Thursday, May 26, 2011

மௌனம் சம்மதமல்ல (கட்டுரை)

லங்கை இப்பொது மிக அமைதியாக இருக்கின்றது. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி முடிவுகளிற்காகவும் பண்டிகைகளிற்காகவும் மட்டுமே இலங்கையில் இந் நாட்களில் வெடிச் சத்தங்கள் கேட்கின்றன. முன்னரெல்லாம் வெடிச் சத்தங்கள் அச்சத்தினதும், மரணத்தினதும் அடையாளங்களென்றும் தமது ஆட்சிக் காலத்தில் அது வெற்றியினதும் குதூகலத்தினதும் அடையாளங்களாக இருக்கின்றன என்றும் யாழ்ப்பாணம் வரும் அமைச்சர்கள் தவறாமல் சொல்கிறார்கள். இதில் உண்மையும் இல்லாமலில்லை. அடையாள அட்டை.  பாஸ். ஊரடங்கு. சுற்றிவளைப்பு. கைது. காணாமல்போதல். உணவுத் தடை   போன்ற யுத்தகாலத்திற்கு மட்டுமேயான அனுபவங்களையும் சொற்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த ஒரு தலைமுறை புதிய உலகமொன்றை இப்போது காண்கிறது.

 விரைவான பொருளாதார வளர்ச்சியே நீடித்த சமாதானத்திற்கான அத்திவாரமென கருதிய அரசு, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற கவர்ச்சிகரமான பெயர்களுடன் தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்திருந்தது. இந்த திட்டங்கள் செயற்பட்டனவோ இல்லையோ இவற்றிற்காகப் பெருமளவு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. சிதைவடைந்த கட்டடங்களின் மேலே கூட வடக்கின் வசந்தத்திற்கான சுவரொட்டியிருந்தது. மகிந்த ராஐபக்சவின் ஒரு சகோதரரான பசில் ராஐபக்ச இவற்றிற்கு பொறுப்பாக இருந்தார். ஒரு முறை கிளிநொச்சியில் பசில் உரையாற்றும் போது - "யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர மிகுதியனைத்தையும் நாம் பெற்றுத் தருவோம் " என சொன்னார். அப்போது ஊடகங்கள் இந்த கவர்ச்சிகரமான உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இப்போது வரை இலங்கையிலிருக்கும் பெரும்பாலான ஊடகங்களில் அமைச்சர்கள் அல்லது அரச சார்பு முன்னாள் ஆயுதக் குழுக்கள் ஏதாவதொரு திட்டத்தையோ கட்டடத்தையோ திறந்து வைக்கும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.இலங்கை குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளும் ஒருவர் ஈழத் தமிழர்களின் புனர்வாழ்வு குறித்து நிச்சயம் திருப்தியடையலாம்.  அமெரிக்காவின் மனித உரிமைகளிற்கான வருடாந்த அறிக்கையில் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்தும், ஐனநாயகம் குறித்தும் இந்த வருடமும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அமெரிக்காவின் அவதானிப்புக்கள் இந்த விடயத்தில் சரியாகவேயிருக்கின்றன. அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் ஊடகவியளாலர்களும் ஊடக நிறுவனங்களும் அதற்காக மிகப் பெரிய விலையை கொடுப்பது இன்று வரை தொடர்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம் பிரகீத் எக்னெலிகொட. அவர் பற்றிய எந்த தகவலும் இதுவரையில்லை.இலங்கையிலிருக்கும் அரசியல்வாதிகள் முதல் ஊடகங்கள் வரை தமிழர் பிரச்சனையில் அரசாங்கத்தை இப்போது சங்கடப்படுத்துவதில்லை.  தமிழ்தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே  ஓரளவிற்கு பேசிவருகிறது. யுத்த காலத்தில் வடக்கு கிழக்கிற்கு,யுத்தத்தின காரணத்தால் செய்தியாளர்கள் செல்லமுடியாதிருந்தனர். இன்று, மிக நுட்பமான பிரச்சார பொறிமுறை திட்டமொன்றினூடாக அவர்களை நெருங்கவிடாமல் வைத்திருக்கிறது. இந்த சூழலில் ஊடகங்கள் காட்டும் அபிவிருத்தியின் பயன் சாதாரண தமிழர்களிடம் வந்த சேர்கிறதா என்ற மிகப் பெரிய கேள்வியுள்ளது.ஏனெனில் இன்று தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவோ அல்லது தமிழர்களின் உரிமைகளிற்காக குரல் கொடுக்கவோவல்ல ஊடகம் எதனையும் தமிழர்கள் வைத்திருக்கவில்லை. வன்னியின் தொலைவுக் கிராமங்களில் உள்ள அகதிகள் நிவாரணங்களை பெறுவதில் புறக்கணிக்கப்படுவத போலவே ஊடகங்களாலும் எட்ட முடியாமல் இருக்கின்றனர். இதற்கு தனியே ஊடகங்களையும் பிழை சொல்ல முடியாது. இன்றைய நிலையில் அந்த கிராமங்களிற்குச் செல்வதற்கு நிறைய பாதுகாப்பு கெடுபிடிகளை பத்திரிகையாளர்கள் சந்திக்க வேண்டும்.  உண்மையான வன்னி (யுத்தம் பாதித்த, அகதிகளின் அவலம் நிறைந்த) ஏ.9 வீதியால் பயணிக்கும் போது காணும் காட்சிகளல்ல. அந்த வீதியில் இருந்து கிளைவிட்டுச் செல்லும் வீதிகளின் ஓரங்களில் கூடாரங்களில் இருக்கும் இலட்சக்கணக்கானவர்களே வன்னியின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். வெடிச் சத்தங்களும்,மரணங்களும், யுத்தகால அவலங்களும் இல்லையென்ற அளவில் மட்டுமே இப்போது அவர்கள் திருப்திப்பட முடிகிறது. இதனை தவிர்த்தால் இன்றைய அவர்களின் வாழ்வுக்கும் யுத்தகால வாழ்விற்குமிடையே பெரிய வித்தியாசமில்லை. அவர்களைச் சூழ இராணுவக் காவலரண்களும் ஆயிரக்கணக்கான சிப்பாய்களும் இன்னுமிருக்கின்றனர். சுற்றிவளைப்பாக இல்லாவிட்டாலும் சோதனைகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டுதானிருக்கிறது. மின்சாரமில்லை.,வேலையில்லை, நிவாரண நிறுத்தம், பாதுகாப்பு கெடுபிடிகள் என அவர்கள் நெருக்கடிகளையே தொடர்ந்தும் எதிர்கொண்டபடியிருக்கிறார்கள். காடும் காடுசார்ந்ததுமான வன்னிப் பகுதிகளில் அடர்த்தி குறைவாக வாழும் சனங்கள் புதிய வகை நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்கள். பாதுகாப்பு நடைமுறைகள்,சோதனை என்ற போர்வையில் வரும் இராணுவத்தினரால் பாலியல் ரீதியான தொந்தரவுகளிற்கு உட்படுகின்றனர். இது குறித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இப்படி ஒரு சம்பவத்தை அண்மையில் விசுவமடு பகுதியில் மீள் குடியேறிய ஒரு குடும்பம் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தனது தாயுடனும் பிள்ளைகளுடனும் இருந்த இளம் தாயொருவர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் வந்த இராணுவத்தினரால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளார். தாய் தடுத்தபோது அவரை கட்டி வைத்துவிட்டு அருகிலுள்ள பற்றைக்குள் இழுத்த செல்லப்பட்டு  பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அந்தப் பெண் அடையாளம் காட்டியதனால் நான்கு இராணுவத்தினர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கை வரலாற்றில் குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினர் தண்டிக்கப்படுவது மிக அரிது - ஓரிரண்டு விதிவிலக்கு தவிர. புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட புலிகளை வீடுகளிற்கு வந்து கண்காணிப்பதை இராணுவத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த பகுதிகளிலுள்ள முன்னாள் பெண் புலியுறுப்பினர்கள் பலர் விசாரணையென்ற பெயரில் தாம் இம்சிக்கப்படுவதாக தொடர்ந்து பலரிடம் முறையிட்டபடியே இருக்கின்றனர். யாரும் இது பற்றி அக்கறையெடுத்ததாகத்  தெரியவில்லை.பெருமெடுப்பில் கொண்டாடப்பட்ட யுத்த வெற்றி கொண்டாட்டங்கள், தமிழர்களின் புனர்வாழ்வு குறித்த அதீத பிரச்சாரங்கள் என்பவற்றுக்கும் சாதாரண வன்னி அகதிக்கும் இன்னும் எந்தத் தொடர்பும் ஏற்பட்டு விடவில்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகும் போதும் அவர்கள் கூடாரங்களிலும் மர நிழல்களிலுமே யிருக்கின்றனர். அவர்களில் பலர் முன்னர் சொந்தமாக வீடு கட்டியிருந்தவர்கள். வேறு ஒரு சாரார் இன்னும் தமது கிராமங்களிற்கே செல்ல முடியாமலிருக்கின்றனர். யுத்தத்தின் பின் அரசு வழங்கிய சிறு தொகை பணத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகள், வசதி படைத்தவர்கள் கட்டிய வீடுகளைத் தவிர வேறெந்த வீடும் இன்னும் அங்கு கட்டப்படவில்லை.       உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சனையை அரசு இப்போதும் பாதுகாப்பு விவகாரங்களுடனேயே தொடர்புபடுத்திப் பார்த்தபடியிருக்கிறது. வன்னி விவசாயத்தைப் பிரதான தொழிலாக கொண்ட இடம். தமது வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதிருக்கும் இந்த விவசாயிகளிற்கு இது வாழ்க்கை மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சனை. அரசு தொடர்ந்தும் இதனை கணக்கிலெடுக்க மறுத்துவருகிறது.கிளிநொச்சியில் திருமுறிகண்டி, இரணைமடு போன்ற பிரதேசங்களை இராணுவக் குடியிருப்பாகவே மாற்றி விட்டார்கள். இது போன்ற கதைகள் ஒவ்வொரு இடங்களிலுமுள்ளன. அந்த இராணுவக் குடியிருப்பு காரணமாக வன்னியிலுள்ள பெரிய குளங்களிலொன்றான இரணைமடுவில் மேற்கொள்ளப்படும் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட ஏராளம் குடும்பங்கள் நடுத் தெருவிற்கு வந்துள்ளன. அந்தக் குளத்தில் மீண்டும் மீன்பிடித் தொழில் மேற்கொள்ள அனுமதிக்குமாறு இங்குவரும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து மக்கள் முறையிட்டுவருகின்றனர். ஒருமுறை பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் கிளப்பப்பட்டபோது அந்த குளத்தில் மீன் பிடிக்கலாம் என கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் ராஐித சேனாரத்தின கூறியிருந்தார்.ஆனால் பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. கேட்டால் பாதகாப்பு செயலரின் அனுமதி வேண்டும் என்கிறார்கள். மகிந்தவின் இன்னொரு சகோதரரான பாதுகாப்பு செயலர் தான் இன்றைய திகதியில் பாதுகாப்பு விவகாரங்களில் கிங் மேக்கர்.      இப்பொது தமிழர் தரப்பில் அரசியல் களத்தில் பத்துவரையான கட்சிகளும் முன்னாள் ஆயுதக் குழுக்களுமுள்ளன.அனைவரும் ஒருகாலத்தில் தமிழீழமென்றோ அல்லது அதற்கு சமமான ஏதோவொன்றையே தமது கொள்கையாக அறிவித்துக் கொண்டவர்கள். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர மிகுதியனைவரும் ஏதோ விதத்தில் அரசுடன் ஒட்டி உறவாடுபவர்கள். மக்கள்படும் அவலத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு இவர்களும் கொண்டுள்ளனர் ஏனெனில் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களிடம் வாக்கு கேட்கிறார்கள்.. ஆனால் யதார்த்தம் மிக கசப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமே புலிகளுக்கு பின்பாக வெற்றிடமாக உள்ள தமிழ் அரசியல் தலைமையை கைப்பற்றுவதிலேயே முழுக் கவனத்தையும், சக்தியையும் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஓரளவிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து வருகிறது. அரசாங்கத்துடன் ஒட்டியிருந்த ஆயுதக் குழுவான டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் - தமது பாவங்களை போக்கிக் கொள்ள. ஆனால் அவர்களின் நடவடிக்கையில் அந்த முதிர்ச்சி தெரியவில்லை. மகிந்த ராஐபக்சவின் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை போன்ற அளவில் அவர்களது செயற்பாடுள்ளது. அண்மையில் வெளியான அமெரிக்க மனித உரிமைஅறிக்கையிலும் அவர்கள் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள் செய்கிறார்கள் என ஆதாரத்துடன் குறிப்பிடப் பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக குறிப்பிடப்பட்டிருந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு மணல் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை சட்ட வரையறைகளுக்கு அப்பால் அவர்களிடமே அரசு ஒப்படைத்துள்ளது. இதில் தினமும் பல கோடி பணத்தை வருவாயாகப் பெற்று வருகிறார்கள். அவர்களால் மெற்கொள்ளப் பட்டு வரும் மணல்த் திருட்டு தொடர்பாக தனது பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததுடன் அதற்கெதிராகப் போராடிய ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.         இந்த யுத்தத்தைத் தனியே இலங்கை மட்டுமே செய்திருக்கவில்லை. அயலிலுள்ள இந்தியா முதல் சம்பந்தமேயில்லாத ரஸ்யாவரை வந்து போய் விட்டார்கள். தமிழர்கள் இனி ஐனநாயகமுறையான தெரிவுகளை மேற்கொள்ள உதவி புரிந்து விட்டோம் என்றபடி வவனியா இடம்பெயர்ந்தவர் முகாம்களிற்கு ஒரு சில வாகனங்களை யனுப்பியிருந்தனர். வகைதொகையில்லாமல் ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் கொடுத்தவர்கள் பின்னாளில் ஆளுக்கொரு பிஸ்கட் பையையும், தண்ணீர்ப் போத்தலையும் வழங்கி தமது கடமைகளை முடித்துக் கொண்டு விட்டனர். உண்மையில் யுத்தகாலத்திலும், அகதி முகாம்களிலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆற்றிய பணி மகத்தானது. பாதுகாப்பு வலயத்தில் இறுதிவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நின்றது. காயம்பட்டவர்களைப் படகுகள் மூலம் கப்பலுக்குக் கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தார்கள். ஐ.நா வின் முகவரமைப்புகள் இறுதிவரையில்லா விட்டாலும் ஓரளவிற்கு நின்று உணவு விநியோகத்தை சீர் செய்தனர். இது போல பல தொண்டு நிறுவனங்களிருந்தன. ஆனால் தொண்டு நிறுவனங்களைப் பின்னாளில் முகாம்களிலிருந்தே அரசு வெளியேற்றி விட்டது. மீள் குடியேற்றப் பகுதிகளிலும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.அதற்கும் பாதுகாப்பு காரணங்களையே சொன்னது. தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்ட்டிருக்குமானால் சில வேளைகளில் ஒரு சிறு தொகை வீடுகளாவது கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கலாம்.   யுத்தத்தில் இந்தியாவின் பங்கும் வெளிப்படையானது. மறைமுகமாக இன்னும் ஏராளமிருப்பதாகவே தமிழ் மக்கள் இன்றும் கருதுகிறார்கள். இலங்கை விவகாரத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய வெளிநாடு இந்தியாதான். இந்தியா தீர்வு விடயத்தில் உருப்படியாக எதனையாவது செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காலம்காலமாக தமிழர்களிடம் இருந்து வருகிறது. 'யுத்தம் முடிந்துவிட்டது தமிழர்களின் உரிமைகளுக்காக கொழும்பை வலியுறுத்துவோம்' என இடையிடையே இந்திய தரப்பும் சொல்லிக் கொண்டுதானிருக்கிறது. 'அயல்நாடுகளில் தமிழர்கள் படும் இன்னல்கள் போன்று எமது மனதுக்கு நெருக்கமான பிரச்சனை வேறெதுவும் இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று தன்னை லண்டனில் சந்தித்த உலகத் தமிழர் பேரவையினரிடமும் சோனியா காந்தி கூறியிருந்தார். யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியில் நாங்கள் முக்கிய பங்காளியாகயிருப்போம் என இந்தியா ஏற்கனவே பல தடவைகள் கூறியிருந்தது. வீடுளையிழந்த மக்களிற்காக ஐம்பதாயிரம் வீடுகளை கட்டித்தரப் போவதாக கூறி யாழ்ப்பாணத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா ஆறு மாதங்களின் முன்னர் அடிக்கல் கூட நாட்டியிருந்தார். அந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. அந்த இடம்கூட இப்போது புதர் மண்டிக் கிடக்கிறது.     அகதிகளிற்கு அரசு வழங்கிய நிவாரணங்களையும் சலுகைகளையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டிருக்கிறது.இந்த நிவாரணங்களெல்லாம் ஆறுமாதம், மூன்று மாதம் என்ற வரையறைகளை உடையவை. புனர்வாழ்வும், அபிவிருத்தியும் திட்டமிட்ட ரீதியில் துரிதமாக முன்னெடுக்கப் பட்டிருக்குமானால்அந்த நிறுத்தம் சரியானதாகவும் அகதிகளை பாதிக்காததாகவும் இருந்திருக்கும். அகதிகளும் தம்மை தாமே நிர்வகிக்கக் கூடியவர்களாகியிருப்பார்கள். அபிவிருத்தி, புனர்வாழ்வு என்ற வெறும் விளம்பரங்களுடன் தமிழர்களை அரசு நடுத் தெருவிற்கு கொண்டுவரும் காரியத்தைத் தான் செய்கிறதோ என சந்தேகப்படுமளவிற்கு அரசின் செயற்பாடுகளிருக்கின்றன. அரசின் அண்மைய செயற்பாடுகளில் வெற்றி மனோபாவத்தை அவதானிக்க முடிகிறது. இப்போது விரைவாக முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள், கைதுகள், காணாமல் போதல்கள், தேசிய கீதப் பிரச்சனை என எதிலும் அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. இனங்களிற்கிடையேயான புரிந்துணர்வை கட்டியெழுப்ப இவை உதவ மாட்டாது என்பது அரசுக்கும் தெரிந்திருக்கும். இனி இலங்கையில் நடக்க இருக்கும் நிகழ்வுகளிற்கு இவை முன்னோட்டங்களாகவும் இருக்கலாம்.  இனச் சிக்கலுக்கான காரணங்களைக் கண்டறியவும், ஆலோசனைகளை பிரேரிக்கவுமென கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒரு ஆணைக் குழுவை அரசு செயற்படுத்துகிறது. வடக்கு கிழக்கில் முக்கிய இடங்களில் பலஅமர்வுகளை குழு செய்திருந்தது. அத்தனை இடங்களிலும் ஒரே விதமான காட்சிகளே அரங்கேறியிருந்தன. பெண்கள் வயது வேறுபாடில்லாமல் தங்களது கணவர்களையும் பிள்ளைகளையும் கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீருடன் மன்றாடியிருந்தனர். இந்த அமர்வுகளில் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாமையினால் இந்தப் புதிய சிக்கலை உலகம் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை போலுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன ஆண்களின் குடும்பங்களின் பிரச்சனையில் அரசு அதிக அக்கறை காட்டியிருக்க வேண்டும். சாதாரண பொதுமக்கள் மற்றும் புலி உறுப்பினர்களின் குடும்பங்களே இந்த கணக்கில் பெரும்பாலுமுண்டு. காணாமல் பொனவர்கள், விதவைகள், கொல்லப்பட்டவர்கள் பற்றிய சரியான கணக்கு யாரிடமும் இல்லை. இது பல்லாயிரங்களில் வரும். துரதிஸ்டவசமாக அரசிடம் இவர்கள் குறித்த அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இது சமூகரீதியிலும் கலாசாரரீதியிலும் மோசமான தாக்கத்தை உண்டாக்கக் கூடிய பிரச்சனை. இப்பொதே இதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன.        இள வயது விதவைகள், குடும்ப வறுமை, கைவிடப்பட்வர்கள் போன்ற நிலையிலிருக்கும் அகதிப் பெண்கள் வேறு வழியில்லாமல் விபசார நடவடிக்கைகளிற்கு ஈர்க்கப்படும் சம்பவங்கள் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிலர் பதிவு செய்துள்ளனர். ஆயிரக் கணக்கான ஆண்கள் கொல்லப் பட்டுள்ளனர். அல்லது தடுப்பு முகாம்களிலுள்ளனர். இதனால் குடும்பங்களை நடத்த வேண்டிய தவிர்க்கவியலாத பொறுப்பு பெண்களிடம் வந்தள்ளது. இந்த புதிய சூழலை எதிர் கொள்ள முடியாத பல பெண்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள்.  இந்த மையமாக வவுனியா இப்போது மாறி வருகிறது. தமிழ்ச் சமூகம் இதனை கணக்கிலெடுத்ததாகத்  தெரியவில்லை. தகவலறியும் நோக்கத்துடன் வவுனியா நகர மையத்திலுள்ள இப்படியான இரண்டு மையங்களிற்கு அண்மையில் சென்றிருந்தேன். சினிமாவில் காண்பிக்கப்படும் பாலியல் தொழிலாளர்களிற்கு ஒப்பான வாழ்வை பழக்கப்படுத்திக் கொண்ட கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளைச்  சேர்ந்த நிறைய அகதிப் பெண்களை சந்திக்க முடிந்தது. இந்த விடுதிகள் இப்பொது ஓரளவிற்கு வெளிப்படையானவையாக இயங்கத் தொடங்கி விட்டன. வடக்கு கிழக்கில் இப்போதுள்ள பாதுகாப்பு எற்பாடுகளில் இராணுவத்தினருக்கோ, புலனாய்வுத்துறையினருக்கோ தெரியாமல் எதுவும்  நடக்க வாய்ப்பில்லை. அவர்களும் இதனை ஊக்கவிக்கிறார்களா என்ற சந்தேகம்  உள்ளது.     நடந்து முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட்டில் வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான ஈழத்தமிழர்கள் இந்திய அணியிணையே ஆதரித்திருந்தனர். ஈழத் தமிழர்களிற்கு வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இருக்கும் இந்திய அபிமானத்திற்கு அப்பால் இலங்கை குறித்த எதிர்ப்புணர்வு வெளிப்படையாகவே தெரிந்தது. ஒருவேளை இறுதிப் போட்டிக்கு கென்யா முன்னேறியிருந்தால் அந்த அணியினையே ஆதரித்திருப்போம் எனப் பலர் சொனனார்கள். இதற்கு முக்கிய காரணம் இறுதிப் போட்டிச் சமயம் உலகக் கிண்ணத்தையும் யுத்த வெற்றியையும் சம்பந்தப்படுத்தி இராணுவ அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கதைத்ததைச் சொல்லலாம். சரணடைந்த புலிகளை சுட்டுக் கொன்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா உலகக் கிண்ண வெற்றி யுத்தத்தில் மரணித்த படையினருக்கு சமர்ப்பணம் செய்யப்படும் என சொல்லியிருந்தார்.   இதனால் இலங்கையணி விக்கட் இழக்கும் சமயங்களில் தமிழர்கள் வெடி கொளுத்துமளவிற்குப் போனது. இது சாதாரண ஒரு கிரிக்கட் சம்பவம் மட்டமல்ல. இதற்கு பின்னால் பெரிய உளவியல் உள்ளது. இலங்கை தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு யுத்த தோல்வியிலிருந்து வந்ததாக இருக்கலாம். அதனை போக்கி இது சகலருக்குமான நாடு, அனைத்து இனங்களும் சமமானவை என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் தொடக்கப் படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். இது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது.  ஆட்சியாளர்கள் அசட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்களுள்ளன. யாழ்ப்பாணத்திற்கான பிரதான நெடுஞ்சாலையான ஏ.9 வீதி யுத்தகாலத்தில் அழிந்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலிருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் இன்னமும் மீள் குடியேற முடியாமலுள்ளனர்.  வவுனியா நலன்புரி முகாம்களில் இன்னும் ஐம்பதினாயிரம் வரையானவர்கள் வீடுகளிற்குத்  திரும்ப முடியாமல் இருக்கின்றனர். யுத்தத்தில் வீடுகளை இழந்தவர்கள் கூடாரங்களிலேயே இருக்கின்றனர், காணாமல்ப் போனவர்கள் பற்றிய எந்த தகவல்களும் இல்லை. சரணடைந்தவர்கள் பற்றிய எந்த தகவல்களும் இல்லை. தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களிற்கான உருப்படியான எந்த புனர்வாழ்வுத் திட்டமுமில்லை. இவையனைத்தையும் விட முப்பது வருட யுத்தத்திற்கான காரணங்கள் களையப்பட்டு குறைந்தபட்ச தீர்வையேனும் முன் வைக்கும் மனநிலையைக் கூட சிங்கள ஆட்சியாளர்களிடம் இன்றைய திகதி வரை காணமுடியவில்லை. ஏதாவது ஆச்சரியங்கள் நடந்தாலன்றி நாளை பற்றி யாரும் நம்பிக்கை கொள்ளமுடியாத நிலையுள்ளது.      அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த சர்வமத பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் சொல்லியிருந்தார் -"சமாதானமென்பதன் அர்த்தம் இங்கே நிலவுகின்ற மௌனமல்ல" என. இந்த கருத்தை சொன்னதற்காக அன்றைய இரவே அவரது வீட்டிற்குச் சென்ற இனந் தெரியாதவர்கள் சாணியைக் கரைத்து அவர்மேல் ஊற்றினார்கள். ஆக, தமிழர்கள் சமாதானத்தின் பலனை அனுபவிக்கிறார்களா அல்லது கையறு நிலையில் மௌனமாக குமுறிக் கொண்டிருக்கிறார்களா என்பதை வரலாறுதான் பதிவு செய்யும். ◄

No comments:

Post a Comment