இறுதி யுத்தத்தின் பின்னான நாட்களில் அனைவரும் வவுனியா முகாம்களிற்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது உணவு, உடை, இருப்பிடம்,தண்ணீர் என அனைத்தையும் பெறுவதற்கு பெரிய நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முழுக் குடும்பமுமே இவற்றை பெறுவதற்கு ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. பெண்கள் தண்ணீர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின் வரிசையில் காத்திருக்க, ஆண்கள் உணவு வண்டிகளின் பின்னால் ஓடி உணவு பெறுவது, கூடாரமமைப்பது, பொருட்கள் வாங்க அலைவது எனத் திரிந்தார்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் இருந்த ஒரே சந்தோசமெனில், யுத்த வலயத்தில் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் பற்றிய தகவல்களே. ஓவ்வொருவரும் ஒவ்வொரு முகாம், வலயம், கூடாரமாக அலைந்து திரிந்தோம். ஒவ்வொரு காலடி வைக்கவும் ஒவ்வொரு புதிய தகவல்கள் காத்திருந்தன. சந்தோசமாக - துக்கமாக - அதிர்ச்சியாக. இறந்திருப்பார்கள் எனக் கருதியவர்கள் உயிருடனும், உயிருடனிருப்பார்கள் எனக் கருதியவர்கள் இறந்தும் போயிருந்ததே எனக்கு நேர்ந்த அனேக அனுபவங்களாயிருந்தன. மாலை வேளைகளை எல்லோருமே இந்த 'சுற்றுலா' விற்காகவே ஒதுக்கியிருந்தார்கள்.
நானும் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என எல்லோரையும் தேடித் திரிந்தேன். முதற் கட்டமாக மிக நெருக்கமானவர்களை பட்டியலிட்டு அவர்களை விசாரித்து திரிந்தேன். அனேகமானவர்களைக் காணக் கிடைக்கவில்லையெனிலும் ஒரு சில குடும்ப உறுப்பினர்களை இழந்த போதும் வேறு முகாம்களில் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
செல்வகுமார் இறந்து விட்டார் என்று பலரும் சொன்னார்கள். குடும்ப உறுப்பினர்களைப் பங்கரிற்குள் இருத்தி விட்டு தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் வந்த போது 'பைற்றர்' அடித்து வாசலிலேயே இறந்து விட்டார் என்று ஒரே விதமாகவே சொன்னார்கள்.
----------- ----------
சுத்தி சுத்தி பார்த்தால் சுன்ணாகத்து------ உம் சொந்தம் என்று சொல்வார்கள். செல்வகுமார் எனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். நாங்கள் சொந்தமா என்பதைக் கூட நான் ஆராயவில்லை. அதற்கு முதலே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அதை விட எங்கள் ஊர்க் காரர். நான் சிறுவனாக இருக்கும் போது அவரை தெருக்களில்க் கண்டிருக்கிறேன்.
'கொம்பனி'யில இருக்கேக்க இது நடந்தது. எனக்கு ஒரு இடமாற்றம் வந்திருந்தது. ஒரு இரவில்தான் போனேன். புதுக்குடியிருப்பிலிருந்து முத்தையன்கட்டிற்கு. முத்தையன்கட்டு குளத்துடன் முகாமிருந்தது. காடு என்பதால் அங்கு படுக்கைக்குப் பரண் அடிக்கப் பட்டிருந்தது. ஒரு பரணில் படுத்து விட்டேன். அந்தக் குளக்கரையில் கடும் பனி பெய்யும். காலை ஏழு மணி மட்டும் முன்னால் இருக்கிற ஆளைத் தெரியாது. குளிரினால்ச் சுருண்டு படுத்திட்டு ஆறுதலாக எழும்ப, ஏற்கனவே எல்லோரும் எழும்பி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முகம் எங்கயோ கண்டது மாதிரியிருந்தது. அன்று முழுவதும் மண்டையை உடைத்து ஒரு மாதிரியாக ஆளைக் கண்டுபிடித்து விட்டேன்.
ஆளின்ர 'கொம்பனி'ப் பெயர் வாசு. இப்படியாக நாலு பக்கத்து ஆட்களும் சேர்ந்திருக்கிற இடங்களில் ஒரு ஊர்க்காரனை கண்டுவிட்டால் பெரிய சந்தோசமாக இருக்கும். ஆளுக்கு என்னை விட ஐந்து வயது கூட. ஆனாலும் நாளாக நாளாக நாங்கள் வலு இறுக்கமாகிக் கொண்டு விட்டோம். அந்த நாட்களில் பகிடிக்கோ என்னவோ சின்னச் சண்டை பிடித்து இரண்டு தரம் சில நாட்கள் கதைக்காமல் இருந்ததாகக் கூட ஞாபகமிருக்கிறது.
இதுக்கு பிறகு கடந்து போன சில வருடங்களில், சில நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. மற்றம்படி, வீதியிலோ வேறெங்கோ எப்பவாவது சந்தித்து கொண்டிருந்தோம். ரணில்-பிரபா ஒப்பந்தத்தின் பின்னான நாட்களில் புதுக்குடியிருப்பில் மீண்டும் ஒன்றாக இருந்தோம். அந்த நாட்களில்தான் எனக்கு கொம்பனியை விட்டிட்டு வாற ஐடியா வருது (ஏன் போனேன் என்பது சத்தியமாக தெரியாத போதும் வருவதற்கான சில காரணங்கள் இருந்தன). என்னுடைய நெருங்கிய நண்பனென்ற அடிப்படையில் வாசுவுக்கு விசயத்தை சொன்னேன். ஆள் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். பிடித்த வடக் கயிற்றை விடக் கூடாது. தேரைக் கொண்டு போய் தேர்முட்டிக்குக் கீழே விட்டுவிட்டுதான் போக வேண்டும் என்று அபிப்பிராயப் பட்டார். நான் ஒரு மனம்தளராத விக்கிரமாதித்தனாகவேயிருந்தேன்.
ஒரு நாள் என்னை புதுக்குடியிருப்புச் சந்திக்கு வரச் சொல்லி கூட்டிக் கொண்டு போனவர் வழியில் தன் காதலை என்னிடம் சொன்னார்.
அது ஒருதலைப்பட்சமான காதல். ஏதோ இந்த விடயங்களில் நான் நிபுணன் என்பது மாதியாக என்னிடம் தான் அதற்கான ஆலோசனைகளும் உதவிகளும் கேட்டிருந்தார். பேயடித்தது போல நான் வெலவெலத்துப் போனாலும் காட்டிக் கொள்ளாமல் எல்லாத்திலும் விண்ணன் மாதிரி ஓவர் அக்டிங் பண்ணியதாக ஞாபகமிருக்கிறது.
இதில் சவாரஸ்யம் என்னவெனில் அவர் அந்தப் பெண்ணை அதற்கு முதல்நாள்த் தான் வீதியில் கண்டிருந்தார். அந்த பெண் எங்கள் முகாம் கடந்து தான் வேலைக்குச் செல்கிறார் என்ற ஒரேயொரு தகவல் மட்டுமே அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
பின்னான நாட்களில் நாங்கள் நாயாய்ப் பேயாய் அலைந்து புலனாய்வு செய்தோம் (விபரம் சேகரித்தோம்). அப்பப் பொடியள் மட்டத்தில் பரவலாக ஒரு கருத்து நிலவியது. புதுக்குடியிருப்பு பெட்டையள் திமிர் பிடித்த பெட்டையள் என. இந்த நாட்களில்தான் நாங்கள் இருவரும் புதுக்குடியிருப்பு குழந்தை யேசு, ஆனந்தபுரம் கிருஸ்ணர் கோயில் என்பவற்றிற்கு ஒரு ஒழுங்கு முறையில் போய்வரத் தொடங்கினோம். நெற்றியிற் பட்டை விபூதியுடன் பார்க்க ஐயர் பொடியன் மாதிரியிருக்குது என்றும் சிலர் அபிப்ராயப்பட்டனர். உச்சபட்சமாக வாசு, கௌரி விரதமும் பிடித்தார்.
சூட்டி அக்கா ஒரு கலைப் பட்டதாரியாகயிருந்தார். புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். ஒரு தம்பி 'கொம்பனி'யில். இரண்டு தங்கைகள். கோம்பாவில்காரர் எல்லோருக்குமிருப்பது போல அவர்களிற்கும் பெரிய தென்னங் காணிகள் இருந்தன.
இந்த நாட்களில் வாசு தனது காதலைச் சொல்ல மேற்கொண்டிருந்த சில முயற்சிகளையும் சூட்டியக்கா வெற்றிகரமாக முறியடித்திருந்தா.
எதேச்சையான சந்தர்ப்பமொன்றில் நான் சூட்டியக்காவைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்களிற்குள் ஒரு சின்ன அறிமுகம் ஏற்பட்டது. பிறகொருநாள் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலையில் அவரைக் காண நேர்ந்தது. பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் விடைபெற முயல, அவர் சொன்னார், வாசுவின் விடயமாக நான் பேசுவேன் எனத் தான் எதிர்பார்த்ததாக. இதற்குள் எல்லாம் நான் தலையிடலாமா என ஒரு அப்பாவியைப் போல கேட்டுவிட்டு வந்து விட்டேன். அதன் பின் சூட்டியக்கா என்னுடன் நல்லமாதிரி. அவர்கள் வீட்டில் நடந்த பிறந்த நாள் பலகாரங்களுடன் என்னை தேடி ஒரு முறை முகாமிற்கு வந்திருந்தா.
இதற்குள் தன் தரப்பு நியாயங்களை விரிவாக எழுதி ஒரு 'அதிரடி' நடவடிக்கை மூலம் சூட்டியக்கா வீட்டிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை செய்தது அப்பொழுது முறியடிப்புப் பிரிவிலிருந்த மேஜர் இசைவாணனும் (பின்னர் வீர மரணமடைந்து விட்டார்) சபாவும் (இப்பொழுது இத்தாலியில்). அவர்கள் அந்த வீட்டிற்கு ஓரளவு அறிமுகமானவர்கள். பிரதேச முகாமிலிருந்து வருவதாகச் சொல்லி கடிதத்தை அவரிடம் கொடுத்தார்கள். அவர்கள் அந்த வீட்டிற்கு அறிமுகமானவர்கள் என்பதாலும், அவர்கள் வெடவெடத்துக் கொண்டிருந்ததாலும் சூட்டியக்கா அதனைப் படித்து கொண்டிருக்கும் போதே தாயாரும் வந்து விட்டார். அவர் விசயத்தை கேட்க அவ சொன்னாவாம் - அதொருத்தன் லவ் லெற்றர் அனுப்பியிருக்கிறான் என.
ஒரு நாள் வேறு வழியில்லாமல் நான் அவருடன் வாசு சார்பாகக் கதைத்தேன். சூட்டியக்கா முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தா. இறுதியில் சில விடயங்களைச் சொன்னா. பட்டதாரியான அவருக்கு வீட்டில் ஒரு அரச உத்தியோகத்தரான மாப்பிள்ளையையே எதிர்பார்க்கிறார்கள். தவிரவும் சூட்டியக்காவின் தம்பி இயக்கத்திற்குப் போனதன் பின்பு பெற்றோர் இயக்கத்தில் கடும் கோபமாக இருக்கினம். ஆக இயக்க மாப்பிள்ளை சரிப்பட்டு வராது.
வாசு சில நிபந்தனைகளிற்கு உட்பட தயாராக இருந்தார். முக்கியமாக இயக்கத்திலிருந்து விலக. ஆயினும் அதை நினைத்தது மாதிரி உடனடியாக செய்ய முடியாது. சாதுரியமாகச் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும். ஏனெனில் எங்கள் பிரிவில் அப்போது விலகுவதெனில் இரண்டு வருடங்கள் தண்டனை செய்ய வேண்டியிருந்தது. அதிலும் முதல் ஆறுமாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் வரை பங்கருக்குள் அடைபடும் அபாயமிருந்தது. ஆக இதையெல்லாம் சூட்டியக்காவுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுக்கலாம் என வாசு விரும்பினார். சூட்டியக்காவும் அந்த சந்திப்பிற்குச் சம்மதித்தார். தனது நண்பியுடன் வருவதாகச் சொல்லியிருந்தார்.
ஒரு நண்பரது வீட்டில் நடந்த அந்தச் சந்திப்பிற்குக் கிட்டத்தட்ட வலு கட்டாயமாக வாசுவினால் நானும் அழைத்து செல்லப் பட்டிருந்தேன். சாதாரணமாக ஆரம்பித்து, சூடாகிக் கொண்டு போனது. எந்த காரணத்தைக் கொண்டும் இயக்க மாப்பிள்ளையை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற வாதத்தில் உறுதியாக நின்றா. அவசரப்பட்டு விலக முயன்றால் எற்படும் விளைவுகளை வாசு புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வாதமும் இரயில் தண்டவாளம் போல இணையாமலேயிருந்தது.
நான் இறுதிவரை வாயே திறக்கவில்லை. முன்னால் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுகளையும் தேனீரையும் காலி பண்ணவும், சூட்டியக்காவின் நண்பியைப் பார்த்து இடையிடையே சிரிக்கவும் மட்டுமே வாயைத் திறந்தேன்.
அது ஒரு சுவாரஸ்யமான பொழுதாக இருந்தது. அப்பொழுதுதான் நான் சில கதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். அன்று இரவு இந்த சம்பவங்களினாலான ஒரு கதையெழுதினேன். அப்பொழுது ஈழநாதம் ஆசிரியராக இருந்த இராதேயன் அண்ணை எப்பொழுது கண்டாலும் ஈழநாதத்திற்குக் கதை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடுத்த கிழமை அது ஈழநாதத்தில் வெளியானது.
துரதிஸ்டவசமாக அதனை சூட்டியக்கா, நண்பி, சூட்டியக்கா குடும்பம் என அனைவரும் படித்துவிட்டனர். மாலையில் சூட்டியக்கா என்னிடம் வந்து கதை படித்ததாகச் சொன்னா. பிரச்சனை சர்வதேச மட்டத்திற்குச் சென்றதாலோ என்னவோ சூட்டியக்கா சில விட்டுக் கொடுப்புகளைச் செய்ய முன்வந்தா. முக்கியமானது வாசு இயக்கத்தில் இருந்து விலகி, சமூகத்தில்த் தன்னை நிலைநிறுத்த ஒரு அவகாசம் கொடுப்பதென்று. என்னிடம் தான் இந்தச் செய்திகளைப் பரிமாறியிருந்தா.
(இதற்குள் சில வருட இடைவெளி வருகிறது. முக்கியமாக வாசு இயக்கத்தில் இருந்து தண்டனையின்றி வெளிவர தீட்டிய திட்டங்கள், நடவடிக்கைகள் என ஆயிரத்தெட்டு விசயங்கள்)
அந்தத் திருமணத்திற்கு இருவரும் தனித்தனியாக அழைத்திருந்தும் என்னால் போக முடியவில்லை. அது திலீபனின் நினைவு நாட்கள் நடந்த நேரம். தொலைக்காட்சியில் அது குறித்த நிகழ்வுகளை பன்னிரண்டு நாட்களும் தொடர்ச்சியாகச் செய்ததினால் அசையமுடியாமலிருந்தது தான் காரணம். மூன்று நாட்கள் கழியப் போனேன். திருமணத்திற்கு வரவில்லை என வாசு வலது காதையும், சூட்டியக்கா இடது காதையும் பிடித்து முறுக்கினர்.
பின்னாட்களில் பல்வேறு இடங்களிலுமிருந்த முன்னாள் இன்னாள் 'கொம்பனி' காரர்களது சந்திப்பிடமாக அந்த வீடு மாறியது. எங்கள் சிலரிடம் கடுமையான விமர்சனங்களிருந்தன. சிலரிடம் மென்மையான விமர்சனமிருந்தது. சிலரிடம் கேள்விக்கப்பாற்பட்ட விசுவாசமிருந்தது. வாசு, மதி, தருமா மற்றும் நானாகியோர் முதல்ப் பிரிவிலிருந்தோம்.
யுத்தம் விசுவமடுவரை வந்திருந்த ஒரு நாளில் கடைசியாக அவர்களது கோம்பாவில் வீட்டிற்குப் போயிருந்தேன். அன்று அவரது வீட்டிலேயே இரவு தங்கினேன். அகாலத்தில் நல்ல தூக்கத்திலிருந்த என்னைத் தட்டியெழுப்பினார். நீண்ட நாளாகக் காணததோ, தோல்வி வாசல்வரை வந்திருந்ததோ தெரியவில்லை, அவர் மிகக் கடுமையான வார்தைகளில் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார்.
பின் வந்த நாட்கள், நண்பர்களைத் தேடிச் சென்று சந்திக்குமளவிற்கு இரக்கமுடையனவாக இருக்கவில்லை. அனேகமாக ஒவ்வொரு கணத்திலும் உயிர் வாழ்வதற்கான பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.
தமிழீழம் சுருங்கிச் சுருங்கி இரணைப்பாலைக்கும் முள்ளிவாய்க்காலிற்குமிடையில் என்றான ஒரு நாளில் நான் இரணைப்பாலை செந்தூரன் சிலையடியில் இருந்து மாத்தளன் சென்று கொண்டிருந்தேன். சென்று கொண்டிருந்தது என்பதன் அர்த்தம் மோட்டார் சைக்கிளில் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது என்றே பொருள்படும். ஏனெனில் போக்குவரத்திற்கிருந்த ஒரே பாதையான அதுதான் அங்கிருந்த அத்தனை வாகனங்களையும் தாங்கிக் கொண்டிருந்தது. மூன்று கிலோமீற்றர் நீளமான அந்தப் பாதையைக் கடக்க அனேகமாக நான்கு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது. சில நாட்களில் பாதி நாளையும் தின்றது. (வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இடம்பெயரும் போது இப்படியான சந்தர்ப்பங்களில் வீதிக்கரையில் இருந்து சீட்டும் ஆடியிருக்கிறோம்)
இப்படியாக உருட்டியபடி சென்ற என்னை, தண்ணீர்க் கானுடன் சென்ற சூட்டியக்கா கண்டு இப்போதிருக்கும் வீட்டுக்குக் கூட்டிச் சென்றா. அது மிகவும் விசித்திரமான நாளாக இருந்தது. ஆச்சரியமளிக்கும் விதத்தில் வாசு மாறியிருந்தார். இந்த யுத்தத்தில் நாம் வெல்வோம் என உறுதியாகச் சொன்னார். கள யதார்த்தம் அப்படியல்லவே எனச் சொன்ன என்னை கடுமையாக ஆட்சேபித்தார். கடந்த காலத்தில் நடந்த ஆச்சரியம் மிக்கதும் மாயாவித்தனமானதுமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அவை மீளவும் நிகழும் என உறுதியாகக் கூறினார். கூடவே, என்னையொரு அவநம்பிக்கையாளன் என முதன்முதலாகச் சொன்னார்.
பிறகு, இன்றைய நாளில் பாதுகாப்பாக இருக்க உகந்த இடமென நான் எந்த இடத்தை கருதுகிறேன் எனக் கேட்டார். நான் முள்ளிவாய்க்கால் என்றேன்.(அப்பொழுது முள்ளிவாய்க்காலில் மக்கள் இல்லை. அதனால் செல்லடியும் இருக்கவில்லை)
தானும் அதனையே சொல்வதாகவும் வீட்டார் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையெனவும். சூட்டியக்காவிற்கு விளங்கப்படுத்துமாறும் சொன்னார்.
எல்லாம் முடிந்து நான் புறப்படுகையில், சூட்டியக்கா என்னை கேட்டா- 'அங்க போறது பிரச்சனையில்லையென்று நினைக்கிறியளோ'
'அப்பிடிப் பயமென்றால் ஆமியிட்டப் போறதுதானே' என்றேன்.
அவ என்னை உற்றுபார்த்துவிட்டு சொன்னா- 'உயிரிருக்கு மட்டும் அது நடக்காது' என.
எனக்கு தெரிந்த ஒரு நண்பனின் வீடு முள்ளிவாய்காலில் இருந்தது. தேவையெனில் அங்கு சென்று இருக்க என்னால் ஏற்பாடு செய்ய முடியுமென்று சொன்னேன். அவர் அதை மறுத்து, தான் ஏற்பாடு செய்து விட்டதாகச் சொன்னார்.
இரண்டுநாளின் பின் அந்த வழியினால் வரும் போது அவர்களது வீட்டிற்குப் போனேன். வீட்டில் யாருமில்லை. பக்கத்து தரப்பாள்காரர்தான் சொன்னார்கள் அவர்கள் நேற்றே முள்ளிவாய்க்கால் போய்விட்டதாக.
--------- ----------
சில வாரங்களின் முன் ஒரு நண்பரை கண்டேன். அவர் சொன்னார், வாசுவின் மரண நிகழ்வை முடித்து தாங்கள் தான் முள்ளிவாய்க்கால் பாடசாலையின் அருகில் ஒரு இடத்தில் புதைத்ததாக. இறப்பதற்கு முதல் நாள் இரவு கதைத்துக் கொண்டிருக்கும் போது சொன்னாராம் - தமிழர்களின் வெற்றியை எந்த சக்தியினாலும் தடுக்க முடியாதென.
வவுனியா முகாமில் இருந்தபோது சூட்டியக்கா இருப்பதாக ஒரு விலாசத்தை ஒருவர் தந்திருந்தார். அருகிலிருந்த போதும் நான் சென்று பார்க்கவில்லை. இங்கே ஊரில் அருகில்தான் வாசுவின் சகோதரியின் வீடு உள்ளது. அவர்களிடம் விசாரித்தால் இப்போது சூட்டியக்கா இருக்கும் விலாசத்தை அறிந்து கொள்ளலாம். அதற்கும் நான் முயலவில்லை. இப்போதெல்லாம் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு -- வேலைமினக்கட்டு இந்தக் கதைகளை எழுதத் தொடங்காமலிருந்திருக்கலாமென.
◄
>இறந்திருப்பார்கள் எனக் கருதியவர்கள் உயிருடனும், உயிருடனிருப்பார்கள் எனக் கருதியவர்கள் இறந்தும் போயிருந்ததே எனக்கு நேர்ந்த அனேக அனுபவங்களாயிருந்தன.
ReplyDeleteவாசு அண்ணா தப்பிவிட்டார் என்று முடிக்கப்போகின்றீர்கள் என நினைத்தேன்.
fijfsy;y.. ep[k;.
ReplyDelete