Thursday, May 26, 2011

வேதாளத்திற்கு சொன்ன கதை




           தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம், மீண்டும் அந்த விசாரணைக் குறிப்பைப் புரட்டியபடியிருந்தது. அந்த அறிக்கையிலிருக்கும் ஏதாவது ஒரு சொல் அல்லது வசனம் தனக்குரிய துப்பைத் தருமென்றோ அல்லது அவனது பொய்யை அம்பலப்படுத்துமென்றோ அது நினைத்திருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் என்ற அவனது பெயரை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என தனக்கு தெரிந்த மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசித்து உறுதிசெய்து கொண்டது. விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எந்தக் குழப்பமும் இல்லை. போதாததற்கு அவனது வாயாலும் பெயரை உச்சரிக்க வைத்தது. பிறகு பிறந்த ஆண்டு, மாதம், திகதி, விலாசம் எதிலும் பிசகில்லை.
     தனது வலது கையில் தூக்கிவந்த அந்த பெரிய விசாரணை அறிக்கைக்குள்ளிருந்து அந்தச் சின்னப்பொடியன் சுழியோடி வெளியேறி விடுவதை வேதாளம் விரும்பியிருக்கமாட்டாது. தனது நீண்ட கால அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் காட்ட வேண்டுமென அது நினைத்திருக்கக் கூடும். மர்மமும் விசமமும் கலந்த புன்னகையுடன் அவனது சுயவிபரங்கள் சரியென ஒத்துக்கொண்டது. பின்பு, அதன் கீழ் நீண்டிருந்த அவனது வாக்குமூலத்தை இன்னொரு முறை வாசிக்க ஆரம்பித்தது. வாசித்து முடிந்ததும், கதிரையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனது கதையைக் கூறச் சொன்னது. அந்தக் கதையில் இருந்து அவனிடம் இரண்டு கேள்விகள் கேட்குமெனவும் அதற்கு பிழையான பதில் சொன்னால் வெலிக்கடைச் சிறைக்கோ, நான்காம் மாடிக்கோ கொண்டு செல்லப்படுவானெனவும்,  பதில் எதுவும் சொல்லாமலிருந்தால் அவனது தலை சுக்குநூறாக உடைந்து போகுமெனவும் கூறியது. பலத்த யோசனையின் பின் அவன் சம்மதித்தான். இப்படியாக விக்கிரமாதித்தன் தனது கதையை வேதாளத்திற்கு சொல்ல ஆரம்பித்த வரலாறு அமைந்திருந்தது.
............................................................................................................................................................

வம்சச் சுருக்கம்:-

     மதுரை வீரன் மகன் இராசு
     இராசு மகன் நாகப்பன்
     நாகப்பன் மகன் சுயம்புலிங்கம்
     சுயம்புலிங்கம் மகன் தோமையப்பன்
     தோமையப்பன் மகன் மார்க் அந்தோனி
     மார்க் அந்தோனி மகன் கந்தையா
     கந்தையா மகன் பரஞ்சோதி
     பரஞ்சோதி மகன் விக்கிரமாதித்தன்

வாழ்க்கைச் சுருக்கம்:-
     ஆண் பரஞ்சோதிக்கும் பெண் மரகதமணிக்கும் பிறந்த மூன்றாவது குழந்தை. குடும்பத்தையும் படிப்பையும் பாதியில் விட்டுவிட்டு ஓடிப்போனவன். குறிப்பிடும்படி வேறெதுவுமில்லை.
விசாரணைச் சுருக்கம்:-
     1996-12-31 இல் இயக்கத்தில் இணைந்துள்ளான். கெனடி பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்றுள்ளான். நிர்வாகப் பிரிவுகளில் மாத்திரம் பணிபுரிந்தாக கூறுகிறான் . பின் 2000-01-01 இல் விலகி, வன்னியில் பெட்டிக்கடை வைத்திருந்ததாகவும் கூறுகிறான். இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவே. அப்படி வைத்திருந்தாலும் அது சர்வதேச தீவிரவாதிகளிற்கான வெடிகுண்டுப் பெட்டிக் கடையாகவே இருக்க வாய்ப்புண்டு.

குற்றச் சுருக்கம்:-
     இயக்கத்தில் இணைந்து, விலகியதாகக் கூறப்பட்டவை பொய்யானவை. தவிரவும் போரின் இறுதி நாட்களில் ஆயுதங்களையும் பணத்தையும் நகைகளையும் இரகசியமாக புதைத்து வைத்துள்ளான். இது குறித்து விசாரணையின் போது எதுவும் குறிப்பிடவில்லை.
....................................................................................................................
     மாத்தளனில ஆமியிட்ட சரணடைஞ்ச அன்று தொடங்கி, இன்று நடப்பது நாற்பத்தோராவது விசாரணை. அன்பாக கதைக்கிறவன், அடிச்சு கதைக்கிறவன், வெருட்டி கதைக்கிறவன், ஏனோதானோவென்று கதைக்கிறவன் என இதுவரை ஏராளம் விசாரணைக்காரர்களை கண்டுவிட்டேன். ஆனாலும், விசாரணை என்றதும் இப்பவும் உடம்பு நடுங்கத் தொடங்குது. முதலாவது விசாரணையில இருந்து போன கிழமை நடந்த விசாரணை மட்டும் எல்லாம் நினைவிலயிருக்குது. MI, CID, TID, NIB,  விமானப்படை புலனாய்வு, கடற்படை புலனாய்வு என எட்டோ பத்தோ விசாரணைச் செக்சன் இருக்குது. மாறிமாறி வந்து விசாரிப்பினம். ஆட்கள் மாறினாலும் எல்லாரும் கேக்கிற ஒரே கேள்வி, எப்ப இயக்கத்துக்கு சேர்ந்தது, எத்தனை மாதம் ரெயினிங் எடுத்தது, என்னென்ன துவக்குகள் யூஸ் பண்ணினது, பிரபாகரனை எத்தனை தரம் கண்டது என்றது மாதிரியான கேள்வியளைத்தான். கொஞ்சம் நல்ல மூட்டில வந்து ரொமான்ஸ் கேள்வியள் கேட்கிற ஆட்கள் சிலரும் இருக்கத்தான் செய்யினம்.
     இதில கனபேருக்குத் தெரியாத ரிக்ஸ் ஒன்று இருக்குது. நானும் முந்தி இயக்கத்தின்ர புலனாய்வு செக்சனில இருந்ததால எனக்குத் தெரியும். விசாரிக்கிறவனிட்ட உண்மையைச் சொல்லுறனோ பொய் சொல்லுறனோ என்றது முக்கியமல்ல. சொல்லுறதை எப்பவுமே ஒரே மாதிரி சொல்லுறதுதான் முக்கியம். இப்ப பாருங்கோ, இந்தியன் ஆமி இஞ்ச வந்த நேரம் இயக்கத்துக்குப் போன ஒராளை விசாரிக்கினம் என்று வையுங்கோ. அந்தாள் கற்பூரச் சட்டியில அடிச்சு சத்தியம் செய்யாத குறையாக சொல்லுது, ஐயோ நான் 2008-12-31 இலதான் சேர்ந்தனான் என்று. இந்த திகதி இருக்குதல்லோ. அதுதான் முக்கியம். விசாரிக்கிற எல்லாரிட்டயும் மாறாமல் சொல்ல வேணும். மோட்டுச் சிங்களவன் மசிரைப் பிடிச்சான்.
     இயக்கத்தில இருந்த காலத்தை முன்னாலயும் பின்னாலயும் வெட்டி நானும் இப்பிடியானதொரு பம்மாத்து விபரம் வைச்சிருக்கிறன். கேட்டால்ச் சிரிப்பியள். அதால வேண்டாம்.
     பொய் சொல்லக் கூடாது பாப்பா என்ற பாரதியாரின் பாப்பாப் பாட்டை சின்ன வகுப்பில இராகம் இழுத்து பாடி பாடமாக்கினாங்கள். பாட்டு பாடமானதுக்கு முக்கிய காரணம் நல்லதம்பி வாத்தியாரின்ர அடி. பாரதியாருக்காக இல்லாட்டிலும் வாத்தியாரின்ர அடிக்காகவே முந்தின காலத்தில பொய் சொல்லாமல் இருந்திருக்கிறன். ஆனால் இப்ப வாழ்க்கைப் பிரச்சனை. பாரதியாரையும் நல்லதம்பி வாத்தியாரையும் ஒதுக்கி வைக்க வேண்டியதாகப் போயிற்று. இதிலயும் இன்னொரு பிரச்சனை. எனக்கு அவ்வளவாக பொய் சொல்ல வராது. நான் பொய் சொன்னால் கண்டுபிடிச்சிடுவியள். இதனால்,  பொய் சொல்லுறதுக்காக பல மணித்தியாலங்கள் ஒத்திகை பார்ப்பன். எங்கட காம்பில ஆரும் விசாரணைக்கு வரப்போயினமென்றால், முதல்நாள் பின்னேரமே விசயத்தைச் சொல்லுவினம். இப்பிடி இப்பிடி இன்ன இன்ன விசயங்கள் நடக்கும். அதனால் ஒருத்தரும் சத்தம் போடாமல் இருக்க வேணுமென்று. அறிவித்தல் கிடைச்சதில இருந்து நான் மனசுக்குள்ள ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிடுவன். அன்றிரவு நித்திரையும் வராது. நல்ல விசயங்களுக்காகப் பொய் சொல்லலாம்.
     ஏழெட்டு மணித்தியால ஒத்திகையோட விசாரணைக்கு போவன்.  இதொரு அப்பாவி, ஏதோ தெரியாத்தனமாக அங்க மாட்டுப்பட்டு இருந்திட்டுது என்று அவையள் நினைக்கத்தக்க அக்சனுகள் போட்டுக்கொண்டு, விசாரிக்கிறவனின்ர முகத்தை பார்த்துக் கொண்டிருப்பன். தங்கட முகத்தைப் பார்த்துக் கதைக்கிறவன் எப்பவும் உண்மைதான் சொல்லுவானென்றது விசாரணைக்காரனின்ர நினைப்பு. இப்பிடி போக்குக்காட்டிக் கொண்டிருந்த என்னை மாட்ட வைச்சது ஒரு பொம்பிளைப் பிள்ளை. முப்பத்தொன்பது பேருக்கு அல்வாகுடுத்தவனை சிம்பிளாகப் பிடிச்சாள். பொம்பிளையால அழிஞ்ச ஆம்பிளையளில ஓராளாக நானும் மாறினன்.
     போன கிழமையும் ஒரு விசாரணை செக்சன் வந்திருந்தது. அதில ஆம்பிளை பொம்பிளை என்று கலந்து கட்டி வந்து நிக்கினம். எப்பவுமே விசாரணைக்கு வாற பொம்பிளைகள் ஒரு மார்க்கமான உடுப்போடுதான் வருவினம். இந்தப் பிள்ளையும் அதிலதான் வந்தது. இவள் ஆள் பார்க்கிறதுக்கு இந்தியாவில நடிக்கிற பிள்ளை தமன்னா மாதிரி ஒரு கலர். ஊரில இந்தக் கலரை அவிச்ச இறால் கலர் என்டுவினம். தலைமயிரும் நல்ல சுருள் முடி. முழங்காலுக்கு மேல ஒரு கட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு வந்து ஒரு கதிரையில இருந்தா. என்னைக் கூப்பிட்டு தனக்கு முன்னால் மூன்றடி தள்ளி நிலத்தில இருத்தினா. எங்கட தமிழ்ப் பண்பாடென்ன பாரம்பரியமென்ன? இவ என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறா. ஆளைப்பார்த்த உடனே வந்த நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போயிற்றுது. சரி அவ என்ன பரிசு கெட்ட வேலை செய்தாலும் நான் நிதானமாக இருக்க வேணுமென மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டு அவவின்ர முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன். பார்வையை மேல கீழ இறக்கவேயில்லை. நேரம் போகப் போக விசாரணை சூடு பிடிக்குது. அவவுக்கும் கோபம் கூடிக்கொண்டு போகுது. காலை ஓங்குறா, கையை ஓங்குறா, சில கெட்ட வசனங்கள் பாவிக்கிறா. ஒரு கட்டத்தில, தமிழ்ச் செல்வன் எப்ப செத்தவரென்று கேட்டா. எனக்கு உண்மையாகவே திகதி தெரியாது. அவருக்கு கிபிர் அடிக்கேக்க, கொஞ்சத் தூரம் தள்ளியிருக்கிற பாண்டியன் சுவையூற்றில தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்தனான் என்றது மட்டும்தான் நினைவு. உங்கட பெரியவர் செத்த திகதி தெரியாதோ. பொய் சொல்லுறாய் என்று துள்ளி விழுந்தா. பிறகு, பக்கத்தில இருக்கிற மற்ற விசாரணைக்காரர் தன்னை கவனிக்கிறார்களோ என சுற்றிவரப் பார்த்துவிட்டு தன்ர காலை விரிச்சு "இதுக்குள்ள பார்த்துக் கொண்டிரடா..." என்றா. எனக்கென்றால் தலைவிறைச்சுது. ஒன்றுமே செய்ய இயலாத கட்டத்தில எங்கட தமிழ்ப் பண்பாட்டை காற்றில பறக்க விட்டிட்டுப் பார்த்தன்.
     உண்மையிலயே நான் நிலை குலைஞ்சு போனன். அந்த ரைமில அவ நிறையக் கேள்வியள் கேட்டா. நான் ஏதோ தடுமாறிக் கதைச்சிருக்க வேணும். அவ ஒரு பொயின்றைப் பிடிச்சிட்டா. நான் சொன்ன பொய் ஒன்று பிடிபட்டது. இந்த இடத்திலதான் தீர்க்கதரிசனம் மிக்க ராஜதந்திர நடவடிக்கை ஒன்று எடுத்தன். நான் பொய்சொல்லவில்லை என வாதிட முயன்றால், சொன்னது முழுக்க பொய்யென அவையன் நினைக்கத் தொடங்குவினம். அது பெரிய பிரச்சனையில கொண்டு போய்விடும். அவ பிடிச்ச விசயம் மட்டும்தான் பொய் என்று ஒப்புக்கொண்டால் மற்றவைகளிலிருந்து தப்பிவிடலாம்தானே. அந்த ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன். தமன்னாவுக்கு பெரிய சந்தோசம். பக்கத்தில நின்ற வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க விட்டா.
     பிறகு அவவுன்ர மேலதிகாரியோட வந்தா. மேலதிகாரி என்னை விசாரிச்சான். இந்த ஸ்பொட்டிலதான் எனக்கும் கோபனுக்குமான தொடர்பு வெளிச்சத்துக்கு வருது. கோபனைத் தெரியுமா என சாதாரணமாகத்தான் கேட்டான். கோபன் என்னுடைய நெருங்கிய கூட்டாளி. ஆனந்தபுரச் சண்டையில செத்துப் போனான். செத்தவனை தெரியுமென்பதால் என்ன  பிரச்சனை வரப்போகுது? எப்பிடி தெரியும், எவ்வளவு காலமாக தெரியும் என்றெல்லாம் துருவித்துருவி விசாரிச்சான். நான் சொன்னன். கோபன் ஏதும் ஆயுதம் புதைச்சு வைச்சவனோ என்று கேட்டான். நான் வலு அப்பாவியாக மறுத்தன்.  மேலதிகாரி சிரிச்சான். அந்தச் சிரிப்பை எப்பிடி வகைப்படுத்துறதென்றே தெரியவில்லை. தமன்னாதான் சொன்னா, கோபன் சாகயில்லை என்றும் ஆனந்தபுர சண்டையில தாங்கள் உயிரோட பிடிச்சு இப்ப தங்கட சிறையில இருக்கிறானென்றும்.  எனக்கு திரும்பவும் தலைவிறைச்சுது. என்னைப் பற்றி தெரிஞ்ச ஒருத்தனோட கதைச்சு என்ர பொய்களை அம்பலப்படுத்தப் போகிறார்கள். அந்த ஸ்பொட்டிலயே அந்தோனியாரை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினன்.
     செத்துவிட்டான் என நினைத்திருந்த ஒருவனின் வடிவத்தில் எனக்கு புதுப் பிரச்சனை வந்தது. கோபன் என்னென்ன சொன்னான் என்பது எனக்கு தெரியாது. இந்த விடயங்கள் குறித்து மேலதிக விசாரணை செய்ய இவனை மேலதிகாரி அனுப்பியுள்ளான். இவனிடம் மறைக்காமல் உள்ளதை சொல்வதென தீர்மானித்தேன்.
     கோபனை எனக்கு பதினைஞ்சு வருசமாக தெரியும். இரண்டு பேரும் ஒரே றெயினிங் காம்பிலதான் றெயினிங் எடுத்தனாங்கள். நான், கோபன், சஞ்சய், சேரன், குணா, இராகவேந்திரன், மருது இந்த ஏழுபேரும் ஒரே செக்சன். ஒன்றாகவே திரிஞ்சம். ஒன்றாகவே படுத்தெழும்பினம். றெயினிங் முடிய நேராக போனது முல்லைத்தீவு அடிபாட்டுக்கு. ஏழுபேரும் வரிசையில படுத்திருந்து சுட்டம். அதில சேரன் செத்துப் போனான்.
     பிற்காலங்களில் எல்லோரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து விட்டாலும், நானும் கோபனும் நல்ல இறுக்கம். இரண்டு பேரும் வேற வேற பிரிவென்றாலும் அடிக்கடி சந்திப்பம். இரண்டு பேரின்ர குடும்பங்களும் நல்லமாதிரி.
     கோபன் லவ் பண்ணிய பெட்டையையும் நான்தான் கேட்டுச் சொன்னனான். பிரதியுபகாரமாக எனக்கொரு பெட்டையை தேடித் திரிஞ்சான். எனக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லையே.
     கிளிநொச்சி இடம்பெயரத் தொடங்கினதுக்குப் பிறகு கொஞ்சநாள் ஆளைக் காணக் கிடைக்கவில்லை. நாட்டுப் பிரச்சனை இறுகியிருந்ததால நானும் தேடிப் பார்க்கயில்லை. ஒருநாள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில இரண்டு பேரும் சந்திச்சம். நிலமை இறுகினதுக்குப் பிறகு, எல்லாப் பிரிவுகளிலயும் நிர்வாக வேலை செய்து கொண்டிருந்தவையையும் சண்டைக்காக எடுத்து அந்த இடத்தில ஒன்று சேர்த்தவை. அதிலதான் ஆளைக் காணுறன். அப்பதான் இயக்கம் ஆனந்தபுரத்தில ஒரு Box அடிக்க வெளிக்கிடுது. இந்த Box-இல அவனுக்கும் ஒரு பகுதிப் பொறுப்பு குடுத்திருந்தினம். இந்த Box-ஐ சிங்களவன் அசைக்க ஏலாதென்றான். கேட்க எனக்கும் சந்தோசமாக இருந்தது.
         அந்த நேரம் இயக்கம் இன்னொரு வேலையையும் மும்முரமாக செய்தது. ஆயுதங்கள், காசு, எண்ணெய் என பல வகையான ஐயிற்றங்களை  நிலத்துக்குள்ள புதைக்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பிரிவுக்காரரும் ஊர் முழுக்க புதைக்கத் தொடங்கிச்சினம். எங்கட பிரிவும் புதைச்சதுதான். எனக்கொரு வேலையும் வரயில்லை. நான் என்ர இயக்கப் படங்களை மட்டும் வலைஞர்மடம் சேர்ச்சுக்குப் பின்னாலயிருக்கிற அந்தோனியார் சுருவத்துக்குப் பக்கத்தில புதைச்சன்.
     இரண்டு நாள் கழிச்சு, ஒரு மத்தியானம் கோபன் வந்து நிக்கிறான் தன்னோட முள்ளிவாய்க்கால் மட்டும் வரச்சொல்லி. ஏதோ அவசர வேலையென்றான். சரியென்று போனன். வழியிலதான் சொன்னான். கொஞ்ச ஆயுதங்களும் காசும் புதைக்க வேணுமென்று. தனது பொறுப்பில் ஏழு AK-யும் கொஞ்ச ரவுண்சும், 20 குண்டும், தொன்னூற்றியெட்டு இலட்சக் காசும், ஏழு சங்கிலியும் இருக்குதென்றான்.
     முள்ளியவாய்க்காலில கடற்புலியளின்ர படகுகள் நின்ற ஆலமரத்துக்கு பக்கத்திலதான் புதைக்க வேணும். துவக்குகள் பாரம்தானே. விருந்தாளியான நான் காசைத் தூக்க அவன் துவக்குகளைத் தூக்கினான். அந்த நேரம் ஆமிக்காரன் செல்லடிக்க தொடங்கினான். கோபன் ஆலமரத்தோட படுத்திட்டான். அதில கடற்புலியளின்ர படகு நிற்கிறதால செல் அங்கயும் வருமென்று நினைச்சு ஓடினன். கொஞ்சத் தூரம் போக ஒரு பனங்கூடல் வந்திது. அதுக்குள்ள விழுந்து படுத்திட்டன். செல்லடி கொஞ்சம் குறைய, பனங்கூடலுக்குள்ள நின்ற வேப்பமரத்தை அடையாளமாக வைச்சு, அதில காசைப் புதைச்சன்.
     திரும்பி ஆலமரத்தடிக்கு போக கோபன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான். விசயத்தைச் சொன்னன். அவனுக்கு கோபம் வந்திட்டுது. முதல் துவக்கை புதைப்பம். பிறகு, காசு புதைச்ச இடத்தை காட்டுகிறேன் என அவனை சமாதானப்படுத்தி துவக்கை புதைக்க திரும்பவும் செல்லடி தொடங்கியது. எங்களைச் சுத்தியும் விழுது. அவசர அவசரமாக புதைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து ஓடிவந்து விட்டோம். அடுத்தநாள் வந்து காசு புதைத்த இடத்தை பார்ப்பதென முடிவு செய்திருந்தோம்.
     அன்றிரவு வோக்கியில் என்னைக் கூப்பிட்டான். காசு பத்திரமெனவும், இயக்கநிதி தொலைந்தால் தனக்குப்பிரச்சனையெனவும், அவசரமாக ஆனந்தபுரம் போவதாகவும்.திரும்பி வந்து காசை எடுப்போமெனவும் சொன்னான். பிறகு, அடுத்த கிழமை புலிகளின் குரல் வீரச்சாவுப் பட்டியலில் லெப்.கேணல் கோபன் என அறிவித்தார்கள். எனக்கு சரியான கவலை. அவனின்ர வீட்டுக்குப் போனன். சின்னத்தரப்பாளுக்குள்ள பெரிய குடும்பம் இருக்குது. தங்கச்சிதான் பாவம். நிலத்தில புரண்டு புரண்டு அழுகிறாள்.எனக்கும் அழுகை வந்திட்டுது.
       இது நடந்து இரண்டாம் நாள் மாத்தளனுக்குள்ள ஆமி உள்ளட்டிட்டான். நானும் அதுக்குள்ள அகப்பட்டுவிட்டன். ஒன்றும் செய்ய ஏலாது. தகட்டையும் குப்பியையும் கழற்றி மணலுக்குள்ள புதைச்சுப்போட்டு, போற சனத்தோட சனமாக ஆமியிட்ட வந்தன். நீரேரி கடந்து வர, இரணைப்பாலை வெட்டையில எல்லாச் சனத்தையும் இருத்தினான். கொஞ்சக்கொஞ்ச ஆட்களாக உள்ள கூப்பிட்டு செக்பண்ணி, விசாரிச்சு வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். தனியாக போக பயமாக இருக்குது. தனியாக போனால் கட்டாயம் இயக்கமென்று பிடிப்பான். அப்பதான் கவனிச்சன். இப்பிடி தனியாக வாற ஆட்கள் அந்த வெட்டையில நின்று சோடி கட்டுகினம். யார்,என்ன,எப்பிடி,என்ற ஒரு விபரமும் இல்லாமல் அகப்படுற ஆட்களோட சோடிகட்டிக்கொண்டு வருகினம். நான் ஒரு நிமிசம் யோசிச்சன். சாதிமதம், நல்லவளா கெட்டவளா, கலியாணம் செய்தவளா புருசனை விட்டவளா என்ற ஒரு விபரமும் தெரியாமல் ஒருத்தியோட சோடிகட்டி, நாளைக்கு இந்த ரிலேசன் நீடிச்சு லவ்கிவ்வாகி கலியாணம் மட்டும் போனால் வீட்டில என்ன சொல்லுவினம். கலியாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் யோசிச்சுப்போட்டு, தனியாகவே வந்தன். கொஞ்சத்தூரம் வந்ததுக்குப் பிறகுதான் கவனிச்சன், என்னை மாதிரியே ஒரு உத்தமபுத்திரியும் வாறாள். ஆர் பெட்டையென்று பார்த்தால் அது எங்கட கோபனின்ற தங்கச்சி. அவளும் என்னை அடையாளம் பிடிச்சு ஓடிவந்தாள். நேற்றுத்தான் தான் இயக்கத்துக்குப் போனதென்றும் இன்று சண்டை முடிந்து விட்டதென்றும் கவலைப்பட்டாள். இயக்கத்துக்குப் போனதால வீட்டுக்காரரை தவறவிட்டிருந்தாள். இரண்டு பேரும் ஆமிப்பொயின்ற் கடக்க மட்டும் புருசன் பெண்சாதி மாதிரியே போவதென்றும், வவுனியா போய் குடும்பங்களை தேடிக்கண்டு பிடிப்பதெனவும் முடிவுசெய்தோம். அவளும் பார்க்கிறதுக்கு வெள்ளையாக, முகவெட்டான பெட்டையாக இருந்தாள்.ஆமிப் பொயின்ற் கடக்க மட்டுமில்லைஅதுக்குப் பிறகுகூட ஒரு ரிலேசனை வைச்சிருக்கலாம் என்றொரு ஐடியாவும் எனக்குள்ள ஓடாமலில்லை. அவள் நன்றாக பயந்து போயிருந்தாள். அவளின்ர கையை இறுக்கிப் பிடிச்சன். இன்னும் இறுக்கமாக அவள் என்ர கையைப் பிடிச்சாள்.
     அந்த ரென்சனான நேரத்திலயும் ஒரு மெல்லிய கிளுகிளுப்பு எனக்குள்ள பரவிச்சுது. பக்கத்தில வந்த பொம்பிளை ஒராளோட கதைச்சு அவவிட்டயிருந்து குங்குமம் வாங்கி வைச்சாள். அவளின், நெற்றியில பாதியிடத்தில குங்குமமிருந்தது.
     சோதனை செய்யிற இடத்தில இரண்டு பொயின்ற் இருக்குது. ஒன்று ஆம்பிளையளுக்கு, மற்றது பொம்பிளையளுக்கு. சுற்றிவர மூடிக் கட்டியிருக்குது. உள்ளுக்கு நடக்கிறது வெளியில தெரியாது. இரண்டு பேரும் பிரிந்து சோதனைக்குப் போனம். மண்மூட்டை அடுக்கி அதுக்குப் பின்னால ஆமிக்காரன் நிக்கிறான். சேட்டை கழற்ற சொன்னான். கழற்றினன். உடுப்புப் பையை அவிழ்த்து கொட்டச்சொன்னான். அள்ளி அடுக்கச் சொன்னான். பிறகு, ஜீன்சை கழற்றச் சொன்னான். கழற்றினன். ஜட்டியையும் கழற்றச் சொன்னான். நான் ஒரு நிமிசம் யோசிச்சன். ஏதோ சிங்களத்தில கத்தினான். சரி, முன்னப்பின்ன தெரியாத சிங்களவன்தானே. போனால் போகுதென கண்ணைமூடிக் கொண்டு கழற்றினன்.
     வெளியில வர, சோதனை முடிச்சு நிக்கிறாள். அவளின்ர முகம் கறுத்துப் போயிருந்தது. என்ர காதுக்குள்ள "என்ன மனுசங்கள் இவங்கள்... உங்களுக்கு எப்பிடி செக்கிங்" என்றாள். எதுவும் நடவாதது மாதிரி பிரச்சனையில்லை என்றேன்.
     "ச்சா... எங்களுக்கு முழு உடுப்பையும் கழட்டச் சொன்னவங்கள்" என்றாள்.
 இளம் ஆட்களை விசாரணையிடத்தில மறிச்சு விசாரிக்கினம். ஒருத்தன் என்னைக் கேட்டான் -        "இயக்கமோ" என்று. நான் மறுத்தன்.
  "தங்கச்சியைப் பாக்க இப்பதான் சோடிசேர்ந்த மாதிரியிருக்கு" என்று சொல்லி அவளைப் பார்த்து ஒரு நளினச்சிரிப்பு சிரித்தான். புருசன்காரன் ஸ்தானத்தில பக்கத்தில நானொருத்தன் நிற்க இவன் என்ன கதை கதைக்கிறான். வேற இடத்தில இது நடந்திருக்க வேணும். மச்சானின்ர மூஞ்சை பெயர்ந்திருக்கும். நான் ஒரு பவ்வியத்தை வரவழைச்சுக் கொண்டு சொன்னன் -
     "ஐயோ சேர்... கலியாணம் செய்து ஒரு வருசம்"
     "வவா இல்லையா" என்றான். இதென்ன கண்றாவி. ஒரு மார்க்கமான கேள்வியள் கேட்கிறானே என யோசித்துக் கொண்டு சொன்னன் -
     "பிரச்சனைதானே சேர்... அதால ரை பண்ணயில்லை. இனி வவாதான்"
     அவனுக்கு வலுபுழுகம். எங்களை உள்ளுக்கு அனுப்பினான். அவள்தான் என்னோட ஏறி விழுந்தாள். வவா கதை கதைச்சதுக்கு. ஆபத்துக்குப் பாவமில்லை என்ற தமிழ்ப் பழமொழியை அவளுக்குப் புரிய வைச்சன்.
     ஆமிப் பொயின்ற் கடந்தாச்சுது. இனி அவள் ஆரோ நான் ஆரோ. ஆனாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளையை இப்பிடி நடுவழியில தனியாக விடஏலுமோ. எங்கட தமிழ்க் கலாச்சாரமென்ன. அதுவும் கூட்டாளியின்ர தங்கச்சி. அவன் வேற உயிரோட இல்லை. பலதையும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தன். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டம் மட்டும் அவளை பிரிவதில்லை என. வவுனியாவுக்கு பஸ்சேற இரணைப்பாலைச் சந்தியில ஒன்றரை நாள் காத்திருந்தம். அதில சாப்பாடு தண்ணி ஒன்றுமில்லை. அதில நின்ற ஒரு இலட்சம் சனத்துக்கும் நத்தார்ப் பாப்பா இனிப்பு குடுக்கிற மாதிரி இடைக்கிடை ஆமிக்காரர் கொஞ்ச பிஸ்கற் பைக்கற்றுக்கள் எறிவினம். ஸ்பைடர்மான், சூப்பர்மான் மாதிரியான ஆக்களாலதான் அந்தக் கூட்டத்துக்குள்ள அதை எடுக்க இயலும். நான் ஒரு பிஸ்கற்றை கூட கண்ணால காணயில்லை. அவள் பசியில கிடந்து அணுங்குகிறாள்.
     இதுக்குள் கொஞ்சச் சனம் பக்கத்துத் தென்னங்காணிகளிற்குள் புகுந்து தேங்காய் பிடுங்கி வந்து விற்றார்கள். தேங்காய்க்கு மட்டுமில்லை. தென்னைமரத்துக்கும் சேர்த்து விலை சொன்னார்கள். ஐநூறு ரூபா குடுத்து மூன்று தேங்காய் வாங்கினேன். இரண்டு அவளுக்கு. ஒன்று எனக்கு.
     பிறகு பஸ்சேறினம். பக்கத்துப் பக்கத்து இருக்கை. பலவிசயங்களையும் கதைச்சுக் கொண்டு போனம். இயக்கம் ஏன் தோல்வியடைஞ்சது. என்னென்ன மூவ்மென்றுகளை செய்திருக்க வேணும், ஆர்ஆரை கொமாண்ட் பண்ண விட்டிருக்க வேணும் என்றது மாதிரியான இராணுவ விசயங்கள் முதல், பான்கீமூன் ஏன் எங்களுக்கு உதவமுடியாமல் போனது என்று சர்வதேச அரசியல் வரை அலசி ஆராய்ந்தோம். அவளும் சும்மா ஆள் இல்லை. ஒருநாள் இயக்கத்தில் இருந்திருந்தாலும் பலவிசயங்களை தெரிந்து வைத்திருக்கிறாள். அப்பதான் அவள் ஒரு விசயம் சொன்னாள். அதாவது தன்ர தமயன்காரன் கொஞ்சநாள்முதல் வீட்டுக்கு போயிருக்கிறான். காசையும் ஆயுதத்தையும் புதைக்க ஒரு இடம் தேடியிருக்கிறான். மகன் காசு வைத்திருப்பதையறிந்த தாய் குடும்பக் கஸ்ரத்தை காரணம் காட்டி கொஞ்சப் பணம் கேட்டிருக்கிறாள். இயக்கநிதியில கைவைக்க மாட்டன் என அவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டானாம். பிறகு நடந்ததெதுவும் தெரியாதெனவும் சொன்னாள். நான் ஒன்றும் சொல்லவில்லை.
     பிறகு, ஓமந்தைச் செக் பொயின்றுக்குவர, இயக்கத்தில ஒருநாள் இருந்தாலும் வாங்கோ, ஒரு பிரச்சனையுமில்லை. பதிஞ்சிட்டு விடுவம். நீங்கள் எல்லாம் சின்ன ஆட்கள்தானே .பெரிய தலை கருணா அம்மான் வரவே மன்னிச்சு விட்டனாங்கள்தானே. நீங்கள் வராமலிருந்து நாங்கள் பிடிச்சால் இருபது வருசம் ஜெயில் என ஸ்பீக்கர்கட்டி அறிவிச்சினம். அறிவிக்கிறவனும் பலகுரல் மன்னர்போல, குரல் மாற்றியபடியேயிருந்தான். பதிந்துவிட்டு வருவம் என, பதியப் போனேன். அங்க போகத்தான் தெரியும், அவையள் இறால்ப்போட்டு சுறாபிடிச்சிருக்கிறமென்றது.
    எல்லாரையும் ஏத்திக்கொண்டு வந்து இந்த முகாமில இறக்கி விட்டியள் சேர்... இவ்வளவு தான் என்ர ஸ்ரோரி. கோபன் செத்துவிட்டான் எனத்தான் நினைத்திருந்தேன். அவன் சாகவில்லை. அந்த மட்டில் சந்தோசம். அவனும் இல்லைத்தானே ஏன் சோலியை என்றுதான் புதைச்ச விசயங்களை சொல்லவில்லை. ஏதும் பிழையென்றால் மன்னித்து விடுங்கள்.
     விசாரிக்கிறவன் சிரிச்சான். கோபன் துவக்கு விடயத்தை மட்டுமே சொன்னதாகவும், காசு விடயத்தை இப்போதுதான் அறிகிறேன் என்றார். மேலதிகாரிகளினால் இந்த கேசை விசாரிக்க தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தான் குடுக்கும் அறிக்கையைத்தான் மேலிடம் நம்புமெனவும் சொன்னான். அவன் இதை ஏன் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. வெருட்டுறதுக்கு சொல்லுகிறானோ, பயப்பிடாதே என ஆறுதல்ப்படுத்த சொல்லுகிறானோ என்பதும் விளங்கவில்லை.
     எனது விசாரணைக் கோப்பைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். பின்பு சிரித்தான். பயப்படாமல் என்னையும் சிரிக்கச் சொன்னான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். எனக்கும் ஒன்றை நீட்டினான். நான் மறுத்து விட்டேன். பிறகு கேட்டான்
     "கலியாணம் கட்டினாச்சுதோ?..."
     "இல்லை...""
     "லவ் ஏதும்..."
     "இல்லை..."
     "அப்ப கோபனின்ர தங்கச்சி..."
     "அது தங்கச்சி மாதிரி..."
     "ஒன்றும் நடக்கயில்லையோ?..."
     "இல்லை..."
     "பயப்பிடாதையும்... அங்க பிரச்சனை நேரம் நிறைய மாட்டியிருக்குங்களே. ஒரே             என்யோய் தானே?'
     "இல்லை சேர்... அங்க அப்பிடியில்லை?.."
     "சும்மா சொல்லும் ஐ சே..."
     "................"
     "சரி அப்ப இயக்கத்தில"
     "இல்லை சேர்... அங்க வலு கட்டுப்பாடு..."
     எனக்கு ஒன்றும் விளங்கயில்லை. காசு விசயத்தை கதைக்காமல் இருந்திருக்கலாம் என்ற யோசனை ஒரு பக்கம், இவன் என்ன மாறி மாறி மார்க்கமான கேள்வியள் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற யோசனை ஒரு பக்கம். இப்பிடித்தான் அந்தப் பிள்ளை தமன்னாவும் மாட்ட வைச்சது. நான் வலு எச்சரிக்கையாக இருக்க வேணும். ஆனால் இவனின்ர நடவடிக்கையைப் பார்க்க, மாட்ட வைக்கிற ஆள் மாதிரித் தெரியேலை, என்னோட நெருங்கி வர முயற்சி செய்யிற மாதிரியிருக்குது. என்ன நடக்கப்போகுதென்று ஒன்றுமே விளங்கயில்லை. அந்தோனியாரோ...
....................................................................................................................
     விக்கிரமாதித்தனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் கோபத்தை வேதாளமும் புரிந்து கொள்ளட்டுமே என, முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான். வேதாளம் சிரித்தது. இந்த சீரழிஞ்ச கேள்விகளை விட்டுவிட்டு, ஒப்பந்தப்படி கேட்கவுள்ள அந்த இரண்டு கேள்விகளையும் கேட்குமாறு சொன்னான். வேதாளம் தீவிரமாக யோசித்துவிட்டுச் சொன்னது - ஒப்பந்தப்படி இரண்டு கேள்விகள் கேட்கவில்லை எனவும் ஒரேயொரு கேள்வியை மாத்திரமே கேட்கவுள்ளதாகவும், இதுவரை கேட்டதெல்லாம் முன்னாயத்தை கேள்விகளென்றும். வேதாளம் விசாரணைக் குறிப்பை மூடி வைத்தது. விக்கிரமாதித்தன் ஒரு நிரபராதி என எழுதியது. அவன்மீது சுமத்தப்பட்ட இராஜதுரோகக் குற்றம் இதனால் மறைந்து போனது. வேதாளம் தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டது. பின்னர், மெதுவாக கேள்வியைக் கேட்டது.
     "அந்தப் புதையல் இருக்குமிடத்தை எனக்கு இரகசியமாக அடையாளம் காட்ட உன்னால் முடியுமா? புதையலை இருவரும் பாதிபாதியாக பகிந்து கொள்ளலாம். சம்மதமா? "
     விக்கிரமாதித்தன் கண்களையும் வாயையும் இறுக மூடிக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தான். தலை சுக்குநூறாக வெடித்து இறந்து போகும் கணத்துக்காக. ◄

No comments:

Post a Comment