Sunday, November 20, 2011

யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள்


            
சகறணம், துயில், ஆடுஜீவிதம் என நல்ல நாவல்கள் பல அண்மை காலத்தில் வெளிவந்திருக்கின்றன என நான் கேள்விப்  பட்டிருக்கிறேன். இஸ்ரேலியர்களினால் பெருந்தொகை பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டதை, லிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டதை மற்றும் உலகில் நடக்கும் பல புதினங்களை செய்தியின் வாயிலாக அறிந்து கொண்டிருப்பதை போல இதனையும் இணையத் தளத்தின் வழி அறிந்து மட்டும் கொண்டேன். சில இடங்களில் அட்டைபடத்தையும் பார்க்க முடிந்தது. நேரில் காண முடியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாண வாசி.
சென்ற வாரம்வரை யாழ் புத்தக கடைகளில் சல்லடை போட்டும் இதிலொரு நாவலும் கிடைக்கவில்லை. அடுக்கிக்  கிடக்கும் ரமணி சந்திரனின் நாவல்களிற்கிடையிலாவது மறைந்திருக்கிறதா என தேடியும் பலனிருக்கவில்லை.
இந்த நாவல்கள் வெகு காலம் கழித்து மிகச் சிலவாக இங்கு வரக் கூடும். அப்பொழுது சிலவேளைகளில் அவை இணையத்தில் வாசிக்கக் கூட கிடைக்கலாம்.
இப்படித் தானிருக்கிறது யாழ்ப்பாண நிலை. காலச்சுவடு மற்றும் உயிர்மை என்ற 'நட்சத்திர' சஞ்சிகைகள் தவிர வேறெதுவும் ஒழுங்கு முறைப்படி வருவதில்லை. புதுவிசை. புத்தகம் பேசுது, மற்றும் சில எப்பொழுதாவது வருகின்றன.
எல்லா கடைகளிலும் ஜனனி, பிரியா, மித்திரன் வகையறாக்கள் முன்னுக்குத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இது போல இன்னொரு நிலையுமுண்டு. ஈழநூல்களிற்கான சந்தை வாய்ப்பு. ஈழ படைப்பாளிகளின் நூல்கள் சந்தைப்படுத்தப்படுவதில் பெரிய சிரமங்களை எதிர் கொள்கின்றன. அனேகமான எல்லா ஈழப் படைப்பாளிகளும் அனேக சந்தர்ப்பங்களில் இந்த நிலை பற்றி சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர் - சந்தைபடுத்துவதில் தாம் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றி. அதில் நிறைய உண்மையுமுண்டு. அண்மையில் வடலி பதிப்பாளர் அகிலனிற்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொன்னார். அவர் இந்தியாவிலிருந்து இலங்கை வரும் போது தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களின் சில பிரதிகளைக் கொண்டு வந்திருந்தார். அதனைப் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குக் கொடுக்கச் சென்றபோது அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆனாலும் சில காலத்தின் பின் அந்தப் புத்தகங்கள் அந்தக்  கடையில் இருந்தன. அவர்கள் இந்தியாவில்தான் கொள்வனவு செய்வது என்ற ஒரு முடிவுடன்தானிருக்கிறார்களே தவிர, நூல்களைப் பார்த்து வாங்குவதென்ற நிலையிலில்லை.
இந்த இரண்டு சம்பவங்களிற்கும் காரணம் மிகத் தெளிவானது. இந்திய கலாசார மற்றும் பண்பாட்டுத் தாக்கம். இதே விதமான நெருக்கடியை தாம் மலேசியாவில் எதிர் கொள்வதாக ண்மையில் இலங்கை வந்திருந்த நவீனும் சொல்லியிருந்தார்.
இந்திய பண்பாட்டின் தாக்கம் நாம் முயன்றாலும் விடுபட முடியாத அளவிற் தானிருக்கிறது. இது நமக்கு மட்டுமே உ ரிய பிரச்சனையல்ல.உபகண்டத்திலிருக்கும் மற்ற எல்லா சிறிய இனங்களும் இந்தக் கலை, கலாசார, பண்பாட்டு நெருக்கடியை எதிர் கொள்கின்றன. இது கூட ஒருவிதமான ஆக்கிரமிப்புதானென நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இதற்குப் பாவித்த பெயர் 'பண்பாட்டு ஆக்கிரமிப்பு'. மலேசியாவில் தாமும் இதே விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அண்மையில் இலங்கை வந்திருந்த வல்லினம் ஆசிரியர் நவீனும் குறிப்பிட்டிருந்தார்.
நமது விருப்பம், ரசனை, நாகரிகம், அனைத்தும் இந்தியாவில்தான் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் வானொலிகளைத் தவிர மிகுதி வேறெந்த ஊடகத் துறையும் தலையெடுக்க முடியாமல்த்தானிருக்கிறது. அல்லது இந்திய போட்டியாளர்களை பின் தொடர்பவையாகத் தான் இருக்கின்றன. வானொலிகள் மட்டுப்படுத்தப்பட்டளவு தூரவீச்சு அலைவரிசையைப் பாவிப்பதனால் அவை தப்பித்தன போலும். ஆனாலும் சக்தி பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பிற்கான முக்கிய பொறுப்பில் இருப்பவர் ஒரு இந்தியர். இது குறித்த ஒரு புகாரை யாரோ ஒருவர் சில காலத்தின் முன் பத்திரிகையில் எழுதியிருந்தார். தவிரவும் பல பண்பலை வானொலிகளை முதலில் கேட்கும் ஒருவர் இது இந்திய ஒலிபரப்பா அல்லது இலங்கை ஒலிபரப்பா என்று நிச்சயம் குழப்பமடைவார். லிபரப்பாளர்கள் - குறிப்பாகப் பெண்கள் - இந்திய பாணியிலான உச்சரிப்பையே கையாள்வார்கள். ஒரு வானொலி நண்பர் சொன்னார் இது தவிர்க்க முடியாதது. அப்படி பாவித்தால்தான் நிலை பெற முடியும் என.
நமது அமைவிடம் மற்றும் வேறு பல வரலாற்று காரணங்களின் நிமித்தம் இந்த விபத்து நேர்ந்து விட்டது. ஆயினும் நாம் ஓரளவு சுயாதீனத்திற்கு முயற்சிக்க வேண்டாமா என்ற கேள்வியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பலரிற்கு வசந்தம் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி இருப்பதே தெரியாது (அதைப் பார்த்து எதுவும் ஆகப் போவதில்லை என்பது வேறு விசயம்). பல நண்பர்கள் சொல்வார்கள் - வீடுகளில் இலங்கை ஊடகங்களின் செய்தியறிக்கையைப் பார்க்க போராட வேண்டியிருப்பதாக. அனேக செய்தியறிக்கை நேரங்கள் மாலை ஏழுமணியை அண்மித்திருப்பதால் தமது வயோதிப தந்தைமார் - குறிப்பாக திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர்கள் - இந்திய அலைவரிசைகளில்தான் செய்தி பார்க்க வேண்டும் என அடம்பிடிப்பதாக. திராவிட இயக்கங்களின் வருகை கூட இப்படித் தான் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை குறித்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய செய்தி இலங்கை ஊடகம் ஒன்றில் சொல்லப்பட்டுக் கொண்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பொழுதில் தனது வீட்டினர் இந்திய தொலைக்காட்சியொன்றில் கனிமொழிக்கு பிணை கிடைக்குமா இல்லையா என்ற செய்தியையோ நாமக்கல்லில் கோழிகளிற்குப் பரவும் தொற்றுநோய் பற்றியோ வைத்த விழி வாங்காமல் பார்த்து கொண்டிருப்பதாக ஒரு நண்பர் அண்மையில் புலம்பினார்.
இதனால்தான் இங்கு ஈழத்து காந்தி, ஈழத்து சௌந்தரராஜன், ஈழத்து சிவாஜி, பெண் சிவாஜி எல்லாம் உருவாக முடிந்தது.
இலக்கியத்தின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலமான எதிரியை எதிர் கொள்ள முடியாமல் அவை எப்போதோ சரணடைந்து விட்டன. ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல ஈழக் கடைகளில் இலங்கை புத்தகங்கள் வாங்குவது அல்லது நல்ல புத்தகங்கள் (இதற்குள் இந்திய புத்தகங்களும் அடக்கம்) ஆச்சரியமான ஒரு நிகழ்வே. இலங்கையில் சில சஞ்சிகைகள் வரத் தான் செய்கின்றன. இன்றை திகதியில் இலங்கையில் வரும் அனேக சஞ்சிகைகளிற்கு இருக்கும் ஒரே பெருமை - தொடர்ச்சியான வருகை என்ற ஒன்று மட்டுமே. அதைத் தவிர்த்தால் பெரும்பாலானவற்றில் எதுவுமில்லை. ஊரில் இருக்கும் சங்கக் கடைகளை உங்களிற்குத் தெரிந்திருக்கும். நிவாரண நேரத்தில் ஊர் விதானையின் கையெழுத்துடன் அந்த அந்த ஊர் சங்கக் கடைகளிற்கு மட்டுமே போக வேண்டும். அங்கு மட்டுமே சாமான் கிடைக்கும். எனக்கு இந்த சஞ்சிகைகளை பார்க்க அந்த நினைப்புத் தான் வரும். பலதும் கிராம சஞ்சிகைகளாக மட்டுமே வருகின்றன. வந்ததும் பணச் சடங்கு நிகழ்வு போல ஊரிலுள்ளவர்களைக் கூட்டி வெளியீட்டு விழா நடத்தி அந்த பணத்தைப் பெற்று கொள்கிறார்கள். பலரும் கடைகளிற்குக் கொடுத்துத் தான் பணம் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இல்லை.
இந்த வகையான போக்கிருக்கையில் புத்தகக் கடை உரிமையாளர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் வாசகர்கள் அல்ல. வியாபாரிகள் மட்டுமே. ஈழத்திற் பூக்கும் அத்தியை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
யாழ்ப்பாணத்தில் செழிப்பான ஒரு புத்தக பண்பாடு இருந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பான நிலை 'முன்னொரு காலத்தில்' இருந்திருக்கிறது. ஈழகேசரி பண்ணை பல ஈழத்துப் படைப்பாளிகளை அறிமுகம் செய்திருந்தது. பின்னர் முன்னர் போல அல்லாவிட்டாலும்  வீரகேசரி, மீரா, அலை, தேசிய கலை இலக்கியப் பேரவை, புலிகளின் வெளியீடுகள் என நல்ல பல நூல்கள் வந்திருந்தன. அது ஒரு செழிப்பான காலமாக இருந்தது.
பின்னர் உதிரியாக ஓரிரு வெளியீட்டு முயற்சிகள் இருந்தன. ஆனால் அவை தாக்குப் பிடிக்க முடியவில்லை. இப்பொழுதும் சில இருக்கின்றன. அவற்றின் வெளியீடுகளின் தரம் குறித்த விமர்சனங்களுமிருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இந்தியாவில் இயங்கும் வடலிதான் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்தத் தேக்கத்தை இல்லாமல் செய்து ஒரு முன்னோக்கிய உந்துதலிற்கான சிறு எத்தனங்களைச் செய்யப் பல காலத்திலும் பலரும் முயன்றிருக்கிறார்கள். யாருக்கும் எதிர்பார்த்த பலன் கிட்டியிருக்கவில்லை. இப்படித் தான் அண்மையில் இதே போன்றதொரு எத்தனத்திற்கான கலந்துரையாடல் யாழ் சிகரம் ஊடக கற்கை நிலையத்தில் ற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன். உள்ளே நுழைய, கவிஞர் சோ.பத்மநாதன் விலங்குப் பண்ணை நாவல் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். பிறகு ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் வில்லங்கமான அரசியல் கதைக்க தொடங்கினா. நான் எழுந்து வெளியில் வந்து விட்டேன். ரு வைத்தியரும் உரையாற்றினார். சற்றுத்  தாமதித்து நுழைய, டான் ரிவி குகநாதன் ஏதோ நகைச்சுவையாக தனது கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முன் வரிசையிலிருந்த பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் கதிரை உடைந்து கீழே விழுந்தார். நான் இரண்டு தேநீர் பருகினேன். இதனைத் தவிர்த்தால் அங்கு அன்று எதுவும் கதைக்கப்படவில்லை. கலந்துரையாடப்படவுமில்லை. இப்படியாக யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்காமல் அல், அதற்காக இன்னும் கலந்துரையாடப்படாமலும் இருக்கிறது.
0

6 comments:

 1. நான் சிறுவனாக இருக்கும் காலங்களிலேயே டொமினிக் ஜீவா மல்லிகையில் பக்கம் பக்கமாக அழுதிருப்பார், "ஈழத்து வெளியீடுகளை" ஈழத்துப் புத்தகக் கடைக்காரரே விற்க ஆயத்தமாக இல்லை என்று. இன்றும் அதே நிலை.

  ReplyDelete
 2. வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழரும் இலங்கையிலிருந்து வரும் படைப்புகளுக்கு ஆர்வம் கட்டுவது குறைவு. ஆனால் நல்ல புத்தகங்களை இணையத்தில விமர்சிப்பதன் மூலம் வெளிநாடுகளில் சந்தைபடுத்த முடியும் என்பது என் கருத்து.
  சமீபத்தில் "தேவதைகளின் தீட்டுத்துணி" புத்தகத்தை வடலி பதிபகத்தில Online இல் ஒடர் பண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு மாதமாகியும் இன்னும் புத்தகம் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் புத்தகங்கள் அனுப்ப படாவிட்டால், அது நிறுவனத்தின் நம்பக தன்மையை குறைப்பதோடு மட்டும் நில்லாது, online இல் தமிழ் புத்தகங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையையும் குறைத்து விடும்.

  ReplyDelete
 3. யோ கர்ணன். கனடாவில் காலம் செல்வம் அவர்களிடம் அனேகமான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது கனேடிய வாசகசாலைகளிலும் பல தரமான நாவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இலவசமாக அவற்றைப் பெற்று வாசிக்க முடிகின்றது. நூலகத்தின் உதவியுடனும் சிலவற்றை வாசிக்க முடிக்கின்றது. ஈழத்து இலக்கியங்கள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் பேசப்படும் படைப்புகனை அனேகமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

  எனது சிறுகதைத் தொகுதி சிலவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கவா? நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கலாம்.

  மேலும் உங்கள் புளொக்கின் நிறத்தைக் கொஞ்சம் மாற்றுங்களேன். வேலைத்தளத்தில் வேலைக்கிடையில் வாசிப்போம் என்றால் முகத்தில் அடிப்பது போல் இருக்கின்றது நிறம்.

  நட்புடன்
  கறுப்பி

  ReplyDelete
 4. நல்லது கறுப்பியக்கா. படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.. நண்பர்களிற்கும் வழங்கலாம்.

  ReplyDelete
 5. அந்தக்காலம். உண்மைதான். இணையவிளம்பரங்கள் மூலம்,விமர்சனங்கள் மூலம் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தலாம். அப்படி சில செயற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆயினும் அது இன்னமும் பொதுவான ஒரு செயற்பாடாக வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டிருந்தேன். முறைப்பாடு குறித்து வடலி நிறுவனத்திடம் தெரியப்படுத்தியிருந்தேன். திடிரென எற்பட்ட சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த தாமதம் நிகழ்ந்து விட்டது. விரைவில் உங்களிற்கு புத்தகம் வந்த சேரும்.

  ReplyDelete
 6. சில எழுத்தாளர்கள் தமது புத்தக பிரதிகளை பல்கலக்கழக நூலகத்திற்கு அனுப்புவதாக சொல்கிறார்கள். அது போய்ச் சேருவது பற்றி நிறைய சந்தேகங்கள் உண்டு.. இருந்தாலும் விசாரித்து பாருங்களேன்..

  ReplyDelete