Friday, June 24, 2011

வன்முறைகளுக்கெதிரான எழுத்தும் இயக்கமும் - (விமர்சனங்கள்) கருணாகரன்


யோ. கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத்துணி'
வன்முறைகளுக்கெதிரான எழுத்தும் இயக்கமும்
-    கருணாகரன்


ஒரு நூலுக்கான முன்னுரையை எழுதியவரே அந்த நூலுக்கான மதிப்புரையையும் அல்லது விமர்சனத்தையும் எழுத வேண்டிய அவசியத்திலிருப்பதென்பது ஒரு கொடுமையான சூழலே. யோ. கர்ணனின் 'தேவதைகளின் தீட்டுத்துணி' என்ற சிறுகதை நூல் வெளியாகி ஏறக்குறைய பத்து மாதங்களாகின்றன. ஆனால், இந்தப் பத்து மாதங்களில் இந்தப் புத்தகத்துக்கு வந்த விமர்சனங்கள் மிகமிகக் குறைவே. புதுவிசையில் தேவா என்பவர் ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். மற்றும்படி இந்த நூல் பொதுத்தளத்தில் வைத்து விவாதிக்கப்படவில்லை. அவ்வாறு விவாதிப்பதற்குத் தமிழ்ச் சூழல் விரும்பவும் இல்லை. அதற்குத் தயாராகவும் இல்லை.

ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் இந்தப் புத்தகம் முக்கியமான ஒன்று. எழுத்திலும் அது கூறுகின்ற சேதிகளிலும் அது செய்கின்ற காலப் பதிவிலும் அது கொண்டிருக்கிற அனுபவத் தளத்திலும் அதன் மெய்யிலும் இந்தப் புத்தகம் தன்னுடைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

குறிப்பாக 'முள்ளிவாய்க்கால்' என இன்று பெரும்பாலான தமிழர்களால், அரசியலுக்காக எடுத்தாளப்படுகின்ற நிலப்பகுதியையும்'முள்ளிவாய்க்கால்' என்று அடையாளப்படுத்தப்படக் காரணமான காலப்பகுதியையும் அங்கே நடந்த அரசியல் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் 'தேவதைகளின் தீட்டுத்துணி' பேசுகிறது. யோ. கர்ணன் அந்த நிலப்பகுதியில், அந்தக் காலப்பகுதியில், அங்கே நடந்த அந்த அரசியல் நிகழ்ச்சிகளின் போது, அவற்றின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். என்றவகையில் தன்னுடைய அனுபவங்களைத் தேவதைகளின் தீட்டுத் துணியில் பதிவு செய்துள்ளார்.

இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய் விவரிப்பு ஆவணமாக'தேவதைகளின் தீட்டுத்துணி' அமைந்துள்ளது. போருக்குப் பின்னர் வெளியாகிய ஈழப்போர் பற்றிய முதற் புத்தகமாகவும் தேவதைகளின் தீட்டுத்துணியே உள்ளது.

ஆனால், இந்த முக்கியமான புத்தகத்தை தமிழ்ச் சூழல் மிகச் சாதுரியமாகக் காணாதிருக்கிறது. அல்லது கண்டும் காணாததைப் போல இருக்கிறது. இது தமிழ்ச் சூழலின் பொது இயல்பு மட்டுமல்ல, அதனுடைய 'கள்ளக்குணம்' என்றே சொல்ல வேணும்.

ஏனெனில், இது போன்ற 'கள்ளக் குண'த்தைத் தமிழ்ச் சூழல் தன்னுடைய சிறப்பியல்பாக அரசியலிலும் இலக்கியத்திலும் வாழ்விலும் கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் ஏராளமுண்டு.

ஒரு உதாரணம் - ஈழத்து இலக்கியத்திலும் புலம் பெயர் இலக்கியத்திலும் இன்று மறுக்க முடியாதவை ஷோபாசக்தியின் எழுத்துகள். இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஆளுமை ஷோபாசக்தி. என்றபோதும் அதிகமான ஈழத்தமிழர்களால் - குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழர்களால் ஷோபாசக்தியின் எழுத்துகள் படிக்கப்படவில்லை. இதற்குப் பிரதானமான காரணம், இலங்கையின் பொதுவான – பிரபலமான ஊடகங்கள் ஷோபாசக்தியின் எழுத்துகளைப் பிரசுரிக்கவில்லை. அல்லது பிரசுரிக்கத் தவறுகின்றன; முக்கியமாக அவற்றைப் பிரசுரிக்க அவை விரும்பவில்லை. ஆகவே பொதுவாக அவை அவற்றை மறைக்க முற்படுகின்றன. இது தனியே ஷோபாசக்திக்கு மட்டும் நேர்ந்த அநீதியல்ல. அல்லது இந்தப் போக்கினால் ஷோபாசக்தி மட்டும் பாதிக்கப்பட்டவரல்ல. ஏனைய படைப்பாளிகளான சக்கரவர்த்தி, திருமாவளவன், கற்சுறா, சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன் உள்ளிட்ட பலருக்கும் எக்ஸில், உயிர்நிழல், சரிநிகர், தினமுரசு போன்ற இதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நேர்ந்த கதி இதுவாகும். ஒரு காலம் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களுக்கும் இந்தக் கதிதான் நேர்ந்தது.

ஆகவே இந்தக் கள்ளக் குணத்தினால் பல ஆளுமைகளும் அவர்களுடைய முக்கியமான வெளிப்பாடுகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

நாம் இப்போது ஷோபாசத்திக்கு நேர்ந்ததை இங்கே அவசியம் கருதிப் பார்ப்போம். ஷோபாசக்தியின் எழுத்துகளை இலங்கையின் பொதுவான அரங்குகளிலும் விமர்சன முன்வைப்புகளிலும் பெரும்பாலானவர்கள் பேசுவதில்லை. ஈழத்தின் எந்த முக்கியமான விமர்சகரும் ஷோபாசக்தியையும் அவருடைய எழுத்துகளையும் மையமாக வைத்தோ முழுமைப்படுத்தியோ விமர்சனங்களை மேற்கொள்ளவுமில்லை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படவோ வருந்தவோ இல்லை. (ஏன், திருமாவளவன், வாசுதேவன், சக்கரவர்த்தி போன்றோருடைய எழுத்துகளுக்கும் குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எழுதப்படவில்லை).

மட்டுமல்ல, இலங்கையிலிருந்து வந்த அல்லது வந்து கொண்டிருக்கின்ற எந்தப் பத்திரிகையோ இலக்கிய இதழ்களோ ஷோபாசக்தியை அறிமுகப்படுத்தவும் இல்லை. அவருடைய எழுத்துகளைப் பற்றி முறையாக விவாதிக்கவும் இல்லை.

அப்படிப் பேசி, அவருடைய எழுத்துகளை அறிமுகமாக்கியிருந்தால் இன்று பெரும்பாலான வாசகர்கள் ஷோபாசக்தியை அறிந்திருப்பர். அவர் முன்வைத்த அரசியலைப்பற்றியும் அதன் உண்மைத் தன்மையைப் பற்றியும் தெரிந்திருப்பர். மாற்று வகை இலக்கியம் குறித்த விரிவான பரிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து ஒரு விவாதச் சூழல் - சிந்தனைச் சூழல் உருவாகியிருக்கும். ஜனநாயகச் சூழல் என்பதும் அறிவியல் நேர்மை என்பதும் அப்படித்தான் இருக்கும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை. இந்த நிலைமையில்தான் நூறாவது இதழ் என்ற பெருமிதங்களும் இருபத்தைந்தாவது மலர், நாற்பதாவது ஆண்டு மலர் என்ற பூரிப்புகளும் நமது அரங்கில் நடந்தேறுகின்றன.

இத்தனைக்கும் ஷோபாசக்தி எழுதத் தொடங்கி இப்போது இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரையில் அவருடைய எட்டுப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் மீள் பதிப்புச் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது. என்றபோதும் அவர் இன்னும் தமிழ்ச் சூழலில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆனால், ஷோபாசக்தி இரகசிய அரங்கில் அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். இந்த வாசிப்பு திருட்டுத்தனமானது. அதாவது இரகசியமாக வாசிக்கப்படும் வாசிப்பு. இதன் அர்த்தம் அவர், கள்ளத்தனமாக உள்ளுக்குள்ளே ரசிக்கப்படுகிறார் என்பதே. (இது கள்ளப் பெண்டாட்டி உறவுக்கு ஒப்பானது என இதை ஒரு நண்பர் கூறுகிறார். கள்ளப்பெண்டாட்டியின் சுகத்தை ருஸிக்கின்றவர்கள் அவளுடைய உறவைப் பகிரங்கமாகப் பொது இடங்களில் காட்டிக் கொள்வதில்லை. இந்தப் போக்கை தமிழ் அரசியலிலும் காணலாம். முன்னர் தொடக்கம் இன்றுவரை லாபங்களுக்காக அதிகாரத் தரப்பை இரகசியமாக அணுகுகின்ற பலர் பின்னர் அந்த உறவைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்வதில்லை).

எனக்குத் தெரிந்த அளவில் ஷோபாசக்தியின் எழுத்துகளை தீவிர வெறியோடும் விருப்பத்தோடும் பலர் தேடுகிறார்கள். தங்களுடைய புத்தக அடுக்குகளில் ஷோபாசக்தியின் புத்தகங்களுக்கு நிரந்தரமான– விசேட இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஷோபாசக்தியின் புதிய புத்தகம் வெளிவந்து விட்டது என்று அறிந்தால் அந்தப் புத்தகத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று இவர்கள் பறந்தடிக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை ஷோபாசக்தி அதிகமதிகம் விமர்சித்திருந்தாலும் அவர்களில் அநேகர் - குறிப்பாக முக்கியமான தலைவர்கள் - ஷோபாசக்தியின் எழுத்துகளை முதலில் படிக்கிறவர்களாகவும் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பவர்களாகவுமே இருந்தார்கள். சில சமயம் புத்தகத்தை அவர்கள் அது அச்சிடப்படும் இடத்திலிருந்து வெளி வந்தவுடனேயே – சந்தைக்குப் போவதற்கு முன்னரே - எப்படியோ எடுத்து விடுகிறார்கள். ஒரு நண்பர் சொன்னார்,'சிலவேளை அந்தப் புத்தகம் ஷோபாசக்திக்குக் கிடைக்க முன், இங்கே (ஈழத்தில்) புலிகளுக்குக் கிடைத்து விடுகிறது' என்று. (இந்த மாதிரி ஒரு ஈர்ப்போடும் எதிர்பார்ப்போடும் முன்னர் தினமுரசுவும் சரிநிகரும் இருந்தன என்பதையும் இங்கே நிச்சயம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பத்திரிகைகளை அப்போது வன்னியில் புலிகளே அதிகமாக வாசித்தார்கள். இவை பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தன).

இதற்குக் காரணம், உண்மையை அறியும் ஆவல். அதிலும் தங்களால் பேச முடியாத உண்மையை இன்னொருவர் பேசும்போது அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல். உண்மையில் இது கொடுமையானது; குரூரமானது. ஒருவர் உண்மையைப் பேச முடியாத நிலை இருப்பதென்பது கொடுமையானதே. இது அனுதாபத்திற்கும் கருணைக்கும் உரியது. அதேவேளை அந்த உண்மையை இன்னொருவர் பேசும்போது, அத்துடன் உண்மையைப் பேசமுடியாத நிலையைப் பற்றிய விமர்சனங்களைத் துணிச்சலோடு வைக்கும்போது அதை ரசிக்கின்ற மனம், அந்த உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவும் அந்த உண்மையை உரைப்பவரை அங்கீகரிக்கவும் தயாராக இருப்பதில்லை. இது குரூரமானது. அநீதியானது. கோபத்தை ஏற்படுத்துவது.

ஆனால், எப்படியோ இந்த இடத்தில் ஒரு போர் வீரனைப் போலவும் ஒரு தீரமிக்க சாகஸக்காரனைப் போலவும் ஷோபாசக்தி இவர்களால் உணரப்படுகிறார். என்பதால், எல்லாவகையான புறக்கணிப்புகளுக்கும் அப்பால், எல்லாவகையான அச்சுறுத்தல் மற்றும் அபாய நெருக்கடிகளுக்கும் அப்பால் துணிச்சலோடு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியாக ஷோபாசக்தி இருக்கிறார் என்ற வியப்பு காந்த விசையாக இவர்களை ஈர்த்துக் கொள்கிறது. எல்லோரும் இப்படிப் புரிந்து கொள்ளாவிடினும் துணிச்சலோடு உண்மைகளுக்கு நெருக்கமாகவும் மாற்றபிப்பிராயமாகவும் ஷோபா எழுதிக் கொண்டிருப்பதை இவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.

எனினும், இந்தச் சந்தர்ப்பத்திற் கூட அவர்கள் இந்தப் படைப்பாளியை, அவருடைய துணிச்சலை, அறத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நம்பிக்கை வைத்து இயங்கி வரும் எழுத்தியக்கத்தைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாகயிருக்கிறார்கள்.

இந்த மனத்தடைதான் ஈழத்தமிழர்களின் பிரச்சினையே. இந்தப் பிரச்சினையிலிருந்தே அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்; எல்லாவற்றையும் அணுகுகிறார்கள். அரசியலை, இலக்கியத்தை, வரலாற்றை, தங்களின் நண்பர்களை, எதிரிகளை எனச் சகலரையும். ஏன், தங்களையே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.

இதெல்லாம் ஒருவகையான உளவியற் பிரச்சினைதான். பொதுவாகவே பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றித் தாங்களே போட்டிருக்கும் தடைகளும் மாயச் சுவர்களும் அவர்களைப் பலவிதமாகக் கூறு போட்டிருக்கின்றன. பல வகையான அகமுரண்களால் அவர்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். என்பதாலேயே இந்த மாதிரியான குழறுபடிகளும் தவறுகளும் நேர்கின்றன.

தமிழர்கள் எப்போதும் கள்ளக் குணத்தைக் கொண்டவர்கள் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். அறிந்த உண்மையை, தெரிகின்ற உண்மையை, தன்னுடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் தெரிந்த நியாயத்தையே அவர்கள் அங்கீகரிப்பற்குத் தயங்குவதில் ஒரு போதுமே வெட்கப்படுவதில்லை. அதாவது சூரியனைக் கைகளால் பொத்தி மறைப்பதையிட்டு இவர்கள் வெட்கமடைவதில்லை.

'சூரியனைக் கைகளால் மறைக்க முடியாது' என்று தெரிந்தும் கைகளை விரித்துச் சூரியனை மறைக்க முற்படுவோரைக் குறித்து என்ன சொல்ல முடியும்? அவ்வாறு செயற்படும் போக்கை ஆதரிப்பதையிட்டும் என்ன கூறமுடியும்? இது ஒரு வகையான மனவியாதியன்றி வேறென்ன? இங்கே கொடுமை என்னவென்றால், அப்படிக் கைகளால் சூரியனை மறைக்க முற்படுவோரையே தமிழ்ச் சூழலில் பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். அவர்களே அரசியல் தலைவர்களாகவும் சிறந்த ஆய்வாளர்களாகவும் பிரதான ஊடகவியலாளர்களாகவும் அரசியல் விமர்சகர்களாகவும் இலக்கிய விற்பன்னர்களாகவும் தமிழின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகவும் தீர்க்கதரிசிகளாகவும் காட்டப்படுகிறார்கள். அல்லது அவர்கள் தம்மை அப்படிக் காட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கே தமிழ்ச் சமூகத்தில் மிகப் பெரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.

எனவே இத்தகையதொரு பின்னணியில்தான் யோ. கர்ணனின்'தேவதைகளின் தீட்டுத்துணி'யையும் தமிழ்ச் சூழல் இலகுவாகப் புறக்கணித்திருக்கிறது; கவனிக்காததைப் போல விட்டிருக்கிறது எனலாம். அல்லது அது ரகசியமாக உள்ளுக்குள்ளே வைத்து ரசிக்கிறது. தான் அறிய விரும்புவதைத் தேடிக் கொண்டிருக்கிறது; உண்மைகளைக் கண்டறியும் விருப்பத்துக்குத் தீனியாக அதை வைத்துக்கொள்கிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளமுடியும்.

உண்மையில், இவ்வாறு வெளிப்படுத்தப்படும் உண்மைகளிலிருந்தே நாம் நமது படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எளிய விளக்கத்தைக் கூட இவர்களுடைய மனம் ஏற்றுக் கொள்வதில்லை. பொய்களாலும் புனைவுகளாலும் எல்லையற்று அலைக்கழிக்கப்படுவதையிட்ட வருத்தமும் இவர்களிடம் இல்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வியை இவர்கள் கேட்க முடியும்.'ஷோபாசக்தியோ, யோ. கர்ணனோ அல்லது இவர்களைப் போன்றோரோ நிச்சயமாக உண்மைகளைச் சொல்கிறார்களா?' என்று. இந்த எழுத்துகள் எல்லாம் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பதை அறிவதற்கு முதலில் இவற்றைப் பொது வெளியில் வைப்பதற்கும் அந்த வெளியில் வைத்து விவாதிப்பதற்கும் எல்லோரும் தயாராக வேணும். அப்படிப் பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது, நிச்சயமாக இவற்றின் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஆனால், அதற்குத்தான் யாரும் தயாராக இல்லையே! காரணம், தாங்கள் நம்புகின்ற 'ஏதோ சிலவற்றுக்காக'அதற்கு அப்பாலான எந்த விசயத்தையும் அங்கீகரிப்பதற்கு இவர்கள் தயாராகவில்லை. இது ஒரு பக்கம். மறு பக்கத்தில், இந்த எழுத்தாளர்களின் இயங்கு தளம் இலக்கியம் என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, அந்தத் தளத்தில் நின்று கொண்டு, இந்த எழுத்தாளர்கள் தங்கள் சூழலின் நிகழ்ச்சிகளை – அந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளை, அந்த விளைவுகளின் நன்மை தீமைகளை எழுதுகிறார்கள். ஒரு சாட்சியாகத் தங்களின் பதிவுகளை இவர்கள் செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேணும். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்தச் சாட்சியத்தையே தமிழ்ச் சூழல் விரும்பவில்லை. தமிழ்ச்சூழலுக்கு எப்பொழுதும் சாட்சிகள் - சாட்சியங்கள் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருப்பதில்லை என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வதை இங்கே குறிப்பிடலாம். சாட்சியங்களில்லாத வரலாற்றையே தமிழர்கள் விரும்புகிறார்கள். பதிலாக சார்பான வாதங்களையே தமிழ்ச் சூழல் விரும்புகிறது. சாட்சிகளில்லாத வரலாறு என்பது அதிகமதிகம் மாந்திரீகத்தன்மை நிரம்பியதாகவே இருக்கும்.

இந்த இடத்தில் நான் மேலும் ஒரு விசயத்தைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.

ஜெயமோகனின் டார்த்தீனியம், விஷ்ணுபுரம், மாடன்மோட்சம்,..........................  போன்றவை ஈழத்தின் சமகால அரசியல் சமூக நிகழ்ச்சிகளை அப்படியே பிரதிபலிப்பதாகவே நான் உணர்கிறேன். இலக்கியத்தின் சிறப்பியல்பே இதுதானே. அது காலம், இடம் என்பவற்றுக்கு அப்பால், எங்கும் எப்போழுதும் பொருந்தக் கூடிய ஆன்மாவைக் கொண்டிருக்கிறது என்பது.

ஜெயமோகன் நேரடியாக, ஈழ அரசியலை, அதற்குரிய சம்பவங்களோடும் இடத்தோடும் காலத்தோடும் இவற்றில் பதிவாக்கவில்லை. மட்டுமல்ல, ஈழ அரசியலை மையப்படுத்தி அவர் இந்தக் கதைகளை எழுதவுமில்லை. ஆனால், ஈழ நிகழ்ச்சிகள் அவருக்கு இந்தக் கதைகளை எழுதக்கூடிய உந்துதலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர், அதற்கான தடங்களை வேறு சூழலில் கட்டமைக்கிறார். ஆகவே அவருடைய கதைகள் வேறு காலங்களிலும் வேறு சூழலிலும் கட்டமைக்கப்படுகின்றன.

ஷோபாசக்தியோ யோ. கர்ணனோ அப்படிச் செய்யவில்லை. இவர்கள் நேரடியாகவே ஈழத்தின் சமகால நிகழ்ச்சிகளிலும் அதன் அரசியலிலும் தளமிடுகிறார்கள். சமகால மனிதர்களை மையப்படுத்துகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் இந்தச் சமகால நிகழ்ச்சிகளில் பலரும் பங்காளர்களாகவும் ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என்ற வகையிலும் இருப்பதால் இவர்களுடைய எழுத்தின்மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டிய ஒரு நிலை இந்தச் சமகால மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உண்மையில் நடக்கிறது.

இங்கே பிரச்சினை என்னவென்றால், உண்மைகளை அறிவதற்கு அப்பால், இலக்கியத்தை வாசிப்பதற்கு அப்பால், 'கட்சி அரசியல்'மனோபாவத்துடன் மட்டும் எழுத்துகள் அணுகப்படுகின்றன. கட்சி மனோபாவத்தில் சார்பு – எதிர்ப்பு என்ற இரண்டு நிலைப்பாடுகளே இருக்க முடியும். இதற்கு இன்னொரு வலுவான காரணமாக நாம் சொல்லக் கூடியது, கடந்த பல ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் வரலாற்று நோக்கு என்பது, கறுப்பு – வெள்ளை என்ற அடிப்படையில், தட்டையாகப் பார்க்கப்படுவதேயாகும். இதற்கப்பால் ஒரு பொதுப் பார்வையை – பன்முகப்பார்வையை – ஜனநாயக அடிப்படையிலான அணுகுமுறையைத் தமிழ்ச்சூழல் அதிகம் கொள்ளவில்லை. இதனால் கலை, இலக்கியத்தின் அடிப்படைகளே கோணலாக்கப்படுகின்றன.

ஆகவே, இதெல்லாம் ஒரு வகையான வன்முறை நடவடிக்கைகளே. இந்த வன்முறை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடக்குவதால் மட்டும் நிகழ்வதில்லை. திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாலும் இருட்டடிப்புச் செய்யப்படுவதாலும் கூட நிகழ்கின்றன.

பலரும் புலிகளையும் அவர்களுடைய காலத்தையுமே வன்முறைக்கான அடையாளங்களாகக் காணுகின்றனர். இது தவறானதாகும். வன்முறையில் புலிகளுக்கும் ஒரு முக்கிய பங்கிருந்தாலும் பொதுவாகவே தமிழர்களிடத்தில் காணப்படும் எதிர்த்தல், புறக்கணித்தல், வசை பாடுதல் போன்ற அம்சங்கள் புலிகளையும் கடந்தவை. அவை தமிழ்ச் சமூகத்தில் மிக ஆழமாகவும் பரந்த அளவிலும் வேரோடிப் படர்ந்திருப்பவை. ஆதிக்கம் பெற்ற'மேற்சமூகம்' தனக்கு உவப்பில்லாத விசயங்களை இந்த மாதிரிப் புறக்கணித்து இருட்டடிப்புச் செய்து இந்த வன்முறையை நிகழ்த்தி வருகிறது. இந்த மேற்சமூகத்திற்கும் அதனுடைய உளவியலுக்கும் ஏனைய தரப்பினரும் தங்களையறியாமலே அடிமைப்பட்டு வருகின்றனர்.

யோ. கர்ணனின் கதைகளும் இப்போது கறுப்பு வெள்ளை அரசியலின் பிடிக்குள் சிக்கியிருக்கின்றன. ஆனால், இந்த அரசியலில் அவை முன்னிறுத்தி விவாதிக்கப்படவில்லை. ஏனென்றால், இந்தக் கதைகள் விவாதிக்கப்பட்டால், அல்லது விமர்சன அரங்கிற்கு எடுக்கப்பட்டால், இந்தக் கதைகளின் மையவாளர்களாகவும் ஒரு தரப்பினராகவும் இருக்கும் சனங்கள் சாட்சியமாகிடுவர். சனங்கள் சாட்சிகளாகும்போது உண்மைகள் நிரூபணமாகும். வலுப்பெறும். இதை இன்று ஆதிக்கம் செலுத்துகின்ற மேல்நிலையாளர்கள் விரும்பவில்லை.

என்றபடியால்தான், கர்ணனின் கதைகள் ரகசியமாக்கப்பட்டிருக்கின்றன. பேசாது விடப்படுகின்றன.

கர்ணன் புலிகளின் இறுதி நாட்களையும் அதன் பின்னரான காலத்தையும் தன்னுடைய கதைகளில் மையப்படுத்தியிருக்கிறார். இந்தக் காலத்தின் நிகழ்ச்சிகளில் அவர் ஒரு பங்கேற்பாளன், அனுபவிப்பாளன், சாட்சி என்ற வகையில் தன்னுடைய அனுபவங்களை மையப்படுத்தி எழுதிச் செல்லும்போது அவரால் உண்மைகளையும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மெய்யையும் மறைக்க முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. அவருக்கு வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கிறது. சனங்களின் மீது மதிப்பிருக்கிறது. வரலாற்றின் மீது நம்பிக்கையிருக்கும் எவரும் வரலாற்றைத் திரிக்கவோ வரலாற்றுக்குப் பொய்யுரைக்கவோ விரும்பார். அவ்வாறே, சனங்களை மதிப்பவர்கள் ஒரு போதும் சனங்களுக்குப் பொய் சொல்வதற்கு முனைய மாட்டார்கள். சனங்களுக்குத் தெரிந்த உண்மைகளை, சனங்களே பட்டு அனுபவித்த வாழ்க்கையின் மெய்யை திரித்துச் சொல்லுவதற்கான துணிவையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாது. அப்படிச் சொல்ல முயலும்போது அது ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டேயிருக்கிறது. உள்நோக்கங்களுடன், செயற்படுகிறது.

கர்ணன் வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவர் என்பதால், அவர் இதற்கு எதிராகவே இயங்குகிறார்.

00

'தேவதைகளின் தீட்டுத்துணி' சிறுகதை நூல் வெளிவந்த காலப்பகுதியை அண்மித்ததாகவே ஈழத்திலிருந்து உமா வரதராஜனின்'மூன்றம் சிலுவை' நாவல் வெளிவந்துள்ளது. ஆனால், மூன்றாம் சிலுவைக்கு இதுவரையில் அதிகமான விமர்சனங்கள் வந்துள்ளன. நானும் அந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். மூன்றாம் சிலுவைக்கு விமர்சனத்தை எழுத முனைவோர் அல்லது அதற்கு விமர்சனங்களை முன்வைக்க விரும்புவோர் தேவதைகளின் தீட்டுத்துணிக்குத் தயாராயில்லை.

இதற்குக் காரணம், மூன்றாம் சிலுவை மிகப் பிரச்சினைக்குரிய –அபாயகரமானதாகக் கருதப்படும் இலங்கையின் அரசியலைப் பேசவில்லை. அது பேசுகின்ற அரசியல் ஆண் - பெண் என்ற உறவில், பால்நிலையில் மையம் கொள்கிற அரசியல். ஆகவே அந்த அரசியலையும் அந்த உறவையும் பேசும் நாவலை விமர்சிப்பதில் இவர்களுக்குப் பெரிய தயங்கங்களில்லை. எனவேதான் மூன்றாம் சிலுவைக்கு தமிழ்நதி தொடக்கம் அ. முத்துலிங்கம் வரை பத்துக்கு மேற்பட்டவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

ஆனால், தேவதைகளின் தீட்டுத் துணி அப்படியல்ல. அது நேரடியாகவே அரசியலைப் பேசுகிறது. அதிலும் போரின் அரசியலையும் - போரின் போது மீறப்பட்ட அனைத்து மனித விழுமியங்களையும் பேசுகிறது. அறத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளைப் பேசுகிறது. சனங்களின் பாதிப்புகளைப் பேசுகிறது. பொதுவாக, போருக்காக நடந்த நிகழ்ச்சிகளை மறைக்க முற்படுவோரின் விருப்பங்களுக்கு மாறாக கர்ணன் தன் கதைகளை எழுதியிருக்கிறார். இது கர்ணன்; திட்டமிட்டுச் செய்த காரியம் இல்லை. அவர் எழுதத் தொடங்கும்போதே இயல்பாக வந்த அந்த நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் குவிகின்றன. ஏனெனில் அவருடைய நினைவுப்பரப்பெங்கும் அந்த நிகழ்ச்சிகளின் - அந்தச் சனங்கள் பட்ட அவலங்களின் பதிவுகளே உள்ளன. அவருடைய மூளையில் இந்தப் பதிவுகளே அதிகமாக உண்டு.

ஆகவே, அந்த யுத்த நாட்களில், போர் நடைபெற்ற சூழலில் சனங்களோடு நின்ற ஒருவர் அந்த நிகழ்ச்சிகளுக்கு மாறாக எழுதவோ இயங்கவோ முடியாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேணும். எனவே, கர்ணனின் கதைகள் எந்தத் தளத்தில் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் பெறுபேறுகளை நாம் மதிப்பிடலாம்.

(

3 comments:

  1. /ஒரு நூலுக்கான முன்னுரையை எழுதியவரே அந்த நூலுக்கான மதிப்புரையையும் அல்லது விமர்சனத்தையும் எழுத வேண்டிய அவசியத்திலிருப்பதென்பது ஒரு கொடுமையான சூழலே./
    உண்மைதான். ஆனால் பரவலான வாசிப்புக்குள் வருதோ இல்லையோ யோ.கர்ணனின் நகைச்சுவைகலந்த (black humour) எழுத்துநடையும் அதன் பேசபொருளும், தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் எங்கள் முன் பிரசன்னமாயிருக்கும். ஏன் யாரும் 'எதிர்த்தும்' எழுத முடியாதுள்ளது? மெளனமாய் இருக்க வேண்டியுள்ளது?

    ஏனெனில் சோபா சக்தி மற்றும் நீங்கள் குறிப்பிட்ட ஏனைய 'எதிர்க்'குரல்கள் போலன்றி, கர்ணனுடைய குரல் போருக்குள் வாழ்ந்து, இருந்து, அதனிருந்து எதிரொலிப்பது. அதை எழுந்த மானமாய் நிராகரிப்பதோ, கண்டமேனிக்கு வசையாடுவதோ - அந்த போருக்குள் வாழாதவர்கள் மற்றும் அவ் அனுபவத்தை பெறாதவர்களால் - முடியுமா என்ன?

    கள்ள மெளனமே பறவாயில்லை என்று தோன்றுகிறது, இவற்றை எதிர்கொள்ள முடியா மனத்தின் வசையாடலுடன் ஒப்பிடுகிற போது.

    அந்த வகையில், மேற்குறிப்பிட்ட பிரதியாளர்களிலிருந்து பல விதங்களில் கர்ணனுடைய படைப்புலகத்தின் அரசியல் வேறுபட்டது. இன்னும் முக்கியமானது.

    மீள்-மதிப்பீட்டுக்கு நன்றி கருணாகரன்.
    - ஒரு பொடிச்சி

    ReplyDelete
  2. ஷோபா சக்தியைக் கர்ணனுடன் ஒப்புடுவது எனக்குச் சரியாகப் படவில்லை. "ஷோபா சக்தி" மிக நீண்ட காலம் தான் ஒரு தலித் 'என்கிறமாதிரி" ஒரு பிம்பத்தை உருவாக்கி, புலிகள் சாதிவேறுபாடுகள் காட்டுபவர்கள் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றவர். முக்கியவாக "வேலுப்பிள்ளை பிரபாகரன்" என்பதில் வேலுப்பிள்ளை என்பதை அழுத்திச் சொல்லி பிரபாகரன் ஒரு சைவப்பிள்ளை என்றும் சொல்ல முயன்றவர். அண்மைய கீற்றுக் கட்டுரை, "ஷோ.ச" கத்தோலிக்க பிள்ளைமார் என்று தோலுரிக்கும்வரை, இவர் தலித் தான் என்றுதான் நிறையப்பேர் நம்பினர்.

    ReplyDelete