி அறிமுகம் உள்ள படைப்பாளிகள் தவிர வெறெந்த வழியிலும் பல நாட்டு படைப்பாளிகளும் பரஸ்பரம் அறிமுகம் அற்றேயிருந்தனர். இந்த நிலையை மாற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
கோட்டையில் நின்று பண்ணை பாலத்தின் வழியாகப் பார்த்து 'இதுதான் சோபாசக்தியின் ஊருக்கு போகும் வழியா' எனக் கேட்டார்.
இரவு ஏழு மணியளவில் டில்கோ ஹோட்டலில் யாழ்ப்பாணத்திலிருக்கும் மற்ற நண்பர்கள் வந்தனர். ஓரிரண்டு நண்பர்கள் தமக்கு தெரிந்த சிலரையும் கூட்டி வந்திருந்தனர். அறை கொள்ளாத கூட்டம். இரு நாட்டிற்குமிடையிலான இலக்கிய தொடர்பிற்கான தேவையை, அதற்காகப் படைப்பாளிகள் எனப் படுபவர்கள் உழைக்க வேண்டிய தேவையை நவீன் சொல்லிக் கொண்டிருந்தார். நிறைய கமராக்கள் படம் பிடித்தன. இப்போது டிஜிற்றல் கமரா வந்து விட்டதனால் பிரச்சனையில்லை. முந்தி பிளாஸ் அடித்து ஏமாற்றும் காலம் எனக்கு நினைவுக்கு வந்தது. எங்களையும் முந்தி இப்படி சிலர் ஏமாற்றியிருந்தனர்.
புத்தகங்கள் எல்லாம் பரிமாறிக் கொண்டோம். இரண்டு துருவங்கள் போல அறிமுகமற்று இரண்டு தமிழ்க் கூட்டங்கள் இருப்பது தெரிந்தது. தமது வல்லின இதழில் ஈழத்தவர்கள் எழுத வேண்டும் என அவர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். நம்மவர்களும் வெற்றிப் புன்னகை செய்து ஏற்றுக் கொண்டனர்.
மலேசியா போன பின்னும் தொலைபேசியில் பேசி இந்த தேவையை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். சொல்லில் அல்லாமல் செயலிலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார். இம்மாத வல்லின இதழில் அதற்கான தேவையையும் செய்ய வேண்டிய பரஸ்பர வேலைத் திட்டத்தையும் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்தில் இலங்கைப் பக்கம் என்ற ஒன்று ஒதுக்கலாமா எனவும், அதற்கு எழுத கேட்பதற்காக அன்று கலந்துரையாடலிற்கு வந்தவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்புமாறும் கேட்டிருந்தார். நான் அனுப்பியிருந்தேன்.
தவிரவும் அந்தச் சந்திப்பிற்கு அழைத்து சென்ற யாழ் இலக்கியத் தூண்கள் மலேசிய இலக்கியத்தை இங்கு எவ்வாறு அறிமுகம் செய்ய போகிறார்கள் என்று அல்லது அதற்கு என்ன முயற்சி எடுக்க போகிறார்கள் என்ற சந்தேகம் கடந்த வாரம் முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது.
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு நண்பரை நேற்றுச் சந்தித்தேன். அவரிடம் நவீனிற்கு மின்னஞ்சல் முகவரி கொடுத்ததை சொன்னேன். அவர் 'டக்'கென சொன்னார் -
'நான் ஈமெயில் பாவிக்கிறதில்லை'
◄
சிங்களப் பெட்டைகளைப் பிறகும் பார்க்கலாம்:-)
ReplyDeleteகொஞ்சப்பேர் தமிழீழம் காணுகிறோம் என்று தான் அடம்பிடிக்கிறாகள்.
ReplyDelete