Friday, October 7, 2011

கவிதைகள் (3)




01.
வண்ணத்தப்பூச்சிகள் போன பாதை


போதையை மறைக்கலாம்
காலி மதுக் குப்பிகளை எங்கு வைப்பது
யாருக்கும் தெரியாமல்?

இப்போது
ஏழுகடல் எட்டு மலை கடந்த இளவரசன்
நீளமுடி மந்திரவாதியின் சிரம் சீவுகிறான்
சிறை மீளும் இளவரசி
கட்டியணைக்கிறாள் அவனை

நான் இன்னொரு மதுக் குப்பியை நேசிக்கிறேன்.

மதுக் குப்பிகளை நேசிக்க தெரியாதவனின்
சுவடுகளின் ஒற்றை வரிசையில் பரிகாசத்திற்கென்னயிருக்கிறது?

காற்றைப் போல
வண்ணத்தப்பூச்சியைப்  போல
தடங்கள் பதிக்காத உனது பயண வழியெது?

பறந்து போன வண்ணத்தப் பூச்சியை நினைத்து
பூவொன்று தற்கொலை செய்யுமா என்பது தெரியவில்லை.

கனவின் அரூபத்திற்குமஞ்சுகிறேன்.
வெளியெ ஒலிக்கும் மணியொசைகளிற்கு மஞ்சுகிறேன்.
ஒரு யுகமாகவே மூடியிருக்கிறது
திருமண அழைப்பொன்றுடன் வரப்போகும்
தபால்காரனிற்கான என கதவு

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
வண்ணத்துபூச்சியொன்று தற்கொலை செய்து கொள்வதை

18.12.2005

 =====================================================
02 
நீயிருந்த இடம்

நண்பா.
நீ போய் விட்டாய்.

சித்தாந்தங்கள் நமது சிறகுகள்

வெற்று வெளியில் வெறிக்கும் சிறு சட்டகமொன்றினுள்
உன்னை சுருக்கின அவை
ஆயினும்
உனக்காக சமாதானங்கள்
எங்கள் எல்லோரிடமும் உண்டு.
நமது பணயம் நெடியது
பாதை கொடியது
தரிப்பிடம் இதுவல்ல
தங்கி விட
உயிரோய்ந்து விடவுமில்லை
எல்லோரும் உச்சரிக்கையில்
நான் மௌனித்திருந்தேன்.

முற்றுப்பெறாத உன் கனவுகளும்
தீர்க்கப்படாத ஆசைகளும்
எழுதப்படாத உன் காதலின் கணங்களும்
இன்னும் உயிரோடிருக்கும்
ஒரு மாலை
ஒரு படம்
குனிந்த தலைகளின் கணமொன்று
எது ஈடாகும் இவைக்கு?

எது பற்றியும் கவலை கொள்வதில்லை
எங்கள் மனிதர்கள்.
உண்கிறார்கள். உறங்குகிறார்கள்.
காதலிகளோடு பேசுகிறார்கள்.
மற்றும் கொல்கிறார்கள்.

நீதானில்லை
இதையெல்லாம் பார்க்க

நண்பா,
மன்னித்து விடு அனைவரையும்.
அவர்கள் இங்குதானிருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாது
உன் காலியான வெற்றிடத்தில்
இன்னொருவனை இருத்தி

20.10.2005

  =====================================================
03
சொல்வதற்கில்லை
இங்கே
உறைந்திருக்கும் என் குருதியினடியில்
மறைந்திருக்கலாம்
நீங்கள் எய்த பாணங்களும்


No comments:

Post a Comment