Monday, November 28, 2011

அப்பாவின் சிநேகிதர்கள்யுத்தத்தின் பின் வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் முன்னாள்ப் போராளிகள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி பல்வேறு இடங்களிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே நான் புதிதாக எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் பற்றி, அவர்களது நிலைமை பற்றி இந்த உலகத்திற்கு குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆயினும் காக்கப்படும் கள்ள மௌனத்தின் அர்த்தம் மிகக் கேவலமானது.
இதுபற்றி ஒருவர் குறிப்பிடும் போது எழுதியிருந்தார் - 'அவர்கள் வெற்றிகளிற்கு மட்டுமே உரிமை கோருவார்கள்' என. உண்மைதான் அதனைச் சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். வெற்றிபெற்றவர்களிற்கு மட்டுமே அவர்கள் உரிமை கோருகிறார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகள் களத்தில் இருந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் அவர்களைக் கொண்டாடிய விதம் பற்றி புதிதாக எதனையும் சொல்லத் தேவையில்லை. இப்போதும் முன்னாள்ப் போராளிகளைப் பார்க்காமல் மறுவளமாக திரும்பி நின்று கொண்டு - கட்டமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பிம்பம் மீது புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள்ப் போராளிகளைக் கிட்டத்தட்ட பந்தயக் குதிரைகளாகவே இந்த சமூகம் பார்க்கிறது. அவர்கள் பந்தயத்திற் தோற்று விட்டதனால் அந்தப் பக்கத்தைப் பார்ப்பதை நம்மவர்கள்  வசதியாக  தவிர்த்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களிற்கு மாவீரர் தினம், அங்கு விற்கப்படும் உணவு வகைகள், சில வீர வசனங்கள், சீமான், ஏழாம்அறிவு முதலானவை தேவையாகவேயிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள்ப் பெண் போராளியொருவரை அவரது தந்தையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருவது பற்றி அண்மையில் ஒரு தகவலை யாரோ பகிர்ந்திருந்தார்கள். இப்படியான சில சம்பவங்கள் இடையிடையே பதியப்பட்டாலும் பெரும்பாலான பெண்கள் மிகக் குறைந்த ஊதியத்தில், மிகக் கடினமான வேலைகளில் ஈடுபட்டு வருவதையே காண முடிகிறது. இது பற்றி பேசுவதென்பதே இப்பொழுது அயர்ச்சி தருவதாக இருக்கிறது. ஏனெனில் நமது சமூகத்தில் இது பற்றி பேசுவதென்பது ஆழ்கடலில் கல்லெறிந்து விட்டு பார்த்து கொண்டிருப்பதற்கு சமமானது. ஆகவேதான் நான் இது பற்றி அதிகமும் பேசியிருக்கவில்லை. சில நெஞ்சு நெகிழும் சம்பவங்களைக் கண்ட நாட்களில் மட்டும் முகப் புத்தகத்தில் சில நிலைத் தகவல்களை இட்டிருக்கிறேன்.
இப்படித்தான் சில மாதங்களின் முன் ஒரு தகவலிட்டிருந்தேன். யுத்தத்தில் கடுமையான காயமடைந்த போராளிகள் பற்றிய தகவலது. அதனை பார்த்து விட்டு இந்தியாவிலிருந்த ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டு அவர்களிற்கு உதவி செய்ய விரும்புவதாகச் சொன்னார். ஆரம்பத்தில் எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. இந்த வேலைத் திட்டத்தை அமைப்பு ரீதியில் செய்பவர்களுடன் தொடர்பு கொண்டு செய்யலாமே எனச்  சொன்னேன். அவர் எனக்கு தெரிந்த - பாதிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளிற்கு உதவுமாறும், இது தனது நெடுநாள் ஆசையெனவும் கூறினார்.
அந்த நண்பர் இந்தியா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் முத்துசாமி. உடனடியாகவே இந்திய பணமதிப்பில் ரூபா ஐம்பதாயிரத்திற்கான காசோலையை அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
....அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவு, உடை, சிறிய அளவிலாவது கல்வி, மிகுந்த சுயமரியாதை இவற்றுடன் வாழ வேண்டும் என விழைகிறேன். கல்விமான் ஆவதும், செல்வந்தன் ஆவதும் இவற்றின் பின்னரேதான்.
......அறநெறி மீறாது அமைதியாக விளங்கிய தம் இனத்திற்கு நேர்ந்த இழிவைப் போக்கும் முயற்சியில் தமது சீரிய வாழ்வை, கல்வியை, சுற்றங்களை இழந்து மனரீதியிலும், பொருளாதார, சமூக ரீதியிலும் புறக்கணிக்கப்பட்டு உடலுறுப்புக்களையும் இழந்து வாழும் எம் இனச் சகோதர குடும்பங்களில் சிலவற்றிற்கு என்னாலான சிறு உதவியிது.....
அந்த பணத்தில் பெரும்பகுதியை சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்பட்ட அல்லது காணாமல்ப்போன முன்னாள்ப்போராளிகளது குடும்பத்திற்கு கொடுப்பதென ஆலோசித்திருந்தோம்.
நேற்று ஒரு தொகைப் பணத்துடன் யாழில் உள்ள ஒரு குடும்பத்திடம் சென்றிருந்தோம். குடும்ப தலைவர் சரணடைந்த பின் எந்த தகவலுமிதுவரை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள். இப்போது உறவினர் ஒருவருடைய பழைய வீட்டில் குடியிருக்கிறார்கள்.
நாங்கள் போகும்போது அந்த பெண்ணும் ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க அவரது கடைசிப் பெண்ணும் தான் வீட்டில் இருந்தனர். நாங்கள் விசயத்தைச் சொன்னதுமே அவர் ஒருவித சங்கடத்துடனிருந்ததை கவனித்தேன். அதுவரை சாதாரணமாக கதைத்துக்கொண்டிருந்தவர், சற்று தடுமாற்றத்துடன் கதைக்கத்தொடங்கினார். இது இயல்பான, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
அவரது கணவர் குடும்பம் ஓரளவு வசதியானவர்கள். அவர் போராளியாக இருந்த காலத்திலும் ஓரளவு செல்வாக்குடையவராகவேயிருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் தங்களிற்கு எந்த பிரச்சனையுமிருக்கவில்லை என்றார். இவற்றைச் சொல்லும் போது அவரது கண்களில் கடந்த காலம் ஒரு கனவைப் போல மிதந்து கொண்டிருந்தது.
இப்பொழுது கணவனின் உறவினர்கள் தன்னைக் கவனிப்பதில்லை என்றும் முகாமிலிருந்து வந்ததற்கு, இப்பொழுதிருக்கும் வீட்டை தற்காலிகமாக குடியிருக்கப் பெற்றுத் தந்தது மட்டுமே அவர்கள் செய்த உதவி என்றார்.
நான் அவரிற்கு முன்னால் பணத்தை வைத்தேன். அவர் அவசரமாக கைகளை உள்ளிழுத்துக் கொண்டு குனிந்திருந்தார். சற்றுக் கழிய மெதுவாக சில கண்ணீர்த் துளிகள் விழுந்தன. ஓர் ஒழுங்கில் நடப்பது போல அடுத்து, கேவிக்கேவி அழத் தொடங்கிவிட்டார்.
இதில் சங்கடப்படுவதற்கு ஏதுவுமில்லை எனவும், அவரது கணவரின் பணியை மதிக்கும் சிலர் தங்களால் இயன்றதை செய்கிறார்கள் அதனைப் பெற்றுக் கொள்ள நீங்கள் எந்தச் சங்கடமும்படத் தேவையில்லை என்ற எங்கள் சமாதானங்கள் எதுவும் அவரை சமாதானப் படுத்தவில்லை.
அழுகையினிடையே சொன்னார். அவரது மூத்த மகனிற்கு பதினான்கு வயதாகிறதாம். அவன் நன்றாகப் படிக்கக் கூடியவன் எனவும், அதனால் சிரமப்பட்டு பிரபல பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்றுச் சேர்த்திருப்பதாவும், ஆனால் இப்பொழுது அதுவே பிரச்சனையாக உருவாகியிருப்பதாகவும். பிரபல பாடசாலைகளில் ஓரளவு மத்தியதர வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிப்பதால் அந்தக் கலாச்சாரத்தில் ஒன்ற முடியாமல் அவன் சிரமப்படுவதாகவும், அதற்கு அவனைத் தயார் செய்ய பணம் தேவைப்படுவதாகவும் அது தன்னால் முடியாமலிருப்பதாகவும் சொன்னார்.
சென்றவாரம் கிரிக்கட் பயிற்சிக்கென அவனும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறான். பயிற்சியில் திறமையானவனாக அடையாளம் காணப்பட்டால் அவன் பாடசாலை அணியில் சேர்க்கப்படலாமாம். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அதற்கான உடையையும், பாதணியையும் வாங்க வேண்டியிருந்தது. அவன் கடந்த சில தினங்களாகவே அதற்குப் பணம் கேட்டிருக்கிறான். தன்னால் அந்த பணத்தைத் திரட்ட முடியாமலிருந்ததாம். அவனது கனவிற்கும் அவரது வறுமைக்குமிடையிலான விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தின் முடிவில் அந்த வீடு முதல் நாளிலிருந்து இயல்பற்றிருக்கிறது. நேற்று மாலையில் அவன் அடம்பிடித்து சண்டை பிடித்திருக்கிறான். இவர் முடிவாக மறுத்ததன் பின் இவன் பேசாமல் படுத்துவிட்டானாம். இரவு வெகு நேரமான பின் அவனை சாப்பிட எழுப்பியுள்ளார். அவன் உறங்கியிருப்பான் என நினைத்துக் கொண்டு சென்றால், தூக்கமில்லாதவனாகவேயிருந்திருக்கிறான். அப்பொழுது அவன் தன்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அது ஒரு மகன் தன் தாயைக் கேட்கக் கூடாத கேள்வியெனவும் கூறினார். இந்த கேள்வியின் பின்பு அவனை தன்னால் நேரடியாக முகம் கொள்ள முடியாதிருப்பதாகவும் சொன்னார். அவர் அதனை எங்களிடம் சொல்லமாட்டேன் என்றார். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு எதுவும் நடவாதது போல சொன்னார் - 'அம்மா ஏனம்மா ஒரு இயக்க ஆளைக் கலியாணம் செய்தனீங்கள்' என அவன் கேட்டதாக. இதைக் கேட்ட போது அவன் தன்னை பார்க்காமல் தலையணையில் முகம் புதைத்திருந்ததாகவும் சொன்னார்.
அவனிற்கு உடனடியாக அந்தப் பொருட்களை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் சொன்னார். 'இது உனது அப்பாவின் நண்பர்கள் உனது கிரிக்கட் பயிற்சிக்காகவும், அதற்கான உடைகளிற்காகவும் கொடுத்தது என அவனிடம் சொல்லுங்கள்` எனச் சொன்னேன்.
சரவணகுமார் முத்துசாமியை எனது கைத்தொலைபேசியின் முகப் புத்தகத்தில் காட்டினேன். அவர் சற்று நேரம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார் - எனக்கொரு அண்ணா இருந்திருந்தால் இப்படித்தானிருந்திரப்பார்' என. நன்றி சரவணகுமார் முத்துசாமி. அங்கிருந்து புறப்படுகையில் நெஞ்சமெல்லாம் நீங்கள்தானிருந்தீர்கள்.
.....

2 comments:

  1. அண்மையில் யாழில் விவசாயம் செய்யும் நபருடன் கதைத்தேன். முன்னாள் போராளிகளைக் கண்டால் முகத்தைத் திருப்பவேண்டியுள்ளதாக வேதனையுடன் சொன்னார். காரணம், மு.போராளிகளுடன் கதைப்பவர்கள்கூட note பண்ணப்படுவதாகவும், தனக்கும் மனைவி/பிள்ளைகள் இருப்பதாகவும்....

    ReplyDelete
  2. உண்மைதான். தேவதைகளின் தீட்டுத்துணி புத்தகம் வெளிவந்த நேரம் என் நண்பரொருவர் மூலம் என்னை சந்திக்க ஒருவர் விரும்பியிருந்தார். நண்பர் எனது வரலாற்றை சொல்ல 'காம்பால வந்த ஆளோ? இருக்கட்டும்.. பிறகு பார்ப்பம்' என்று சொன்னார். அவரை அப்போது சந்திக்க முடியாததினால் எதுவும் நடந்துவிடவில்லை.
    (அவர் பின்னர் ஒரு நாள் வீட்டிற்கே வந்திருந்தார்) பொது மனநிலை இப்படியாகத்தானிருக்கிறது.

    ReplyDelete