Thursday, May 26, 2011

காலம் எடுத்த காணிக்கை (கதையல்ல)

வியாசர் என்ன நேரத்தில் மகாபாரதம் எழுதினார் என்பது தெரியவில்லை. கௌரவர்களை நூறு பேராக்கியவர், பாண்டவர்களை ஐவராக்கிவிட்டார். இதன் பின் தமிழ்ச் சினிமாவிலும் கதைகளிலும் ஐந்து நாயகர்கள், ஐந்து நண்பர்கள் என விதம் விதமான ஐந்துக்களை கண்டு விட்டோம். இது பின்னாளில் தமிழர்களில் இவ்வளவு பெரிய கொடுமையை எற்படுத்தும் என தெரிந்திருந்தால் பாண்டவர்களையும் நூற்றுக்கணக்காக்கியிருப்பார். (அப்போதும் சன் பிக்சர்ஸ் நூறு நண்பர்கள் பற்றிய மெகா பட்ஜெட் படம் எடுத்தாலும் எடுக்கும்) இந்த செண்டிமென்டுகளில் சிக்காமல் ஏதேச்சையாக அமைந்த நண்பர்கள் கதையும் இருக்கலாம். நாங்களும் அப்படித்தான். மகாபாரதம் தெரிய முன்னரே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். ஊர்ச் சுற்று வட்டாரத்தில் இருந்த நாங்கள் ஐந்து பேர்தான் நண்பர்கள். இதில் பீமனை ஒத்த ஒருவனும் இருந்தான். ஒன்றாக பள்ளிக்கூடம் போய் வந்தோம். ஐவரும் ஒரே வரிசையில் இருப்போம். வாத்தியார் கேள்வி கேட்கும் போது ஒருவனுக்கு தெரிந்தால் ஐவருக்கும் தெரிந்த மாதிரி. இல்லாவிட்டால் ஐவரும் அடிவாங்கினோம்.  அப்போதெல்லாம் எங்கள் யாரிடமும் தொலைக்காட்சி வசதி கிடையாது.  கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் வாடகைக்கு ரீ.வி எடுத்து விடிய விடிய ரஜனிக்காந் படமும்கமல் ஹாசன் படமும் பார்ப்போம். அது 1994 உலகக் கிண்ணப் பருவம். பத்திரிகைகளில்தான் விபரம் அறிந்து கொள்ளலாம். ரொமாறியோ பந்தைத் தட்டிச் செல்வது மாதிரியான ஒரு புகைப்படம் வந்திருக்கும்.  நமக்கெல்லாம் பொறுக்க முடியாமல் போய்விட்டது. உடனடியாக இன்னும் பத்துப் பேரை கூப்பிட்டு ஒரு விளையாட்டுக் கழகம் தொடங்கினோம். ஏதோ ஒரு 'ஐக்கிய விளையாட்டுக்கழகம்' என்ற பெயர் வேறு. சுற்று வட்டாரத்தில் ஆறேழு பாடசாலைகள் இருந்தன.அந்த காலத்தில் சண்டை வருவதென்றால் ஒன்றில் பெண்கள் காரணமாயிருப்பர். அல்லது பாடசாலைகள் காரணமாயிருந்தன. வாய்த் தர்க்கத்தின் உச்சக் கட்டத்தில் யாராவது ஒருவன் சவால் விடுவான் - "ஏலுமென்டால் எங்களோட மச் விளையாடிப்பார்.." எங்கள் ஐக்கிய விளையாட்டுக் கழகம் சுற்று வட்டாரத்தையே கலக்கிக் கொண்டிருந்தது. உச்சக் கட்டமாக எங்களது சைக்கிள் கரியரில் புத்தகத்திற்குப் பதிலாக பந்திருந்தது. பந்துடன் சந்தைக்கு வந்த நண்பர்களையும் கண்டிருக்கிறேன்.  இப்பொழுது போல, நாங்கள் பந்தை 'பாஸ்' செய்து 'அலுப்பு' விளையாட்டு விளையாடுவதில்லை. எங்கள் பஞ்ச பாண்டவர்களில் இருவர் உதைபந்தாட்டத்திற்கு முக்கியமானவர்கள். ஒருவன் வினேஸ். எங்கள் அணி அடித்த மிகச் சில கோல்களில் பெரும்பாலானதை இவன்தான் அடித்தான். மற்றது ராஜ். இவன்தான் பீமன். முன் வரிசை வீரனுமல்லாமல் பின் வரிசை வீரனுமல்லாமல் இரண்டுக்கும் இடையில் நிற்பான். இவனது நோக்கமெல்லாம் பந்து எந்தத் திசையிலிருந்து வருகிறதோ அதே திசைக்கு அனுப்புவதே. எங்களது கோல் பரப்பில் வரும் பந்தையெல்லாம் எதிர்த் தரப்பு கோல்ப் பரப்பிற்கோ அல்லது பக்கத்து பனங் காணியில் கள்ளுச் சீவிக் கொண்டிருப்பவர்களின் தலைக்கு மேலாகவோ அனுப்பிக் கொண்டிருப்பான். நானுட்பட மிகுதி ஒன்பது பேர் சும்மா இருந்தோம். இரண்டு அணியிலும் மொத்தமாக இருபத்திரண்டு பேர். இரண்டு கோல்க் காப்பாளர்களையும் தவிர்த்தால் இருபது பேர். இதில் யாராவது ஒருவனின் காலில் பந்திருக்கும். மிகுதி பத்தொன்பது பேரும் இந்தத் திசைக்கும் அந்தத் திசைக்குமாக பந்தின் பின்னால் ஓடியபடியிருப்பார்கள். அனேகமாக என்னில் பந்து படுவதெனில் போட்டிக்குப் போகும் போது நான் கையில் எடுத்துப் போனால்த் தான் உண்டு. மற்றப்படி ஒன்றில் என்னிலிருந்து ஐந்தடி முன்னால் பந்து போய்க் கொண்டிருக்கும். அல்லது பந்தின் பின்னால் ஐந்தடி தொலைவில் போய்க் கொண்டிருப்பேன். காலம் போகப் போக நாங்கள் உதைபந்து எங்களிற்கு ஒத்து வராததை உணர்ந்து விட்டோம். வினேசும் இராஜ்யும் விடாப்பிடியாக அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். ராஜ் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், வினேஸ் எங்கள் ஊரின் சொல்லத்தக்க ஒரு வீரனாக இருந்தான்.அவன் எங்கு இருந்தானோ அங்கு ஒரு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை உண்டாக்கி விடுவான். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அந்த அணியிலுமிருந்தான். அவனுக்கு கிளிநொச்சியில் வேலை கிடைத்தது. கிளிநொச்சிக்கான தரைப்பாதை மூடியபின், தொலைபேசியில் எங்கள் தொடர்பிருந்தது. அங்கும் கொஞ்ச வாலுகளைப் பிடித்து, ஏதோ ஒரு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை உண்டாக்கியிருந்தான். எங்கள் அணியைப் போலவே அந்த அணியும் மிகுந்த சத்திய சோதனைக்குள்ளானதாம். இறுதி யுத்த காலத்தில்  அவனுடனான எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது. அங்கும் ஏதாவது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை உருவாக்கியிருப்பான் என நினைத்தேன்.  வவுனியா மெனிக்பாம் முகாமிற்கு அவன் வந்திருந்தான். ஒரு நாள் அவனைச் சந்திக்கச் சென்றேன். அங்குள்ளவர்களைச்சந்திக்கும் நடைமுறை மிகுந்த விசித்திரமாயிருந்தது. வீதிக்கரையில் நாங்கள் நின்றோம். எம்மிலிருந்து சில நூறு மீற்றர் தொலைவிலிருந்த முள்ளுக் கம்பிக்கப்பால் அவர்களிருந்தனர். இதில் அடையாளம் கண்டு, கை காட்டி, ஆளைக் கூப்பிட வேண்டும். அங்கிருந்து சற்றுத் தொலைவில் இளைஞர்கள் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் எங்கே நிற்பான் என்ற குழப்பம் எனக்கு. உற்றுப் பார்த்தேன். யாரையும் அடையாளம் தெரியவில்லை. சரி. நடக்கிறது நடக்கட்டுமென சந்திக்கும் இடத்திற்குப் போனேன்.  என்னைத் தூரத்திலேயே கண்ட  நண்பன் கையசைத்துக் கூப்பிட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன். ஊன்று கோலுடன் நின்றான். அவனுக்கு ஒரு கால்  இல்லை.

No comments:

Post a Comment