Sunday, June 12, 2011

புது விசை: மெல்ல விலகும் மாயத்திரைகள் - தேவா

“சனங்கள் படும் அவலங் களுக்குக் காரணமான பிதாமகர் களின்செயற்பாடுகளை மறைப்பதற்காக  வில்லங்கப்பட்டு மாபெரும்மாயத்திரைகளை உற்பத்தி செய்பவர்களின் தந்திரமும்  கர்ணனைப் போன்றலட்சக்கணக்கானவர்களுக்கு நெருக்கடிகளையே கொடுக்கின்றன”.

வெளியே பேசப்பட்டாலும் அடித்துச் சத்தியம்பண்ணி மறைத்துச் சமாதிகட்டிய உண்மைகள் புதை குழிகளைத் துளைத்தெழுந்து பேசுகின்றன. War romantic (வீரகாவிய கற்பனைகள், கதைகள்) என்பது ஒரு மனநிலை, வீரக்கிளர்ச்சி, போர்க் கவர்ச்சி. இயக்கங்கள் வலுப்பெற்றிருந்த காலங்களில் ஆயுதக் கவர்ச்சி, சமூகத்தின் மீதான அதிகாரம், இயக்கக்காரன் என்ற சமூக உயர்நிலை, பரப்புரைகள் உண்டாக்கிய கிளர்வு இவை எல்லாமே இளஞ்சமுதாயத்தை ஆயுதம் சுமக்க வைத்தது. நேரடியாக போரினை எதிர்கொள்ளும்போது நான் என்முன்னே நிற்கும் எதிரி என்றாகி கொன்றால் வெற்றி தோற்றால் சாவு என்ற யதார்த்தம் அலங்காரங்கள் களையப்பட்ட உண்மையாகப் பதிவாகியுள்ளது.


மேனன் தமிழ் சொல்லா இல்லையா என்ற இழுபறி, ஆமிக்காரன் சாப்பாட்டுக்கடை வைப்பதில் முடிந்துபோகிறது. தமிழைத் தூய்மைப் படுத்துகின்றேன் என்ற கோணங்கி ஆட்டம் எப்படி முடிந்தது என்ற விசனம் வாசனையின்போது நம் சிந்தைனையை இடறுகின்றது. வலிந்து செய்யும் எந்த மாற்றமும் சமூகத்தில் வேர்பிடிக்காது என்பதையும் எதை எல்லோருக்கும் போதித்தானோ அதை ஏற்காதவர்களை விரோதி, துரோகி, கையாள் என பளித்துரைத்தவன் கால ஓட்டத்தில் எதிரியின் ஆடுதலையாய் மாறியதும் கதைகளில் ஒன்றில் பேசப்படுகின்றது.

கடவுளே வந்தாலும் பங்கர் வெட்ட வேண்டும் காப்பரணுக்கு மண் சுமக்க வேண்டும் போன்ற கட்டாயப் பணிகள் இயக்கத்தின் எழுதாச் சட்டங்கள். அந்தக் கடவுளை இராணுவம் பிடித்தால் அந்த ஏரியா முழுக்க உருட்டி உருட்டி அடித்து பொதுச்சாவுக் குழிக்குள் தள்ளி சீலையை உரிந்துவிட்டு வீடியோ எடுப்பான். கர்ணனின் எழுத்துக்களில் விரவிக் கிடப்பது பகடியா (satire) அல்லது சாவுக்குழிக்குப் பக்கத்தில் நின்று சிரிப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற நிலையா? புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் எந்த உணர்வுகள் அவர் மனதை அறுத்துக் கிழித்து நிம்மதியின்றி அலையச் செய்து எழுத்தில் கொட்டித் தீர்க்க வைத்ததோ அதேபோல் இறுதிப் போருக்கு அரூபமாக வாசகனை இழுத்துச் செல்வதில் அவ்வுணர்வுகளை நீயும் உணர்ந்துபார் என்ற சவால் தெளிவாகவே மிளிர்கிறது.

“பிரபாகரன் உங்களை யெல்லாம் எப்படியடா ஆண்டான்” என்று ஆமிக்காரன் சொன்னதையிட்டு சிலர் முகத்தில் பெருமிதம் பொங்கியதாம். எந்த ஒரு வரிசை ஒழுங்கையும் கடைபிடிக்காத சமூகத்தில் வரிசையாக நின்று சாப்பாடு வாங்கு என்றால் எவன் நிற்பான்? பலநாள் பசி, அடுத்த சாப்பாடு, இனி எப்போது எங்கு என்று தெரியாத நிலையில் முண்டியடித்து கிடைத்ததை சேமிப்பது என்பதை எல்லாம் இயல்பாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அங்கும் ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. இந்த அவலத்தின் காரணகர்த்தாக்கள் யார்? இங்கே உணவு தருபவன் சிங்களவன் வாங்குபவன் தமிழன். ஆனால் அதைப் பகிர்ந்தளிக்க முயல் அடிக்கும் கொட்டானும் கையுமாக ஆமி தேவை. இதில் ஆண்ட பெருமை வேறு. எல்லாக் கதைகளுமே மறுக்க முடியாத சத்தியங்கள். போர் என ஆர்ப்பரித்த எங்கள் உணர்வுகளை நியாயப்படுத்திய நம் நியாங்களை கேள்வி கேட்கும் துணிச்சலான பதிவுகள்.

போரினைப் பற்றி பேசும் போதெல்லாம் போர் விரும்பிகள் அழிவின்றி அவலமின்றி வெற்றி இல்லையென வாதிடுவார்கள். மனித அவலங்கள், வன்முறைகள், கட்டாய ஆட்சேர்ப்புக்கெல்லாம் அலங்கார வார்த்தைகளில் மறுத்துப் பதிலளித்து நியாயப்படுத்திக் கொள்வார்கள். அவர்களில் யாருமே மனித மனங்களைப் பற்றி கணக்கில் எடுப்பதில்லை. அதில் அலை அலையாய் ஏற்றப்படும் தாக்கங்கள் பற்றி பேசுவதையோ விவாதிப்பதையோ வெகு கவனமாக தள்ளிவைத்து விடுவார்கள். தொடர்ந்து போர்கள் நடந்தேறிய நாடுகளின் அனுபவங்கள், அம் மக்கள் மன உடைவுகளையும் பிறழ்வுகளையும் சுமந்துகொண்டு வாழ்க்கையில் என்னென்ன அவலங்களுடன் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் நாம் அறிய முற்படுவதேயில்லை.

போரையும் வீரத்தையும் போற்றியவர்கள் இலங்கையின் போர்ப்பகுதிக்கு வெளியே இருந்துதான் பெரிதாக ஆர்ப்பரித்தார்கள். ஊடகங்களில் எதிரியின் சாவுகளைக் கொண்டாடியவர்கள் தம் மக்கள் வீழ்ந்தபோதெல்லாம் பின்னடைவு என்று சப்பைக்கட்டுக் கட்டி அதைக் கடந்து செல்லவே முயன்றனர். இலங்கையில் போர் நடந்த வேளைகளில் இக் கேள்விகளை எழுப்பியவர்கள் ஓடுகாலிகள், துரோகிகள், தொடைநடுங்கிகள். எழுத முற்பட்டவர்களும் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் சுயதணிக்கையுடன் தான் எழுத வேண்டிய சூழல். யோ.கர்ணனின் எழுத்துக்களில் சுயதணிக்கையின் தளர்வு தெரிகிறது. முற்றுமுழுவதுமாக அது இல்லையா என்றால் பதில் கூறுவது கடினம்தான். இந்த எழுத்துக்களின் மூலம் கர்ணனுக்கும் இதைப் போன்று எழுதப் போகிறவர்களுக்கும் எழுதிவருபவர்களுக்கும் எந்தெந்த பக்கங்களில் இருந்து என்னென்ன அழுத்தங்கள் வருமென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  நடந்தேறிய போரில் ஒரு பக்கத்தை விமர்சிப்பது மற்றைய பக்கத்திற்கு ஆதரவாகி விடக்கூடாது என்பதில் கவனம் தேவை. அதேபோல நடந்ததை பதிவு செய்வதும் இச் சந்ததியின் கடமை.

வருங்காலச் சந்ததிக்கு நாம் அம்புலிமாமா கதைகளை விட்டுச்செல்லமுடியாது. இது போன்ற பதிவுகள், ஆவணங்கள், செய்திகள் இன்னும் சில பத்தாண்டுக் காலங்களில் சரித்திரத்தை திரிப்பவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருக்க உதவும். இனி வரும் சந்ததிகளும் மெய் எது என ஆய்ந்துணர உதவியாக இருக்கும். கர்ணனின் பதிவுகள் முதல் வரவெனக்கொள்வோம். இன்னும் பல பதிவுகள் தொடரவேண்டும், நேரடி அனுபவங்கள் உணர்வுகள் பதிவாகும்போதுதான் உண்மை நிலையாக நிற்கும்.  


ஹற்றன் எங்க கிடக்கு தமிழ்ஈழத்தை தேடி அங்கேயிருந்து நீ ஏன் வந்தாய்? - நாங்கள் மலையகத்தமிழர்கள் என்றுதான் சொல்வோம் நாகரீகமாக, பேசும்போது வடக்கத்தியான், தோட்டக்காட்டான், இந்தியாக்காரன். மற்றத் தமிழர்களுக்கு அவர்கள் இரண்டாம்நிலை மக்கள். அரசியலிலோ அல்லது சமூகநிலையிலோ இலங்கைத் தமிழனால் சமமாக கருத முடியாதநிலை தொடர்ந்தும் வந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திரமும் சமத்துவமும் வேண்டிப் போராடியவர்கள் அவர்களை எந்த விதத்திலும் கணக்கெடுக்கவில்லை. ஆள்பிடிப்பதற்கு மட்டும் மலையகத் தமிழன் தேவையாக இருக்கிறான். 83 களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் நிலையும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. அந்த ஹற்றன் இளைஞனின் கதையில் மரண தண்டனை எவ்வளவு சுலபமாக சிபார்சு செய்யப்படுகிறது, பூவா பொட்டா நடைமுறைகாலத்தில் கச்சான்கடலை சாப்பிடுவதுபோல். அதுபோக மின்கம்பத் தண்டனைகள், இயக்கத்தினுள்ளும் மரண தண்டனைகள் நடைமுறையில் இருந்தது என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது. இதுபற்றி யார் கேள்வி எழுப்பினார்கள் என்பதைவிட யாரால் முடிந்தது என்பதுதான் கேள்வி. இயக்கத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. அதுசரி கடவுளே ஆனாலும் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போனால் தடுப்பரணும் பங்கரும் வெட்டித்தானே ஆக வேண்டும்.

வடலி வெளியீட்டில் பதிப்பாசிரியரின் முயற்சி எவ்வளவு தடங்கல்களுக்கு இடையில் நிறைவேறியிருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவலங்களில் தோழனாயும் அதன் பின்பும் அதைப் பேச வருபவருமான கருணாகரன் அத்துடன் இப்பதிப்பு முயற்சியில் பங்கேற்ற யாவருமே என்ன சொல்ல வருகிறார்கள்? உண்மையைச் சொல்ல துணிவு மட்டும் போதாது, அந்த துணிவுடன்தான் வாழ்கையையும் கொண்டுசெல்ல வேண்டும். மனதில் சுமைகளை சுமந்துகொண்டு சமூகம் இவைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்ற துணிவு இவர்களை இயக்கி வருகிறது.

யோ. கர்ணனின் எழுத்துக்கள் அவலத்தை விற்று தன் பெயரை பிரபலப்படுத்தும் சிறுமையான எழுத்துக்கள் அல்ல, அப்பட்டமான உண்மைநிலையை சமூக கரிசனையுடன் தன் எழுத்து வலுவில் வெளிக் கொணர்ந்துள்ளார். இது எமது சமுகத்தின் தேவைப் பட்டியலில் முன்னிலையில் நிற்கும் ஒன்று.

மாயத்திரைகள் இனி மெல்ல மெல்ல விலகும் விலகவேண்டும் நன்றி: புதுவிசை

6 comments:

  1. இன்னொரு பக்கமாகப் பார்த்தால், போர் கூடாது என்று சொன்ன `அமைதி விரும்பியவர்கள` அந்த போரை நிறுத்துவதற்காக என்று சொல்லி புலிகளின் தலைவரைக் கொல்ல போரை விரும்பினார்கள் அதற்காக 1000 கணக்கில் மக்களுக்காக உண்மையில் போராடப்போன் போராளிகளையும் அவர்களுடன் உங்கள் அலங்காரமற்ற வார்ததையில் சொல்லப்படும் கட்டாயமாக சேர்கப்ட்ட போராளிகளையும் மற்றும் லட்சக்கணக்கில் பொது மக்களையும் கொல்லப்டுவதை தத்துவரர்த்த அலங்கார வார்த்;தைகளால் ஏற்றுக்கொண்டார்கள் என்ற வகையில் அவர்களே நடந்து முடிந்த பேரவலத்திற்க்கு பொறுப்பானவர்கள். இன்னும் சொல்லப் போனால் . `போர் விரும்பியவர்கள்` கொன்ற மக்களை மற்றும் போராளிகளை விட `அமைதி விரும்பியவர்கள` கொன்ற எண்ணிக்கைதான் அதிகம். எடுத்துக்காட்டாக பார்த்தால் போர் வெற்றிகரமாக போய்கொண்டிருந்தபோது வன்னியில் ஓயாத அலைகளில் இறந்த மக்கள் தொகை மிகமிக குறைவு. இவளவு விலை கொடுத்து `அமைதி விரும்பியவர்கள` சாதித்தது என்ன தாங்கள் கொல்ல நினைத்த விடுதலைப்புலிகளின் தலைவரை தெய்வமாக்கியது தான். அதாவது இருக்கிறாரா இல்லையா என்ற வாதம் இன்னும் தொடர்கிறது. ஆனால் கொல்லப்ட்;ட சித்திரவதைபட்;ட மக்கள் போராளிகள் நிலை ஐயத்திற்கு அப்பாற்பட்டது.

    ReplyDelete
  2. இறுதி யுத்த காலத்தில் அரசினால் மக்கள் கொல்லப்படவில்லையென்றோ,ஐ.நா அந்த நிலப்பகுதியை விட்டு வெளியேறியது சரியென்றோ,அல்லது வேறு எந்த தரப்பாவது மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சரியென்றோ அந்த புத்தகத்தில் எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் அரச படைகள் நிகழ்த்திய கொடுமைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட பெரும் மனித உரிமை மீறல்களிற்கு அரசுதான் காரணமென்பதும்,சில தரப்புக்களினால் சொல்லப்படுவது போல புலிகளால் அதிகளவு மக்கள் கொல்லப்படவில்லையென்பதும்தான் உண்மை. ஆனால் புலிகளினால் மக்கள் கொல்லப்படவேயில்லையென்றோ,பாதுகாப்பான இடங்களிற்கு நகர அனுமதித்திருந்தனர் என்றோ,கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவில்லையென்றோ அர்த்தமாகாது.அரச படைகள் மிக அதிகமான கொலைகளையும்,மீறல்களையும் செய்தள்ளனர், புலிகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே செய்துள்ளனர். ஆகவே புலிகளது விடயங்களை பேசாமல் விட்டுவிடலாமென்பது என்ன வகையில் நியாயம்?சிலவேளைகளில் அந்த சம்பவங்களினால் பாதிக்கபடாதவர்கள் ,அதனை பார்த்திருக்காதவர்கள் தாங்கள் ஆதரிக்கும் தரப்பிற்கு மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்காமல் கடந்து போக விரும்பலாம். ஆனாலும் அது அந்த நிலத்திலிருந்து துன்பப்பட்ட மக்களிற்கு உங்களால் செய்யப்படும் துரோகம் என்றே நான் கருதுவேன்.

    ReplyDelete
  3. நான் சொல்லவந்ததை நீங்கள் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனது கருத்து புலிகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்வது அல்ல. நான் சொல்ல வந்தது விடுதலைப் புலிகளை குறைகூறிய `சாமதான விரும்பிகள்` விடுதலைப்புலிகளால் மக்கள் இழந்ததை விட மிகக் பெரிய அழிவுக்கு துணைபோனதின் மூலம் காரணம்மானார்கள் என்பதுவே. எடுத்துக்காட்டாக மேலுள்ள பதிவில் கூறப்பட்டுளள கருத்தான
    //போரையும் வீரத்தையும் போற்றியவர்கள் இலங்கையின் போர்ப்பகுதிக்கு வெளியே இருந்துதான் பெரிதாக ஆர்ப்பரித்தார்கள். ஊடகங்களில் எதிரியின் சாவுகளைக் கொண்டாடியவர்கள் தம் மக்கள் வீழ்ந்தபோதெல்லாம் பின்னடைவு என்று சப்பைக்கட்டுக் கட்டி அதைக் கடந்து செல்லவே முயன்றனர்.//
    இது வெளிநாட்டில் உள்ள `அமைதி விரும்பிகளுக்கே` நன்கு பொருந்தும். ஏன் எனறால் பிரபாகரன் இறந்தான் எண்று தண்ணியடித்துக் கொண்டாடியவர்கள் அவர்கள்தான். ஆனால் அப்போது இறந்த மக்களை அவர்கள் மறந்தார்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் கூறியதுபோல தாங்கள் விரும்புகிற தரப்புக்காக உண்மைகளை மறைக்க விரும்புவர்களும் `சமாதான விரும்பிகளாகவே` இருக்கறார்கள் குறிப்பாக அரசதரப்பு தவறுகளை மறைத்து அங்கு சொற்கம் உள்ளது என்பது போலகாட்ட முற்படுவது அவர்களே. ஆகவே அவர்களுககு புலி ஆதரவாளர்கள் புலிகளின் தவறினை மறைத்தார்கள் என்று கூற யோக்கியதை இல்லாமல் போகிறது. கட்டாய ஆட்சேற்பைபற்றி இப்போது பேசுகிற சமாதான விரும்பிகள் 1989 இல் ஈபீடீபி செய்தபோது ஏன் மௌனமாக இருந்தார்கள். நான் ஒழுங்கையில் இறங்காமல் வேலிவெட்டி சென்ற நினைவு இன்றும் உள்ளது. அன்று கொல்லப்பட்ட எனது நண்பர்களுக்காக `சாமாதானவிரும்பி` எவனும் அழவில்லை. `யுத்தவிரும்பிகளே` அழுதார்கள் என்பது என்னால் என்றும் மறக்கமுடியாத உண்மை.

    ReplyDelete