Wednesday, June 1, 2011

அரிசி



சோமசந்தரம் மாஸ்ரரின்ர இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்றால் கறுப்போ வெள்ளையோ துணியால முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஒராளைப் போட்டுத்தள்ள வேணும். இல்லையென்றால் இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்றால் கள்ளனுக்கு மரியாதையில்லை.

     இவன் கள்ளன் இல்லையென்றும் இல்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செலவுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட்டைக் கழற்றிப் போட்டிட்டு ஈசிச் சேரில படுத்து வயித்தைத் தடவிக் குடுத்துக் கொண்டிருப்பார். இவன் பொக்கற்றுக்குள்ளயிருந்து இருபதோ முப்பது ரூபா எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். இன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மாஸ்ரருக்கு கணக்கு வழக்குத் தெரியாது. எப்பவாவது அபூர்வமாக காசு குறையிறதைக் கண்டுபிடிச்சால் மனிசியோட ஏறிவிழுவார். அடுத்தநாள் கூட்டாளியளோட பள்ளிக்கூட கன்ரீனுக்கப் போய் போண்டாவும் பிளேன்ரீயும் வாங்குவான். அவன் ஏ.எல் சோதினை எடுக்கு மட்டும் மாஸ்ரரின்ர பொக்கற்றுக்குள்ள காசு குறைஞ்சு கொண்டுதானிருந்தது. ஏ.எல் எடுத்தால் பெரிய பொடியன்தானே. கைச்செலவுக்கென்று தாய்க்காரியிட்ட கேட்டு வாங்குவான்.

     இவன் ஏ.எல் சோதினை எடுத்த நேரம்தான் இவன்ர கொப்பிக்குள்ள வித்தியா லவ் லெற்றர் வைச்சாள். என்ர இதயத்தை திருடிவிட்டாய். ஒழுங்கு மரியாதையாக அதை திருப்பிக் குடுக்கிற அலுவலைப்பார் என்ற தொனியில லவ் லெற்றர் வந்தது.

     இவனறிய இந்த இரண்டு களவையும் தவிர வேற களவெதுவும் எடுக்கயில்லை. மாஸ்ரருக்கென்று ஊரில நல்ல இமேஜ் இருந்தது. இவனும் தமக்கைமாரும் நல்லாக் கஸ்ரப்பட்டு அதைக் காப்பாத்திக் கொண்டிருந்ததுகள்.

     இண்றைக்கு காலையிலதான் இவன் இந்த முடிவெடுத்தான். அப்பரின்ர இமேஜை பார்த்து ஒன்றும் செய்யேலாது என்ற முடிவுக்கு வந்திருந்தான். அப்பரே இல்லை. பிறகென்ன இமேஜ் என்று யோசிச்சான்.

     என்னயிருந்தாலும் தகப்பன்காரன் இப்பிடிச் செத்திருக்கக்கூடாது என்றதுதான் எல்லாரின்ர அபிப்பிராயமும். அந்தாளுக்கென்ன சாகிற வயசா? அந்தாள் இப்பவும் இளம் பொடியளோட சேர்ந்து வெலிவோல் விளையாடும்.

     போன கிழமை சுதந்திரபுரத்திலயிருந்து இடம்பெயர வேண்டியிருந்தது. இவன்ர குடும்பத்திற்கு இது ஆறாவது இடப்பெயர்வு. மல்லாவியில ஸ்ராட் பண்ணியது. அஞ்சலோட்டம் மாதிரி நடந்து கொண்டிருக்குது. எல்லாரையும் மாத்தளனில கொண்டு வந்து விட்டிட்டு மாஸ்ரர் மட்டும் சுதந்திரபுரத்திற்கு திரும்பிப் போனார். மிச்சசொச்ச சாமானுகள் கொஞ்சம் கிடந்தது. அதுகளை எடுத்து வாறதுதான் பிளான். வெளிக்கிடும் போதே மனிசியும் மகள்மாரும் மறிச்சதுகள். இவன் பெரிய பொடியன்தானே. தகப்பனோட முகம் குடுத்து கதைக்கிறதில்லை. பேசாமல் இருந்திட்டான். ஒருத்தரின்ர பேச்சையும் கேக்காமல் போனவர் போனவர்தான். திரும்பி வரயில்லை. அடுத்தநாள் விடிய இவன் தேடிப் போனான். வீட்டுவாசலில ஒரே சதைத் துண்டுகள். கை மணிக்கூட்டை வைச்சுத்தான் அடையாளம் பிடிச்சான். மாஸ்ரரக்கு மேல செல் விழுந்திருக்க வேணும். கூட்டியள்ளி ஒரு கிடங்குக்க போட்டு மூடிப் போட்டு வந்தான்.

     மாத்தளன் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலயிருக்கிற தரப்பாள் ஒன்றில கோழிச் சத்தம் கேட்டதை இரண்டு மூன்று தரம் கவனிச்சிருக்கிறான். அந்த ரைமில, பாதுகாப்பு வலயத்துக்க இயக்கம் வைச்சிருந்த பிளேனுகளை விடவும் குறைவாகத்தான் கோழியள் இருந்தன.

     ஒழுங்கான சாப்பாடு தண்ணியில்லாமல் தாயும் தமக்கைகாரியளும் நோஞ்சான் மாதிரி திரியுறதை பார்க்க பொடியனுக்கு வயிறு எரிஞ்சுது. இப்ப இவனுக்கு தலைகீழாக நின்றாலும் இதைத் தவிர வேற வழியில்லை. எப்பிடியாவது ரை பண்ணி ஒரு கோழி பிடிக்கிறதுதானென்று பிளான் பண்ணினான்.

     இரண்டுநாள் அந்த இடத்தை சுத்திச் சுத்தி வந்தான். சரிப்பட்டு வரயில்லை. மூன்றாம் நாள், இவன் அங்க மினக்கெட்டுக் கொண்டிருக்க ஆமிக்காரர் இரண்டொரு செல் அடிச்சினம். எல்லாச்சனமும் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடிச்சுதுகள். இவன் ஓடயில்லை. அந்த தரப்பாளுக்குப் பின்னால போனான். இரண்டு கோழியை சீலைத்துணியில கட்டி வைச்சிருக்கினம். ஒன்றை அறுத்தெடுத்தான். நேரே தன்ர தரப்பாளுக்கு ஓடினான்.

     கோழியை ஒரு காட்போட் பெட்டிக்குள்ள வைச்சு, தரப்பாளுக்க வைச்சான். கோழியை சமைக்க வெளிக்கிடத்தான் பிரச்சினை தொடங்கிச்சுது. இவன்ர வீட்டில இப்ப இருக்கிறதென்றால் நாலைஞ்சு சமையல் பாத்திரங்களும், அரைக்கிலோ உப்பும், கொஞ்சத் தேயிலையும்தான். வேற ஒன்றும் இல்லை. ரி.ஆர்.ஓ காரர் குடுக்கிற கஞ்சியை வைச்சு சமாளிச்சக் கொண்டிருக்குதுகள்.

     முந்தி இவன்ர வீட்டில ஒவ்வொரு சனிக்கிழமையும் கோழி அடிப்பினம். புதன் கிழமையில ஆராவது பன்றியோ உடும்போ கொண்டு வந்து வீட்டு வாசலில நின்று கூப்பிட்டு குடுத்திட்டுப் போவினம். அந்த இரண்டு நாளும்தான் இவன்ர தாய் தன்ர கைப் பக்குவமெல்லாம் காட்டுவா. கோழிக்கறி சமைக்கிற சனிக்கிழமையிலதான்க் இவனை குளத்தில குளிக்க மாஸ்ரர் விடுவார். அதுவும் மாஸ்ரரின்ர கைக்குள்ளதான் நிற்கவேணும். இவன் வளர்ந்ததுக்கு பிறகு சனிஞாயிறு பார்க்கிறதில்லை. எப்பவாவது காயத்திரி குளத்திற்குப் போனால் இவனும் போவான். இவன் ஆள் கொஞ்சம் மெல்லிய ஆள். அவளுக்கு முன்னால சேட்டில்லாமல் நிற்கவும் வெக்கம். சேட்டோடயே குளிப்பான். அவளுக்கு மூன்று கடிதம் குடுத்திருந்தான். கனநாளாக ஒன்றுக்கும் ரிப்ளை வரயில்லை. பிறகு, ஒரு தீபாவளிக் காட் அனுப்பியிருந்தாள்.

     அந்த ரைமில பிள்ளையார் கோயில் திருவிழா நடந்தது. இவன் தன்ர கூட்டாளியளோட போனான். கண்ணண்ணை கூப்பிட்டார். அவர் இவனை விட ஆறேழு வயசு மூத்தவர். இவன் காயத்திரியை லவ் பண்ணுகிறானோ என்று கேட்டார். இவன் சிரிச்சான். அவரும் சிரிச்சுப் போட்டுச் சொன்னார்- "சரி..சரி அதுகள் இஞ்ச நிக்குமட்டும் செய்யிறதைச் செய்யுங்கோ..பிறகு கலியாணமென்டு வரேக்க எங்களிட்டத்தானே வீட்டுக்காரர் வருங்கள்..." அவள் இப்ப கனடாவில இருக்கிறாள்.

     ஒரு கோழியை உரிச்சு, உப்புப் போட்டு அவிச்சு கஞ்சியோட சாப்பிடுற கொம்பினேசன் இவனுக்கு பிடிக்கயில்லை. ஒரு நேர சமையலுக்கு எங்கயாவது கொஞ்ச அரிசி எடுக்க ஓடித் திரிஞ்சான். சித்தப்பாக்காரனிட்டக் கேட்டான். இல்லை. மாமனிட்டக் கேட்டான். இல்லை. கடையிலயும் இல்லை. இவன்ர பக்கத்து தரப்பாள்காரர் எங்கேயோ ஒரு பவுண் சங்கிலி குடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கி வைச்சிருந்தினம்.

     இவன் ஒருநாள் மாமன்காரனிட்டப் போகேக்கதான் கவனிச்சான். றோட்டுக்கரையில பெரிய உமிக் குவியலொன்று இருக்குது. நிறையச் சனம் அதிலயிருந்து அரிசி பொறுக்கிக் கொண்டிருக்குதுகள். இவன் மாமனிட்டப் போகயில்லை. அரிசி பொறுக்கினான். பாதி, பாதியில பாதி என்ற கணக்கில கால்ச்சட்டைப் பொக்கற் ஒன்றுக்குள்ள கொண்டு போனான்.

     வெக்கத்தையோ கௌரவத்தையோ பார்க்கிறதில ஒன்றுமில்லை. தாங்களும் வாறம் என தமக்கைக்காரியளும் அடுத்தநாள் வெளிக்கிட்டதுகள். செல்லடி ரவுண்சடியில இருந்து காப்பாத்திக் கொண்டு வாற பொறுப்பை இவனிட்டத்தான் தாய்க்காரி ஒப்படைச்சிருந்தது.

     மூன்று பேரும் குடும்பக் கதையள் கதைச்சுக் கொண்டு அரிசி பொறுக்கிச்சுதுகள். அந்த ரணகளத்துக்குள்ளயும் ஆரோ ஒரு பொடியன் தமக்கைக்கு கிட்ட வந்து உரஞ்சி உரஞ்சி அரிசி பொறுக்கினான். இவனுக்கு பத்திக் கொண்டு வந்தது. அர்ஜூன் மாதிரி ஒரு அடி குடுக்கலாமோவென்று யோசிச்சான். வில்லங்கம் வரப் போறது தமக்கைக்கு விளங்கிவிட்டது. இவன்ர கையைப் பிடிச்சு, அவசரப்படாத என்ற மாதிரியான ஒரு மெசேஜ் குடுத்தாள். பிறகு, உரஞ்சினவனைப்பார்த்து சொன்னாள்- "பக்கத்திலதான் காவல்த்துறை. சொன்னனென்டால் பிடிச்சுச் சண்டைக்கு விடுவினம். விணாச் சாகாத.." அவன் அதுக்குப் பிறகு அரிசி பொறுக்கினதை இவன் காணயில்லை. அன்று முழுநாளும் பொறுக்கி இவன்ர கால்ச் சட்டை பொக்கற் மூன்றுதரம் நிறையக்கூடிய அரிசி வந்தது. அடுத்தநாளும் போச்சுதுகள். இன்றுடன் அரிசி பொறுக்கி முடிய வேணும் என்று ஏற்கனவே பிளான் பண்ணியிருந்ததுகள். வலு மும்முரமாக அரிசி பொறுக்கிச்சுதுகள். அன்றைக்கு இரண்டுதரம் இயக்கம் ஆள் பிடிக்க வந்தது. மூன்றுதரம் ஆமி செல்லடிச்சான். நாலுதரம் கிபீர் வந்தது. எல்லாத்துக்கும் பக்கத்திலயிருக்கிற கண்டல் பற்றைக்குள்ள ஓடி ஒளிச்சுஒளிச்சு, இவன்ர கால்ச்சட்டை பொக்கற் இரண்டரைத் தரம் நிறையிற அளவு பொறுக்கிச்சுதுகள். இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்கியிருக்கலாம். சந்திப் பக்கம் இரண்டொரு செல் விழுந்தது. இருக்கிறதை வைச்சு சமாளிப்பம் என்று தமக்கைமாரை கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டான்.

     இதுகள் மூன்றும் தரப்பாளுக்க உள்ளடத்தான் தாய்க்காரி கந்தசட்டிக் கவசம் சொல்லுறதை நிப்பாட்டிச்சுது. இவனுக்கு உதிலயெல்லாம் நம்பிக்கை விட்டுப் போச்சுது. துவக்குத்தான் சரியென்றது இவன்ர நிலைப்பாடு.

     தமக்கைமார் குளிக்க வேணுமென்டுதுகள். இஞ்ச குளிக்கவும் ஒழுங்கான இடமில்லை. எல்லாச் சனமும் சின்ன இடத்தில கூடிக் கும்மாளமடிக்க வேண்டியதுதான். இவன்ர தமக்கைமாருக்கு இது சரிவராது. கண்ணகிக்குப் பிறகு பெயர் சொல்லத் தக்கதுகளென்றால் இதுகள்தான் என்றது மாதிரியிருந்ததுகள். கொஞ்சத் தூரம் தள்ளியிருந்த வெட்டையில ஒரு பத்தையிருந்தது. தமக்கைமார் இரண்டு பேரும் அதுக்குள்ள போய் நிக்குங்கள். இவன் ஆளுக்கு நாலைஞ்ச வாளித் தண்ணியள்ளிக் குடுப்பான். அதில குளிச்சு உடுப்புத் தோச்சு கரையேறுங்கள். அந்த நேரம் தண்ணீருக்கும் தட்டுப்பாடு. புலிகளின் குரல் றேடியோவிலயும் 40 லீற்றர் தண்ணீர் போதுமென்றும், எப்பிடி அதில குளிக்கிறதென்றும் ஒவ்வொரு நாளும் சொல்லுவார். முதலில ஒரு மெல்லிய ஆடை அணிய வெண்டுமென்றும், ஒரு சிறு பாத்திரத்தால் அள்ளி மெதுமெதுவாக தலையில் விட வெண்டுமென்றும், பிறகு ஊத்தை உரஞ்சி சவர்க்காரம் போட்டு, இன்னும் கொஞ்சத் தண்ணீர் விட்டு என்ற கணக்கில புறொக்கிராம் நடக்கும். அதைக் கேட்க இவனுக்கென்றால் சினிமாவில குளிக்கிற கவர்ச்சி நடிகையள்தான் நினைவிற்கு வருவினம். இவனுக்கு அந்த புறொகிராம் நல்லாப் பிடிச்சிருந்தது. குளிச்சிட்டு வர, தாய்க்காரி ஒரு அரிக்கன் சட்டியில அரிசி கழுவிக் கொண்டிருக்குது. அவன் றேடியோவைப் போட்டான். காலையில் ஒளிபரப்பான 40 லீற்றர் கதை மீளவும் ஒளிபரப்பாகுது. றேடியோவை நிற்பாட்டு என தமக்கை சத்தம் போட்டாள். அவையளுக்கு இந்த புறொகிராம் கொஞ்சமும் பிடிக்காது. றேடியோவை நிற்பாட்டின இருபத்தொன்பதாவது செக்கன் ''ஸ்..ஸ்..'' என்று ஒரு மார்க்கமான சத்தத்துடன் செல் விழத் தொடங்கியது.

     ''எல்லாம் பங்கருக்க ஓடு..'' என்று கத்திக் கொண்டு பங்கருக்குள் பாய்ந்தான். அதுக்குள்ள தமக்கைமாரும் பக்கத்து வீட்டுப் பெட்டையும் இருக்குதுகள். தாய் இல்லை. கத்திக் கூப்பிட்டான். ஒரு சத்தமும் இல்லை. வெளியால வந்து பார்க்கலாமென்றால், செல் விடாமல் விழுந்து கொண்டிருக்குது. கொஞ்ச நேரம் இருக்க, செல் விழுற ரைமிங்கை பிடிச்சான். ஒரு செல் விழுந்து வெடிச்ச கையோட பங்கருக்குள்ளால எட்டிப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. ஒரே புகை மண்டலம். 'டக்'கென தலையை உள்க்க எடுக்க, அடுத்த செல் விழுந்தது.

     பக்கத்து வீட்டுப் பெட்டை சொல்லிச்சுது - ''உது எயிற்றி பைவ்...அதுதான் சத்தம் இல்லாமல் வருது..'' என்று. கன சனத்திற்கு எல்லாம் தெரியும். சத்தத்தை வைச்சு சொல்லுங்கள். இது ஆட்டி, இது ஐஞ்சிஞ்சி, இது கனோன் என.

     ஒரு ஐஞ்சு நிமிச ரணகளத்திற்குப்பிறகு செல்லடி நிற்குது. இவன் வெளியில ஓடி வந்தான். ஒரே புகைமணமும் கரி மருந்து மணமும். கையை விசுக்கி புகையை விலத்தி ஓடி வந்தான். தரப்பாளுக்கு முன்னாலயிருந்து அரிசி கழுவினது மாதிரியே அரிசிச் சட்டிக்கு மேல மனிசி விழுந்து கிடக்குது. "அம்மா" என்று கத்திக் கொண்டு தலையை தூக்கினான். அரிசிச் சட்டி நிறைய இரத்தமிருந்தது. தாயின்ர நெஞ்சில ஒரு செல் பீஸ் ஏறியிருக்குது. மனிசி கண்ணை மூடாமலேயே செத்திருக்குது.

     இவனுக்கு என்ன செய்யிறதென்றே தெரியயில்லை. பக்கத்திலயிருந்த மரத்தோட நாலுதரம் தலையை மோதிப் பார்த்தான். பெரிய தடியெடுத்து நிலத்தில அடிச்சான். மண்ணில புரண்டு கத்திப் பார்த்தான். ஒன்றுக்கும் சரி வரயில்லை. தாய் செத்த 'எபெக்ட்' அப்பிடியே இருக்குது. மூத்த தமக்கை அழயில்லை. மூன்று தரம் மயங்கி விழுந்தாள். மாமன்காரன் வந்து அறுந்து கிடந்த தரப்பாளை இழுத்துக் கட்டினார். பெட்டையளின்ர தலையை தடவி விட்டார்.

     பக்கத்திலயிருக்கிற ஒராள் வந்து சொன்னார்- "பொடியை கன நேரம் வைச்சிருக்காதையுங்கோ.. ஆக்கள் குழுமியிருக்கிற இடம்.. தொற்று வந்தாலும்.."

     செத்த ஆக்களின்ர சடலங்களை சனங்கள் கடற்கரைப் பக்கம் புதைக்கிறதுக்காக கொண்டு போய்க் கொண்டிருக்குதுகள். சாரமொன்றில மனிசியைப் போட்டு இவனும் மாமனும் கடற்கரைக்கு கொண்டு போச்சினம்.

     கடற்கரையிலயும் இடமில்லை. கொஞ்ச இடத்தில சனம் வீடு போட்டிருக்குதுகள். பக்கத்தில கொஞ்ச சனம் கக்கூசுக்கு குந்தியிருக்குதுகள். மிச்ச இடத்தில நின்று மீன் விக்கினம். கொஞ்சத்தூரம் நடந்து ஆட்கள் இல்லாத ஆறடி நிலம் பார்த்து கிடங்கு தோண்டி தாயைப் புதைச்சினம். இப்ப இவன் அழயில்லை.

     மாமனை அனுப்பிப் போட்டு பக்கத்தில இருந்தான். காலடி மட்டும் கடலலை வந்து போனது. கடலுக்குள்ள விழுவமோ என்றும் யோசிச்சான். தமக்கைக்காரியளையும் யோசித்தான். கத்தி அழ வேணும் போலயிருந்தது. அழ முடியவில்லை. கொஞ்ச நேரத்தில நாலைஞ்சு பேர் வந்து இவனைத் தட்டியெழுப்பிச்சினம். கொஞ்சம் விலத்தச் சொல்லியும் அதில ஒரு சடலத்தை புதைக்கப் போறம் என்றினம். ஆரோ ஒரு சின்னப் பிள்ளை. முகத்தில இன்னும் இரத்தம் காயயில்லை.

     சரி. நடக்கிறது நடக்கட்டுமென்று திரும்பி தரப்பாளுக்கு நடக்கத் தொடங்கினான். வழியில ஆர்ஆரோ எல்லாம் என்னென்னவோ கேட்டினம். இவன் ஒரு பதிலும் சொல்லயில்லை.

     தரப்பாளுக்க உள்ளட, அங்க இளைய தமக்கை அரிசியை கழுவிக் கொண்டிருந்தாள்.

நன்றி: Pongu Thamizh - அறிமுகம் - சிறுகதை: அரிசி | thedipaar

1 comment:

  1. யதார்த்தத்தைச் சொன்னதால் வலிக்கின்றது. ஆனால், தமிழுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்துள்ளார் என்று அறியச் சிறு ஆறுதல். தொடர்ந்து எழுதுங்கள் கர்ணன்.

    ReplyDelete