Thursday, May 26, 2011

வீடு-வன்னி அகதிகளின் கனவு (கட்டுரை)

லங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகப் போகின்றன. யுத்தத்திற்கான காரணங்கள் இன்னும் நிவர்த்தி செய்யப்படாமலேயே - குறைந்த பட்சம் அதற்கான ஆக்கபூர்வமான எந்த முன்னெடுப்பும் செய்யப்படாமலேயே உள்ளன. இப்போது அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப் பிரச்சனை குறித்து இரகசியமாக பேசி வருகிறது. இந்த அரசியல் நிலைக்கப்பால் சாதாரண சனங்கள் குறித்து யாரும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட் வன்னி மக்களது தேவைகள் நீண்டவை. அவர்களது அடிப்படை தேவைகள் கூட நிவர்த்தி செய்யப்படாமலுள்ளன.அவர்களிடம் இப்போது ஒரு வீடில்லை; நிலையான வருமானம் தரும் தொழிலில்லை;  அனேக குடும்பங்களில் ஒருவர் அல்லது சிலரில்லை. இன்னும் ஒரு தொகையினர் மீள் குடியேற்றப்படாமல் முகாம்களிலுள்ளனர்.
இப்போது தென்னிலங்கை அரசியல்வாதிகள் அடிக்கடி இலங்கையை ஆச்சரியம் மிக்க நாடாக்குவது பற்றிப் பேசி வருகின்றனர்.  பெரு நகரங்களை மையப்படுத்திய அபிவிருத்தி எல்லா மக்களுக்குமான சமச்சீரான பொருளாதார அபிவிருத்தியை வழங்குமா என்ற கேள்வியுள்ளது.
யுத்தம் முடிந்தவுடன் இடம்பெற்ற அதிபர் தேர்தல், உள்ளுராட்சி மன்ற தேர்தல்களையொட்டி இந்த மக்கள் நிறைய வாக்குறுதிகளை வாங்கி வைத்திருக்கின்றனர். குறிப்பாகச் சிலது புகழ்பெற தகுதியான வாக்குறுதியொன்றிருக்கிறது - "யுத்தத்தில் இழந்த உயிர்களை தவிர மிகுதியனைத்தையும் பெற்றுத்தருவோம்'.  இப்போது மிக அரிதாகவே சிங்கள அமைச்சர்கள் கிளிநொச்சிக்கு வருகின்றனர். இப்போது அந்தப் பாத்திரத்தை ஈ.பி.டி.பி ஏற்றுள்ளது.
1995ற்குப் பிறகு யுத்தம் பெரும்பாலும் வன்னிப் பகுதியை மையப் படுத்தியே நடந்தது. வன்னியின் பெரும்பாலான நகரங்களும் கிராமங்களும் பல தடவைகள் அழிந்த வரலாறுடையவை. அவற்றுள்ப் பல இன்னும் அப்படியேதானிருக்கின்றன.
வன்னிப் பெருநிலப் பரப்பில் குறிப்பிட்ட சில நகரங்களே பூர்வீக குடிகளாலானவை. எஞ்சியவை குடியேற்றக் கிராமங்கள். படித்த வாலிபர் திட்டம், பல்வேறு இனக் கலவரங்களால் வந்தவர்களும், விடுதலைப் புலிகளுடன் போன யுத்த அகதிகளாலுமே உருவானவை. அவர்களின் வரலாறு சில பத்து வருடங்களே. பெரும்பாலானவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை நம்பியவர்கள். இப்படி சேர்த்த சொத்தை இழந்து விட்டு இப்போது கூடாரங்களில் இருக்கிறார்கள். வீடு, வீட்டுத் திட்டம் போன்ற சொற்களெல்லாம் ஆரம்பத்தில் தாராளமாக உலாவின. இப்போது எல்லாம் அருகிவிட்டன. அரசாங்கம் சில திட்டங்களை ஆரம்பித்தது தான். சில பகுதிகளில் மூன்றரை இலட்சம் மட்டும் வீடு கட்டுவதற்கு கொடுக்கப் பட்டது.தேர்தலின் பின் மீண்டுமொரு முறை கிளிநொச்சிக்கு வந்த பசில் வெளிப்படையாகவே சொல்லி விட்டார் - அனைவருக்கும் வீடு கட்டித் தர முடியாது. நீங்களே உழைத்துக் கட்டுங்கள் என்ற சாரப் பட.
இதற்காக அந்த மக்களுக்கு அரசு குறிப்பிட்ட அளவு விதை நெல் வழங்கியிருந்தது. இதிலுள்ள பிரச்சனை என்னவெனில் அங்குள்ள அனைவரிடமும் வயலுள்ளதா அல்லது குத்தகைக்கு வயலெடுக்க வல்ல பணத்துடனிருக்கிறார்களா வென்பது. வயல் இல்லாதவர்கள் இறுதிவரை கூடாரத்திலேயே இருப்பதா? வயல் விதைத்தவர்களும் இப்போது நெல்லை விற்க முடியாமல் திண்டாடுகிறார்கள். நெல்லை அரசாங்கமே கொள்வனவு செய்யவேண்டுமென்ற கோரிக்கைகள் இப்போது எழத் தொடங்கியிருக்கின்றன.
இடையில் இந்திய வீட்டுத் திட்டம் குறித்த செய்திகள் ஊடகங்களில் நிறைந்திருந்தன. ஐம்பதாயிரம் வீட்டுக்கான பணத்தையும் இந்திய அரசு ஒதுக்கியிருந்தது. இப்போது மீண்டும் யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகின்றன என்பதை நினைவில் கொண்டபடி வாசிப்போம். இந்த வீட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட வீடொன்றுக்குள்ளும் இன்னும் ஒரு தமிழனும் காலடி எடுத்து வைக்கவில்லை.
ஆரம்பத்திலிருந்தே இந்த வீட்டுத் திட்டம் குறித்து நீண்ட இழுபறியிருந்தது. யார் இதனை நடைமுறைப்படுத்துவதென்பதில் தான் பிரச்சனை. பிறகு ஒரு வழியாக இலங்கை பயனாளிகளைத் தெரிவு செய்வதென்றும் இந்தியா தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதென்றும் உடன்பட்டார்கள். இதன்படி முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பயனாளிகளிற்கான வீடுகளிற்கான அடிக்கல்லை அரியாலையில் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நாட்டினார். அதே நாளில் இந்திய உழவு இயந்திரங்களையும் யாழ்ப்பாணத்தில் விவசாயிகளிற்காக வழங்கினார். அந்த உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப் படுவதாகவும் மிகுதியானவை திணைக் களங்களிலேயே இருப்பதாகவும் விவசாயிகள் சொல்கிறார்கள்.
வீடமைப்புத் திட்டம் இலங்கை அதிகாரிகளின் அசமந்தத்தினால் தாமதமாவதாகச் சொல்கிறார்கள்.  ஒப்பந்தப்படி எஞ்சிய பயனாளிகளைத்  தேர்வு செய்யவில்லையாம். இதனால் இந்தத் திட்டம் அடிக்கல்லுடனேயே நிற்கிறது.
யுத்தத்தின்போது இலங்கைக்கு அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இந்தியா வழங்கிய உதவிகள் ஓரளவுக்கு அனைவரும் அறிந்தவை. குறிப்பாக இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரேரணையை தடுத்திருந்தது. இவ்வளவ வல்லமையுள்ள இந்தியா, இந்த வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வல்லமையற்றிருக்கிறதா அல்லது அக்கறையற்றிருக்கிறதா?
மக்களின் அன்றாட பிரச்சனைகள் குறித்து பேச அல்லது போராடவல்ல தமிழ்க் கட்சியெதுவும் இப்போது இலங்கையில் இல்லை. அனைவரும் விடுதலைப் புலிகளின் வெற்றிடத்தை கைப்பற்றும் போட்டியிலேயே இருக்கிறார்கள். குறிப்பாக அரசுடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியினர் பாடசாலைக் கட்டடம் திறந்து வைப்பது, கடை திறந்து வைப்பது,  விளையாட்டுப் போட்டிகளில் பிரதம விருந்தினர்களாகப் போவது என்ற அளவில் கிளிநொச்சியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரும்போது ஏ9 வீதியின் கரைகளிலுள்ள சிறு இராணுவ நிலைகள் தொடக்கம் பெரிய முகாம்கள் வரை அனைத்தினதும் கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டிருப்பதையும், அவற்றின் சொந்தக்காரர்கள் அருகில் கூடாரங்களில் இருப்பதையும் காணலாம்.
பெரிய அரசியல் இலக்குகளுடன் போராடிய மக்கள் இன்று ஒரு வீடு பற்றிய கனவுகளுடன் மர நிழல்களிலிருக்கிறார்கள்.

நன்றி: எதிர்

No comments:

Post a Comment