Tuesday, December 6, 2011

இது இங்கிருந்து விடைபெறும் நேரம்



டந்த பத்து மாதங்களின் முன் எதிர்பாராத தருணமொன்றில் இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கும் யோசனை வந்திருந்தது. வலைப்பக்கம் தொடங்குவது பற்றிய முன்யோசனை இல்லாதிருந்தது போலவே அது பற்றிய முன் அறிமுகமும் இருந்திருக்கவில்லை. சிறுபிள்ளை கட்டிய மணல்வீடு போல ஆரம்பத்திலிருந்தது. வெறும் இரண்டு கதைகளுடன்.

வலைப்பக்கத்திற்கு வந்து சென்ற சில நண்பர்கள் தொடர்ந்து அது பற்றிய புகார் சொல்லியபடியிருந்தனர். குறிப்பாக எழுத்துரு மாற்றுவதில் நிறைய சிக்கல்களிருந்தன. அதனால் இருந்த கதைகளையும் அவர்களினால் சரியாக படிக்க முடியாமலிருந்தது. கடந்த மே மாதம் தான் ஒரு நண்பர் அதனைத் தான் சீர்படுத்தித் தருவதாக சொல்லி, சீர்படுத்தித் தந்ததுமல்லாமல் இன்றுவரை அதனை சீர்படுத்தித் தந்து கொண்டுமிருக்கிறார். அவர் என்றென்றும் நன்றிக்குரியவர்.

கடந்த யுத்தகாலத்தில் இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தம்மையொரு நாடோடிகள் போல உணர்ந்த ஏதாவதொரு தருணம் நிச்சயமிருக்குமென்றே கருதுகிறேன். இடப்பெயர்வும் புலப்பெயர்வும் வாழ்க்கையாகிவிட்டது. இந்த பெயர்வுகள் சில, சிலருக்கு புதிய வாய்ப்புகளையும், வசதிகளையும் வழங்கியிருக்கலாம். அது போலொரு சம்பவமாக இப்போது நானும் இந்த வலைத்தளத்தை விட்டுச் செல்லப் போகிறேன். புதிய இணையத் தளமொன்று ஆரம்பிக்கிறேன். ஆகவே இனி இந்தப் பக்கத்தில் எதனையும் பதிவேற்றம் செய்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன். புதிய தளத்திற் தான் இனியெல்லாம்.

பல நண்பர்கள் வலைத்தள வடிவமைப்புப் பற்றி அடிக்கடி ஆலோசனை சொல்லியபடியிருந்தனர். எனது தொழில்நுட்ப பலவீனத்தை புரிந்ததாலோ என்னவோ, வேறு சில நண்பர்கள் விரும்பினால் தங்களினால் வடிவமைத்துத் தர முடியும் என தகவல் தந்திருந்தனர். அந்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

முக்கியமாக வருகையாளர்கள் தந்த உற்சாகம் முக்கியமானது. இந்த வலைத்தளம் அவர்களது வருகை தந்த உற்சாகத்தினாற் தான் தொடர்ந்து இயங்கியது. எல்லா நண்பர்களிற்கும் என் நன்றிகள்.

கைவிட்டுச் சென்ற பிரதேசமொன்றிலிருக்கும் வீட்டை, அதன் சொந்தக்காரன் இரகசியமாக வந்து பார்த்துச் செல்வது போல, இனி இந்தப் பக்கத்தை வந்து பார்த்துச் செல்ல மட்டுமே முடியும். இது இங்கிருந்து விடை பெறும் நேரம்!
 
புதிய தள முகவரி: http://yokarnan.com/